Tuesday, 28 February 2017

ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது.

இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.

தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது. இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. மனமாற்றம் தான், இந்த தவக்காலம் நமக்கு விடுக்கக்கூடிய அழைப்பு. நமது வாழ்வை மாற்றுவதற்காக இந்த நாட்களிலே சிந்திப்போம். நாம் செயல்படுத்த வேண்டிய, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகளை யோசிப்போம். அதனை செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு தவக்காலமும் வெறும் சடங்கு, சம்பிரதாயமாக இருக்கக்கூடிய நிலைமை மாற வேண்டும். தவக்காலங்களில் மட்டும் கடின நோன்பு இருப்பதும், ஒறுத்தல் முயற்சி செய்வதும், தவக்காலம் முடிந்ததும், பழைய வாழ்வே கதி என்று கிடக்கக்கூடிய காலம் மாற வேண்டும். அந்த மாற்றத்திற்காக, நாம் பாடுபடுவோம்.

Wednesday, 1 February 2017

உங்கள் குழந்தைகள் !

ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை இன்று கொண்டாடுகிறோம். “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு காணிக்கையாக கொடுக்கப்பட்டார்.

இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும் ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தான். இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண வேண்டும்.

அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர். நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு அர்ப்பணிப்போம்.

நம்மிடையே சில நல்ல பழக்கங்கள் உண்டு. தற்சமயம் குறைந்து வருகிறது. முதல் தரமானதை கோயிலுக்குக் கொடுப்பார்கள். முதல் சம்பளத்தை முழுமையாக கோயில் நேர்ச்சையாகக் கொடுப்பார்கள்.

அவர்களுக்கு எதுவும் குறைந்து போனதும் இல்லை. கடவுளுக்குக் கொடுக்கிறவர்கள், இன்னும் அதிகமாக கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "கடவுளுக்கு கொடுத்து குறைந்து ஒன்றும் போகவில்லை" என்று.

ஒரு வருடத்தில் அல்லது மாதத்தில் கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு கொடுத்ததை கணக்கிட்டுப் பாருங்கள். மற்ற எல்லாவற்றையும் விட அதுதான் மிகக் குறைவாக இருக்கும்.

 நம் அன்னை மரியாபோல் முதலானவற்றை ஆண்டவருக்குக் கொடுப்போம். அவர் நம்மை எல்லாவற்றிலும் முதன்மையாக்குவார் . ஆசீர்.