Thursday, 10 December 2015

பாவிகளுக்கும் நண்பன்!

''இயேசு, 'மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்.
இவர்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும்
பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 11:19).

சிறு பிள்ளைகள் விளையாடுவது இயேசுவின் வாயில் ஓர் உவமையாக உருவெடுக்கிறது. குழல் ஊதினால் கூத்தாட வேண்டும்; ஒப்பாரி வைத்தால் மாரடித்துப் புலம்ப வேண்டும். இதுதான் விளையாட்டு ஒழுங்கு. ஆனால் ஒரு தரப்பினர் குழல் ஊதும்போது மறு தரப்பினர் கூத்து ஆடாவிட்டால் அங்கே இருதரப்பினருக்கிடையே புரிதல் இல்லை என்பதே பொருள்.

திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி, ஒட்டக மயிராடை அணிந்து, காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் உண்டவராக வந்தார் (மத் 3:1-4). அவருக்குப் பேய்பிடித்துவிட்டது என்று கூறி அவரை ஏற்க மறுத்தார்கள். இயேசுவோ விருந்துகளில் கலந்துகொண்டு மக்களோடு உணவருந்தியவராக வந்தார். அவரைப் பார்த்து, ''பெருந்தீனிக்காரன், குடிகாரன்'' என்றெல்லாம் குறை கூறி ஏற்க மறுத்தார்கள் (மத் 11:19).

இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட மக்களைக் கண்டு இயேசுவுக்கு ஆத்திரம் வருகிறது. அம்மக்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டு உணர்ந்து, கடவுள் அவர்களுக்கு அறிவித்த செய்தியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என இயேசு வருத்தம் கொள்கிறார்.

 இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். இயேசு உலகுக்கு அறிவித்த செய்தி என்னவென்பதை அறிந்துகொள்ள மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டுகின்ற காரணங்கள் பல. இயேசு அறிவித்த செய்தி வேறு சமயங்களிலும் இருக்கிறதே என்பது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது.

 இயேசுவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்போர் இருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசுவை நாம் இருபத்தோராம் நூற்றாண்டு மன நிலைக்கு ஏற்ப அறிவிப்பது எப்படி என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பிற சமயங்களில் தலைசிறந்த போதனைகள் உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது.

அதுபோலவே, உலகில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இயேசுவின் போதனைப்படி நடக்கிறார்கள் எனவும் கூற இயலாது. ஆனால் இக்காரணங்களைக் காட்டி இயேசு பற்றி அறிய மறுப்பது சரியல்ல. உலகில் வாழ்ந்த மாபெரும் மனிதருள் ஒருவர் இயேசு. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பல்லாயிரம் மக்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கின்றார்கள்.

எனவே, இயேசு அறிவிக்கின்ற செய்தி என்னவென்று அறிகின்ற பொறுப்பு எல்லாருக்குமே உண்டு. அதே நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி அப்போதனையை ஒதுக்கிவைப்பதும் முறையல்ல.

திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுகிச் சென்று, அவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்க தங்கள் இதயத்தைத் திறக்கின்ற மனிதர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இயேசுவின் ஒளி அவர்களது உள்ளத்தில் நிலவும் இருளை அகற்றி அவர்களது வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும் என்பது உறுதி.


நமதாண்டவர் இரக்கம் உள்ளவர்.அவர் எல்லோருக்கும் இரங்குவார்  என்பதை விசுவசிபோம்.




Wednesday, 9 December 2015

கடவுளாட்சி!

''இயேசு, 'திருமுழுக்கு யோவான் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு
வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள்
அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்' என்றார்'' (மத்தேயு 11:12).

கடவுள் ''வல்லமை மிக்கவர்'' என்னும் கருத்து பழைய ஏற்பாட்டில் பரவலாகக் காணக்கிடக்கிறது. தாம் தெரிந்துகொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காகக் கடவுள் எதிரிகளை முறியடிக்கிறார், நாடுகளை வீழ்த்துகிறார், அநீத அமைப்புகளை உடைத்தெறிகிறார். இவ்வாறு வல்லமையோடு செயல்படுகின்ற கடவுள் வன்முறையை ஆதரிப்பதுபோலத் தோன்றும்.


 புதிய ஏற்பாட்டில் நாம் காண்கின்ற கடவுள் அன்புமிக்க தந்தையாக இருக்கிறார். இயேசு வழியாக அவர் தம் அன்பு இதயத்தை நமக்குத் திறந்துள்ளார். நமக்கு எதிராகப் பிறர் தீங்கிழைத்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கலாகாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, இயேசு வன்முறையை ஆதரிக்கவில்லை என்பது தெளிவு.


அதே நேரத்தில் ''விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகிறது'' என்றும் ''வன்முறையாகத் தாக்குகின்றவர்கள் விண்ணரசைக் கைப்பற்றுவர்'' (காண்க: மத் 11:12) என்றும் இயேசு கூறுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இச்சொற்றொடருக்கு ஒரு மாற்று மொழி பெயர்ப்பை நாம் தமிழ் விவிலியத்தில் காணலாம். அடிக்குறிப்பாகத் தரப்படுகின்ற அந்த மொழிபெயர்ப்பு இதோ: ''திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரை விண்ணரசு வல்லமையாகச் செயலாற்றி வருகிறது. ஆர்வமுள்ளோர் அதைக் கைப்பற்றுகின்றனர்''.

-- இயேசுவின் காலத்தில் ''தீவிரவாதிகள்'' என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் உரோமை ஆட்சியாளர்களைத் தம் நாட்டிலிருந்து வெளியேற்றி, நாட்டை விடுதலை செய்வதற்கு ஒரே வழி வன்முறையே என நம்பினர். அவர்களைப் பற்றிய சில குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன.

எடுத்துக்காட்டாகக் காண்க: திப 5:35-37; லூக் 13:1. கலகத்தில் ஈடுபட்டுக் கொலைசெய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்த பரபா என்பவன் ஒரு தீவிரவாதியாக இருந்திருக்கலாம் (காண்க: லூக் 23:18-19). தீவிரவாதிகள் வன்முறையால் ஆட்சியை மாற்ற எண்ணினார்கள், வன்முறையைக் கையாளுகின்ற மெசியா கடவுளாட்சியை நிறுவுவார் எனவும் நம்பினார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றிபெறவில்லை.

ஆனால் இயேசு வேறொரு ஆட்சியை அறிவித்தார். அதைக் கடவுளாட்சி (''விண்ணரசு'') என நற்செய்தியாளர்கள் குறிக்கின்றனர். அந்த ஆட்சி வன்முறையில் பிறக்கின்ற ஆட்சியல்ல. மாறாக, கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்பும் இரக்கமும் நீதியும் உண்மையும் அந்த ஆட்சியின் அடித்தளங்களாக அமையும்.

எனவே, ஒருவிதத்தில் கடவுளாட்சி வல்லமை மிக்கதுதான். அதன் வல்லமை வன்முறையிலிருந்து பிறப்பதல்ல, மாறாக அன்பிலிருந்து ஊற்றெடுப்பது. எங்கே அன்பும் நட்பும் உளதோ அங்கே கடவுளாட்சி தொடங்கிவிட்டது. அதன் நிறைவை எதிர்பார்த்து நாம் காத்திருக்கின்றோம். அந்த நம்பிக்கை வீண்போகாது என இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.

பெருஞ்சமையை நான் உனக்காக சுமக்கிறேன்!

''இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்'' (மத்தேயு 11:28).

பல்வேறு சுமைகளால் சோர்ந்துபோன அனைவருக்கும் ஆறுதல் தரும் அருமையான வாக்குறுதியை நாளைய  நற்செய்தி வாசகமாகப் பெற்றிருக்கிறோம்.

வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இருகரம் விரித்து அழைக்கிறார் நம் ஆண்டவர். எனவே, உடல் நோயா, மன அழுத்தமா, கவலைகளா, அச்சமா, துயரமா, அவமானமா? எத்தகைய சுமை நம்மை அழுத்தினாலும், இயேசுவின் அருகில் வந்து அவரிடம் நம் பாரங்களை இறக்கி வைப்போம். உலகம் தர இயலாத மன ஆறுதலை, உடல் நலத்தை, ஆன்ம வலிமையை அவர் தருவார்.

அத்துடன், இன்னொரு அழைப்பையும் நாளைய   வாசகம் மூலமாக இயேசு விடுக்கிறார். நம் வாழ்வின் சில சுமைகளை நாம் ஒருவேளை சுமந்தே தீரவேண்டும் என்கிற நிலை நம்மில் பலருக்கு இருக்கலாம். தீராத நோய், கடினமாக வாழ்க்கைத் துணைவர், ஊனமுற்ற குழந்தை, ... போன்ற ஏதேனும் ஒரு சுமை இறக்கி வைக்க முடியாததாக, என்றும் நம்மோடு உடன் வருகிற சுமையாக இருந்துவிட்டால் என்ன செய்வது?

இத்தகைய சுமைகளை எளிதாக, இனியவையாக மாற்றுவதாக இயேசு வாக்களிக்கிறார். ஆம், இறக்கி வைக்க முடியாத சுமைகள் இயேசுவின் அருளால் இனிய சுமைகளாக, எளிய சுமைகளாக மாறுகின்றன. காரணம், நம்மோடு சேர்ந்து இச்சுமைகளை இயேசுவும் சுமக்கிறார். அதற்காக நன்றி கூறுவோம். சுமைகளை மகிழ்வுடன் சுமப்போம்.

சும்மாதெருவில் உள்ள சுமையை இழுத்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு,நொந்து நொடிந்து அறுந்த பட்டமாக அல்லாடுகிறான் மனிதன். ஆறிவியல் பொருட்கள், நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு அம்சங்கள், கலாச்சார சீரழிவு, ஆன்மீக வெற்றிடம் என்னும் பெருஞ்சுமைகளைச் சுமந்து சுமந்து சோர்ந்துபோயுள்ளான்.

இளைப்பாறுதல் தேடி எங்கெங்கோ அலைந்து அதிலும் சோர்ந்துபோயுள்ளான்.பணம் கொடுத்து வாங்கும் முயற்சியில் பலர். மதுவில். மாதுவில் தேடும் ஒரு கூட்டம், போதை. சினிமா , ஊடகம் இவற்றில் தேடும். இன்னெரு கூட்டம். அந்த இடம், இந்த ஆள் என்று அலைமோதும் பிறிதொரு கூட்டம். ஆனாலும் இளைப்பாறுதல் கண்டடைந்தார் யாருமில்லை.

"என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன்". உன்
 பெருஞ்சமையை என் தோள்மேல் இறக்கி வை. அவற்றை நான் உனக்காக சுமக்கிறேன். உன் குற்றங்களுக்காக நான் தண்டனை அனுபவிக்கிறேன். உன் தவறுகளுக்காக நான் தண்டனை பெற தயாராகயிருக்கிறேன். உனக்கு சுகம் கிடைக்க நான் காயப்பட காத்திருக்கிறேன்

நமது பெருஞ்சுமையை ஆண்டவர்மேல் போட்டுவிட்டு சும்மா அலைவதல்ல சுகம். அது சோம்பலுக்கும், சோதனைக்கும் அதனால் அழிவுக்கும் ஆதாரமாகிவிடும். எனவே, "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது அழுத்தாது, எளிதானது,இளைப்பாற்று தருவது" என்று ஒரு மாற்றுச்சுமையை நமக்குத் தருகிறார்.

இயேசுவே, நீர் தரும் சுமையைச் சுமந்து உம்மோடு நடந்து என் வாழ்வில் மகிழவேன்.

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்னும் இயேசுவின் அழைப்பு அனைவருக்குமானது. சமயம் கடந்த, கத்தோலிக்க அழைப்பு. அந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம்.

நாம் வாழும் இன்றைய நாள்கள் மன அழுத்தம், உளைச்சல், அமைதியின்மை நிறைந்த நாள்கள். செல்வமும், வசதியும் பெருகினாலும், அமைதியின்றி, மனதில் பாரத்துடன் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் அழைப்பு பொருள் நிறைந்த ஒன்று. நமது கவலைகள், கலக்கங்கள், சுமைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வைப்போமா?

அத்துடன், இயேசுவின் சீடர்களான நாம், அவரைப்போல இந்த அழைப்பை நமது அயலாருக்கு விடுத்தால் என்ன? நமக்கு அறிமுகமான, அருகில் வாழ்வோரின் சுமைகளை நாம் அறிவோம். நம்மால் இயன்ற அளவு அவர்களின் சுமைகளைக் குறைக்க, ஆறுதல் அளிக்க முயன்றால் என்ன?



Monday, 7 December 2015

அமல அன்னையை போல் மாசற்ற வாழ்வு வாழ்வோம்!

HAPPY  FEAST  TO  ALL  OF  YOU
நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்தேர்ந்தெடுத்தார்.(எபே. 1:4) .

நாளை எங்களது DMI சபையின் பாதுகாவலி தூய  அமல அன்னையின் பெருவிழா.ஆகையால், சபையில் உள்ள அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.அமல அன்னை மாசற்ற அன்னை.

அத்தகைய அன்னையின் பெயரைத்தாங்கிய சபையில் நான் துறவு  வாழ்வை மேற்கொள்ள வாய்ப்புக்கொடுத்த கடவுளுக்கும் நன்றி.சபையாருக்கும் நன்றி.என்னை இச்சபைக்கென்று  தாரை வார்த்துக்கொடுத்த என் பெற்றோருக்கும் நன்றி.

நாளை நான் படித்த சென்னை DMI காலேஜும்,நான் பணி செய்த ஆரல்வாய்மொழி DMI காலேஜும் அமல அன்னையின் பெயரை தாங்கியிருப்பதால் இந்த இரு நிறுவனங்களுக்கும் நாமத் திருவிழா.எனவே இங்கு பணி செய்யும், படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும்,ஆசிரியர் பெருந்தகையருக்கும்  மற்றும் அனைவருக்கும் எனது அமல அன்னையின் பெருநாள் வாழ்த்துகள்.

அமல அன்னைக்கு!

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாள்  நம் அன்னை !
அன்னைக்கென  ஓர் லட்சியம் உண்டெனில் அது மகனின் லட்சியமாகவே இருந்தது!
அன்னையின் ஒரே ஆசை கடவுளின் திருவுளத்துக்கு கீழ்படிந்து பிள்ளைகளாகிய நம் தேவைகளை
நிறைவேற்றுவதாகத்தானிருந்தது!
எங்களுக்காக உம்  ஆசைகள் முழுவதும்  துறந்தாய் எங்கள் அன்னையே!

புவியில்  நீ பட்ட அவல வாழ்கை மறக்கத்தான்
முடியுமோ!
உம் பிள்ளைகளாகிய நாங்கள்  மாசில்லாமல் வாழ்வதே உம் ஆசைகள் என்பதை புரிந்துகொண்டோம் அம்மா!
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர் நீர்  அம்மா!

இந்த  உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால் தயங்காமல் சொல்வேன் அம்மா  நீதானென்று!

அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு.

மரியாவைப்பொருத்தமட்டில், ஜென்மப்  பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப்பொருத்தமட்டில் ஜென்மப்பாவம்  நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப்பாதுகாக்கின்றார்.


ஒரு மருத்துவர் ஒருவரை இரண்டு வழிகளில் நோயினின்று காப்பாற்ற முடியும். ஓன்று. அவரை நோய் தாக்காமலே தடுப்பு ஊசி போட்டு நோயினின்று காப்பாற்றமுடியும். இரண்டு ,நோய் தாக்கிய பிறகு அந்நோய்க்குத்தக்க மருந்தைக் கொடுத்து அவரைக் குணப்படுத்த முடியும். 


இவ்வாறு மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்pயது குறிப்பிடத்தக்கது.


புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.


நமது வாழ்விலும், நாம் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். கன்னி  மரியாள் தூய்மையற்றவராகப் பிறந்தாலும், அவரும் நம்மைப் போன்று மனிதப்பெண் தான். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையம், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். ஆணவத்திற்குச் சிறிதும் இடம் கொடாமல் தாழ்ச்சியோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தார்

.
இன்று நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாகப் புனிதப் படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவிற்கு நமது புனிதத் தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம் ?

இன்றைய உலகம்  எதை வேண்டுமானாலும் செய்யலாம்  என்ற கண்ணோட்டத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணிங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது.


இந்தச் சூழ்நிலையில் மாசற்ற வாழ்வு வாழ்வது எளிதான ஒன்றல்ல. நாம் அனைவரும் எளிதில் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நாம் எந்த அளவுக்கு மாசற்ற வாழ்வு வாழ முயற்சி செய்கிறோம் என்பதைத்தான் கடவுள் பார்க்க ஆசைப்படுகிறார். மரியாள் மாசற்ற வாழ்வு வாழ அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், தாங்கிக் கொண்டார். இயேசுவைக் காப்பாற்ற எகிப்திற்கு அவரைத் தூக்கிக்கொண்டுச் சென்றது முதல், அவரை இரத்தக் கறையோடு சிலுவையில் அறைந்தது வரை ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்.


அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றிட தன்னை தமது  சோதனைகளைத் தாங்கிகொண்டு, பிறருக்குத் தீங்கு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்வு வாழ நாம இறைவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நமது வேதனைகளையும், துன்பங்களையும் ஒப்படைக்க வேண்டும். மாசற்றவர்களாக வாழ தூண்ட வேண்டும். அத்தகைய பயனுள்ள மாசற்ற வாழ்வு வாழ நாம்  தொடர்ந்து இறைமகன் இயேசுவிடமும், அவர் தாய்  மரியாளிடமும் கற்றுக்கொள்வோம் .

அனைவருக்கும் அமல அன்னையின் பெருவிழா வாழ்த்துக்கள் !



Sunday, 6 December 2015

படுக்கை !

படுக்கை என்றாலே சுகமான ஒன்று.படுக்கையில் இரண்டு வகை உண்டு .ஒன்று  தூங்கலாம்,ஓய்வு எடுக்கலாம், நம் இஷ்டத்துக்கு அமர்ந்து எழும்பலாம்.இது ஒருவகையான சுகமான படுக்கை.

ஆனால், இரண்டாம் வகை படுக்கை  பல பேருக்கு சுமையாக மாறுகிறது.அதாவது,தீவிர நோயில் உள்ளவர்களுக்கும்,மரணப் படுக்கையில் உள்ளவர்களுக்கும்.  இதை நாம் நாளை நற்செய்தியில் காணலாம்.


 நாளை நற்செய்தி வாசகத்தில் இயேசு முடக்குவாதமுற்றவரை தன் படுக்கையை எடுத்துக் கொண்டு போகச் சொல்கிறார். படுக்கையில் இருப்பது என்பது தேக்க நிலையைக் குறிக்கும்.

ஓடுகின்ற தண்ணீரில் எவ்வளவு அழுக்கு கலந்தாலும் அது தன்னைத்தானே சுத்தம் செய்து விடும். தேங்கிய தண்ணீரில் அழுக்கு சேர்ந்தால் அது தண்ணீரையே பாழாக்கி விடும்.

 நாம் பொய், பொறாமை, பகைமை, பகிர்வின்மை போன்ற படுக்கையை விட்டு எழுந்து வான் வீட்டை நோக்கி நடக்க இந்த திருவருகைக் காலத்தில் அழைக்கப்படுகிறோம்.

 நாம் பாவிகள் என்று முடக்கிக் கிடப்பதை விட பாவிகளாக இறைவனை நோக்கிச் செல்லும் போது பாவம் நம்மை விட்டு அகன்று போகும். நாமும் தூயவர்களாக நிறைவாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.


ஓடுகின்ற தண்ணீரானது நன்மை நிறைந்தது.எப்போதும் பிறருக்கு வாழ்வையே கொடுக்கும்.

தேங்கிய அழுக்கு தண்ணீரானது தீமை நிறைந்தது .இதனால்  யாருக்கும் பயன் இல்லை.

ஆக, நம் வாழ்வு ஓடுகின்ற தண்ணீராக இருக்க வேண்டும்.மாறாக தேங்கிய தண்ணீராக இருக்க கூடாது.

நம் வாழும் வாழ்க்கை ஓடும் தண்ணீரா? அல்லது தேங்கும் அழுக்கு தண்ணீரா? சிந்திப்போம்!

Saturday, 5 December 2015

இறைவனில் உறவு மலர!

பரந்து விரிந்த கடல்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நீர்தான்!

பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நிறம்தான்!

பரந்து விரிந்த இந்த உலகம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த கருதான்!

இதுபோல் தினமும் பார்க்கும் மாந்தர்கள் அனைவரும் நம் உறவுகளே!

சில உறவுகளால் நம் வாழ்வில்  அர்த்தம் கிடைக்கும் !பல உறவுகளால் நமக்கு ஆறுதல் கிடைக்கும்!


நாளைய வாசகங்கள் நமக்கு உரைப்பது இதுவே.உலகின் மீட்புக்காக மெசியா வருகையை இறைவாக்கினர்கள் மூலமாக முன் அறிவிக்கின்றார் இறைவன்.
அதோடு அவருக்காக ஆயத்தம் செய்ய வேண்டும் என்றும் அழைக்கிறார். இறைமகனைப் பெற்றுக் கொள்ள மக்களை மனம் மாற அழைத்ததில் மிகவும் தலை சிறந்த போதகர் திருமுழுக்கு யோவான். இவர் செய்தது உன்னத செயல்.


இதைப் பற்றி தான் இறைவாக்கினர் எசாயா முன் அறிவித்திருக்கிறார். "பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் ".


கடவுளின்  இரண்டாம் வருகையில் நாம் அனைவரும்  அவரின் தூய மக்களாக எழுந்து ஒளிவீசுவோம் என்பதையும் உணர்வோம்.


இன்றைய காலத்திலே  நம்மில் நிரப்பப்பட வேண்டியவை இவைகளே.
1. பேராசை என்னும் பள்ளத்தாக்கு நிரப்பப்பட வேண்டும்.
2. ஆணவம் நேர்மையற்ற கோணலான வாழ்வு நேரிய வாழ்வாக வேண்டும்.
3. கரடு முரடான  உறவுகள் சரி செய்யப்பட்டு சமாதானத்தின் உறவு மலர வேண்டும்.
இதையே கடவுள் நம் ஒவ்வொருவரிலும் விரும்புகிறார்.

உறவில்லாமல் உலகம் இல்லை .......

இருவேறு உடலும் இருவேறு உயிரும்
மனசும் உறவு கொள்வது காதல் .....

நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம்
இவையனைத்தும் தன் சக்தியை வெளிபடுத்த
கொண்ட உறவு உலகம் ......

உயிருக்குள் உயிராய் உருவெடுத்து
முகத்தின் முகப்பு தோன்றிட
பாசமாய் கொண்ட உறவு பெற்றோர்கள்.....

சின்ன சின்ன சண்டைகள் போட்டு
குட்டி குட்டி குறும்புகள் செய்து
திட்டி தீர்த்துக்கொள்ள கூடிய உறவு சகோதரி .......

உண்மைக்கு உன்னதமான ஒருவனும்
தாய்க்கு நிகரான ஒருத்தியும்
சேர்ந்திருக்கும் உறவு நட்பு .....

இறைவார்த்தையின் படி  உறவுகள் மலர வாழ்வோம்  ! கண்டிப்பாக எந்த மாதரியான கோணலானவைகளும் இறைவனால் நேராக்கப்படும் என்பதை நம்புவோம்.

 இறைவனுடன் சேர்ந்து உறவுகளை வளர விடுவோம் .அந்த உறவுகள் குழந்தையை போன்று கள்ளம் கபடம் இல்லாததாக இருக்க இறைவனை வேண்டுவோம்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு உறவாக இருப்போம்.உதவுவோம்!

"யாதும்  ஊரே யாவரும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு ஏற்றவாறு உறவை மலர விடுவோம் வாழ்வில்.


Friday, 4 December 2015

இழப்பு !

"வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரேயல் மக்களிடம் செல்லுங்கள்.அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப்  பறைசாற்றுங்கள்". (மத்தேயு 10:6-7).

வீழ்ந்த பிறகு பள்ளத்தை குறை சொல்லி  என்ன நடக்கப்போகிறது
முறைப்படி நாம் தானே பார்த்து செல்லவேண்டும் .
எங்கு சென்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது நாம் தான் கவனக்குறைவில் சென்றால் இழப்பு நமக்குத்தான் .

மனிதர்கள் இழப்பால்  சிந்துகின்ற கண்ணீரைக் கண்டால்
பழுத்த இலை மரத்திலிருந்து விழுவதையே காட்டும்
கண்ணையொத்த மாந்தர்களை, பிரியமானவர்களை  நாம்  பிரிந்தால்
காசினியில் எவர் வந்து பிறர்  துயரை துடைக்கக் கூடும்?

ஈடில்லா இழப்பை எண்ணி எண்ணி அழத்தான் முடியும் 
யாராலும் அந்த இழப்பை ஈடு கட்ட முடியாது.
நம் சந்தோசத்தை இரட்டிபாக்கலாம் பலர் ஆனால் -நம்
இழப்பை குறைக்க ஒருவரால்  கூட  முடியாது 
இயற்கையோடு பேசி ஈடு கட்ட வேண்டியது தான்.

உணர்ச்சிகளை மொழியாலே உரைக்கின்ற எவரும்
உயிரிருந்தும் உணர்விருந்தும் பேசாத மரமே - நாம் 
இனஞ்சேர்த்துப் பார்த்தாலும் ஒன்றாவதில்லை
எனவே நான் இப்புவியில் வாழும்  மாந்தர் நிலைமைகளே
 பரிதாபம் என்பேன்!

பள்ளியில் படிக்கும் போது நான் பார்த்த சென்னை இன்று பரிதாப நிலையில்!

கல்லூரியில் படிக்கும் போது நான் பார்த்த சென்னை இன்று அழகு இழந்த நிலையில்!

பணி புரியும் போது நான் பார்த்த சென்னை இன்று சீர்குலைந்த நிலையில்!

படைப்போம்! புதுபிப்போம்!உருவாக்குவோம்!  சென்னையை மறுபடியும்!   

வாழ்வை இழந்தவர்கள்!
பிள்ளைகளை இழந்தவர்கள்!
உறவை இழந்தவர்கள்!
மருத்துவமனையில் உயிர் இழந்தவர்கள்!
செல்வத்தை இழந்தவர்கள்!
சிரிப்பை இழந்தவர்கள் !
 இவர்கள் எல்லாம் இழந்திருந்தாலும்
 இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை!!! - இப்பேற்பட்ட
மக்கள் தான் என் சென்னை வாழ் மக்கள்.

பசித்திரு,தனித்திரு,விழித்திரு என்பதற்கிணங்க இவர்களின் வாழ்கையை புரட்டிபோட்டது வெள்ளம். வெள்ளத்தின் அருமை தெரிந்த பிறகே இவர்களுக்கு பசியின் அருமையும்,தனிமையின் அருமையும் புரிந்தது.இப்போதே புரிகிறது இவர்களுக்கு விழிப்பு என்ற  முன்மதியின் அருமை.
இவர்களை வெள்ளம் துன்பப்படுத்தியிருந்தாலும் நாளாக,நாளாக கண்டிப்பாக இயற்க்கை இவர்களை  ஆறுதல்  படுத்தும் என்பதை நம்புவோம்.

இயேசு மூன்றாண்டு பணிபுரிய 30-து வருடங்கள் தயார் செய்தார்.வருடம் வருடம் பருவ மழை தமிழ்நாட்டில் வருவது தெரிந்தும் 12-டு மாதமும் 365-ந்து நாள்களும் எந்த தயாரிப்பும் இல்லாமல் நம் தலைவர்கள் நாட்டிற்கு  பணி செய்கிறோம் என்று கூறுவது என்னைபொருத்தவரை கேள்விக்குறியே??


இன்று நாம் இழந்தது அப்பாவி மக்களை.ஆனால் புரட்டிபோட்டது வெள்ளம் எல்லோரையும்.வெள்ளம் யார் மாடி வீட்டில் இருக்கிறார்கள்,யார் குடிசையில் இருக்கிறார்கள் என்ற பாகுபாடே பார்க்கவில்லை.
ஆக,இன்னும் சிறிது நாட்களில் இயற்கையே நமக்கு ஆறுதல் தரும் அந்த நாள் வெகு விரைவில் உள்ளது என்பதையும்  மற்றும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதையும் நம்புவோம்.

 நாளைய நற்செய்தி இயேசுவின் மூன்றாண்டு பணியை சுருக்கித் தருகின்றது.இயேசு சென்ற இடமெல்லாம் நற்செய்தி அறிவித்தார்.ஜெபக்கூடத்தில் இறையாட்சி பற்றி விளக்கினார்.உடல் ,உள்ள நோய்களைப் போக்கினார்.மக்கள் கூட்டத்தைக் கண்டபோதெல்லாம் அவர்கள் மேல் பரிவு கொண்டார்.

அதே பணியைத் தம் சீடர்களும் செய்ய அழைக்கின்றார்.அந்த அழைப்பை ஏற்ற நாம் முதலில் நம்மைப் படைத்த அன்பு கடவுளை நெஞ்சார நேசிக்க வேண்டும்.

மேலும் தீய பழக்கங்கள்,பிறரன்புக்கு எதிரான நம் சொல்,செயல்கள் அனைத்தையும் களைந்து விட்டு இயேசுவின் சாட்சிகளாக வாழ வேண்டும்.

பரிவும் இரக்கமும் கொள்வோம்.பிறரன்பு பணிகளை தொடர்வோம்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக ஜெபிப்போம்.கரம் கொடுப்போம். 


நெருங்கி வரும் விண்ணரசில் நாம்  எல்லோரும் பங்காளிகளாக இருக்க தொடர்ந்து வேண்டுவோம்.வாழ்கையை மாற்றுவோம் நேர்வழியில் செல்வோம்.இறைவனின் மக்களாவோம்!!!

Thursday, 3 December 2015

கண்கள் திறக்கும்...!பார்வை பெறுவோம்...!

இயேசு பார்வையற்றோரின் கண்களைத் தொட்டு,
'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்' என்றார்.
உடனே அவர்களின் கண்கள் திறந்தன'' (மத்தேயு 9:29-30).

இயேசுவை அணுகிச் சென்று அவருடைய உதவியை நாடியவர்கள் பலர். இவ்வாறு தம்மைத் தேடிவந்த மனிதரை இயேசு அன்போடு வரவேற்றார். அவர்களுடைய துன்பங்களைப் போக்குவதற்கு இயேசு முன்வந்தார். இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்கியதை அவர்கள் கண்டுகொண்டனர். என்றாலும், இயேசு தம்மை அணுகிவந்த மனிதரிடம் ஒரு முக்கியமான பண்பை எதிர்பார்த்தார். அப்பண்புதான் ''நம்பிக்கை'' என அழைக்கப்படுகிறது.

 இந்த நம்பிக்கையில் இரு அம்சங்களை நாம் காணலாம். நாளைய நற்செய்தியில் நாம் காண்பது இதுவே...,

1. இயேசுவை அணுகி உதவி தேடியவர்கள் அவர் நினைத்தால் தங்களுடைய துன்பத்திலிருந்து விடுதலை தர முடியும் என உறுதியாக ஏற்றுக்கொண்டார்கள்.
2. அவர்கள் இயேசுவின் வழியாகக் கடவுளே அதிசய செயல்களை ஆற்றினார் என்னும் உறுதிகொண்டிருந்தனர்.

இவ்வாறு உறுதியான உள்ளத்தோடும் ஆழ்ந்த எதிர்பார்ப்போடும் இயேசுவை அணுகிச் சென்றவர்கள் ஒருபோதுமே ஏமாற்றமடையவில்லை. நம் வாழ்விலும் இது நிகழ்வதை நாம் காணலாம். நம் உள்ளத்தில் உறுதி இருக்கும்போது நடக்கவியலாது என நாம் நினைப்பதும் நடப்பதுண்டு.

 நம் உள்ளத்தில் உறுதியற்ற நிலை தோன்றிவிட்டால் நாம் வெற்றியடைய இயலாது என்னும் எதிர்மறை எண்ணம் நம்மில் வேரூன்றி, நம் உறுதிப்பாட்டைக் குலைத்துவிடும். அந்த வேளைகளில் நம் முயற்சி வெற்றிதராமல் போய்விடுவதுண்டு. இது மனித வாழ்வில் நாம் பெறும் அனுபவம்.

 ஆனால், கடவுளை அணுகிச் செல்வோர் கடவுளின் கைகளில் தங்களையே முழுமையாகக் கொடுத்துவிடுவதால் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தமக்கு வெற்றியாகத் தோன்றுவது உண்மையில் தோல்வியாகவும், தோல்வியாகத் தோன்றுவது உண்மையில் வெற்றியாகவும் மாறிடக் கூடும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

 எனவே, கடவுள்மீது நம்பிக்கை கொள்வோர் தம் சொந்த சக்தியில் நம்பிக்கை கொள்ளாமல் தம் வாழ்வினையே கடவுளிடம் தந்துவிட்டு, கடவுள் தம்மிடம் எதிர்பார்ப்பதைச் செய்வதில் முனைந்துநிற்பார்கள்.


இயேசுவை அணுகிச் சென்று பார்வை பெற விரும்பிய பார்வையற்றோருக்கு இயேசுவிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்ததுபோல நாமும் நம்பிக்கையோடு அவரை நாடிச் சென்றால் நம் ''கண்கள் திறக்கும்''. அப்போது நாம் உண்மையிலேயே ''பார்வை பெறுவோம்.'' கடவுளே நமக்கு ஒளியாயிருந்து நம்மைக் கைபிடித்து வழிநடத்திச் செல்வார்.


Wednesday, 2 December 2015

புனித சவேரியார் போல... !நாமும் தூய சவேரியார் ஆகலாம்...!

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?(மத்தேயு 16:26).

நான் தூய சவேரியாரின் திருஉடலை இரண்டு தடவை கோவா சென்று பார்த்திருக்கேன்.உண்மையாகவே இதற்க்கு நான் பாக்கியம் பெற்றவள் என்று சொன்னால் மிகையாகாது.

முதல் தடவை போகும் போது நிறைய நேரம் ஜெபம் பண்ணினேன்.ஏனென்றால் ஒரு சொல்லாடல் உண்டு எந்த  புது ஆலயத்துக்கு  போனாலும் மூன்று கருத்துக்களுக்காக வேண்டிக்கொண்டால் நிறைய ஆசிர்வாதம் கிடைக்கும் வேண்டிக்கொண்டவர்களுக்கு என்று.அதனால்  அந்த மூன்று கருத்தில் ஒரு கருத்து நான் புனிதை ஆக வேண்டும் என்பது.அது நடக்கும் என்று இன்றும் விசுவசிக்கிறேன்.

நாளை நான் இருந்து  பணி செய்த நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தின்  பாதுகாவலர் புனித சவேரியார் திருநாள்.திருவிழாவைக் கொண்டாட சாரை சாரையாக மக்கள் கூட்டம் பக்தியுடன் திரண்டு வருவதை காணலாம் இது ஒரு பகுதி.


நாளை நாகர்கோவிலில் உள்ள  பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்படும். மறுபகுதி பார்த்தால் மாணவ மாணவிகள் கூட்டமும் ஆங்காங்கு காணலாம்.ஆக கோட்டாறு மறைமாவட்டமே கலை கட்டும்.அனைவருக்கும் தூய சவேரியார் பெருவிழா வாழ்த்துக்கள்.

எனக்கு சவேரியார் என்றாலே ஞாபகத்திற்கு வரும் பாடல் வரிகள் இவைகள் தான்.இந்த வார்த்தைகளை நற்செய்திலும் காணாலாம்.வாழ்கையில்  நம் எல்லோருக்கும் ஒரு திருப்புமனை உண்டு.அன்று தூய சவேரியாருக்கு திருப்புமுனையை கொடுத்தது இந்த வரிகளே அதாவது  உலகமெல்லாம் எனக்காதாயம்.பாடல் வரிகளை கீழே  காணலாம் .

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ...

அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்!
அவரே புனித சவேரியார்!


நாளை தாயாம் திருச்சபையோடு இணைந்து  புனித பிரான்சிஸ் சவேரியாரின் விழாவை கொண்டாடப்போகிறோம். இவர் போதித்த விதமே தனி.அதாவது  கடல் கடந்து இந்தியா வந்து, மொழி, கலாசாரமும் மாறுபட்ட மக்களிடையே உழைத்து, நற்செய்தி அறிவித்து, திருமறைப் பணி புரிந்த மாபெரும் புனிதர். அவருடைய வாழ்வையும், பணியையும் எண்ணிப்பார்த்து நாம் விசுவாச ஊக்கம் பெற அழைக்கப்படுகிறோம். 

நீங்கள் அனைவரும் தீபாவளி நேரத்தில் டி.வியில் சிறப்பு நிகழ்சிகளை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.அந்த நேரத்தில் ஒரு டி.வி சேனலில் பாகுபலி படத்தின் ஒவ்வொரு இடைவேளைக்குப் பிறகும் சுமார் 38 தடவை ஆச்சி மசாலா உலகளவில் அவாட் வாங்கியதை திருப்பி திருப்பி விளம்பரப்படுத்தினார்கள்.அதற்கு மட்டும் கோடிகணக்கில் செலவிட்டிருந்தார்கள்.நானும் அதை பார்த்தேன்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் நம் ஒவ்வொருவரையும் கடவுள் எவ்வளவு அழகாக படைத்திருக்கார்.அப்படி நம்மை படைத்த கடவுளுக்கு நம்மால் என்ன செய்ய முடிகிறது? நாம் நற்செய்தியை பரப்ப எப்படிப்பட்ட விளம்பரங்களை செய்கிறோம்.

வெளிநாட்டில் இருந்து வந்த மாமனிதர்கள் போதித்ததால் இன்று நாம் கிறிஸ்தவர்கள்.அன்று நம் முன்னோர்கள் அவர்கள் போதனையை கேட்டு கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.இன்று நம் போதனையை கேட்க எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?

இன்று நாம் கடவுளுக்கு சான்று பகிர எப்படிப்பட்ட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறோம்.வெறும் திருவிழா கொண்டாடியதோடு நின்று விடக்கூடாது நம் விசுவாசம்.மேலும், அதற்கும் மேலாக நம் விசுவாசம் இருக்க வேண்டும்.  

நமது ஜெபங்கள் நிறைய நேரம் ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்லி ஜெபிக்க கூடியதாக மாத்திரமே உள்ளது.இவ்வாறு இருந்தால்  நாம்  விண்ணரசில்   நுழைய முடியவே முடியாது. மாறாக, தூய சவேரியாரைப் போன்று  தந்தையின் திருவுளத்தின்படி செயல்பட்டால் மட்டுமே  விண்ணரசில் நுழைய முடியும்.அது நம் கையில் தான் உள்ளது.  


தந்தையின் திருவுளத்தின்படி நடந்தவர் என்ற ஆண்டவரின் மொழிகள் புனித சவேரியாருக்கு நன்கு பொருந்துகின்றன. இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. 

செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். புனித சவேரியார்போல நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும்.

“மாற்றம் நிச்சயம் வலியைத் தரும். ஆனால், மாறத்தான் வேண்டும்’’ஏனென்றால் மாற்றம் மட்டுமே நிரந்தரம்.

ஆக,மாற்றம் பெற்ற மனிதர்களாவோம்.கண்டிப்பாக நாமும் தூய சவேரியார் ஆகலாம்.
தூய சவேரியாரின் அருள்  பெற்றவர்களாய் தூவுவோம் இந்திய மண்ணில் விசுவாச வித்துக்களை.


அனைவருக்கும் தூய சவேரியார் பெருநாள் வாழ்த்துக்கள்!


Tuesday, 1 December 2015

பரிவு!

''நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்'' (மத்தேயு 15:32).

இயேசுவின் ஒவ்வொரு செயல்பாடும் நமக்கு மிகப்பெரிய கருத்தியலையும், ஆழமான சிந்தனையையும் தருகிறது. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் அதுவே, மிகச்சிறந்த வாழ்க்கை நெறிகளை நமக்குத் தருகிறது.

நாளைய  நற்செய்தியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆல்ஃப்ரட் எடேர்ஷிம் என்கிற விவிலிய அறிஞர் இந்த பகுதிக்கு அருமையான விளக்கத்தைக் கொடுக்கிறார். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் மூன்றுமுறை உணவைக் கொடுத்ததாக நற்செய்தியில் சொல்லப்படுகிறது. அந்த மூன்றுமுறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

முதலில் கலிலேயாவில் தனது நற்செய்திப்பணி முடிந்தவுடன் கடைசியாக 5000 பேருக்கு, அப்பம் பலுகக்கொடுக்கிறார். அதன்பிறகு அவர் வேறு எந்த நற்செய்திப்பணியும் செய்யவில்லை. உணவைக்கொடுத்தது தான் கடைசிப்பணி.

 இரண்டாவது முறை, புறவினத்து மக்கள் மத்தியில் பணி முடிந்ததும் 4000 பேருக்கு அப்பத்தைப் பலுகச்செய்து கொடுக்கிறார். இதற்கு பிறகு அந்த பகுதியில் அவர் வேறொன்றும் செய்யவில்லை.

மூன்றாம் முறை தன்னுடைய சீடர்களோடு இறுதி உணவு அருந்துகிறார். அதற்கு பிறகு சிலுவையில் மரிக்கிறார். உணவு என்பது நிறைவைக் குறிப்பதாக இருக்கிறது. தனது பணிவாழ்வின் நிறைவில் இயேசு மக்களுக்கு உணவு கொடுக்கிறார். அதாவது, முழுமை தான் இயேசுவின் பணி என்பதை இது குறிக்கிறது.

ஏழை, எளியவர்களின் ஒட்டுமொத்த துயரைத் துடைப்பது, இயேசுவின் பணியாக இருக்கிறது. முழுமை தான் பணிவாழ்வின் நிறைவு. உடல் நோய்களைக் குணப்படுத்துகிறார்.

பசிக்கிறவர்களுக்கு உணவும் கொடுக்கிறார். இன்றைய திருச்சபையின் ஒட்டுமொத்த பார்வை, இத்தகைய நிறைவை நோக்கியதாகத்தான் இருக்கிறது. அதுதான் நமது இலக்காகவும் இருக்க வேண்டும்.