Tuesday, 1 December 2015

இறைவனின் வெளிப்பாடு!

''தந்தையே,...ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து,
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்'' (லூக்கா 10:21).

 கடவுளின் ஆட்சி நெருங்கி வருகிறது என இயேசு நற்செய்தி கூறுகிறார். அவர் கூறுவதைச் சிலர் ஏற்கின்றர்; பலர் ஏற்க மறுக்கின்றனர்.

இயேசுவின் சொல்லைக் கேட்டு அதில் உண்மையுள்ளது என உணர்ந்து ஏற்றவர்கள் யார்? திறந்த உள்ளமுடைய அம்மனிதர்களை இயேசு ''குழந்தைகள்'' என அழைக்கிறார். தம்மையே பெரியவர்களாகக் கருதுகின்ற மனிதர்கள் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியின் பொருள் என்னவென்று உணரத் தவறிவிடுகிறார்கள்.

அவர்கள் தங்களை ஞானிகளென்றும் அறிஞர்களென்றும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், யார் தங்களைக் குழந்தைகளாக ஆக்கிக் கொண்டு, கடவுளிடத்தில் தங்களையே முற்றிலுமாகக் கையளித்து, திறந்த உள்ளத்தோடு கடவுளை அணுகிச் செல்கின்றார்களோ அவர்களே இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் புரிந்துகொள்வார்கள்.

 குழந்தைகள் பெற்றோரையும் பிறரையும் சார்ந்திருக்கும் பண்புகொண்டவர்கள். அவர்களுடைய சொந்த சக்தியால் யாதும் நடக்கவியலாது. தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பெறுவதற்குக் குழந்தைகள் பிறரைத்தான் நம்பியிருக்க வேண்டும். இயேசு இதே உண்மையை உணர்த்துவதற்காகத்தான் ''கடவுளாட்சி குழந்தைகளுக்குரியது'' என அறிவித்தார்.

மனித ஞானம் எல்லைகளுக்கு உட்பட்டது; மனித அறிவும் எல்லை கடந்ததல்ல. ஞானமும் அறிவும் நமக்கு இருந்தாலும் நாம் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று சொல்லவியலாது. கடவுளாட்சியில் ஞானிகள் எனப்படுவோர் கடவுளின் கைகளில் தம்மை முழுமையாகக் கையளிப்போரே. அவர்கள் இவ்வுலக கணிப்புப்படி ஞானியராகவோ அறிஞராகவோ இல்லாமலிருக்கலாம்.

ஆனால் கடவுளின் கண்களுக்கு அவர்கள் உண்மையான அறிவாளிகள்; சிறந்த ஞானிகள். இவர்களுக்கு ''இறைவனின் வெளிப்பாடு'' அருளப்படும். அதாவது, கடவுள் தம் உண்மை இயல்பை எளியோராகிய இவர்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுகிறார் என நாம் முடிவுகட்டிவிடல் ஆகாது. திறந்த உள்ளத்தோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.

No comments:

Post a Comment