Friday, 11 December 2015

நம்பிக்கையினால் வாழ்வு !

''பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து,
'அதை (பேயை) ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?' என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்...' என்றார்'' (மத்தேயு 17:19-20).

நம்மிடம் ''நம்பிக்கை'' மட்டும் இருந்தால் நம்மால் அதிசய செயல்களைச் செய்யக்கூடும் என இயேசு கற்பிக்கிறார். நோய்களை விளக்குவதற்கு அறிவுப்பூர்வமான தெளிவுகள் இல்லாதிருந்த அக்காலத்தில் எல்லா நோய்களுக்கும் ''பேய்''தான் காரணம் என மக்கள் கருதியதுண்டு.

 வலிப்புநோயால் அவதிப்பட்ட மனிதரைப் பிடித்திருந்தது வலிப்புப் பேய். அதை ஓட்டிட இயேசுவின் சீடரால் இயலவில்லை. அதற்குக் காரணமாக இயேசு காட்டியது அவர்களது ''நம்பிக்கைக் குறைவு''. நம்பிக்கை என்றால் என்ன? விவிலியப் பார்வையில் நம்பிக்கை என்பது கடவுளிடத்தில் நாம் முழுமையாக நம்மையே கையளிப்பதைக் குறிக்கும்.

கடவுளிடத்தில் யார் அடைக்கலம் புகுகின்றார்களோ அவர்களிடத்தில் நம்பிக்கை உள்ளது எனலாம். இந்த நம்பிக்கை நம்முடைய சொந்த சக்தியால் எதையும் சாதிக்கலாம் என எண்ணாது; மாறாக, எல்லையற்ற வல்லமையுள்ள கடவுள் நினைத்தால் எந்த அதிசய செயல்களையும் ஆற்ற முடியும் என உறுதியாக இருப்பதே நம்பிக்கை.


 இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த ஆழ்ந்த நம்பிக்கையைத்தான். இங்கே இரண்டு வகையான மிகைப் போக்குகளை நாம் தவிர்த்தல் வேண்டும். ஒன்று, கடவுளிடத்தில் நம் சுமைகளைப் போட்டுவிட்டு நாம் வாளா இருந்துவிடலாம் என நினைக்கின்ற அலட்சியப் போக்கு.

மற்றொன்று, கடவுளை நாம் முழுமையாக நம்பியபோதும், அவரை நோக்கி உருக்கமாக மன்றாட்டுக்களை எழுப்பிய பிறகும் நாம் எதிர்பார்த்துக் கேட்டது நடக்காமல் போய்விட்டால் கடவுளையோ நம்மையோ குறைகூறுகின்ற போக்கு. சில வேளைகளில் நமக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் அதிலிருந்து விடுதலை பெற நாமும் பிறரும் உருக்கமாக வேண்டுகிறோம்.

அதன்பிறகும் நோய் தணியாவிட்டால் நம்மிடம் நம்பிக்கை இல்லை எனச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்; அல்லது நம்மீது பழியைப் போடுகின்றனர். இது சரியான போக்கு அல்ல. நம்பிக்கை என்பது மாயா வித்தை அல்ல. கடவுளை முழுமையாக நாம் நம்பினால் நாம் எதிர்பார்த்தது நடக்காவிட்டாலும் நாம் நம்பிக்கையில் தளர மாட்டோம். மாறாக, நம் நம்பிக்கையை ஆழப்படுத்த இறைவனை வேண்டுவோம்.

No comments:

Post a Comment