Friday, 1 January 2016

நாம் திருமுழுக்கு யோவான்!

நாளைய   நற்செய்தியில், திருமுழுக்கு யோவானிடம் இரண்டு தரப்பினர் அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியை கேள்விகேட்கின்றனர். முதல் தரப்பு, குருக்களும், லேவியர்களும்.


திருமுழுக்கு யோவான் செக்கரியா என்கிற குருவின் மகன். குருத்துவம் என்பது குடும்ப வழியில் வருவது. அதிகாரவர்க்கத்தினரின் எண்ணப்படி, திருமுழுக்கு யோவான் ஒரு குரு. எனவே, அவருடைய நண்பர்கள், உறவுகள், திருமுழுக்கு யோவான் ஏன் இப்படி வேறுபாடான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்? என்று அவரிடத்தில் கேள்விகேட்க வருவது இயல்பு.


அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அதேவேளையில், பரிசேயர்களும், திருமுழுக்கு யோவானை விசாரிக்க வருகிறார்கள். அவர்களின் விசாரணைக்குப்பின், நிச்சயம் தலைமைச்சங்கம் இருப்பதை நாம் உணர முடிகிறது.


ஏனென்றால், பாலஸ்தீனத்தில் எந்த ஒருவர் இறைவனின் பெயரால் வார்த்தை அறிவித்தாலும், அவர் உண்மையான இறைவாக்கினரா? அல்லது போலியானவரா? என்பதை விசாரிக்கும் உரிமை தலைமைச்சங்கத்திற்கு இருந்தது. அதனை விசாரிப்பதற்காக, அவர்கள் பரிசேயர்களை அனுப்பி இருந்தார்கள்.

திருமுழுக்கு யோவான் யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நற்செய்தி அறிவிப்பு ஒன்றையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். போதனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், போதிப்பவர் இப்படித்தான் போதிக்க வேண்டும் என்ற மரபை உடைத்தவர் அவர்.


பொதுவாக, மரபு என்ற பெயரில் நாம் சிறையில் அடைக்கப்படுகிறோம். அது நமக்குள்ளாக இருக்கக்கூடிய புதுமை எண்ணங்களையும், நம்மோடு அடைத்துவிடுகிறது. திருமுழுக்கு யோவானைப்போல, துணிவோடு, நமது நேர்மையான எண்ணத்தை வெளிப்படுத்துவோம்.

திருமுழுக்கு யோவானின் தன் உணர்வு (Self Awareness) மற்றும் தன்வெளிப்பாடு (Self Disclosure) இரண்டையும் நாளைய  நற்செய்தி வாசகம் நன்கு எடுத்துக்காட்டுகிறது. தாம் மெசியா அல்லர், மெசியாவின் முன்னோடி என்ற தன் உணர்வை யோவான் கொண்டிருந்தார்.

எனவே, அவர் தாழ்ச்சி உள்ளவராக, பெரிய எதிர்பார்ப்புகள் அற்றவராக, எளிமையாக வாழ முடிந்தது. அதைவிட முக்கியமாக, தாம் மெசியா அல்லர், அவரது முன்னோடியே என்பதைப் பிறரிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், அறிக்கையிடவும் அவரால் முடிந்தது. மானிடரில் பெரும்பாலானோர் தமது உண்மையான தன்மையை  மறைத்து, தாம் இல்லாத வேறொரு ஆளாக முகமூடி அணிந்துகொண்டு வாழ்கின்றனர் எனச் சொல்கின்றனர் உளவியலாளர்.

பிறரது பாராட்டை, அங்கீகரிப்பை; பெற வேண்டும் எனத் துடிப்போர்தாம் இத்தகைய முகமூடிகளை அணிந்துகொண்டு, நாடகம் ஆடுகின்றனர். யோவானுக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. ஒரு முன்னோடியாக, மிதியடி வாரை அவிழப்பவராக இருப்பதில் அவர் நிறைவு கொண்டார். இறையருளில் மகிழ்ந்தார்.


ஆக,பிறரைப் பெருமையாகப் பேசுவோம். அனைத்திலும் பிறருக்கு முதலிடம் கொடுப்போம். பிறரை உயர்வாக மதிப்போம். பிறரைப்பற்றிய நற்குணங்களை எடுத்துச் சொல்வோம். இவ்வாறு செயல்படும்போது நாம் ஒவவொருவரும் ஒரு திருமுழுக்கு யோவான்.


நாம் எப்படி? பிறரின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக பொய்யான வேடங்கள் புனைந்து, முகமூடிகள் அணிந்து வாழ்கிறோமா? அல்லது நமது நிறை, குறைகளை ஏற்றுக்கொண்டு, இயல்பாக வாழ்கிறோமா?

இனிய  புத்தாண்டு  வாழ்த்துக்கள்!!!


No comments:

Post a Comment