Friday, 19 May 2017

✠ புனிதர் ஐந்தாம் செலஸ்டின் ✠ (St. Selestine V)

 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் 
(St. Selestine V)

192ம் திருத்தந்தை :
(192nd Pope)

பிறப்பு : 1215
இசேர்னியா அருகே, சிசிலி அரசு
(Near Isernia, Kingdom of Sicily)

இறப்பு : மே 19 1296 (அகவை 80–81)
ஃபெரென்டினோ, திருத்தந்தை நாடுகள்
(Ferentino, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம் : மே 5, 1313
திருத்தந்தை ஐந்தாம் கிளமென்ட்
(Pope Clement V)

நினைவுத் திருவிழா : மே 19

"பியேட்ரோ ஆன்ஜெலோரியோ" (Pietro Angelerio) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஐந்தாம் செலஸ்டின், கத்தோலிக்க திருச்சபையில் ரோம் ஆயராகவும் திருத்தந்தையாகவும் ஜூலை 5, 1294 முதல் டிசம்பர் 13, 1294 வரை ஆட்சி செய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 192ம் திருத்தந்தை ஆவார். சுமார் ஐந்து மாதங்கள் மட்டுமே திருத்தந்தைப் பொறுப்பை வகித்த செலஸ்டின்,தாமாகவே முன்வந்து திருத்தந்தைப் பணியைத் துறந்ததற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார். அடிப்படையிலேயே ஒரு துறவியான இவர், "பெனடிக்டைன்" (Benedictine order) சபையின் கிளை சபையான "செலஸ்டின்ஸ்" (Celestines) சபையின் நிறுவனர் ஆவார்.

பிறப்பும் இளமைப் பருவமும் :
இவர் இத்தாலியின் அப்ரூசி பகுதியில் 1209/10 அல்லது 1215ல் பிறந்தார். அவருடைய பெற்றோர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவருடைய பெற்றோருக்கு அவர் பதினொன்றாம் பிள்ளை.

பியேட்ரோவின் தந்தை ஆஞ்செலோவின் இறப்புக்குப் பின் அவர் வேளாண்மையில் ஈடுபட்டார். ஆனால் பியேட்ரோவின் அன்னை மரியா தன் அன்புப் பிள்ளை பியேட்ரோவின் எதிர்காலத்தை வேறுவிதமாக நினைத்துப்பார்த்தார்.

சிறுவயதிலிருந்தே பிறரின் நலனில் ஆர்வம் கொண்டிருந்த பியேட்ரோ தமது 17வயதில் புனித பெனடிக்ட் சபைத் துறவியானார். பின்னர் மொரோனே பகுதியில் ஒரு குகைக்குச் சென்று அங்கு தனிமையில் தவம் செய்தார். ஐந்து ஆண்டுகள் தவ வாழ்க்கைக்குப் பின் அவர் தம் தோழர் இருவரை அழைத்துக்கொண்டு மயேல்லா குன்றுப் பகுதியில் (அப்ரூசி பிரதேசம்) ஒரு குகையில் கடுமையான தவத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறு தவ வாழ்க்கை நடத்தியபோது, பியேட்ரோ தாமே ஒரு துறவற சபையைத் தோற்றுவித்தார். அது பின்னர் அவரது பெயரால் "செலஸ்டின் சபை" என்று அழைக்கப்பட்டது. அத்துறவற சபை உறுப்பினர் தவ முயற்சிகளில் ஈடுபட்டனர். அச்சபைக்கு திருத்தந்தை நான்காம் அர்பன் ஒப்புதல் அளித்தார். பின்னர், புதிதாகத் தொடங்கப்பட்ட துறவற சபைகளை நிறுத்துவதற்கான சட்டம் செயலுக்கு வரக்கூடும் என்று அஞ்சி, பியேட்ரோ அப்போது திருத்தந்தையாக இருந்த பத்தாம் கிரகோரி அவர்களை அணுகி, தம் சபையை புனித பெனடிக்ட் சபையின் ஒரு கிளையாக மாற்றி, அதிகக் கடுமையான ஒழுங்குகளுக்கு உட்படுத்துவதாக வாக்களித்து திருத்தந்தையின் ஒப்புதலையும் பெற்றார். அச்சபைக்குத் தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட்டது.

பியேட்ரோ தொடங்கிய துறவற சபை விரைவாக வளர்ச்சியுற்றது. 36மடங்களும் 600க்கு மேற்பட்ட துறவிகளும் அச்சபையில் இருந்தனர். பியேட்ரோ சபைத் தலைவராக இருந்தார். ஆனால் அவர் தனிமையாகச் சென்று தவம் செய்வதிலேயே கருத்தாய் இருந்ததால், சபைப் பொறுப்பை ராபர்ட் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு, குகைக்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டார்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் :
திருத்தந்தை நான்காம் நிகோலாஸ் என்பவர் 1292, ஏப்பிரல் 4ம் நாள் இறந்ததைத் தொடர்ந்து புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தம் 12 கர்தினால்கள் தேர்தலில் பங்கேற்றனர். ஆனால் இத்தாலியின் ஒர்சீனி, கொலோன்னா என்ற இரு சக்திவாய்ந்த குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக எந்தவொரு வேட்பாளருக்கும் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் பல மாதங்களாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படாத நிலை நீடித்தது.

இதற்கிடையில், ரோமிலும் ஓர்வியேத்தோ பகுதியிலும் குழப்பமான நிலை எழுந்தது. சிசிலி மற்றும் நேப்பிள்ஸ் அரசர் இரண்டாம் சார்லஸ் என்பவரும் திருத்தந்தை விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பியேட்ரோ தெல் மொரோனே என்ற தவத் துறவி, கர்தினால்மார் விரைந்து புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் கடவுளின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்று எச்சரித்து இறைவாக்கு உரைத்திருந்தார். அப்பின்னணியில் இத்தாலியின் பெரூஜியா நகரில் கர்தினால்கள் கூடி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர். பியேட்ரோ உரைத்திருந்த இறைவாக்கைக் கர்தினால்களுக்கு, கர்தினால் குழுத் தலைவரான இலத்தீனோ மாலாபிரான்கா என்பவர் சுட்டிக்காட்டினார். பின்னர் அவரே, தாம் பியேட்ரோ தெல் மொரோனே என்ற தவத் துறவியைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும், பிற கர்தினால்கள் ஒருவர்பின் ஒருவராக பியேட்ரோவுக்கு ஆதரவு அளித்தனர். இறுதியில் பியேட்ரோவுக்கு ஒருமனதான ஆதரவு கொடுத்து அவரையே திருத்தந்தையாக 1294ம் ஆண்டு சூலை 5ம் நாள் தேர்ந்தெடுத்தனர். அப்போது அவருக்கு வயது 79.

திருத்தந்தை பதவி தமக்கு வேண்டாம் என்று மறுத்தவர்:
பியேட்ரோ தெல் மொரோனோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அச்செய்தியை அவருக்குத் தெரிவிக்க சில கர்தினால்கள் சென்றனர். ஆனால் அவர் அப்பொறுப்பு தமக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இருப்பினும், கர்தினால்கள் அவரைத் திருத்தந்தைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்தியதால் விருப்பக் குறைவாக அப்பொறுப்பை அவர் ஏற்றார்.

சிசிலி மற்றும் நேப்பிள்ஸ் மன்னன் இரண்டாம் சார்லசும் அவருடைய மகனும் புதிய திருத்தந்தையை ஆக்விலா என்னும் நகருக்குக் அழைத்துச் சென்றனர். அந்நகரம் மன்னன் சார்லசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அங்கே, அரச குடும்பத்துக்குரிய கோல்லேமாஜ்ஜியோ புனித மரியாள் கோவிலில் புதிய திருத்தந்தைக்கு 1294 ஆகஸ்ட் 29ம் நாள் ஆயர் பட்டம் அளிக்கப்பட்டது. அவரும் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று, ஐந்தாம் செலஸ்டின் என்ற பெயரைச் சூடிக்கொண்டார்.

மன்னன் இரண்டாம் சார்லசு புதிய திருத்தந்தையான ஐந்தாம் செலஸ்டின் வழியாகத் தமக்கு விருப்பமானவர்கள் பதவிகளைப் பெற ஏற்பாடு செய்தார். திருத்தந்தை ரோம் ஆயர் ஆதலால் ரோமிலிருந்தே ஆட்சி செய்வது வழக்கம். ஆனால், இரண்டாம் சார்லசின் வற்புறுத்தலுக்கு இணங்கி திருத்தந்தை செலஸ்டின், மன்னனின் ஆட்சிப் பகுதியான நேப்பிள்ஸ் நகரில் ஆட்சிப்பீடம் அமைத்தார்.

திருத்தந்தை ஆட்சிக் காலம் :
தமது குறுகிய ஆட்சிக் காலத்தில் செலஸ்டின், இரண்டாம் சார்லசு மன்னனின் மகனான லூயி என்பவரைத் துலூசு நகர் ஆயராக நியமித்தார். குறிப்பாக,திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் சீர்திருத்தம் கொணர்ந்தார்.

செலஸ்டினுக்கு முன்னால் 1272-1276 ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த பத்தாம் கிரகோரி, திருத்தந்தை தேர்தலுக்கான சில வழிமுறைகளை வகுத்திருந்தார். அந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று செலஸ்டின் சட்டம் இயற்றினார். குறிப்பாக, கர்தினால்கள் ஒரு குழுவாகக் கூடி வந்து, இரகசிய வாக்கெடுப்பு மூலம் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் சட்டம் வகுத்தார்.

திருத்தந்தை செலஸ்டினுக்கு போதிய நிர்வாகத் திறமையோ தேர்ச்சியோ இருக்கவில்லை. சில சமயங்களில் ஒரே பதவிக்கு இரண்டு பேரை அவர் நியமித்ததும் உண்டு.

அவர் பதவி ஏற்று சில மாதங்களே ஆனவுடனேயே, திருவருகைக் காலம் நெருங்கிவந்த வேளையில், திருத்தந்தை செலஸ்டின் தனியாகச் சென்று தவ முயற்சியில் ஈடுபட விரும்பினார். எனவே, மூன்று கர்தினால்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் திருச்சபையின் ஆளுகைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தாம் தவ முயற்சி செய்யப் போவதாகத் தெரிவித்தார். அந்தத் திட்டம் முறையானதன்று என்று கூறி, அவருடைய ஆலோசகர்கள் மறுத்துவிட்டனர்.

உடனே திருத்தந்தை செலஸ்டின், திருச்சபைச் சட்ட நிபுணரான கர்தினால் பெனடெட்டோ கயத்தானி (பிற்காலத்தில் திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸ்) என்பவரிடம், திருத்தந்தை பதவியிலிருந்து தாம் பதவி துறப்பது முறைதானா என்று ஆலோசனை கேட்டார். அதற்கு இசைவு தெரிவித்து, ஊக்கமும் கொடுத்து, கர்தினால் கயத்தானி, திருத்தந்தை பதவிதுறப்பதற்கான ஆவணங்களையும் அறிக்கையையும் தயாரித்துக் கொடுத்தார்.

திருத்தந்தை செலஸ்டின் கர்தினால்களின் குழுவைக் கூட்டினார். அவர்கள் முன்னிலையில், தாம் திருத்தந்தை பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து, ஏற்கனவே கர்தினால் கயத்தானி தயாரித்துக் கொடுத்திருந்த அறிக்கையையும் வாசித்தார். அதோடு, திருத்தந்தை பதவியோடு சேர்ந்த அனைத்து அணிகளையும் கழற்றிக் கொடுத்தார். மேலும், கர்தினால்மார் காலம் தாழ்த்தாமல் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டார்.

திருத்தந்தை தம் பணியைத் துறந்தது சட்டப்படி செல்லுமா செல்லாதா என்று உடனே விவாதம் எழுந்தது. சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

திருத்தந்தை செலஸ்தீனின் இறப்பு :
ஐந்தாம் செலஸ்தீன் தாமாகவே முடிவுசெய்து, திருத்தந்தைப் பணியைத் துறந்ததும் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கர்தினால்மார் வாக்கெடுப்புக்காகக் கூடினர். அந்த வாக்கெடுப்பில், முன்னர் செலஸ்தீன் பணித்துறப்பதே நல்லது என்று ஆலோசனை கூறியிருந்த அதே கர்தினால் கயத்தானியே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எட்டாம் போனிஃபாஸ் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.

பணிதுறந்த செலஸ்தீன் தமக்குப் பிடித்தமான தவ வாழ்க்கையைத் தொடர்வதற்காக மொரோனே குன்றில் அமைந்த குகைக்குச் செல்ல விரும்பினார். ஆனால், அவர் அங்கு சென்றால் சிலர் அவரோடு சேர்ந்துகொண்டு தமது பதவிக்குப் போட்டியாக வந்துவிடுவார்களோ என்றும், அதனால் திருச்சபையில் பிளவு ஏற்பட்டுவிடுமோ என்றும் புதிய திருத்தந்தை போனிஃபாஸ் அஞ்சினார். எனவே, செலஸ்தீன் காவலில் வைக்கப்பட்டார். செலஸ்தீனோ சில மாதங்களுக்குப் பின் காவலிலிருந்து தப்பிச் சென்றார். ஆனால் போனிஃபாஸ் செலஸ்தீனை மீண்டும் பிடித்து ஃபூமோனே கோட்டையில் சிறைப்படுத்தினார். அங்கே செலஸ்தீன் நல்லமுறையில் நடத்தப்பட்டார் என்றாலும், அவருடைய காலில் புண் ஏற்பட்டு,நோய்த்தொற்றின் காரணமாக அவர் 1296 மே மாதம் 19ஆம் நாள் இறந்தார்.

புனிதர் பட்டமும் திருவிழாவும் :
திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட், திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீனுக்கு 1313,மே 5ம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனித ஐந்தாம் செலஸ்தீனின் திருவிழா அவர் இறந்த மே 19ம் நாள் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment