Thursday, 4 August 2016

புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney!

மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய் (Bellei) என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்(Ars) என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார். 

இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார். 


செபம்:
அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.