Saturday, 19 December 2015

ஒரு சிறப்பு உறவு !

''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' (லூக்கா 1:42)


 இயேசுவை இவ்வுலகில் பெற்றுத் தந்த பெருமையுடைத்தவர் மரியா. அவரைத் திருச்சபை கன்னித் தாய் எனப் போற்றுகின்றது. கடவுளின் ஆவி வல்லமையோடு இறங்கிவந்ததால் மரியா கடவுளின் வார்த்தையைத் தம் வயிற்றில் தாங்கிக் குழந்தை இயேசுவாக ஈன்றளித்தார்.


எனவே, மரியாவை நாம் ''கடவுளின் தாய்'' எனவும் போற்றுகின்றோம். இத்தகைய உயர்ந்த பேற்றினை மரியா பெற்றதால் அவர் உண்மையிலேயே பெண்களுக்குள் ஆசிபெற்றவர்தாம் (காண்க: லூக் 1:42). மரியாவின் உறவினராகிய எலிசபெத்து உரைத்த வாழ்த்துரையை நாமும் மரியாவுக்கப் புகழாரமாகச் சூடுகின்றோம்.


 மரியா ஆசிபெற்றவர் என்பதன் பொருள் என்ன? கடவுள் மரியாவைத் தம் மகனின் தாயாகத் தேர்ந்துகொண்டார் என்பதே இங்குக் குறிக்கப்படுகின்ற ஆழ்ந்த பொருள். இவ்வாறு தாய்மைப் பேறு எய்திய மரியா நம் தாயாகவும் இருக்கின்றார்.


நாம் மரியாவைப் போன்று கடவுளை முற்றும் நம்புகின்ற போது கடவுளின் செயல் நம்மிலும் வல்லமையோடு துலங்கும். கடவுளின் திருவுளத்தை நாம் ஏற்போம்; அதன்படி செயல்படுவோம்.

 மரியா ஆசிபெற்றவர் என்பதன் இன்னொரு பொருள் அவர் தம் மகன் இயேசுவின் சீடராக மாறினார் என்பதாகும். சீடர்கள் எப்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என இயேசு போதித்தார்.


அப்பண்புகளை மரியா தலைசிறந்த விதத்தில் கொண்டிருந்தார். அவர் தம்மை முழுவதும் கடவுளிடம் கையளித்தார். நாமும் அவ்வாறு செய்யும்போது உண்மையிலேயே பேறுபெற்றவர் ஆவோம்.


பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மரியா சிறந்த முன்மாதிரியாக உள்ளார். அதாவது, மரியாவிடம் துலங்கிய நற்பண்புகள் மனிதர் அனைவருக்கும் பொருந்துவனவே. பெண்களோடு பெண்ணாக மரியா உள்ளார் என்பதால் அவருக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது என்றாலும், மரியா மனித இனத்திற்கே ஒரு சிறந்த முன்னோடியாக இருக்கின்றார்.

மனிதர் எவ்வாறு கடவுளை முழுமையாக ஏற்று வாழ முடியும், வாழ வேண்டும் என்பதற்கு மரியா எடுத்துக்காட்டாக அமைகிறார்.

1 comment:

  1. wish you a happy new year of 2016. May God bless your writings and life.

    ReplyDelete