Monday, 20 June 2016

புனித.மர்கரீத் எப்னர்(St.Margarete Ebner)!

தில்லிங்கன் என்ற ஊரில் இவருக்கென்று ஓர் ஆலயம் உள்ளது. அங்குதான் இவர்தான் இறுதி நாட்களை கழித்துள்ளார். பலவித கலாசாரத்தை கொண்ட மக்களிடத்தில் இவர் பணியாற்றினார்.

இவர் தனது 15 ஆம் வயதில் புனித டொமினிக்கன் சபையில் சேர்ந்து துறவியானார். அவர் அச்சபையில் வாழ்ந்தபோது 1312 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆண்டவரின் காட்சிகளை பலமுறை கண்டார்.

 இவர் மிகவும் கடுமையான நோயால் தாக்கப்பட்டு, படுக்கையிலேயே தன் வாழ்நாட்களை கழித்தார். நோயால் மிகவும் வேதனைக்குள்ளானார். இதனால் இறைவனின்மீது தன் முழு நம்பிக்கையையும் வைத்து, இடைவிடாது செபித்தார்.

ஆண்டவரின் பாடுகளில் அவ்வப்போது பங்கெடுத்தார். இவரின் ஆன்ம வழிகாட்டி தந்தை ஹென்றி அவர்களின் அறிவுரைப்படி, தொடர்ந்து ஆண்டவரின் பாடுகளில் பங்கெடுத்தார். ஒருநாள் ஆண்டவர் கொடுத்த காட்சியை கண்டுகொண்டிருக்கும்போதே, தன் கண்களை மூடியபடியே உயிர் நீத்தார்.

இவர் இறந்தபிறகு இவரின் கல்லறையை எண்ணிலடங்கா மக்கள் சந்திக்க வந்தனர். அங்கு வந்த அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் புதுமைகளை செய்தார். இவர் இறந்த சில ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறைமேல் இயேசு கிறிஸ்துவின் உருவம் கொண்ட ஒரு சுரூபம் தானாகவே வளர்ந்தது.

 1751 ல் சாதாரணமாக இருந்த இவரின் கல்லறைமேல் 1751-1755 வரை ஓர் ஆலயம் கட்டப்பட்டு, இன்றும் அவ்வாலயத்தில் அவரின் பெயரால் வழிபாடுகள் நடக்கின்றது.


Saturday, 4 June 2016

புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo)!

இவர் பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார்.

இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாக்கப்பட்டது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார்.

அப்போது பணியாற்றும் போது, ஒருநாள் தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587 ஆம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார்.

குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளிக்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துடனும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மன்நோயாளிகளையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.

இவரது பணி மிகவும் வளர்ச்சியடையவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து பெரிய குழுவாக காட்சியளித்தது. எனவே அவர்களை கொண்டு ஏழைகளை பராமரிப்பதற்கென ஒரு சபையைத் தொடங்கினார்.

1588 ஆம் ஆண்டு அச்சபை துறவற சபையாக, திருத்தந்தை 5ஆம் சிக்டஸ்(Pope Sixtus V) அவர்களால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபையை தொடர்ந்து, மிகப் பொறுப்போடு கவனிக்க ஜியோவானி அடோர்னோ(Giovanni Adorno) என்பவரை சபைத்தலைவராக தேர்ந்தெடுத்தார்.

1593 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றி இறந்துவிடவே, பிரான்ஸ் டி கராசியோலா சபைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அவர் அச்சபைக்கு "ஏழைகளின் நண்பர்" என்று பெயரிட்டார். மிக விரைவாக அச்சபை ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது.

இவர் தனது துறவற குழுமங்களை பார்வையிட அடிக்கடி ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இதனால் மீண்டும் நோய்தாக்கப்பட்டு தன் 44 ஆம் வயதில் இறந்தார்.

Friday, 3 June 2016

புனித லுவாங்கா சார்லஸ் (St Luwanga Charles)!

"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதியில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப்பணியில் இறங்கினர்.

1879 ஆம் ஆண்டு பெரிய சனிக்கிழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக்கரானவர்கள்.


கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண்டுதலால் 1886 ல் முவாஷ்கா(Muwashka) என்ற அரசன் கத்தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான். சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கைக்கு அடிமைப்பட்டவனாக இருந்தான்.

அவன் அரச அலுவல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்த போது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடுமையானது" என்று அறிவுரை கூறி ஓரினசேர்க்கை ஈடுபடாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ(Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

சார்லஸின் அறிவுரைப்படி மற்ற இளைஞர்கள் தங்கள் புனிதத்தில் நிலைத்து நின்றனர். 13 வயதான சிறு பெண் தனது கற்புக்காக மற்றவர்களைப்போல உயிரைத் தியாகம் செய்தார். இந்த வேதகலாபனை முடிந்த மறு ஆண்டிலேயே ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மறைபரப்பு பணி மிக விரைவாக பரவியது.

ஆப்பிரிக்காவில் இந்த மறைசாட்சிகளின் இரத்தம் சிந்தப்பட்டதன் பயனாக ஒரு புதுயுகம் தோன்றிவிட்டது. முழுமையான சுதந்திரம் பெற்று மகிழும் ஆப்பிரிக்காவாக பொலிவுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் வேதனையில் புதிய யுகத்தை சார்ந்த ஆப்பிரிக்கா மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கான பாடங்கள் பல மிளிர்கின்றன.

மறைசாட்சிகள் தூண்களில் கட்டப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்டையடிப்பட்டனர். ஈட்டிகளால் குத்தப்பட்டனர், சுட்டெரிக்கப்பட்டனர். தலைவெட்டப்பட்டனர். இப்படி இருந்தும் ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவர்கள் பலுகி பெருகினர்.

Thursday, 2 June 2016

புனித மார்சலினஸ்,புனித பீட்டர் (St.Marcelinas, St.Peter)!

மார்சலினஸ் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, குருத்துவ நிலையை அடைந்தார். பீட்டர் திருச்சபை வழங்கும் "பேய்களை ஓட்டும்" அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார்.

 இருவரும் தங்களின் வேத விசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட்டனர். அங்கு ஏற்கெனவே விசுவாசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் கிறிஸ்தவர்களை விசுவாசத்தின்பேரில் கொடுமைப்படுத்தி வந்தனர்.

அவர்களை இவர்கள் இருவரும் மனந்திருப்பினர். அவர்களை கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றினர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக் காவலன் ஆர்த்தியுஸ், அவர் மனைவி, மகள் ஆகியோர் கூட கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் வீரச்சாவு நாளன்று, நாயக்ரா என்றழைக்கப்படும் ஒரு காட்டிற்குள் கொண்டு போகப்பட்டனர். அங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படும்முன் இவர்களை புதைக்க ஒரு குழித்தோண்டப்பட்டிருந்தது.

உடனே இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலைஞனே வெளிக்கொணர்ந்துவிட்டார். இவரும் இறுதியில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார். லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து "திபூர்சியஸ் புதைக்குழி"யில் அடக்கம் செய்தனர். மன்னன் கான்ஸ்டாண்டின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர்.

 இவர் கல்லறைமேல் பேராலயம் எழுப்பியதுடன், புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் செய்தார். இவர்களின் வீரச்சாவு தொடக்கத் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் ரோமன் கேனன்(Roman Canon) என்று சொல்லப்படும். திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் "மாறாத ஜெபங்கள்" என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு காலங்காலமாக நினைவு கூரப்பட்டனர்.

"நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. வான் வெளியில் திரியும் தீய ஆவிகளோடு போராடுகிறோம், எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீது வெற்றி அடைந்து, நிலை நிற்க வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்" (எபே 6:12) என்ற இறைவாக்கை வாழ்வாக வாழ்ந்தனர்.

Wednesday, 1 June 2016

புனித ஜஸ்டின் (St.Justin)!

இவர் கிரேக்கமொழி பேசும் பெற்றோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே தத்துவ கலையை ஆழமாகக் கற்றுத்தேர்ந்தார்.

இவரது காலத்தில் இருந்த ப்ளேட்டோ(Plato) போன்ற தத்துவமேதைகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார்.

எல்லாம் வல்ல இறைவனைப்பற்றி இந்த தத்துவ ஞானம் தனக்கு முழுமையான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந்தார். ஒருநாள் அலெக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்கொண்டிருந்தார்.

தற்செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரை சந்தித்தார்.. அவருடன் நெடுநேரம் உரையாடினார். அதன்பயனாக விவிலியத்தில், இறைவாக்கினர்கள் எழுதிய இறைவாக்குகளைப்படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பு இறைவாக்கை சரியாக புரிந்துகொண்டார்.

கிறிஸ்தவர்கள் எத்தனை மனவலிமையுடன் கிறிஸ்துவிற்காக வேதனைகளை தாங்கிக்கொண்டார்கள். என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார். இறைவாக்கினர்களை நினைத்து வியப்படைந்தார்.


சாவைத் தழுவினாலும், இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும், ஆர்வமும் அவரை மிக ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலைப் படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.

கிறிஸ்துவுக்காக வாழ முடிவெடுத்தார். பின்னர் தமது தத்துவமேதைக்குரிய உடையிலேயே பல பயணங்களை மேற்கொண்டு, இறுதியாக உரோம் நகரை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதிய இறைவாக்குகளைப் பற்றி தெளிவாகப்படித்தார். முடிவில் அவர்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார்.

இதன் பயனாக, இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைப்பற்றி விரிவாக எழுதிவைத்தார். அனைத்திற்கும் மேலாக, திவ்விய நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை பற்றியும் அதில் நாம் கொண்டிருக்கவேண்டிய விசுவாசப் பற்றுறுதி பற்றியும் மிகவும் ஆழமாக விவரித்து எழுதியுள்ளார்.

147 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல, இனியும் துன்புறுத்தப்படக்கூடாது. என்று மன்னன் ஆன்றோனினுஸ் பயஸ்(Androninus Pius) ஆணை பிறப்பித்தான்.

 ஜஸ்டின் எழுதிய பல நூல்களில் ஒன்றில் "உலகில் எப்பகுதியிலும், எக்காலத்திலும் உண்மையை சுட்டிக்காட்டிய ஞானிகள் அனைவரும் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மிக அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

166 ல் ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூலில், நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் இந்நூல் அப்போதைய அரசன் மார்க்ஸ் அவுரேலியுசுக்கு(Marks Aureliyas) எரிச்சல் மூட்டியது. இதனால் கோபம்கொண்ட அரசன், கிறிஸ்துவ விசுவாசத்தையும், ஜஸ்டினையும் அழிக்க எண்ணி, அவரை சிறைப்பிடித்து சென்றான். அங்கு பல கொடுமைகளை அனுபவித்த

ஜஸ்டின் தனது 67 ஆம் வயதில் தலைவெட்டப்பட்டு இறந்தான். அவர்தான் இறக்கும்வரை, எந்த ஒரு தத்துவக்கலையும், இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டு சேர்க்கமுடியும் என்பதை இடையூறாது போதித்தார்.