Monday, 29 February 2016

மன்னிக்கும் மனநிலை வளர்ப்போம்!

”இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்று மத்தேயு 5: 7 ல் பார்க்கிறோம்.

இயேசு பரலோக மந்திரம் செபத்தில், நாம் மற்றவர்களை மன்னிப்பதுபோல, நமது பாவங்களை கடவுள் மன்னிக்கிறார் என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் பாவங்களை மன்னிப்பதைச் சொல்கிறார். ”மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” மத்தேயு 6: 15. யாக்கோபு தனது திருமுகத்தில் ”இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்பு தான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்” (2: 13).

 இதிலிருந்து மற்றவர்களை மன்னிப்பது, கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கான அடிப்படை என்பது தெளிவாகிறது.

ஒரு தாலந்து என்பது பதினைந்து வருடக்கூலிக்கு இணையானது. சாதாரண மாகாணத்தின் வரவு, செலவைத்தாண்டக்கூடிய பணமதிப்பு. இதுமேயா, யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளிலிருந்து கிடைக்கும் மொத்த ஆண்டு வருமானமே 600 தாலந்துகள் தான்.

பணக்கார மாகாணம் என்று அழைக்கப்படும் கலிலேயாவின் மொத்த ஆண்டு வருமானம் 300 தாலந்துகள் தான். பத்தாயிரம் தாலந்துகளை சுமார் 8,600 வீரர்கள் சுமந்து வந்தால், கிட்டத்தட்ட, அந்த வரிசையே ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய அளவுக்கு தொகை பெரியது. மாறாக, தெனாரியம் என்பது தொழிலாளியின் ஒருநாள் கூலிக்கு இணையானது. 100 தெனாரியம் என்பது, பெரிய மதிப்பு அல்ல.

1000 தாலந்துகளைத் தலைவர் தள்ளுபடி செய்கிறார். தள்ளுபடி செய்யப்பட்டவன், 100 தெனாரியத்தைத்தள்ளுபடி செய்ய மறுக்கிறான்.

நாம் செய்கின்ற தவறுகள், குற்றங்கள் ஏராளம், ஏராளம். ஆனால், நமது பாவங்களை இறைவன், ஒரு பொருட்டாக எண்ணாமல், மன்னிக்கிறார்.

ஆனால், நாம் நமக்கெதிராக சிறிய தவறு செய்யும், நமது உடன் வாழ்கிற சகமனிதர்களை மன்னிக்க மறுக்கிறோம். நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால், கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.

Sunday, 28 February 2016

அவரின் போதனையும், தாக்கமும்!

நாளைய நற்செய்தியில்  இதுவரை கேட்டிராத போதனை யூதர்களை குழப்பத்திலும், இயேசுவின் மீது கோபத்தோடு தாக்கவும் செய்கிறது.

தாங்கள் மட்டும் தான் இறையாட்சி விருந்துக்கு தகுதியானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, இயேசுவின் போதனை புதிய போதனையாக இருக்கிறது.

இதுவரை கேட்டிராத போதனையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு குழப்பம் என்பதைக் காட்டிலும், கோபம் அதிகமாக இருக்கிறது.

யூதர்கள் மத்தியில் வாழ்ந்த போதகர்கள் அனைவருமே, யூதர்கள் மட்டும் தான், இறையாட்சி விருந்திற்கு தகுதிபெற்றவர்கள், என்கிற ரீதியில் போதித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களது போதனை மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் சொல்வது யூதர்களுக்கு மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்திருந்தது. ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர். கேட்கக்கூடிய பொய்யான வாக்குறுதிகளுக்கு அவர்கள் கட்டுண்டு கிடந்தனர்.

அதனைத்தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாழ்வு வறுமையாக இருந்தாலும், எதிர்கால இறையாட்சி விருந்து அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆனால், அதற்கு தடையாக வந்தது, இயேசுவின் புதிய போதனை.

தான் போதிப்பது மக்கள் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை, இயேசு தெரிந்திருந்தாலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், அதன் மூலமாக மக்களை சிந்திக்க வைப்பதிலும் இயேசு கருத்தோடு செயல்படுகிறார்.

இன்றைக்கு மக்களை சிந்தனையில்லாத மழுங்கட்டைகளாக இருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். எனவே தான், தொலைக்காட்சியைக் கொடுத்து, அவர்களின் வாழ்வை கெடுத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

மக்கள் சிந்திப்பதை மறந்து, ஒருவிதமான மயக்கநிலையிலும், அடிமைநிலையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு நமது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் போதிக்க, முயற்சி எடுப்போம்.

Saturday, 27 February 2016

திருந்திவாழ அழைப்பு!

பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை, யூதா்கள் இயேசுவுக்கு அறிவிக்கின்றனர்.

ஆனால், இயேசுவின் பதில், கேள்வியாக அமைவது நமக்கு வியப்பைத் தருகிறது.

பிலாத்து கொன்றான் என்ற செய்திக்கும், இறந்தவர்கள் மற்றெல்லாரையும் விட பாவிகள் என நினைக்கிறீர்களா? என இயேசு கேட்ட கேள்விக்கும் தொடர்பு இல்லாதது போல தோன்றுகிறது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய உண்மையான விளக்கம் நமக்கு தெரியவரும்.


இயேசுவிடம் அந்த செய்தியைச் சொன்னவர்கள், உள்ளத்தில் ஒன்றை வைத்து, இயேசுவிடத்தில் வெறும் செய்தியை மட்டும் சொல்கிறார்கள். அவர்களின் உள்ளத்தில் மறைத்த செய்தி என்ன?

வாழ்வை முழுமையாக முடிக்காமல் கொலை செய்யப்பட்டோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ இறக்கிறவர்கள், பாவிகள் என்ற மனநிலை, யூதா்கள் மத்தியில் இருந்தது. அதனால் தான் கடவுள் அவர்களைத் தண்டித்துவிட்டார் என்று, அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், இயேசு இங்கிருக்கிறவர்களை விட, அவர்கள் பெரிதாக குற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை, என்று பதில்கொடுக்கிறார்.

இன்றைக்கு நாமும் நமது குற்றங்களை மறைத்து, அடுத்தவர் செய்யும் தவறுகளை, சிறிய குற்றங்களை, மிகப்பெரிதாக நாம் உருவாக்கிவிடுகிறோம்.

நாம் செய்கிற பாவம், நமது கண்களுக்கு தெரிவதில்லை. அடுத்தவரின் குற்றங்கள் தான், நமக்கு மிகப்பெரிதாகத் தெரிகிறது. அந்த தவறான மனநிலையிலிருந்து திருந்தி வாழ, இயேசு விடுக்கும் அழைப்பிற்கு செவிகொடுப்போம்.

Friday, 26 February 2016

வாழ்வில் உயர்ந்த மதிப்பீட்டைக் கடைப்பிடிப்போம்!

யூதச்சட்டப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் அவரது விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக்கொடுக்க முடியாது. சொத்துக்களை பிரிப்பதில் ஒருசில ஒழுங்குகளை அவர்கள் வகுத்திருந்தனர். இணைச்சட்டம் 21: 17 ல் சொல்லப்பட்டிருப்பதுபோல மூத்தமகனுக்கு சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், அடுத்தவருக்கு மீதியுள்ள ஒரு பங்கும் செல்லும்.

தந்தை இறப்பதற்குமுன் சொத்துக்களை பிரிப்பது என்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று. நாளைய நற்செய்தியில் இளையமகன் கேட்பது, தன்னுடைய பங்கைத்தான். ஆனால், அவன் கேட்கிற முறையிலேயே, அவனுடைய தவறான ஒழுக்கமுறைகளும், பழக்கவழக்கங்களும் வெளிப்படுகின்றன.

தந்தை உயிரோடு இருக்கும்போதே சொத்துக்களை பங்குகேட்கிறான் என்றால், தந்தையின் உயிரை அவன் பொருட்டாக மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், தந்தை முழுமையான அன்போடு அவன்கேட்டபொழுது மறுப்பேதும் இன்றி கொடுக்கிறார்.

தன்னுடைய மகன் துன்பத்தில்தான் வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறர். அவனுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கிறார். அதேபோல், அவன் திருந்தி வரும்போது அவனை ஏற்றுக்கொள்கிறார்.

நாளைய  நற்செய்தியில் ஊதாரி மைந்தனின் மனமாற்றமும், கடவுளின் மன்னிப்பும் அதிகமாக பேசப்பட்டாலும், இந்த உவமை மற்றொரு முக்கியமான கருத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது.

இந்த உவமை யாருக்கு சொல்லப்படுகிறது? என்பதில்தான் இந்தப்பகுதியின் முக்கியமான கருத்து அமைந்திருக்கிறது. இயேசு இந்த உவமையைச்சொன்னபோது, பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். (லூக்கா 15: 2).


இந்த உவமையில் வருகிற மூத்தமகன்தான் கவனிக்கப்பட வேண்டியவனாக இருக்கிறான். மூத்தமகனை பரிசேயர்களோடும், மறைநூல் அறிஞர்களோடும் இயேசு ஒப்பிடுகிறார். இந்த மூத்தமகன் தான் நேர்மையாளன் என்ற மமதையோடு காணப்படுகிறான். அவன் தன்னை முன்னிலைப்படுத்துகிறவனாக இருக்கிறான்.


தன்னுடைய மகன் திரும்பி வந்ததும் அவனை ஏற்றுக்கொள்கிற தந்தையின் மீது கோபம் கொள்கிறவனாக இருக்கிறான். அடுத்தவரை குறைகூர்கிறவனாக இருக்கிறான்.

தாங்கள் மட்டும்தான் நீதிமான், தாங்கள் தான் நேர்மையாளர்கள் என்று மக்கள் மத்தியில் காட்டிக்கொண்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய சாட்டையடியாக இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் எப்போதுமே நம்மைப்பற்றி உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கிறோம். அது தவறில்லை. ஆனால், நம்மை முன்னிறுத்தி, மற்றவர்களை தரம்தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எப்போதும் மற்றவர்களைப்பற்றியும் உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சியான, பக்குவமடைந்த மனநிலையை. அத்தகைய மனநிலையை இறைவனிடம் வேண்டுவோம்.

Thursday, 25 February 2016

இறைவன் தரும் சுதந்திரம்!

இஸ்ரயேல் மக்கள் திராட்சைத்தோட்டத்தோடு தங்களை ஒப்பிடுவதை பழையஏற்பாட்டில் நாம் பார்க்கலாம். எசாயா 5: 7 “படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே”. பொதுவாக திராட்சைத்தோட்டங்கள் முள்வேலிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

கரடி போன்ற கொடூரமான காட்டுவிலங்குகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்து பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு திராட்சைத்தோட்டத்திலும் அகன்ற, வாய்திறந்த தொட்டி, மேல் ஒன்றும், அதை ஒட்டி கீழேயும் அமைக்கப்பட்டிருந்தது. மேல் உள்ள தொட்டி திராட்சைப்பழங்களைப் பிழிவதற்கும், கீழே உள்ள தொட்டி பிழிந்த சாறுகளை எடுப்பதற்கும் பயன்பட்டது.

இரண்டு தொட்டிகளையும் குழாய்போன்ற அமைப்பு இணைத்தது. அதுமட்டுமல்லாது, திராட்சைத்தோட்டத்தில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தினால் இரண்டு பயன்பாடுகள் இருந்தன. திருடர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கையாக தோட்டத்தைப் பாதுகாப்பதற்கும், திராட்சைத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் தங்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாலஸ்தீனம் ஆடம்பர வாழ்வுக்கு ஏற்ற இடமில்லை என்பதால், பொதுவாக திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் தங்களின் திராட்சைத்தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, குத்தகைப்பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கவனமாக இருந்தார்கள். இதுதான் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலை.


இயேசு இந்த உவமையை தலைமைக்குருக்களுக்கும், மக்களின் மூப்பர்களுக்கும் கூறுகிறார். அதாவது கடவுள் மக்களை வழிநடத்தும் பொறுப்பைக்கொடுத்தவர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, கடவுளுக்கு கணக்கு கொடுக்க தவறிவிடுகின்றனர். கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி அவர்களின் பொறுப்புக்களை நினைவூட்டுகிறார்.

அவர்களோ கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, தன்னுடைய மகனை அனுப்பினாலாவது திருந்திவிடுவார்கள் என நினைக்கிறார். ஆனால், அவர்களோ அவரைக்கொன்றுவிடுகிறார்கள். ஆனாலும், கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆனதுபோல, அவர்கள் கொன்ற அவருடைய மகன் வழியாக, இந்த உலகத்திற்கு கடவுள் வாழ்வுகொடுக்கிறார்.

இங்கே நமக்கு சிந்தனையாக தரப்படுவது, கடவுள் நமக்குத்தருகிற முழுமையானச்சுதந்திரம். கடவுள் எப்போதுமே நம்மை வற்புறுத்துவது கிடையாது. நமக்குத்தேவையான அனைத்தையும் கொடுத்து முழுமையானச் சுதந்திரத்தை அவர் எப்போதும் தருகிறார்.

ஆனால், நம்முடைய கர்வம், ஆணவம், அகந்தை நமது பொறுப்பை தவறாகப்பயன்படுத்த நம்மைத்தூண்டுகிறது. தொடக்கநூலில் நம்முடைய முதல்பெற்றோர் செய்த பாவமும் இதுதான்.

இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக்கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம்.

Wednesday, 24 February 2016

இறை மடி தவழும் குழந்தை!

"அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்"

நேற்றைய தினம் வலப் பக்கம் அல்லது இடப்பக்கம் அமர, கிண்ணத்தை இயேசுவின் இரத்தத்தால் அல்லது உழைப்பின் வியர்வைத் துளிகளால் நிரப்பி நாமும் குடித்து பிறரும் குடித்து நிறைவடையச் செய்ய வேண்டும் என இயேசு கூறியதைப் படித்தோம்.

இரண்டு மனிதர்களை நாளைய வாசகத்தில் சந்திக்கிறோம். ஒருவர் தன் கிண்ணத்தை விலையுயர்ந்த தண்ணீரால் நிரப்பியிருக்கிறார்.

 ஒருவேளை விலையுயர்ந்த மதுவினால் நிரப்பியிருப்பார் என தெரிகிறது. ஏனெனில் அவர் பணக்காரர். செல்வர். மற்றவர் பெயர் இலாசர்.

 இவர் வருமையின் மையத்தில் நசுங்கி கசங்கியதால் தன் கிண்ணத்தை கண்ணீராலும் செந்நீராலும் நிரப்பியிருந்தார்.

தன் துன்பக் கிண்ணத்தைத் தினமும் பருகி, இயேசுவின் பாடுகளின் கிண்ணத்தில் தனக்கென ஒரு பங்கும் வைத்துக்கொண்டார்.

தன் துன்பக்கிண்ணத்தை இயேசுவின் புதிய உடன்படிக்கையின் கிண்ணமாக இந்த ஏழை இலாசர் தினமும் குடித்து வாழ்ந்ததால், வலப் பக்கமோ அல்லது இடப்பக்கமோ அல்ல, மடியில் அமர்த்தி அழகு பார்க்கும் அருமையான ஆசீரை அருள்வதைக் காண்கிறோம்.

 அன்றாடம் நம் கிண்ணங்களை இவ்வாறு நிரப்பி, குடித்து, பகிர்ந்து வாழ்ந்தால், தந்தை இறைவனின் மடியில் தவழும் குழந்தையாக இருப்போம். இவ்வுலகிலும் அன்பு இயேசுவின் அருள் பெற்ற மக்களாக  இனிது வாழ்வோம்.

Friday, 19 February 2016

அன்பு வாழ்வு!

பகைவர்களிடமும், துன்புறுத்துவோரிடமும் நம் அனைவரையும் அன்பு செய்ய இயேசு அழைப்பு விடுக்கின்றார். எதற்காக இத்தகைய அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்? நாம் கடவுளின் பிள்ளைகளாக, கடவுளைப்போல இருக்க வேண்டும் என்பதுதான், இயேசுவின் விருப்பம்.

அப்படி இருப்பதற்கு, பகைவரை அன்பு செய்ய வேண்டும். இங்கு இயேசுவின் ”உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்” என்கிற வார்த்தைகள் நினைவுகூறத்தக்கவை. நமக்குள்ளாக கேள்வி எழலாம்? விண்ணகத்தந்தையைப் போல நாம் எப்படி நிறைவுள்ளவராக முடியும் என்று? அதற்கான வழிதான், பகைவரை அன்பு செய்வது.

இயேசு கடவுளின் இரக்க குணத்தை உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார்? கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழைபொழியச்செய்கின்றார். அவர் இஸ்ரயேலுக்கு வெயிலையும், புறவினத்தார்க்கு புயலையும் கொடுப்பதில்லை. அவருடைய இரக்கம் அனைவருக்கும் சமமே. யூத போதகர் நடுவில், கடவுளின் இரக்கக்குணத்திற்கு கதை ஒன்று சொல்லப்படுகிறது.

எகிப்தியப்படைகள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறபோது, செங்கடலிலே மூழ்கி இறக்க நேரிடுகிறது. அப்போது, வானதூதர்கள் எல்லாரும் இணைந்து மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிக்கிறார்கள். அதைப்பார்த்த கடவுள், “என்னுடைய படைப்பு தண்ணீரில் மூழ்கி சாகிறபோது, நீங்கள் இப்படியா மகிழ்ச்சியடைவீர்கள்?“ என்று அவர்களைப்பார்த்து கேட்கிறார். இதுதான் கடவுளின் அன்பு. இதுதான் கடவுளின் இரக்ககுணம்.

நம் அயலார் யார்? அடுத்திருப்பவரா? அல்லது தேவையிலிருப்பவரா! அயலார் யார் என்ற கேள்விக்கான பதிலை இயேசு நல்ல சமாரியன் உவமையில் தருகிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்பதே இயேசுவின் நிலைப்பாடு.சாதி,சமய,இன ,மொழிகளைத் தாண்டி மனித நேயத்தோடு எவர் ஒருவர் செயல்படுவாரோ,அவரே கடவுளுக்குரியவர்.


பகைவரை மன்னிப்பதற்கு வலிமையான உள்ளமும்,எளிமையான மனமும் வேண்டும்.தான் தோற்றாலும் பரவாயில்லை,தன பகைவர் தோற்க்கவேண்டும் என்ற வெறி ஒரு முரண்பாட்டுத் தத்துவம்.அது போருக்கான தத்துவம்.

அங்கே உறைந்திருக்கும் பிடிவாத குணம்,அகங்காரம் இவை ஒருவரது சுயமதிப்பின் தரத்தையும்,உறவின் தரத்தையும் பாதித்து பழுதடையச்செய்துவிடும்.

அன்பைப்பற்றித் தெரிந்துகொள்ள ஒருவர் விரும்பினால் மற்றவர்களுக்காகத் தியாகம் செய்தவர்களைப் பற்றிப் படிக்கவேண்டும்.இயேசு தியாகம் செய்தவர், அவரைப் பாடமக்குவோம்.அவருடைய குணங்களை நமதாக்குவோம்.

கடவுளின் சாயலைப்பெற்றிருக்கிற நாம் அனைவரும் அத்தகைய அன்பை மற்றவர் மீது காட்டுவதற்கு அழைக்கப்படுகிறோம். பகைமையும், வெறுப்புணர்வும் அதிகமாகிக்கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், அன்பு வாழ்வு வாழ்வோம்.

Thursday, 18 February 2016

கோபம் அகற்றுவோம்!

விடுதலைப்பயணம் 20: 13 சொல்கிறது: கொலை செய்யாதே. இயேசு இதற்கு மாற்றாக ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார்.
 “தம் சகோதரர், சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார்” (5: 22).

மற்றவரிடம் கோபப்படுதலே நம்மை தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாக்கும் என்பது இயேசுவின் வாதம். கோபம் என்றால் என்ன? விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கோபம் என்ற வார்த்தையின் உண்மையான பொருளென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கிரேக்க மொழியில் ‘கோபம்’ என்ற பொருளுக்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. முதல் வார்த்தை: ‘துமோஸ்’. காய்ந்த வைக்கோற்புல்லில் எரிவதற்கு சமமாக இதனைப் பொருள்படுத்தலாம். காய்ந்த வைக்கோற்புல் உடனடியாக எரியக்கூடியது. அதேபோல் எரிந்த வேகத்தில் அணையக்கூடியது.

இந்த வகையான கோபம் உடனடியாக வந்து, வந்த வேகத்தில் மறைந்துவிடக்கூடியது. இரண்டாம் வார்த்தை: ‘ஓர்கே’. இது ஆழமானது. நீண்டநாள் இருக்கக்கூடியது. இந்த வகையான கோபம் எளிதில் மறையாத, வைராக்யம் நிறைந்தது. இங்கே இயேசு பயன்படுத்துகிற வார்த்தை இந்த இரண்டாம் வகையான வார்த்தையாகும். இதனை இயேசு கண்டிக்கிறார்.

விவிலியத்தின் ஆங்காங்கே கோபம் கண்டிக்கப்படுகிறது. யாக்கோபு 1: 20 சொல்கிறது: “மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது”. கொலோசையர் 3: 8 ல் பார்க்கிறோம்: “நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள்”

கோபம் கடவுளுடைய அருளைப் பெற தடையாயிருக்கிறது என்று இறைவார்த்தை சொல்கிறது. அப்படியென்றால், கோபம் எந்த அளவுக்கு நமக்கு அழிவைத்தர வல்லது என்பது இதிலிருந்து புலனாகிறது. கோபத்தை அறவே நம்மிடமிருந்து அகற்ற நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் கடவுளின் வல்லமையை நாம் பெற முடியும்.

இயேசு கூறுவது முற்றிலும் உண்மை. கொலை மட்டுமே மனிதனின் நிம்மதி வாழ்வைக் குலைத்துவிடுவதாக நினைக்கக் கூடாது. சினம், இன்னும் ஒரு படி இறங்கிச் சென்றால், கடின வார்த்தை மனிதனின் வாழ்வைக் கெடுத்துவிடுகிறது.

எனவேதான் இயேசு இறை வெளிப்பாட்டின் நிறைவை இத்தகைய மாற்றங்கள் வழியாக வளங்குகிறார். எனவே கொலை செய்வதுதான் பாவம் என்னும் பழைய ஏற்பாட்டு நியதியை மாற்றி, கோபமும் கடின வார்த்தையும் கொலைக்குச் சமமானது என வலியுறுத்துகிறார்.

இவ்வாறு கடின வார்த்தைகளால், கடுஞ்சினத்தால் கொலைக்குச் சமமான மன இருக்கத்தையும் அழுத்தத்தையும் தனக்கும் அயலானுக்கும் கொடுத்து அவர்களில் வாழ்வை அழித்துவிடுவதால், கடினவார்த்தையும் கோபமும் கொலைக்குச் சமமானவை.

இச் சூழல்களில் ஆலயம் வந்தால் அந்த மன இருக்கமும் அழுத்தமும் குறைந்துவிடும். பாவ மன்னிப்பும் பரிகாரப்பலியும் செலுத்தினால் குற்றமும் குறையும் நீங்கிவிடும்,உண்மைதான்.

ஆயினும் இயேசு உணர்த்தும் உண்மை பெரிது. வெறும் சடங்கும் ஆச்சாரப் பலியையும்விட, ஆண்டவனோடு மனம் ஒன்றித்து,செய்த தவறுக்காக மனம் வருந்தி, மனமாற்றம் அடைந்து, வருத்திய நபரோடு நல்லுறவை ஏற்படுத்திய பின் ஆண்டவனுக்குச் செலுத்தும் பலியே இறைவனுக்கு ஏற்புடைய பலியாகும் என்பது முற்றிலும் சரியான புதிய வெளிப்பாடு மட்டுமல்ல. எல்லோருடைய வாழ்வுக்கும் உகந்தது.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

Wednesday, 17 February 2016

இறை ஆற்றலைத்தருவது செபம்!

செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம் என்பது அவர்களின் எண்ணம்.

செபத்தைப்பற்றி யூதர்களுக்கு ஏதாவது கவலை இருந்தததென்றால், அது நாள்முழுவதும் நம்மால் செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள்.


 யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு, செபிப்பதால் கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம் செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன் நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்கு பதிலையும் இன்றைய நற்செய்தியிலே தருகிறார்.

செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயுதம் என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இயேசு இங்கே தருகிற எடுத்துக்காட்டு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவு. அதாவது, ஒரு மகன் ஊதாரித்தனமாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.


வீட்டில் யார் பேச்சையும் கேட்காமல், தான்தோன்றித்தனமாக திரிகிறான். தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறான். குற்றங்கள் பல செய்கிறான். அப்படி ஒருவருடைய மகன் இருப்பதால், அந்த தந்தை அவனை வெறுத்து விடுவாரா? ஒருவேளை அந்த மகனுக்கு அடிபட்டு விட்டது, அல்லது அவன் தவறுசெய்தது தெரிந்து காவல்துறை அழைத்துச்சென்று விட்டது, அல்லது நோயுற்று இருக்கிறான்.

அவனுடைய தந்தை சும்மா விட்டுவிடுவாரா? எப்படி இருந்தாலும் தன் மகன் என்ற பாசம் அவரை உடனடியாக அவனுக்கு உதவ உந்தித்தள்ளாதா? எப்படி இருந்தாலும் தன் இரத்தம் என்கிற அந்த உணர்வு அவனைக்காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்குமா?

சாதாரண மனிதர்களுக்கே இந்த உணர்வு என்றால், படைப்பின் சிகரமான மனிதனை தன் முழுமையான அன்பில், தனது சாயலில் படைத்த இறைவனுக்கு நம்மீது எவ்வளவு அன்பிருக்கும்? நாம் கேட்பதை தராமல் இருப்பாரா? நம்மை தேவையில் இருக்கவிடுவாரா? என்பதுதான் இயேசுவின் கேள்வி.

இறைவன் நிச்சயம் நம்முடைய தேவைகளை அறிந்தவராக இருக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் தந்தால் அவர் நல்ல தந்தையாக இருக்க முடியாது. மாறாக, நமக்குத் தேவையானதை தருவார். அதுவும் நாம் விரும்புகிறபடியெல்லாம் அல்ல, அவரது திருவுளத்தின்படி.

ஏனென்றால் அவர் முக்காலமும் அறிந்தவர். நம்முடைய தேவைகளை நிறைவாகத் தெரிந்தவர். எனவே, கடவுள் நிச்சயம் நமக்குத் தேவையானதை, அவருடைய வழியில் தருவார் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

இறைவன் நம்மைப் படைத்தவர் மட்டுமல்ல, பராமரித்து பாதுகாக்கிறவரும் கூட. நமக்கு பார்த்து பார்த்து நல்லது செய்கிறவர். நம்முடைய தேவை அறிந்து நமக்கு உதவி செய்கிறவர்.

 இறைவனை நம்பிக்கையோடு அணுகுவதுதான் கடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவரின் பிள்ளைகளாகிற நம் அனைவரின் கடமையாகும்.

Monday, 15 February 2016

மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில்!

‘பாவம்’ என்கிற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டிலே ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஐந்து வார்த்தைகளின் பொருளை நாம் பார்ப்போம்.

1.‘hamartia’ இதன் பொருள் இலக்கிலிருந்து தவறுவது. இலக்கை நோக்கி குறிவைத்து சுடும்போது, இலக்கு தவறுவது. அதாவது, நாம் அடைய வேண்டிய இலக்கிலிருந்து வழிதவறிச்செல்வது பாவம்.

2. ‘parabasis’ இந்த வார்த்தையின் பொருள், வரைமுறையைக்கடந்து செல்வது. இதுதான் நமது வரைமுறை என்று தெரிந்திருந்தும், அதற்குமேல் செல்வது பாவம்.

3. ‘paraptoma’ என்பது, தவறி விழுவது. சகதி நிறைந்த சாலையில் நடந்துசென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், நம்மையறியாமல் திடீரென்று வழுவி கீழே விழுந்துவிடுகிறோம்.

4. ‘anomia’ என்பது, சட்டத்தை மீறுவது. நன்மை எது? தீமை எது? என்று நமக்கு நன்றாகத்தெரியும். இருந்தும், வேண்டுமென்றே தீமையைத்தேர்ந்தெடுப்பது.

5. ‘opheilema’ என்பது, கடமையில் தவறுவது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கடமையில் இருந்து தவறுவது.

நாளைய   நற்செய்தியிலே இயேசு கற்றுத்தந்த செபத்திலே இடம்பெற்றிருக்கிற பாவம் (குற்றம்) என்கிற சொல்லுக்கு பொருளாக மேற்கண்ட ஐந்தாவது வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதாவது கடமையில் தவறுவது (opheilema’).

கடவுளுக்கும், நம் அயலாருக்கும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஒரு தந்தையாக, தாயாக, சகோரனாக, சகோதரியாக, உறவினராக, ஒரு நாட்டின் குடிமகனாக, நமக்கென்று பல்வேறு கடமைகள் இருக்கிறது. இந்த உலகத்திலே இருக்கிற யாரும், நான் என்னுடைய கடமையை முழுமையாகச்செய்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

அத்தகைய கடமையில் இருந்து நான் தவறும்போது, இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ஆனால், இறைவன் நம்முடைய குறைகளை, குற்றங்களை அறிந்தவராக, நம்மையெல்லாம் மன்னிக்கிறவராக இருக்கிறார்.

நாம் செய்த தவறுகளை கடவுள் மன்னிக்கத்தயாராக இருப்பதுபோல, நாமும் மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் எதிர்பார்ப்பு.

கடவுள் என்னை மன்னிக்க வேண்டும், எனதுநிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிற நான், மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும், மற்றவர்களின் நிலையையும் அறிந்துகொள்ள முன்வர வேண்டும்.

சிலுவையில் கடினமான வேதனைகளுக்கு நடுவிலும், தான் தண்டிக்கப்படுவது முறையே அல்ல என்று தெரிந்திருந்தும், தன்னுடைய இந்த அவலநிலைக்குக் காரணமானவர்களை, இயேசு முழுமனதோடு மன்னித்து, மன்னிப்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த உலகத்திற்கு தேவை மன்னிக்கின்ற உள்ளங்கள். நாம் அனைவரும் இறைவன் நம்மை மன்னிப்பது போல, மற்றவர்களை மன்னிக்கும் வரம் வேண்டுவோம்.