Wednesday, 13 January 2016

இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சி இறையடியார் தேவசகாயம்பிள்ளை!

இன்று எனக்கு ஆரல்வாய்மொழி என்றாலே எழில் கொஞ்சும் சோலையாக திகழும் நம் காற்றாடி மலை தான் ஞாபகத்திற்கு வரும். இதுவே நம் ஆரல்வாய்மொழி சுற்றுச்சூழல்.

இங்குள்ள மணியடிச்சாம் பறையில் சென்று நான் புனிதை ஆகவேண்டும் என்று ஜெபித்து நிறைய நேரம் பாறை மீது மூன்று தடவை தட்டியது உண்டு.

எனக்கு  பிடித்த இரண்டு  இடம். ஒன்று  இறையடியார் தேவசகாயம்பிள்ளை ஆலயம் அமைந்துள்ள இடம்.மற்றொன்று அவர் ஞானஸ்நானம் பெற்ற வடக்கன்குளம் ஆலயம்.

அங்கு மூன்று ஆண்டு கல்லூரியில்  பணிசெய்தபோது நான் அடிக்கடி சென்று  தரிசித்து இறையாசீர் பெற்ற ஆலயங்கள் இவை இரண்டும்.இவரை நினைக்கும் போது மனதே பூரிப்பு அடையும்.

ஏனென்றால், விசுவாசத்திற்காக தன்னையே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைமகன் இயேசுவுக்காக தன்னையே கையளித்தார்.ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர்.அவரைப் போல் நானும் என்பதில் பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.

நாளை இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சி இறையடியார் தேவசகாயம்பிள்ளை விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது பெருவிழா வாழ்த்துக்கள்.

இவரைப்பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள நான் விரும்புகிறேன்.இவர் தமிழ் மண்ணின் தென்கோடியிலுள்ள குமரியில் நட்டாலம் ஊரில் 1712-ல் நாயர் குலத்தில் பிறந்த நீலகண்டன் போர் வீரர், கோயில் பணியாளர், அரச கருவூல அலுவலர் என பலப்பொறுப்புகளுடன் சிறப்பு பெற்றிருந்தார். அவருக்கு மனைவியாய் வாய்த்தவர் பார்கவியம்மாள்.

     1741-ல் டச்சுப்படையை குளச்சல் போரில் வென்ற மன்னர் மார்தாண்ட வர்மாவால் சிறைபிடிக்கப்பட்ட டச்சுத்தளபதி எஸ்தாக்கியூஸ் பெனடிக்ட் டிலனாய், பின்னாளில் தளபதியாக்கப்பட்டார். நீலகண்ட பிள்ளைக்கு நண்பராக மாறிய டிலனாய் அவருக்கு யோபுவின் வாழ்க்கையையும், யேசுவைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

 இப்போதனைகளால் ஈர்க்கப்பட்ட நீலகண்ட பிள்ளை கிறிஸ்தவ மறையில் இணைய விரும்பி 1745 மே 14-ல் வடக்கன்குளம் கோயிலில் அருட்தந்தை புத்தேரியிடம் திருமுழுக்குப்பெற்று தேவசகாயம்பிள்ளை (லாசர்) எனப் பெயர் பெற்றார்.

     இயேசுவை ஏற்றுக்கொண்ட தேவசகாயம்பிள்ளையின் வாழ்வில் மாற்றம் தெரிந்தது.சாதிய வேலிகளைத் தாண்டி ஒதுக்கப்பட்ட மக்களோடு உறவு பாராட்டினார். அங்கிருந்த சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்த, மன்னரிடம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோள்மூட்டி மன்னனை தேவசகாயம்பிள்ளைக்கு எதிராகத் திருப்பினர்.


இதன் விளைவாக 1749 பிப்ரவரி 23-ல் தேவசகாயம்பிள்ளை கைது செய்யப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு இரையானார். கழுதையின் மீது ஏற்றி, எருக்கன்மாலை அணிவித்து ஊர்கள் அணிவித்து ஊர்கள் தோறும் கொண்டு செல்லப்பட்டார். பசியோடும் தாகத்தோடும் போராட இயேசுவை வேண்டிக்கொண்டே வழியில் புலியூர்குறிச்சியில் பாறையில் தன் கைமுட்டால் இடிக்க, தண்ணீர் ஊற்றெடுத்து அவர் தாகம் தீர்தது. அது இன்றும் வற்றாமல் ஊற்றெடுத்து வரலாறாக திகழ்கின்றது.


 துன்பப் பயணத்தின் 1752 ஜனவரி  14-ல் ஆரல்வாய்மொழி மலையில் சுட்டு கொலைசெய்யப்பட்டார். காட்டு விலங்குகளுக்கு வீசப்பட்ட அவரது உடலின் பகுதிகள் கோட்டாறு தூய சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கோட்டாறு மறைமாவட்டம் அவருக்கு மறைசாட்சிப் பட்டம் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.


     திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்களால் தேவசகாயம்பிள்ளை முக்திபேறுபெற்ற மறைசாட்சி என ஒப்புதல் வழங்கப்பட்டு வரும் 02-12-2012 அன்று நடைபெறும் மாபெரும் விழாவில் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் அமாத்தோ அவர்களால் அறிக்கையிடப்பட்டது. இவர் இந்தியாவின் முதல் பொதுநிலையினர் மறைசாட்சி.

இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம்பிள்ளை இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து , இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, “இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை நாளை  வாசிக்கிறோம்.

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும்.

நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.


இதையே தேவசகாயம்பிள்ளையும் தான் ஞானஸ்நானம் பெற்ற அந்த நொடியிலிருந்து செய்தார்.ஆக எல்லா சமூகத் தடைகளையும் தகர்த்தெறிய இறையடியார் தேவசகாயம்பிள்ளையின் வழியாக இறைவனை மன்றாடுவோம்.

No comments:

Post a Comment