Wednesday, 9 December 2015

பெருஞ்சமையை நான் உனக்காக சுமக்கிறேன்!

''இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்'' (மத்தேயு 11:28).

பல்வேறு சுமைகளால் சோர்ந்துபோன அனைவருக்கும் ஆறுதல் தரும் அருமையான வாக்குறுதியை நாளைய  நற்செய்தி வாசகமாகப் பெற்றிருக்கிறோம்.

வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இருகரம் விரித்து அழைக்கிறார் நம் ஆண்டவர். எனவே, உடல் நோயா, மன அழுத்தமா, கவலைகளா, அச்சமா, துயரமா, அவமானமா? எத்தகைய சுமை நம்மை அழுத்தினாலும், இயேசுவின் அருகில் வந்து அவரிடம் நம் பாரங்களை இறக்கி வைப்போம். உலகம் தர இயலாத மன ஆறுதலை, உடல் நலத்தை, ஆன்ம வலிமையை அவர் தருவார்.

அத்துடன், இன்னொரு அழைப்பையும் நாளைய   வாசகம் மூலமாக இயேசு விடுக்கிறார். நம் வாழ்வின் சில சுமைகளை நாம் ஒருவேளை சுமந்தே தீரவேண்டும் என்கிற நிலை நம்மில் பலருக்கு இருக்கலாம். தீராத நோய், கடினமாக வாழ்க்கைத் துணைவர், ஊனமுற்ற குழந்தை, ... போன்ற ஏதேனும் ஒரு சுமை இறக்கி வைக்க முடியாததாக, என்றும் நம்மோடு உடன் வருகிற சுமையாக இருந்துவிட்டால் என்ன செய்வது?

இத்தகைய சுமைகளை எளிதாக, இனியவையாக மாற்றுவதாக இயேசு வாக்களிக்கிறார். ஆம், இறக்கி வைக்க முடியாத சுமைகள் இயேசுவின் அருளால் இனிய சுமைகளாக, எளிய சுமைகளாக மாறுகின்றன. காரணம், நம்மோடு சேர்ந்து இச்சுமைகளை இயேசுவும் சுமக்கிறார். அதற்காக நன்றி கூறுவோம். சுமைகளை மகிழ்வுடன் சுமப்போம்.

சும்மாதெருவில் உள்ள சுமையை இழுத்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு,நொந்து நொடிந்து அறுந்த பட்டமாக அல்லாடுகிறான் மனிதன். ஆறிவியல் பொருட்கள், நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு அம்சங்கள், கலாச்சார சீரழிவு, ஆன்மீக வெற்றிடம் என்னும் பெருஞ்சுமைகளைச் சுமந்து சுமந்து சோர்ந்துபோயுள்ளான்.

இளைப்பாறுதல் தேடி எங்கெங்கோ அலைந்து அதிலும் சோர்ந்துபோயுள்ளான்.பணம் கொடுத்து வாங்கும் முயற்சியில் பலர். மதுவில். மாதுவில் தேடும் ஒரு கூட்டம், போதை. சினிமா , ஊடகம் இவற்றில் தேடும். இன்னெரு கூட்டம். அந்த இடம், இந்த ஆள் என்று அலைமோதும் பிறிதொரு கூட்டம். ஆனாலும் இளைப்பாறுதல் கண்டடைந்தார் யாருமில்லை.

"என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன்". உன்
 பெருஞ்சமையை என் தோள்மேல் இறக்கி வை. அவற்றை நான் உனக்காக சுமக்கிறேன். உன் குற்றங்களுக்காக நான் தண்டனை அனுபவிக்கிறேன். உன் தவறுகளுக்காக நான் தண்டனை பெற தயாராகயிருக்கிறேன். உனக்கு சுகம் கிடைக்க நான் காயப்பட காத்திருக்கிறேன்

நமது பெருஞ்சுமையை ஆண்டவர்மேல் போட்டுவிட்டு சும்மா அலைவதல்ல சுகம். அது சோம்பலுக்கும், சோதனைக்கும் அதனால் அழிவுக்கும் ஆதாரமாகிவிடும். எனவே, "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது அழுத்தாது, எளிதானது,இளைப்பாற்று தருவது" என்று ஒரு மாற்றுச்சுமையை நமக்குத் தருகிறார்.

இயேசுவே, நீர் தரும் சுமையைச் சுமந்து உம்மோடு நடந்து என் வாழ்வில் மகிழவேன்.

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்னும் இயேசுவின் அழைப்பு அனைவருக்குமானது. சமயம் கடந்த, கத்தோலிக்க அழைப்பு. அந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம்.

நாம் வாழும் இன்றைய நாள்கள் மன அழுத்தம், உளைச்சல், அமைதியின்மை நிறைந்த நாள்கள். செல்வமும், வசதியும் பெருகினாலும், அமைதியின்றி, மனதில் பாரத்துடன் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் அழைப்பு பொருள் நிறைந்த ஒன்று. நமது கவலைகள், கலக்கங்கள், சுமைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வைப்போமா?

அத்துடன், இயேசுவின் சீடர்களான நாம், அவரைப்போல இந்த அழைப்பை நமது அயலாருக்கு விடுத்தால் என்ன? நமக்கு அறிமுகமான, அருகில் வாழ்வோரின் சுமைகளை நாம் அறிவோம். நம்மால் இயன்ற அளவு அவர்களின் சுமைகளைக் குறைக்க, ஆறுதல் அளிக்க முயன்றால் என்ன?



No comments:

Post a Comment