Tuesday, 24 January 2017

பவுலின் மனமாற்றம் !

இன்று நாம் புனித பவுலின் மனமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அவரது மனமாற்ற நிகழ்வு திருத்தூதர் பணிகள் நூலில் மூன்று இடங்களில் (9:1-19, 22:1-21, 26:12-18) தரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

இந்நிகழ்வைப் பவுலின் மனமாற்றம் என்பதோடு, அவரது அழைப்பு என்றும் கூறலாம். திருத்தூதர் பணிகள் நூலில் இரண்டு இடங்களில் "சவுல் அழைப்புப் பெறல்" "பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல்" எனத் தலைப்பிடப்பட்டிருப்பதும் நம் கவனத்தை ஈர்க்கிறது. பவுலை இறைவன் மனம் மாற்றியபோது, அவரைத் தமது திருப்பணிக்காக அழைத்தார்.

எனவே, ஒவ்வொரு மனமாற்றமும் ஒரு அழைப்பே எனக் கொள்ளலாம். நாம் மனம் திரும்பும்போது, நமது வாழ்வு மாறுபடுவது மட்டுமல்லாது, பிறரது வாழ்வையும் மாற்றவேண்டிய கடமை நம்மேல் சுமத்தப்படுகிறது. எனவே, நாம் நமது தீய வழிகள், பழக்கங்களைவிட்டு விலகினால், மட்டும் போதாது, நமது மனமாற்ற அனுபவத்தைக் கொண்டு, பிறரையும் மனமாற்றத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே இந்த விழா நமக்குத் தரும் செய்தி.

நமது வாழ்வு முறை மாறவும், நாமும் திருத்தூதர்களாக ஆகவும் வரம் வேண்டுவோம்.

Monday, 23 January 2017

யார் இயேசுவினுடைய தாய்?, யார் இயேசுவின் உடன்பிறப்புகள்?


சபீதா ஜோசப் என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு வேடிக்கையான கதை.
ஓநாய் ஒன்று பசியோடு அலைந்து கொண்டிருந்தது. கிராமத்தின் தெருக்கோடியில் இருந்த ஒரு குடிசை அருகே அது வந்தபோது, குடிசையினுள்ளே அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை அவனது தாய் திட்டிக்கொண்டிருப்பது காதில்விழ நின்று கவனித்தது.
“அழுகையை நீ மட்டும் நிறுத்தாவிட்டால் உன்னைத் தூக்கி ஓநாயிடம் கொடுத்துவிடுவேன்” என்று மகனை மிரட்டினாள் தாய். மகனோ தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். “நமக்கு சீக்கிரம் அருமையான விருந்து கிடைக்கப் போகிறது” என்று ஓநாய் காத்திருந்தது.
நேரம் ஓடியது. இரவும் வந்துவிட்டது. இன்னும் அழுதுகொண்டே இருந்த மகனை சமாதனப்படுத்தும் விதமாய் தாய் சொன்னாள், “கண்ணா அழுவாதே... உன்னை ஓநாய்க்கிட்டே போடமாட்டேன். அந்த திருட்டு ஓநாய் இந்தப் பக்கம் வரட்டும் அடிச்சுச் கொன்னுடலாம்”. அவள் பேச்சைக் கேட்ட ஓநாய், “சே! இந்த மனுசங்க சொல்வது ஒன்று. செய்வது வேறாய் இருக்கிறதே. இவர்களை நம்பவே கூடாது” என்றபடியே ஓநாய் அங்கிருந்து ஓடிப்போய் மறைந்தது.
மனிதர்களாகிய நாம் எப்படி முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றோம் என்பதனை இந்தக் கதையானது வேடிக்கையாகப் பதிவுசெய்கின்றது. இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருப்பவர்கள் யாரும் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரியாக மாறும் பேற்றினைப் பெற முடியாது என்பது மட்டும் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக்கொண்டிருக்கும்போது அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும் வருகிறார்கள். அவர்கள் வந்த செய்தி இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர் தம்மைச் சூழ்ந்து நின்ற மக்களைப் பார்த்துச் சொல்கிறார், “இதோ! என் தாயும் என் சகோதர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”. இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது இயேசு தன்னுடைய தாயும் சகோதர சகோதரிகளையும் இழிவுபடுத்தியது போன்று தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
இயேசு, “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவர்” என்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துப் பார்க்கும்போது மரியா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவராக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படி என்றால் வானதூதர் கபிரியேல் முன்மொழிந்த ஆண்டவரின் திட்டத்திற்கு ஆம் என்று சொன்ன மரியா, அத்திட்டம் நிறைவுபெற தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரையும் முயன்றார். அதற்காக தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார். ஆகவே, மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டும் இயேசுவுக்குத் தாயாகிவிடவில்லை, மாறாக இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றியதாலும் இயேசுவுக்குத் தாயாகின்றார்.
நாம் மரியாவைப் போன்று இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மக்களாக வாழ்கிறோமா? அதன்வழியாக இயேசு அளிக்கின்ற அவருக்குத் சகோதர சகோதரியாகும் பேற்றினைப் பெருகின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் மேலே சொல்லப்பட்ட கதையில் வரும் தாயினைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும், வழிபடுவது ஒன்றும் வாழ்வதும் ஒன்றான முன்னுக்குப்பின் முரணான வாழ்க்கையாகத் தான் நம்முடைய வாழ்க்கை இருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் எப்படி இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவது என்பதுதான் நமக்கு முன்பாக உள்ள சவாலாக இருக்கின்றது.
இறைவனின் திருவுளம் யாது? அது வேறொன்றுமில்லை. ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்வதும், ஒருவர் மற்றவர்மீது உண்மையான பரிவு, இரக்கம் அக்கறையோடு வாழ்வதுதான். அன்னை மரியா அப்படித்தான் வாழ்ந்தார். அதனால்தான் அவர் இரண்டு விதங்களில் இயேசுவுக்கு தாயாக மாறினார். நாமும் இறைவனின் திருவுளத்தை நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுவோம், அதன்வழியாக இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரியாக மாறும் பேற்றினைப் பெறுவோம்.

Saturday, 21 January 2017

".. .. .. .. பின்பற்றினார்கள்"

பேதுருவும் அவர் சகோதரர் அந்திரேயாவும் இயேசுவைப் பின்பற்றினார்கள்.(மத் 4:20) செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவைப் பின்பற்றினார்கள். (மத் 4:22) தொடர்ந்து வரும் பகுதியிலும் மக்கள் கூட்டம் பெருந்திரளாய் இயேசுவைப் பின்தொடர்ந்ததையும் (மத்4:25) மத்தேயு குறிப்பிடுவதில் உள்ள உட் பொருளைக் காண்பது அவசியம்.

'பின்பற்றுவதும்' 'பின்தொடர்வதும்' தனக்காக வாழாமல், தான் பின்பற்றும் அல்லது தொடரும் இயேசுவுக்காக வாழ்வது என்னும் உட் பொருளைக் கொண்டுள்ளது. இவ்வாறு இயேசுவுக்காக, ஆகவே பிறருக்காக வாழும் வாழ்க்கை ஒரு 'தனிமனித வாழ்க்கை' அல்ல மாறாக 'குழுவாழ்வு' என்னும் உட்பொருளை தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே இயேசுவைப் பின்பற்றுவோரும் பின்தொடர்வோரும் இத்தகைய குழு வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம்.

இக்குழு வாழ்வுக்குத் தன்னையும் சொந்த பந்தத்தையும்(மத்8:18-22) சொத்து சுகத்தையும்(மத் 19:21) தியாகம் செய்ய வேண்டும்.ஆண்டவனையும் அயலானையும் முன்னிலைப்படுத்தி குழுமமாக வாழ இப்பின்தொடர்தல் வலியுறுத்துகிறது. எனவே, கிறிஸ்தவத்தில் குழு வழிபாடு, குழு வாழ்க்கை, அன்பியம், பங்கு, ஆகிய எண்ணங்கள் புதிது அல்ல, மாறாக கிறிஸ்தவத்தில் உள்ளடங்கியது. இயேசுவைப் பின்தொடரும் நாம் இவற்றைப் பின்பற்றுவோம். வாழ்கை வளமாகும். வாழ்த்துக்கள். ஆசீர்;.

Thursday, 19 January 2017

தம்மோடு இருக்க...!

 இயேசு தம் திருத்தூதர்களை அழைத்த நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். நமக்கு நன்கு அறிமுகமான பகுதிதான். அதில் இன்று நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் இரு செய்திகள்:

1. அவர் தாம் விரும்பியவர்களை தம்மிடம் அழைத்தார். கிறித்தவ அழைத்தல் என்பது ஒரு கொடை. அது சம்பாதிப்பது அல்ல, இறைவன் தாமாக விரும்பி இலவசமாகக் கொடுப்பது. அந்த அழைத்தலுக்குத் தகுதி என்று எதுவுமில்லை. இறைவனின் இரக்கம் ஒன்றுதான் அலகு. யாரையெல்லாம் அவர் அழைத்திருக்கிறாரோ, அவர்களெல்லாம் பேறுபெற்றவர்கள். நன்றி சொல்ல வேண்டியவர்கள்.

2. தம்மோடு இருக்க... என்பது அவரது அழைத்தலின் நோக்கங்களுள் ஒன்று. அவரால் அழைக்கப்பட்டவர்கள் அடிப்படையில் செய்யவேண்டியது அவரோடு ஒன்றி வாழ்வது, அவரோடு வாழ்வது. இந்த இரு செய்திகளையும் இன்று நம் இதயத்தில் பதித்துக்கொள்வோம்.

“இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;  அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”(மாற் 3:13-15) பன்னிரெண்டு திருத்தூதரை அழைக்க, இவ்வளவு சிரமப்பட்டு மலை உச்சிக்குப்போய், தந்தை இறைவனோடு செபத்தில் கலந்தாலோசித்து  தேர்ந்தெடுத்துள்ளார்.

சாதிக்கு ஒரு திருத்தூதர், சங்கத்துக்கு இன்னொருவர், கோடி பணம் கொடுத்தவர் மற்றொருவர், குடும்பத்தில் பாதிபேர் என்று மிக எளிதாக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒரு குருமாணவனைப்பற்றிய ஒரு புகார் அந்த ஆயரிடம் வந்தபோது, ‘நான் செபித்து முடிவு செய்வேன்’ என்றார். அவர் இன்று இல்லை.

அது ஆயராக இருக்கலாம், அமைச்சராக இருக்கலாம், குருக்களாக இருக்கலாம், குருத்துவப் பணியிடமாக இருக்கலாம், உங்கள் கணவனாக மனைவியாக இருக்கலாம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால வாழ்வாக இருக்கலாம். மலைக்குச் செல்லுங்கள். ஆண்டவரின் உதவியைத் தேடுங்கள். சரியான முடிவு எடுப்பீர்கள். நடப்பவை நல்லவையான இருக்கும்.

நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே நற்செய்தி அறிவிக்கும்பணி இருக்கிறது. நாம் இறைவார்த்தை கேட்டதோடு நமது வாழ்வு நின்றுவிடக்கூடாது. அது நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும். இறைவார்த்தை தொடர்ந்து நமது வாழ்வில், வாழ்வு மூலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

Wednesday, 18 January 2017

.. ..அவரைத் தொடவேண்டுமென்று .. .. ..!

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது புனிதமான அன்பை பகிர்ந்தளிக்கிறாள். பாதுகாப்பைப் பரிமாறிக்கொள்கிறாள். அந்த அன்பு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிறது.அது மருந்தாகிறது, உணவாகிறது. புனிதமான, கலப்படமற்ற தொடுஉணர்வு, குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேபோல உடலுக்கும் உள்ளத்துக்கும் உணவாகிறது, மருந்தாகிறது.

நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தொடவேண்டுமென்று இயேசுவின்மீது விழுந்துகொண்டிருந்த இந்த நற்செய்தி காட்சியிலும் இதே உணர்வு வெளிப்படுவதைக் காண்கிறோம்.பெருங்கூட்டம் இயேசுவின் மேல் விழுந்து அவரைத் தொட்டது. தொட்ட யாவரும் எல்லாவித நோயிலிருந்தும் குணமடைந்தனர். இயேசுவைத் தொட்ட யாவரும் குணமடைந்தனர். 'அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (லூக் 8 :44) இயேசு தொட்ட அனைவரும் குணமடைந்தனர். "இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று"(மத்8 :15) "அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" (மத் 8 :3)" கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்"(மத் 9 :29)அவர்களைத் தொட்டு," எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்"(மத் 17 :7, மத் 20 :34) நாம் அவரைத் தொட்டாலும் அவர்நம்மைத் தொட்டாலும் நாம் அதன் பலனைப் பெறுகிறோம்.

கைகளால் இயேசுவைத் தொடும்போதும், செபத்தில் இதயத்தில் இயேசுவைத் தொடும்போதும், நற்கருணை வாங்கும்போது இயேசுவைத் தொடும்போதும் இயேசுவின் தெய்வீக ஆற்றல் இங்கு பரிமாறப்படுகிறது. அது உணவாகிறது, மருந்தாகிறது. நாம் நலமடைகிறோம்,வலுவடைகிறோம்.

இயேசுவைத் தொடுவோம். இயேசு நம்மைத் தொடும் நிலையில் வைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

Tuesday, 17 January 2017

"ரௌத்திரம் பழகு" !

"ரௌத்திரம் பழகு" என்றார் பாரதி தமது புதிய ஆத்திச்சூடியில். கோபப்படப் பழகு என்பது அதன் பொருள். பொதுவாக, சினம் என்பது ஒரு தவறான உணர்வுநிலைதான். பெரும்பாலான வேளைகளில், சினமும், சீற்றமும் மானிடரைக் குற்றப் பழிக்கு இட்டுச்செல்கின்றன என்பதுவும் உண்மைதான். இருப்பினும், கோபம் கொள்ளவேண்டிய வேளைகள் இருக்கின்றன. அவ்வேளைகளில் கோபம் கொள்ளாமல் இருப்பதுவும் தவறே என்பது இந்தப் புதிய ஆத்திச்சூடியின் பாடம்

அது உண்மைதான். எப்போது நாம் கோபம் கொள்ளவேண்டும்? நமக்கு தீமையோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதைப் பொறுத்துக்கொள்வதும், அமைதி காப்பதும் சிறந்த பண்புகள். ஆனால், பிறருக்குத் தீமை, அநீதி நிகழும்போது அதைப் பார்த்துக்கொண்டு அமைதி காப்பது என்பது தவறு. அந்த நேரத்தில்தான் நமக்குக் கோபம் பொங்கி எழவேண்டும்.

நாளைய(18.01.2017)   நற்செய்தி வாசகத்தில் இயேசு கொள்ளும் சினம் அத்தகையதே. தொழுகைக்கூடத்தில் கை சூம்பிய மனிதரைப் பார்த்தபோது, இயேசுவின் பரிவுள்ளம் அவரைக் குணமாக்கத் துடித்தது. ஆனால், அங்கிருந்தவர்களோ ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று "குற்றம் சுமத்தும் நோக்குடன்... அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்". அதுமட்டுமல்ல, ஓய்வுநாளில் நன்மை செய்வது, குணப்படுத்துவது முறையா? என்று அவர்களிடம் இயேசு கேட்டபோது, அவர்கள் பிடிவாத உள்ளத்துடன் "பேசாதிருந்தார்கள்". எனவேதான், இயேசு சினம் கொண்டார். அது நியாயமான சினம். அத்துடன், அந்த சினத்தின் விளைவாக அந்த மனிதரை இயேசு குணப்படுத்தினார். நாமும் நியாயமான சினம் கொள்வோமாக!

Wednesday, 11 January 2017

பரிவின் தொடுதல் !

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, “இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம்.

தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.

என்னதான் தகவல் அறியும் சட்டம் வைத்தாலும், பதிலே கிடைப்பதில்லை. யாரிடமாவது சில விவரங்கள் கேட்டால் மௌனம் மட்டுமே பதிலாகிவிடும். பிறருக்கு உதவுவதில், தெளிவுகள், விளக்கங்கள் விவரங்கள் கொடுத்து உதவவும் உறவை ஏற்படுத்தவும் நாம் தயங்குகிறோம், பயப்படுகிறோம்.

ஆனால் இயேசு ஒரு தயக்கம் நிறைந்த கேள்வி கேட்டவனுக்கு, கேக்காத கேள்விகளுக்கெல்லாம் விளக்கமாகவும் விரிவாகவும் பதில் கொடுக்கிறார்.அந்த தொழுநோயாளியைத் தொட்டு தூக்கி, குணமாக்கியதோடு நில்லாமல், அந்தச் சமுதாயத்தில் மீண்டும் அவன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என வழிகாட்டுகிறார். நோய் நீங்கினால் மட்டும் போதாது. அவன் சமுதாயத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகக் குருவிடம் காட்ட ஆலோசனை கொடுக்கிறார். இதுபோன்ற கூடுதல் கரிசனை உடையவர் நம் இயேசு.

நீங்கள் தயங்கலாம்.பின் வாங்கலாம். ஆனால் இயேசு தாராளமானவர். தாமாக முன்வந்து உதவுவார். ஆறுதலும் ஆலோசனையும் தருவார். ஆகவே எதையும் தயங்காமல் கேளுங்கள். கேட்பதற்கும் மேலாக தருபவர் நம் தெய்வம். அதுபோல உங்களிடம் கேட்கத் தயங்குவோருக்கு நீங்களாக முன்வந்து உதவுங்கள். நீங்கள் மகிழ்வீர்கள்.

Tuesday, 10 January 2017

இறைவேண்டலும் நற்செயல்களும்!

நாளை(11.1.2017) என் தெய்வம் விண்ணில் பிறந்த நான்காவது வருடம்.என் அக்கா வெர்ஜின் அவர்கள் இறை வேண்டலிலும் நற்செயல்கள் செய்வதிலும் சிறந்து விளங்கியவர்.இந்த நாளில் நம்  அனைவரையும்  எல்லாம் வல்ல இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.
 
நீண்ட நேரமாகப் பாலைவனத்தில் அலைந்து திரிந்த இளைஞன் ஒருவன் தூரத்தில் ஒரு காட்டுப் பங்களா இருப்பதைக் கண்டான். அதைக் கண்டதும் அங்கு யாராவது இருக்கிறார்களா? என அவன் பார்க்கச் சென்றான். அவன் அதன் அருகே சென்றதும், ஒரு தோட்டத் தொழிலாளி நிற்பதைக் கண்டான். உடனே அவன் அவரிடம், “ஐயா! இது என்ன இடம்?, இங்கு யார் இருக்கிறார்?” என்று கேட்டான்.

அதற்கு அந்தத் தோட்டத் தொழிலாளி, “இது இளந்துறவிகள் பயிற்சி பெறும் துறவறமடம், இங்கே இளந்துறவிகளும், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் ஒரு பெரிய துறவியும் இருக்கிறார்கள்” என்று பதில்கூறினார். அதற்கு அந்த இளைஞன், “ஐயா! இந்த துறவற மடத்தை உள்ளே சென்று ஒரு முறை பார்த்துவிட்டு வரலாமா?” என்று கேட்டான். “ஓ! தாராளமாக, நீங்கள் உள்ளே சென்று பார்த்துவிட்டு வரலாம்” என்றார் அந்த தோட்டத் தொழிலாளர்.
துறவுமடத்தின் உள்ளே சென்ற இளைஞன் அங்கே இருக்கும் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.

ஓர் அறையில் வயதான துறவி, தன்னுடைய மாணவர்களுக்கு – இளந்துறவிகளுக்குப் - போதித்துக்கொண்டிருந்தார். உடனே அந்த இளைஞன் வயதான துறவியிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, “உங்களுடைய போதனையை நானும் இங்கே அமர்ந்து கேட்கட்டுமா?” என்றான். துறவியும் அதற்குச் சரியென்று சொல்ல, அவன் அந்த அறையின் ஓர் ஓரத்தில் அமர்ந்து துறவியின் போதனையை காதுகொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.

 துறவி தொடக்கத்தில் ஜெபத்தைக் குறித்துப் பேசத் தொடங்கினார், அதன்பின்னர் எப்படி தியானம் செய்வது என்பதைக் குறித்து போதித்தார். எல்லாவற்றையும் அவன் பொறுமையாகவும் மிகவும் கவனமாகவும் கேட்டுக்கொண்டிருந்தான்.

மாலை வேளையானதும் துறவி தன்னுடைய மாணவர்களிடம், “இத்தோடு இன்றைய போதனை முடிந்துவிட்டது. இப்போது நாம் பக்கத்து ஊரில் சேதமடைந்து கிடக்கும் சாலையை செப்பனிடச் செல்லலாமா? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அனைவரும் சரி என்று பதில்கூறினார்கள். இளைஞனால் மட்டும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் நேராகத் துறவியிடம் சென்று, “துறவிகள் என்றால் ஜெபம், தவம், தியானம் என்றுதானே இருப்பார்கள், இப்படி சாலையுமா அமைப்பார்கள்?” என்றான். அதற்கு அந்த வயதான துறவி, “ நாங்கள் இதுபோன்ற சேவைகளைச் செய்யவில்லை என்றால், நாங்கள் செய்யும் ஜெபம், தவம், தியானம் அத்தனையும் வீண்” என்றார். துறவியின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தவனாய் அவன் அவர்களோடு சேர்ந்து பக்கத்து ஊரில் இருந்த சேதமடைந்த சாலையைச் செப்பனிடச் சென்றான்.

ஜெபமும் வாழ்வும் இணைந்து போகவேண்டும். அதுதான் உண்மையான ஆன்மீக வாழ்வு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.    
இறைவேண்டலும் நற்செயல்களும் (நல்வாழ்வும்) கிறிஸ்தவத்தின்  இரண்டு கண்கள். அதைத்தான் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக  நமக்கு போதித்து வாழ்ந்து காட்டுகின்றார்.

இயேசு தொழுகைக்கூடத்தில் போதித்து முடித்தவுடன் சீமோன் பேதுருவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே காய்ச்சலால் படுத்துக் கிடந்த சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுகின்றார். அது மட்டுமல்லாமல் மாலை வேளையில் அங்கு கொண்டுவரப்பட்ட பல்வேறு பிணியாளர்களைக் குணப்படுத்துகின்றார்.

மீண்டுமாக அவர் தனிமையான ஓரிடத்திற்குச் சென்று இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றார். இவ்வாறு அவருடைய வாழ்க்கை ஜெபம், நற்செயல்கள் மீண்டுமாக ஜெபம் என்று மாறி மாறிப் போகின்றது.
இங்கே ஒரு காரியத்தை நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அது என்னவெனில், இயேசு கிறிஸ்து இறைமகன்; எல்லாம் வல்லவர்; அவர் எதற்கு ஜெபிக்கவேண்டும் என்று நாம் கேட்கலாம்.

ஆனால் அவருக்கும் ஜெபமானது தேவையான ஒன்றாக இருக்கின்றது. அதைதான் அவருடைய வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இவ்வாறு குறிப்பிட்டார், “நான் என்னுடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் நான் செய்யும் ஜெபத்திலிருந்தே பெறுகின்றேன்” என்று. ஆம், நம்முடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் வல்லமையையும் ஜெபம் மட்டுமே தரமுடியும்.

அதே நேரத்தில் ஜெபத்திலிருந்து நாம் பெறும் ஆற்றலையும் வல்லமையையும் பிறருடைய நலனுக்காகப் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவைப் போன்று முழு மனிதராக மாறமுடியும், இல்லையென்றால் நாமும் பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் போன்றுதான் இருக்க முடியும்.

அவர்கள் ஜெபித்தார்கள், போதித்தார்கள், ஆனால் போதித்ததை வாழ்வாக்கவில்லை. நாம் பரிசேயர்களை, மறைநூல் அறிஞர்களைப் போன்று அல்லாமல், இயேசுவைப் போன்று ஜெப வீரர்களாகவும் அதே நேரத்தில் செயல்வீரர்களாகவும் வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்க்கை நிறைவாகப் பெறுவோம்.

“ஜெபமில்லாத வாழ்க்கை கூரையில்லாத வீட்டிற்குச் சமம். நற்செயல்கள் இல்லாத வாழ்க்கை அடித்தளமில்லாத வீட்டிற்குச் சமம்”.

Monday, 2 January 2017

பாலைவனக் குரல்!

ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் கேட்க வேண்டிய கேள்வி, நீ யார்? என்ன பதில் சொல்லப்போகிறோம்? திருமுழுக்கு யோவானிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. 'நான் பாலை வனக் குரல்' என்று ஏசாயா இறைவாக்கை (40'3) மேற்கோள்காட்டி பதில் சொன்னார்.

நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் முன்னோடிகள். அவரது வருகைக்குத் தயார் செய்யும் தயாரிப்பாளர்கள். அவரது வருகையை முன்னறிவிக்கும் ஒலிப்பான்கள்.

நம்முடைய சொல், செயல், நடவடிக்கை அனைத்தும் இயேசுவை எதிரொலிப்பதாய், பிறதிபலிப்பதாய் இருக்க வேண்டும். நம் வாழ்வு இயேசுவை அடையாளம் காட்டி அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும்.

தன் எதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டார். தன் உண்மை நிலையை மறுக்கவில்லை. தன்னை தாழ்த்துவதற்குத் தயங்கவில்லை. தான் ஒரு 'பாலை வனக் குரல்' என்றும், "எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" தாழ்த்தினார்.

பிறரைப் பெருமையாகப் பேசுவோம். அனைத்திலும் பிறருக்கு முதலிடம் கொடுப்போம். பிறரை உயர்வாக மதிப்போம். பிறரைப்பற்றிய நற்குணங்களை எடுத்துச் சொல்வோம். இவ்வாறு செயல்படும்போது நாம் ஒவவொருவரும் ஒரு திருமுழுக்கு யோவான், இயேசுவின் முன்னோடி, ஒரு பாலைவனக் குரல். வாழ்த்துக்கள். ஆசீர்.



Sunday, 1 January 2017

அன்னையின் ஆசியோடு!

இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!

இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன? குறி;ப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது.

எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன? நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன.

உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.

இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.