Thursday, 31 December 2015

தாயின் ஆசியோடு!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! 
"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண் 6'24-26) இவை, இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் வழங்கிய ஆசீர்.

நாளை  புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!

இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன?

குறிப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன?


நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன. உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.

இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.


கடந்த ஆண்டின் ஏமாற்றங்கள், தோல்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, புதிய எதிர்நோக்கோடு இந்த ஆண்டைச் சந்திக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நம் வாழ்வின் தனிப்பட்ட போராட்டங்கள், பொதுநீதிப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போகுமோ என்னும் கவலையும், கலக்கமும் நம்மைத் தாக்கலாம். ஆனால், இன்றைய இறைவாக்கு நமக்கு ஊக்கமூட்டுகிறது.

மரியா, யோசேப்புடன் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள் வியப்படைந்தனர், மகிழ்ச்சியும் அடைந்தனர். "அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது". எனவே, கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டே திரும்பிச் சென்றனர்.

 "ஆண்டவர் உனக்கு ஆசிவழங்கி உன்னைக் காப்பாராக" என்னும் ஆண்டவரின் ஆசிமொழி ஆண்டின் முதல் நாளில் நமக்கு வழங்கப்படுகிறது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு நமக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடர்வோம். அன்னை மரியாவின் ஆசியும், துணையும் நம்மோடு இருக்கும்.


இப் புதிய ஆண்டில் உங்களுக்கும் அதே பாதுகாப்பு, முன்னேற்றம், அமைதி என்னும் முப்பெரும் கொடைகளை இறைவன் வழங்குகின்றார். இதைப்பெற்று அனுபவிக்க நமக்குத் தகுதியிருந்தால் ஆண்டு முழுவதும் ஆண்டு அனுபவிக்கலாம். அது என்ன தகுதி?

நம் அன்னை மரியாள்தான் அந்த தகுதி அனைத்தும் உடையவள். அவளுடைய குணங்கள் நம்மிடம் இருந்தால் இந்த ஆசீர் குறைவின்றி உங்களில் தங்கும்.உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருத்தி, இறை பிரசன்னத்தில் தியானித்து செயல்படுங்கள். இறைவன் உங்களைப் பாதுகாப்பார்: உங்களை உயர்த்துவார்: உங்களுக்கு அமைதியும் நிம்மதியும் தருவார்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

1 comment:

  1. Congrats.Good sharing on tomorrow's readings.Happy new year 2016.

    ReplyDelete