''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28).
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28).
ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார்.
ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார்.
அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது.
கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.
இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு.
நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே.
இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை.
தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.
No comments:
Post a Comment