Thursday, 2 November 2017

இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்!!!


ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக நினைத்து வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள். அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள். அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார். தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார்.
ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில் எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய குழந்தை என்று.
உடனே அவர் அந்தக் குழந்தையை (மகளை) அள்ளி எடுத்துக்கொண்டு, “மகளே எல்லாருடைய திரியும் எரிந்துகொண்டிருக்க, உன்னுடைய திரி மட்டும் ஏன் அணைந்துபோய் இருக்கின்றது?” என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த குழந்தை, “அப்பா! என்னுடைய திரி மற்ற குழந்தைகளின் திரிகளைப் போன்று நன்றாகத்தான் எரியும். ஆனால் நீ தொடர்ந்து வடிக்கும் கண்ணீர் பட்டுதான் என்னுடைய திரி அணைந்துபோய்விடுகிறது?” என்றது.
தொடர்ந்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னது, “அப்பா எதற்காக இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரிந்தாலும், இங்கே உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி நினைத்து நீ இனிமேலும் அழுதுகொண்டிருக்காதே” என்று. உடனே அந்த தந்தை தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தன்னுடைய மகள் விண்ணகத்தில் உயிரோடுதான் என்று ஆறுதல் அடைந்தார்.
“வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை” என்பதற்கு இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.
இன்று அன்னையாம் திரு அவை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்களில் இறந்த அன்பான உறவுகளுக்காக, இன்னும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள் தொடக்கத்தில் ‘குளூனி’  நகரில் பிறந்த ஓடிலோ என்ற துறவியால் கி.பி.906 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன்பின் இவ்விழா படிப்படியாக எல்லா துறவுமடங்களுக்கும் பரவி, இறந்த ஆன்மாக்களுக்காக விழா எடுத்துக் கொண்டாடும் நிலை உருவானது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இவ்விழா நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடும் நிலை உருவானது. விவிலியத்தில் கூட இறந்த ஆன்மாக்களுக்காக பலிகொடுக்கும் நிலை இருந்ததை நாம் வாசிக்கின்றோம் (2 12: 43-45).
இப்போது இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை” என்று. ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும். அத்தகைய நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும். 
இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. “புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்” என்று சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ள (உத்தரிக்க தலத்தில் உள்ளவர்கள்) ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் (விண்ணகம்) சேர்த்துக்கொள்ளும். எனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்.
மூன்றாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாம் இறைவன் தரும் மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான உத்திகளைச் செய்யவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சின்னஞ் சிறிய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தவர்களுக்குத்தான் விண்ணகத்தை பரிசாகத் தருகின்றார்.

எனவே, இந்த நல்ல நாளில் இறந்த ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம். அதோடு நாமும் இறைவனுக்கு உகந்த நல்ல வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

Monday, 16 October 2017

உள்ளத் தூய்மை

அமெரிக்காவைச் சார்ந்த ஜெனே துன்னி (Gene Tunney) என்பவர் பளுதூக்கும் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றதும் நீயூயார்க்கில் இருந்த அவருடைய நல விரும்பிகள் சிலர் அவரை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள். ஜெனே துன்னியும் அவர்களுடைய அழைப்பினை ஏற்று விருந்துக்குச் சென்றிருந்தார்.
விருந்து மிகவும் தடபுடலாக நடந்தது. அவருடைய நலவிரும்பிகள் அவரை விழுந்து விழுந்து கவனித்தார்கள். அந்த விருந்து முடிந்ததும் அரை குறை ஆடையுடன் ஒருசில பெண்கள் ஆடும் அரைநிர்வாண ஆட்டக் காட்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெனே துன்னிக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. அவர் ஏதோ பாராட்டுக்கூட்டத்தைத்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், நேரம் ஆனதும் மேடையில் சில பெண்கள் அரை குறை ஆடையுடன் தோன்றி, ஆட்டம் போடத் தொடங்கினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ஜெனே துன்னி விழாக் குழுவினரிடம், “நான் இங்கு வந்தது நீங்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்குத்தான். இப்படி அரைகுறை ஆடையோடு ஆடும் பெண்களின் ஆட்டத்தினால் அவமானத்திற்கு உள்ளாக அல்ல; எந்தவொரு நிகழ்விலும் தூய்மையானது காப்பாற்றப்படவேண்டும். அது இல்லாதபோது இங்கு நான் இருந்து என்ன பயன்” என்று சொல்லிவிட்டு, அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
அவரைப் பின்தொடர்ந்து, அந்த விருந்துக்கு வந்திருந்த ஒருசில முக்கியப் பிரமுகர்களும் அங்கிருந்து கிளம்பிப் போக, கடைசியில் அந்த அரை நிர்வாணக் காட்சியானது ரத்து செய்யப் பட்டது.
வெளிப்புறத்தில் மட்டும் நாம் தூய்மையைக் கடைப்பிடிப்பவர்களாக அல்லாமல், உட்புறத்திலும் – உள்ளத்திலும் – நாம்  தூய்மையைக் கடைபிடிக்கவேண்டும் என்னும் உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பளுதூக்கும் போட்டியில் உலகச் சாம்பியனாகிய விளங்கிய ஜெனே துன்னி வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் தூய்மையான விளங்கினார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் உணவருந்தச் செல்கிறார். இயேசு உணவருந்தச் சென்ற இடத்தில், அவர் கைகளைக் கழுவாமல் பந்தியில் அவர்வதைப் பார்த்த பரிசேயர் வியப்படைகின்றார். அப்போது இயேசு அவரிடம், “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகின்றீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்” என்கிறார்.
இயேசு தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயரிடம் கூறிய வார்த்தைகள் ஆழமான சிந்தனைக்குரியவை. யூதர்கள் அதிலும் குறிப்பாக பரிசேயர்கள் வெளியடையாளங்களை பின்பற்றுவதிலும், மூதாதையர்களின் சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். இப்படி அவர்கள் செய்ததன் வழியாக தங்களை அவர்கள் மக்களுக்கு முன்பாக தூயவர்கள் போன்று காட்டிக்கொண்டார்கள். ஆனால, உட்புறத்திலோ – உள்ளத்திலோ – அவர்கள் தீமை நிறைந்தவர்களாக இருந்தார்கள்; சாதாராண ஏழை எளிய மக்களையும் கைம்பெண்களையும் வஞ்சித்து அவர்களிடமிருந்து உடைமைகளை அபகரித்துக் கொண்டார்கள். அதனால் இயேசு அவர்களை வெளிப்புறத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்றொரு அழைப்பினைத் தருகின்றார்.
எதற்காக ஆண்டவர் இயேசு உள்ளத் தூய்மையினை வலியுறுத்திப் பேசுகின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும். உள்ளத்தின் நிறைவே வாய் பேசும் என்று சொல்வார்கள். வெளிப்புறத்தை எவ்வளவுதான் அழகு படுத்திக்கொண்டாலும் உள்ளத்தில் இருக்கின்ற வஞ்சனை எண்ணம், வெறுப்பு, பொறாமை, கயமை போன்றவை எல்லாம் என்றைக்காவது ஒருநாள் வெளிப்பட்டு அது மனிதனையே பாழ்படுத்திவிடும் என்பதால்தான் முதலில் உள்ளத்தினைத் தூய்மையாக வைத்திருக்கச் சொல்கின்றார்.
அது மட்டுமல்லாமல் எல்லாம் வல்ல கடவுள் தூயவர் (லேவி 19:2), எனவே அவருடைய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூயவராக இருக்கவேண்டும் என்பதால் இயேசு வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்றொரு வேண்டுகோள் விடுகின்றார்.
பல நேரங்களில் நாம் வெளிப்புறத்தை அழுகுபடுத்த எவ்வளவோ செலவு செய்கின்றோம். ஆனால், உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஒன்றுமே செய்வதில்லை. உள்ளத்தை தூய்மையானதாக மாற்றினால், இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வே தூய்மையானதாக மாறிவிடும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.
எனவே, நாம் விண்ணகத் தந்தையைப் போன்று தூயவர்களாக இருப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Sunday, 15 October 2017

இயேசுவை நம்பாது அடையாளம் கேட்கும் மானிடர்கள்!

ஆலன் ஸ்மித் என்கிற ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய கதை இது.
ஒரு ஊரில் இளைஞன் இருந்தான் ஒருவன் இருந்தான். அவன் அவ்வூரில் இருந்த ஒரு விவசாயின் மகள்மீது காதல் கொண்டான். அவளும் அந்த இளைஞனை அதிகமாக அன்பு செய்தாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்கள். எனவே, இளைஞன் அந்த இளம்பெண்ணின் தந்தையிடம் சென்று, “நான் உங்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள ஆசையாக இருக்கின்றேன். அதற்கு உங்களுடைய விரும்பம் என்ன?” என்று கேட்டான்.
விவசாயியோ அந்த இளைஞனிடம், “நான் என்னுடைய மகளை உனக்கு மணமுடித்துத் தருவதில் எனக்கு மனப் பூர்வமான சம்மதம்தான், ஆனால், நான் உனக்கு ஒரு போட்டி வைக்கிறேன், அந்தப் போட்டியில் நீ வெற்றி பெற்றால்தான் என்னுடைய மகளை உனக்கு மணமுடித்துத் தருவேன். போட்டியின் விதிமுறை இதுதான் ‘நீ புல்வெளியில் நின்றுகொள்ளவேண்டும். நான் தொழுவத்திலிருந்து மூன்று காளை மாடுகளை ஒவ்வொன்றாக திறந்துவிடுவேன். நீ மூன்று காளை மாடுகளில் ஏதாவது ஒரு காளை மாட்டின் வாலைப் பிடித்தாலே போதும்” என்றார். இளைஞனும் அதற்குச் சம்மதம் தெரிவித்து போட்டிக்குத் தயாரானான்.
விவசாயி சொன்னது போன்றே அந்த இளைஞன் புல்வெளியில் நின்றுகொண்டான். அப்போது விவசாயி தொழுவத்திலிருந்து ஒரு காளைமாட்டை அவிழ்த்து விட்டார். அந்தக் காளை மாடு பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாகவும், மூர்க்கத்தனம் நிரம்பியதாகும் கொம்புகள் மிகவும் கூர்மையாகும் இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துப் பயந்துபோன அந்த இளைஞன், சரி இந்தக் காளை மாட்டை விட்டுவிடுவோம், அடுத்த காளை மாட்டை எப்படியும் பிடித்து விடுவோம் என்று முடிவு செய்து, முதலில் வந்த காளை மாட்டை விட்டுவிட்டான்.
இளைஞன் முதலில் வந்த காளை மாட்டின் வாலை பிடிக்காமல் விட்டுவிட்டதால் இரண்டாவது காளை மாட்டை அவிழ்த்துவிட்டார் அந்த விவசாயி. அந்தக் காளைமாடோ முதலில் வந்த காளைமாட்டை விடவும் பெரிதாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அவன் அந்த காளைமாட்டைப் பார்த்ததுமே பயந்து நடுங்கினான். இதனுடைய வாலை பிடிப்பது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் என்று நின்று அந்தக் காளைமாட்டின் வாலையும் பிடிக்காமல் விட்டுவிட்டான்.
இறுதியாக விவசாயி மூன்றாவது காளை மாட்டை அவிழ்த்துவிட்டார். அதுவோ பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து போய் காணப்பட்டது. இந்தக் காளைமாட்டை எப்படியும் பிடித்துவிடலாம் என்ற முடிவோடு இருந்த இளைஞன் அந்த காளைமாட்டைப் பிடிப்பதற்கு மிகவும் தயாராக இருந்தான். அந்தக் காளைமாடு அருகே வந்ததும், அதன்மீது பாய்ந்து அந்தக் காளைமாட்டின் வாலைப் பிடிப்பதற்கு முயன்றான். ஆனால், அதற்கு வாலே இல்லாததால், தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு தன் காதலியை மணக்க முடியாமல் வீடு திரும்பினான்.
நம்முடைய வாழ்க்கையை நாம் நல்லமுறையியல் வாழ்வதற்கு கடவுள் நமக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தருகின்றார். ஆனால், நாமோ இன்னும் வாய்ப்புகள் வரும், வாய்ப்புகள் வரும் என்று வரக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு கடைசியில் நாம் எந்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தாமல் வாழக்கையையே கேள்விக்குரியதாக மாற்றிவிடுகின்றோம் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் வாழ்வினை வழங்க வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்பாமல், அவரிடம் யூதர்கள் சிலர் அடையாளம் கேட்கின்றார்கள். அவர்கள் கேட்கக் கூடிய அடையாளம் என்பது சாதாரணமானது கிடையாது. அவை வானத்திலிருந்து மின்னல்கள்  தோன்றச் செய்வது, கடலை இரண்டாகக் கிழிப்பது இது போன்ற அடையாளங்கள். இப்படிப்பட்ட அடையாளங்களைச்  செய்தால்தான் இயேசுவை மெசியா என நம்பி ஏற்றுக்கொள்வோம் என்ற ரீதியில் அவர்கள் அடையாளம் கேட்டார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ அவர்களிடம், “உங்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் தரப்பட மாட்டது” என்று சொல்கின்றார். ஏனென்றால் யோனா அறிவித்த இறைவார்த்தையைக் கேட்ட நினிவே நகர மனம் மாறினார்கள். இயேசுவோ யோனாவை விடப் பெரியவர். அப்படியிருந்தும் அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு மக்கள் மனம் மாறாமல் இருந்ததுதான் மிகவும் வியப்பாக இருக்கின்றது.
அன்று யூதர்கள் மனம்மாறுவதற்கு ஆண்டவர் இயேசுவே இறங்கி வந்து, அவர்களுக்கு நற்செய்தி, அவர்கள் மனம்மாறி வாழ ஒரு வாய்ப்பினைக் கொடுத்தார். ஆனால் அவர்கள் திருந்தாமலே போனார்கள். அன்று போல் இன்றும் நாம் நல்வழியில் நடக்க இறைவார்த்தை, திருவழிபாடுகள் போன்ற வாய்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தாமல் போனால், கடவுளுடைய சாபத்தைப் பெற்றுக்கொள்வது என்பது உறுதி.
எனவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை, கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்துவோம்; இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Friday, 26 May 2017

புனித ஃபிலிப் நேரி ✠ (St. Philip Neri)

 புனித ஃபிலிப் நேரி ✠
(St. Philip Neri)

பாவமன்னிப்பு அளிப்பவர்நிறுவனர் :
(Confessor and Founder)


பிறப்பு : ஜூலை 22, 1515
ஃப்ளோரன்ஸ் (Florence)


இறப்பு : மே 25, 1595 (அகவை 79)
ரோம்திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : மே 11, 1615
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)


புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622
திருத்தந்தை 15ம் கிரகோரி
(Pope Gregory XV)


நினைவுத் திருநாள் : மே 26


சித்தரிக்கப்படும் வகை :
லீலி மலர்குருத்துவ உடைபற்றியெரியும் இருதயம்


பாதுகாவல் :
ரோம்ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தனிப்படைகள்மகிழ்ச்சிசிரிப்பு


புனிதர் ஃபிலிப் நேரிகத்தோலிக்க திருச்சபையின் குருவும்புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் (Saints Peter and Paul) ஆகியோருக்குப் பிறகு "ரோம் நகரின் மூன்றாம் திருத்தூதர்" (Third Apostle of Rome) என்னும் சிறப்புப் பெயர் கொண்டவரும்மறைமாவட்ட குருக்களுக்கான "இறைவேண்டல் சபை" (Congregation of the Oratory) என்றொரு அமைப்பை நிறுவியவரும் ஆவார்.


இளமைப் பருவம் :
ஃபிலிப் நேரிஇத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் 1515, ஜூலை 22ம் நாள் பிறந்தார். வழக்குரைஞரான ஃபிரான்செஸ்கோ நேரி” (Francesco di Neri)என்பவருக்கும் அவருடைய மனைவி லூக்ரேசியா தா மோஷியானோ” (Lucrezia da Mosciano) என்பவருக்கும் கடைசிக் குழந்தையாக அவர் பிறந்தார். அவருடைய பெற்றோர் அரசுப் பணி சேர்ந்த மேல்குடி மக்கள்.


சிறு பருவத்தில் ஃபிலிப் நேரி ஃப்ளாரன்ஸ் நகரில் சான் மார்கோ” (San Marco)என்ற இடத்திலுள்ள புகழ் பெற்ற டோமினிக்கன் துறவு மடத்தில்” (Dominican monastery) கல்வி பயின்றார். அவருக்குப் பதினெட்டு வயது ஆனபோது அவருடைய பெற்றோர் ஃபிலிப்பின் மாமனாகிய ரோமோலோ (Romolo)என்பவரிடம் அனுப்பினார்கள். ரோமோலோ நேப்பிள்ஸ் நகருக்கு அருகே சான் ஜெர்மானோ” (San Germano) என்னும் நகரில் பெரிய வணிகராக இருந்தார். ஃபிலிப் தம் மாமனாரிடமிருந்து வணிகக் கலையைக் கற்றுத் தேர்ச்சிபெற்று,அவருடைய சொத்துக்கு உரிமையாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ரோமுலோவின் அன்பும் மதிப்பும் பிலிப்புக்கு கிடைத்தாலும்அவருக்கு இவ்வுலக சொத்துக்களில் ஆர்வம் இருக்கவில்லை. எனவே அவர் தனது 26ம் வயதில் வணிகத் தொழிலை விட்டுவிட்டுதமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் 1533ம் ஆண்டு ரோம் நகருக்குச் சென்றார்.


ரோமில் ஆற்றிய பணி :
ரோம் நகருக்கு வந்த ஃபிலிப் நேரிமுதலில் உயர்குடியைச் சேர்ந்த கலேயோட்டோ காச்சியா (Galeotto Caccia) என்பவரின் வீட்டில் தனிப்பயிற்சி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மூன்றாண்டு காலமாக அவர் அகுஸ்தீன் (Augustinians) சபைத் துறவியரின் கீழ் கல்வி பயின்றார்.


அதன்பின்அவர் ரோம் நகரில் ஏழைமக்கள் மற்றும் நோயுற்றோர் நடுவே பணிபுரிந்தார். அதன் காரணமாக மக்கள் அவரை "ரோம் நகரின் திருத்தூதர்" (Apostle of Rome) என்று அழைக்கலாயினர். அதே சமயம் அவர் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பாலியல் தொழிலாளரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களிடையேயும் பணிபுரிந்தார்.


1538ம் ஆண்டிலிருந்து ஃபிலிப் நேரி ரோம் நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றுமக்களை நேரடியாக சந்தித்துஉரையாடிஅவர்களைக் கடவுள் பற்றியும் ஒழுக்க நெறி பற்றியும் சிந்திக்கத் தூண்டினார்.


மூவொரு கடவுள் குழு உருவாக்கம் :
1548ம் ஆண்டுஃபிலிப் நேரி பெர்ஸியானோ ரோஸ்ஸா” (Persiano Rossa) என்னும் குருவோடு இணைந்து "திருப்பயணிகள் மற்றும் நோயுற்று குணமானோருக்கான மகா பரிசுத்த திரித்துவத்தின் குழு" (Confraternity of the Most Holy Trinity of Pilgrims and Convalescents) என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார். அக்குழுவின் நோக்கங்கள் இவை: ரோம் நகருக்குத் திருப்பயணமாக வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பணிபுரிவதுமருத்துவ மனைகளிலிருந்து வெளியேறியும் வேலை செய்யத் திறனற்ற நிலையிலிருந்தோரின் துயரம் போக்குதல்.


அக்குழுவைச் சார்ந்தவர்கள் ரோமில் சான் சால்வட்டோர் இன் காம்போ” (Church of San Salvatore in Campo) என்னும் கோவிலில் கூடி இறைவேண்டல் செய்தனர்; 40 மணி நற்கருணை ஆராதனை செய்தனர். இந்த பக்தி முயற்சியை முதன்முதலாக ரோமில் அறிமுகம் செய்தவர் ஃபிலிப் நேரி தான்.


இறைவேண்டல் சபை உருவாக்குதல் :
ஃபிலிப் நேரி 1551ம் ஆண்டு மே 23ம் நாள் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.அதற்குமுன் அவர் கீழ்நிலைப் பட்டங்களையும் திருத்தொண்டர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.


குருவாகத் அருட்பொழிவு பெற்ற ஃபிலிப் நேரிக்கு இந்தியா சென்று அங்கு கிறிஸ்தவ மறையை அறிவிக்க வேண்டும் என்னும் பேரவா இருந்தது. ஆனால் அவருடைய நண்பர்கள் அவரிடம்கிறிஸ்தவத்தை அறிவிக்க இந்தியா போக வேண்டிய தேவையில்லைரோம் நகரிலேயே அவருக்கு போதுமான வேலை இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்துஅவர் ரோமிலேயே தமது பணியைத் தொடர்ந்தார்.


1556ம் ஆண்டு ஃபிலிப் நேரி ஒருசில பணித் தோழர்களோடு புனித ஜெரோம் கோவிலில் ஒரு சிறு குழுவைத் தொடங்கினார். அதுவே பின்னர் "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் பெயர் கொண்ட சபையாக மலர்ந்தது. தொடக்கத்தில் குழுவினர் மாலை வேளைகளில் கூடிவந்துஇறைவேண்டல் செய்வதிலும்திருப்பாக்கள் பாடுவதிலும்,விவிலியம்திருச்சபைத் தந்தையர்களின் நூல்கள் மற்றும் மறைச்சாட்சியர் வரலாறு ஆகிய ஏடுகளிலிருந்து வாசிப்பதிலும் ஈடுபட்டனர். பின்னர் மறை சார்ந்த உரை நிகழ்த்தப்படும். தொடர்ந்து மறை சார்ந்த பொருள்கள் விவாதிக்கப்படும்.


இறைவேண்டல் குழுவினர் கூடியபோது விவிலியம் விளக்குகின்ற மீட்பு வரலாற்றிலிருந்து சில காட்சிகள் இசையாக வழங்கப்பட்டன. இதிலிருந்தே "Oratorio" என்னும் இசைப் பாணி தோன்றியது. அக்குழுவினர் ரோம் நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு மாலை வேளையிலும் மறையுரை ஆற்றினர். இது முற்றிலும் புதியதொரு முயற்சியாக அமைந்தது.


ஃபிலிப் நேரி பல கோவில்களில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். இவ்வாறுபல மக்களைக் கடவுள்பால் ஈர்த்துஅவர்களை மறை நம்பிக்கையில் வளரச் செய்தார்.


பணி விரிவாக்கம் :
ரோமில் குடியேறியிருந்த ஃப்ளோரன்ஸ் நகர் மக்கள் 1564ல்தம் மண்ணின் மைந்தரான ஃபிலிப் நேரி புதிதாகக் கட்டப்பட்ட தங்கள் கோவிலாகிய "ஃப்ளோரன்ஸ் நகரத்தாரின் புனித யோவான்" (San Giovanni dei Fiorentini) ஆலயம் வந்து பணிபுரிய வேண்டும் என்று விரும்பி வேண்டினர். நேரி அவ்வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனால்திருத்தந்தை நான்காம் பயசின் இசைவோடு அப்பணியை ஏற்றார். ஆயினும் தொடக்கத்தில் இருந்த புனித ஜெரோம் கோவிலில்தான் அவருடைய சபை இருந்தது.


1574ல் ஃப்ளோரன்சு மக்கள் தம் கோவிலை அடுத்து ஒரு பெரும் நீளறை (Oratory) கட்டியெழுப்பிஅதை ஃபிலிப் நேரியின் சபையின் பயன்பாட்டுக்கு அளித்தார்கள். எனவே சபையின் தலைமையிடம் அங்கு மாற்றப்பட்டது. சபை வளர்ந்துஅதன் பணிகளும் விரிவடைந்தன. எனவே புதியதொரு கோவில் தேவைப்பட்டது. சாந்தா மரியா இன் வால்லிச்செல்லா என்னும் ஒரு சிறு கோவில் ஃபிலிப் நேரிக்கு அளிக்கப்பட்டது. அக்கோவில் ரோம் நகரின் மையத்தில் அமைந்தது.


ஆயினும் அக்கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் பெரிய அளவில் ஒரு புதுக்கோவில் அவ்விடத்தில் கட்டப்பட்டது. அக்கோவிலின் பொறுப்பை ஏற்றதும் 1575ம் ஆண்டுஜூலை 15ம் நாள் திருத்தந்தை கொடுத்த ஆணையேட்டின்படிஃபிலிப் நேரி "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் சபையை அதிகாரப்பூர்வமாக அமைத்தார். அதன் உறுப்பினர் மறைமாவட்ட குருக்கள் ஆவர்.


புதிய கோவில் 1557ல் அர்ச்சிக்கப்பட்டது. இறைவேண்டல் குழுக் குருக்கள் ஃப்ளோரன்ஸ் கோவிலின் பொறுப்பைத் துறந்தனர். ஃபிலிப் நேரி 1583வரையிலும் புனித ஜெரோம் கோவிலிலேயே இருந்தார். சபைத் தலைவரான அவர் சபையின் தலைமையிடத்தில் தங்கி இருப்பதே முறை என்று திருத்தந்தை ஆணை பிறப்பித்த பின்னரே ஃபிலிப் நேரி புதிய தலைமையிடம் சென்று தங்கினார். முதலில் அவர் மூன்று ஆண்டு பணிப்பொறுப்பு ஏற்றார். பின்னர் சபையினர் 1587ல் அவரை வாழ்நாள் முழுதும் தலைவராக இருக்கக் கேட்டுக்கொண்டனர்.


ஆனால் ஃபிலிப் நேரி சபை முழுவதற்கும் தாமே தலைவராக இருக்கவேண்டும் என்று கருதவில்லை. எனவேரோமுக்கு வெளியே நிறுவப்பட்ட சபை இல்லங்கள் தன்னாட்சி கொண்டு செயல்படும் என்று அறிவித்தார். அந்த இல்லங்கள் வேறு இல்லங்களை நிறுவினால் அவையும் தனித்து செயல்படும் என்று வழிவகுத்தார். இந்த முறை திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால்1622ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


அரசியல் செயல்பாடு :
ஃபிலிப் நேரி தம் காலத்தில் வழக்கமாக அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை. ஒருமுறை மட்டும் அவர் அரசியலில் தலையிட்டார். 1593ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது வெளிப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டு மன்னன் நான்காம் ஹென்றி (Henry IV of France ) கத்தோலிக்க சமயத்தைக் கைவிட்டு கால்வின் (Calvinism) சபையை ஆதரிக்கத் தொடங்கினார். எனவே திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் (Pope Clement VIII) மன்னனை சபைநீக்கம் செய்தார். மன்னனின் தூதுவரை ஏற்க மறுத்தார். மன்னன் தான் தவறுசெய்ததை ஏற்றுக்கொண்ட பிறகும் திருத்தந்தை தண்டனையை அகற்ற முன்வரவில்லை. திருத்தந்தை பிடிவாதமாக இருந்தால் மன்னன் மீண்டும் கத்தோலிக்க சபையை விட்டு அகன்றுபோகும் இடர் இருந்ததை ஃபிலிப் நேரி உணர்ந்தார். அதோடு ஃபிரான்ஸ் நாட்டில் உள்நாட்டுப் போர் எழும் ஆபத்தும் இருந்தது.


உடனேஃபிலிப் நேரி தம் குழுவைச் சார்ந்தவரும் திருத்தந்தைக்கு ஆன்ம ஆலோசகராகவும் இருந்த பரோனியுஸ் என்பவரை அழைத்துதிருத்தந்தை மன்னனுக்கு எதிரான தண்டனையை விலக்கிக் கொள்ளாவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்க வேண்டாம் என்றும்ஆன்ம ஆலோசகர் பதவியைத் துறந்துவிட வேண்டும் என்றும் பணித்தார். உடனடியாக திருத்தந்தை,கர்தினால்மார்களின் ஆலோசனைக் குழுவுக்கும் எதிராகச் சென்றுபிலிப்பு நேரியின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.


இவ்வாறு தமக்கு சார்பாக ஃபிலிப் நேரி துணிச்சலோடு செயல்பட்டதை மன்னன் ஹென்றி பல ஆண்டுகளுக்குப் பின்னரே அறிந்தார். சாதுரியமாகச் செயல்பட்ட ஃபிலிப் நேரிக்கு மன்னன் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.


தாம் உருவாக்கிய இறைவேண்டல் குழுவின் தலைமைப் பதவியை ஃபிலிப் நேரி தாம் இறக்கும்வரை வகித்தார். அவருக்குப் பின் பரோனியுஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.


இறப்பும் வணக்கமும் :
ஃபிலிப் நேரி 1595ம் ஆண்டு மே மாதம் 25ம் நாள் தம் எண்பதாவது வயதில் இறந்தார். அன்று நற்கருணைத் திருநாள் (Feast of Corpus Christi). நாள் முழுதும் அவர் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். தம்மைக் காணவந்தவர்களைப் பார்த்து உரையாடினார். ஏறக்குறைய நள்ளிரவில் ஃபிலிப் நேரிக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டது. பரோனியஸ் (Baronius) இறுதி மன்றாட்டுகளை செபித்தார். தம் குழு உறுப்பினரை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பரோனியஸ் கேட்டார். பேசும் திறனை இழந்துவிட்ட ஃபிலிப் நேரி கை சைகையால் சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர் வழங்கினார். அவரது உயிர் பிரிந்தது.

Thursday, 25 May 2017

✠ வணக்கத்திற்குரிய புனிதர் பீட் ✠ (St. Bede the Venerable)

✠ வணக்கத்திற்குரிய புனிதர் பீட் ✠
(St. Bede the Venerable)


திருச்சபையின் மறைவல்லுநர், துறவி, வரலாற்றாசிரியர் :
(Doctor of the Church, Monk, Historian)


பிறப்பு : 673
மோன்க்டான் (Monkton)


இறப்பு : மே 26, 735
ஜாரோ, வட உம்ப்ரியா அரசு
(Jarrow, Kingdom of North Umbria)


ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்க ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)


புனிதர் பட்டம் : 1899ல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார்.


முக்கிய திருத்தலங்கள் :
டர்ஹம் பேராலயம், இங்கிலாந்து
(Durham Cathedral, England)


நினைவுத் திருநாள் :
மே 25 (மேற்கத்திய திருச்சபைகள்)
மே 27 (மரபு வழி திருச்சபை)


பாதுகாவல் :
ஆங்கில எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் இங்கிலாந்து


வணக்கத்திற்குரிய புனிதர் பீட், வடக்கு ஊம்ப்ரியா அரசிலுள்ள புனித பீட்டர் துறவு மடம் மற்றும் அதன் துணை துறவு மடமான புனித பவுல் துறவு மடம் ஆகியவற்றின் ஆங்கிலேயத் துறவியும் (Monastery of St. Peter and its companion Monastery of St. Paul in the Kingdom of Northumbria), அறிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவருடைய "ஆங்கிலேய மக்களின் திருச்சபை வரலாறு" (Ecclesiastical History of the English People) என்னும் படைப்பு இவருக்கு "ஆங்கிலேய வரலாற்றின் தந்தை" (The Father of English History) என்னும் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.


1899ல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இப்பட்டத்தைப்பெற்ற ஒரே ஆங்கிலேயர் இவராவார். இவர் ஒரு சிறந்த மொழியியலாளரும், மொழிபெயர்ப்பு வல்லுநரும் ஆவார். இவரின் படைப்புகள் திருச்சபைத் தந்தையரின் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகளை ஆங்கிலோ-சாக்சன் (Anglo - Saxons) மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கின.


இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். இவர் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர். இவருக்கு 7 வயது நடக்கும்போது 'வடக்கு ஊம்ப்ரியாவில்' (North Umbria) இருந்த துறவற மடத்தில், "பெனடிக்ட் பிஸ்காப்" (Benedict Biscop) என்பவரின் கண்காணிப்பில் பயிற்சியளிக்கப்பட்டு வந்தார். அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுத் தேர்வதில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பதுதான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம்.


சுமார் 692ல் தமது பத்தொன்பது வயதில் "ஹெக்ஸாம்" ஆயரான (Bishop of Hexham) "ஜான்" என்பவரால் இவர் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். சுமார் 702ல் தமது முப்பதாவது வயதில் அதே ஆயரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.


இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலாந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூலை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழியாமல் பதிந்துவிடும்.


அவரது இறுதி நாளன்று, (இயேசுவின் விண்ணேற்ற விழா நாள்) அவரது மாணவர்களில் ஒருவராகிய 'வில்பெர்ட்' (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர். அப்போது வில்பெர்ட், பீடை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதிக் கொண்டிருந்தோம்; அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ்சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பீட், "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். அப்போது பீட், இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போகிறேன் என்று கூறினார். பின்னர், "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே பீட் உயிர் நீத்தார்.

Wednesday, 24 May 2017

✠ புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி ✠ (St. Mary Magdalene de' Pazzi)

✠ புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)


கன்னியர் :
(Virgin)


பிறப்பு : ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)


இறப்பு : மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)


அருளாளர் பட்டம் : 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)


புனிதர் பட்டம் : ஏப்ரல் 28, 1669
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)


முக்கிய திருத்தலம் :

புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி’யின் துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)


நினைவுத் திருவிழா : மே 24


பாதுகாவல் :
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)


புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கர்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.


“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி, ஏப்ரல் 2, 1566ல் ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

1580ல் பஸ்ஸி “மால்டா சபையினர்’ (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கர்மேல் சபையை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். 1583ல் புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலேன்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI)) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

1607ல், தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.


புனிதர் பட்டமளிப்பு :
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் ஆட்சியில் 1626ல் வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால், ஏப்ரல் 28, 1669 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.


நினைவுத் திருவிழா நாள் :
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, 25 மே எனக் குறிக்கப்பட்டது. ஆனால் 1725ல் அந்நாள் புனித திருத்தந்தை எட்டாம் கிரகோரிக்கு ஒதுக்கப்பட்டதால் மே 29க்கு நகர்த்தப்பட்டது. 1969ல் நடந்த மாற்றத்தில் மீண்டும் மே 24க்கு நகர்த்தப்பட்டது.

Tuesday, 23 May 2017

✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠ (St. Gregory VII)

✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠
(St. Gregory VII)


திருத்தந்தை :
(Pope)


பிறப்பு : c. 1015
சொவானா, டுஸ்கனி, தூய ரோமப் பேரரசு
(Sovana, Tuscany, Holy Roman Empire)


இறப்பு : 25 மே 1085
சலேர்னோ, அபுலியா
(Salerno, Duchy of Apulia)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


நினைவுத் திருவிழா : மே 23


முக்திப்பேறு பட்டம் : 1584
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)


புனிதர் பட்டம் : மே 24, 1728
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)


"சொவானா நகரின் ஹில்டப்ராண்ட்" (Hildebrand of Sovana) எனும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை ஏழாம் கிரகோரி, கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 2 ஏப்ரல் 1073 முதல் 1085ல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார்.


கத்தோலிக்கத் திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தூய ரோமப் பேரரசர் நான்காம் ஹென்றி (Holy Roman Emperor Henry IV) மற்றும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றி'யை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து இருமுறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்ட்'டை, ஹென்றி எதிர்-திருத்தந்தையாக நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளை சட்டமாக்கினார்.


திருப்பட்டங்களைக் காசுக்கு விற்றதை கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.


திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி 1584ல் முக்திப்பேறு பட்டமும், 1728ல் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் புனிதர் பட்டமும் அளித்தனர்.

Monday, 22 May 2017

✠ புனிதர் ரீட்டா ✠ (St. Rita of Cascia)

✠ புனிதர் ரீட்டா ✠
(St. Rita of Cascia)


தாய், விதவை, அருள் வடுவுற்றவர், அர்ப்பணிக்கப்பட்ட மறைப் பணியாளர் :
(Mother, Widow, Stigmatist, Consecrated Religious)


பிறப்பு : 1381
ரொக்கபொரேனா, பெருஜியா, உம்ப்ரியா, இத்தாலி
(Roccaporena, Perugia, Umbria, Italy)


இறப்பு : மே 22, 1457
கேஸியா, பெருஜியா, உம்பிரியா, இத்தாலி
(Cascia, Perugia, Umbria, Italy)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அக்லிபாயன் திருச்சபை (1902ல் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தது)
(The Aglipayan Church - Separated from the Roman Catholic Church in 1902)


அருளாளர் பட்டம் : 1626
திருத்தந்தை எட்டாம் ஊர்பான்
(Pope Urban VIII)


புனிதர் பட்டம் : மே 24, 1900
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ


முக்கிய திருத்தலங்கள் :
கேஸியா, இத்தாலி
(Cascia, Italy)


நினைவுத் திருநாள் : மே 22


சித்தரிக்கப்படும் வகை :
நெற்றியில் காயம், ரோஜா, தேனீக்கள்,
திராட்சைக் கொடி


பாதுகாவல் :
தொலைந்த மற்றும் இயலாத காரணங்கள், நோய்கள், காயங்கள், திருமணம் சார்ந்த பிரச்சனைகள், அதிகாரம், உரிமை, முதலியவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல், தாய்மார்கள்


புனிதர் ரீட்டா, இத்தாலிய நாட்டின் விதவைப் பெண்ணும், அகஸ்தீனிய சபையின் (Augustinian nun) பெண் துறவியும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். திருமணமான இவர், இவரது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், தமது கணவனை தவறான பாதையிலிருந்து மீட்க முயற்சி செய்ததிலேயே முடிவடைந்தது.


வாழ்க்கைக் குறிப்பு :
ரீட்டா இத்தாலி நாட்டிலுள்ள கேஸியா நகருக்கு அருகிலுள்ள ரொக்கபொரேனா கிராமத்தில் கி.பி. 1381ல் பிறந்தார். அவரது பெற்றோர் "ஆண்டனியோ", "அமடா ஃபெர்ரி லோட்டி" (Antonio and Amata Ferri Lotti) ஆவர்.


இவர், கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்ப்ரியா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள்.


ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக் கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்க வேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா.

தன் பெற்றோரின் விருப்பப்படி "பவோலோ மன்சினி" (Paolo Mancini) என்பவரை தமது சிறு வயதிலேயே மணந்தார். செல்வம் படைத்த இவரது கணவர் எளிதில் சினமடையக் கூடிய, ஒழுக்கக்கேடான மனிதராக இருந்தார். இவருக்கு கேஸியா பிராந்தியத்தில் அநேக விரோதிகள் இருந்தனர்.


கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூர குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சா நெஞ்சத்துடன் அனைத்து துன்பங்களையும் ஏற்றுக் கொண்டார். கணவர் மனம் மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.பல ஆண்டுகளாக ரீட்டா சொல்லொணா அவமானங்களையும், உடல் ரீதியான வன்கொடுமைகளையும் மற்றும் துரோகங்களையும் சகித்தபடியே வாழ்ந்தார்.


பன்னிரண்டு வயதில் தமது முதல் குழந்தையை ஈன்றார். இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழிதவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார்.


இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனம் மாறவில்லை என்றால் இறைவன் அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.


ரீட்டா இவர்களின் இறப்பிற்குப் பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ, அற முயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார்.


ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது. அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள்.


அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார். அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார்.

ஆனால் இவரிடமிருந்து அருள் பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்ட பிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.


ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப் பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.


இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத் தணிக்கையில் இடம் பெற்றுள்ளது.


இப்புனிதர், 1457ம் ஆண்டு மே மாதம் 22ம் நாள் இறந்தார்.