'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'
என்று கடவுளைப் புகழ்ந்தது'' (லூக்கா 2:13-14).
நான் கிறிஸ்துவை அறிந்து இன்றோடு 20-பது வருடம் ஆகிறது.அதேபோல் இது எனக்கு 19-பதாவது கிறிஸ்மஸ்.
உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
இயேசு இவ்வுலகில் ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு விழாவின் மையாமாக உள்ளது. அக்குழந்தை மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தை. அதே நேரத்தில் மனித இனத்தோடு தம்மை ஒன்றித்துக்கொண்ட கடவுளின் வெளிப்பாடு. மரியாவின் மகனாகப் பிறந்த குழந்தையைக் கண்டு வணங்கிட இடையர்கள் செல்கிறார்கள்.
இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த வகுப்பினர். உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை, மாறாக, இவ்வுலகம் கடையர் என யாரைக் கருதுகிறதோ அவர்களே கடையராக வந்து பிறந்து குழந்தையை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது என லூக்கா விளக்குகிறார். விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர் அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்த இசைத்த பண்புயர் கீதம் ''உன்னதத்தில்...'' எனத் தொடங்குகின்ற புகழ்ப்பாடல் ஆகும். அதில் கடவுளின் மாட்சி போற்றப்படுகிறது. அதே நேரத்தில் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்கின்ற மனிதருக்குக் கடவுளின் அமைதியும் வாக்களிக்கப்படுகிறது,
கடவுளின் மாட்சியும் மனிதரின் வாழ்வில் நிலவுகின்ற அமைதியும் தொடர்புடையனவா? கடவுளே மனிதராக மாறிவிட்டதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உருவாகிவிட்டது. அப்பிணைப்பின் விளைவுதான் மனித வாழ்வில் கடவுள் வழங்குகின்ற அமைதி. இந்த அமைதி வெறும் உளவியல் சார்ந்த சலனமற்ற நிலையைக் குறிப்பதில்லை.
இந்த அமைதி கடவுளிடமிருந்து நமக்கு வருகின்ற ஒரு கொடை. கடவுளே தம்மை நம்மோடு பகிர்ந்துகொள்வதின் அடையாளம் இந்த அமைதி. இதை நம் வாழ்வில் ஒரு கொடையாக நாம் ஏற்கும்போது கடவுளின் மாட்சி ஆங்கே துலங்கி மிளிரும். மனிதரின் நிறை வாழ்வுதான் கடவுளின் மாட்சி என்றொரு கூற்று உண்டு. உண்மையிலேயே நாம் மனிதத்தை மதித்து வாழ்ந்தால் கடவுளின் உடனிருப்பு அங்கே ஒளிவீசும். அந்த ஒளியே கடவுளின் மாட்சியாக நம்மிடையே துலங்கி மிளிரும்.
உரோமைப் பேரரசு காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
முதலாவதாக, எத்தனை வரிகள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது. யூதர்களுக்கு இராணுவத்தில் சேர விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே, வரிமுறைக்காக அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது.
நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம் ஏறக்குறைய 8 மைல்கள். வழக்கமாக பயணம் செய்வோர் தங்குவதற்கென ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமும், சமைப்பதற்கு சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும்.
உணவு பயணியரைச் சார்ந்தது. மரியாவும், யோசேப்பும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்கு கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை. அந்த இடத்தில்தான் கடவுளின் குழந்தை பிறக்கிறது.
இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்கு கிடைத்த இடம் எளிய இடம்தான். சற்று ஆழமாக சிந்தித்தால், இதுவும் கூட நமக்கு சிறந்த பொருள் தருவதாக அமைகிறது. நமது இறைவன் எளிமையை விரும்புகிற இறைவன். பகட்டையோ, ஆடம்பத்தையோ அல்ல என்பதையே இது காட்டுகிறது.
இறைவனை ஆடம்பரத்திலோ, பெரும் கொண்டாட்டங்களிலோ அல்ல, மாறாக, எளிமையிலும், எளியவர்களிடத்திலும் தான் பார்க்க முடியும். ஏழைகளிலும், எளியவர்களிலும் இறைவனைக்காண முற்படுவோம்.
உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் பெருநாள் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment