அமெரிக்காவைச் சார்ந்த ஜெனே துன்னி (Gene
Tunney) என்பவர் பளுதூக்கும் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றதும்
நீயூயார்க்கில் இருந்த அவருடைய நல விரும்பிகள் சிலர் அவரை ஒரு விருந்துக்கு
அழைத்திருந்தார்கள். ஜெனே துன்னியும் அவர்களுடைய அழைப்பினை ஏற்று விருந்துக்குச்
சென்றிருந்தார்.
விருந்து மிகவும் தடபுடலாக நடந்தது. அவருடைய
நலவிரும்பிகள் அவரை விழுந்து விழுந்து கவனித்தார்கள். அந்த விருந்து முடிந்ததும்
அரை குறை ஆடையுடன் ஒருசில பெண்கள் ஆடும் அரைநிர்வாண ஆட்டக் காட்சியானது ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஜெனே துன்னிக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. அவர் ஏதோ
பாராட்டுக்கூட்டத்தைத்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று
நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், நேரம் ஆனதும் மேடையில் சில பெண்கள் அரை குறை
ஆடையுடன் தோன்றி, ஆட்டம் போடத் தொடங்கினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ஜெனே
துன்னி விழாக் குழுவினரிடம், “நான் இங்கு வந்தது நீங்கள் ஏற்பாடு செய்திருந்த
விருந்தில் கலந்துகொள்வதற்குத்தான். இப்படி அரைகுறை ஆடையோடு ஆடும் பெண்களின்
ஆட்டத்தினால் அவமானத்திற்கு உள்ளாக அல்ல; எந்தவொரு நிகழ்விலும் தூய்மையானது
காப்பாற்றப்படவேண்டும். அது இல்லாதபோது இங்கு நான் இருந்து என்ன பயன்” என்று
சொல்லிவிட்டு, அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
அவரைப் பின்தொடர்ந்து, அந்த விருந்துக்கு
வந்திருந்த ஒருசில முக்கியப் பிரமுகர்களும் அங்கிருந்து கிளம்பிப் போக, கடைசியில்
அந்த அரை நிர்வாணக் காட்சியானது ரத்து செய்யப் பட்டது.
வெளிப்புறத்தில் மட்டும் நாம் தூய்மையைக்
கடைப்பிடிப்பவர்களாக அல்லாமல், உட்புறத்திலும் – உள்ளத்திலும் –
நாம் தூய்மையைக் கடைபிடிக்கவேண்டும் என்னும் உண்மையை இந்த நிகழ்வு
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பளுதூக்கும் போட்டியில் உலகச் சாம்பியனாகிய விளங்கிய
ஜெனே துன்னி வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் தூய்மையான விளங்கினார்
என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர்
ஒருவருடைய வீட்டில் உணவருந்தச் செல்கிறார். இயேசு உணவருந்தச் சென்ற இடத்தில், அவர்
கைகளைக் கழுவாமல் பந்தியில் அவர்வதைப் பார்த்த பரிசேயர் வியப்படைகின்றார். அப்போது
இயேசு அவரிடம், “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில்
தூய்மையாக்குகின்றீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும்
நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவே உட்புறத்தையும்
உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது
உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்” என்கிறார்.
இயேசு தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயரிடம்
கூறிய வார்த்தைகள் ஆழமான சிந்தனைக்குரியவை. யூதர்கள் அதிலும் குறிப்பாக
பரிசேயர்கள் வெளியடையாளங்களை பின்பற்றுவதிலும், மூதாதையர்களின் சட்ட ஒழுங்குகளைப்
பின்பற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். இப்படி அவர்கள்
செய்ததன் வழியாக தங்களை அவர்கள் மக்களுக்கு முன்பாக தூயவர்கள் போன்று காட்டிக்கொண்டார்கள்.
ஆனால, உட்புறத்திலோ – உள்ளத்திலோ – அவர்கள் தீமை நிறைந்தவர்களாக இருந்தார்கள்;
சாதாராண ஏழை எளிய மக்களையும் கைம்பெண்களையும் வஞ்சித்து அவர்களிடமிருந்து உடைமைகளை
அபகரித்துக் கொண்டார்கள். அதனால் இயேசு அவர்களை வெளிப்புறத்தில் மட்டுமல்ல
உள்ளத்திலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்றொரு அழைப்பினைத் தருகின்றார்.
எதற்காக ஆண்டவர் இயேசு உள்ளத் தூய்மையினை
வலியுறுத்திப் பேசுகின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய
கடமையாகும். உள்ளத்தின் நிறைவே வாய் பேசும் என்று சொல்வார்கள். வெளிப்புறத்தை
எவ்வளவுதான் அழகு படுத்திக்கொண்டாலும் உள்ளத்தில் இருக்கின்ற வஞ்சனை எண்ணம்,
வெறுப்பு, பொறாமை, கயமை போன்றவை எல்லாம் என்றைக்காவது ஒருநாள் வெளிப்பட்டு அது
மனிதனையே பாழ்படுத்திவிடும் என்பதால்தான் முதலில் உள்ளத்தினைத் தூய்மையாக
வைத்திருக்கச் சொல்கின்றார்.
அது மட்டுமல்லாமல் எல்லாம் வல்ல கடவுள் தூயவர்
(லேவி 19:2), எனவே அவருடைய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூயவராக இருக்கவேண்டும்
என்பதால் இயேசு வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் தூய்மையானவர்களாக
இருக்கவேண்டும் என்றொரு வேண்டுகோள் விடுகின்றார்.
பல நேரங்களில் நாம் வெளிப்புறத்தை அழுகுபடுத்த
எவ்வளவோ செலவு செய்கின்றோம். ஆனால், உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஒன்றுமே
செய்வதில்லை. உள்ளத்தை தூய்மையானதாக மாற்றினால், இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வே
தூய்மையானதாக மாறிவிடும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.
எனவே, நாம் விண்ணகத் தந்தையைப் போன்று
தூயவர்களாக இருப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.