Friday, 3 June 2016

புனித லுவாங்கா சார்லஸ் (St Luwanga Charles)!

"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதியில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப்பணியில் இறங்கினர்.

1879 ஆம் ஆண்டு பெரிய சனிக்கிழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக்கரானவர்கள்.


கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண்டுதலால் 1886 ல் முவாஷ்கா(Muwashka) என்ற அரசன் கத்தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான். சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கைக்கு அடிமைப்பட்டவனாக இருந்தான்.

அவன் அரச அலுவல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்த போது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடுமையானது" என்று அறிவுரை கூறி ஓரினசேர்க்கை ஈடுபடாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ(Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

சார்லஸின் அறிவுரைப்படி மற்ற இளைஞர்கள் தங்கள் புனிதத்தில் நிலைத்து நின்றனர். 13 வயதான சிறு பெண் தனது கற்புக்காக மற்றவர்களைப்போல உயிரைத் தியாகம் செய்தார். இந்த வேதகலாபனை முடிந்த மறு ஆண்டிலேயே ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மறைபரப்பு பணி மிக விரைவாக பரவியது.

ஆப்பிரிக்காவில் இந்த மறைசாட்சிகளின் இரத்தம் சிந்தப்பட்டதன் பயனாக ஒரு புதுயுகம் தோன்றிவிட்டது. முழுமையான சுதந்திரம் பெற்று மகிழும் ஆப்பிரிக்காவாக பொலிவுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் வேதனையில் புதிய யுகத்தை சார்ந்த ஆப்பிரிக்கா மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கான பாடங்கள் பல மிளிர்கின்றன.

மறைசாட்சிகள் தூண்களில் கட்டப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்டையடிப்பட்டனர். ஈட்டிகளால் குத்தப்பட்டனர், சுட்டெரிக்கப்பட்டனர். தலைவெட்டப்பட்டனர். இப்படி இருந்தும் ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவர்கள் பலுகி பெருகினர்.

No comments:

Post a Comment