Friday, 8 January 2016

உண்மைத்தொண்டன்!

''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவான் 3:28)

 திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர் என்பது நற்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. சில மாத இடைவெளியில்தான் இருவரும் பிறந்தனர். இயேசுவின் தாய் மரியாவும் யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள்.

இவ்வாறு நெருங்கிய உறவுகொண்டிருந்த யோவானும் இயேசுவும் திருமுழுக்குக் கொடுத்தனர் என்னும் செய்தியை யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (காண்க: யோவா 3:22-30). இருவரும் இறைவாக்கினர் போல மக்களுக்குத் தோற்றமளித்தனர். இருவரும் கடவுளின் ஆட்சி பற்றியும் மக்கள் மனமாற்றம் பெறவேண்டிய தேவை பற்றியும் எடுத்துரைத்தனர்.

எனவே மக்களிடையே ஒரே குழப்பம். இயேசு பெரியவரா யோவான் பெரியவரா என்னும் கேள்வி எழுந்தது. இக்கேள்விக்குத் திருமுழுக்கு யோவானும் இயேசுவும் அளித்த பதில்கள் நற்செய்தி நூல்களில் பதிவாகியுள்ளன.

யோவான் தம்மைப் பற்றிக் கூறும்போது, ''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவா 3:28) என உரைக்கிறார். தம்மைவிடவும் இயேசு பெரியவர் என்றும், இயேசுவே உலக மீட்பராக வருகிறார் என்றும் யோவான் அறிக்கையிடுகிறார்.

 யோவான் தம்மை ஒரு ''முன்னோடி'' என அறிமுகப்படுத்துகிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற நாமும் கிறிஸ்துவுக்கு முன்னோடிகளாகத் திகழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வருகிறார் என்றும் கிறிஸ்து நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் மக்களுக்கு அறிவித்துச் சான்று பகர்கின்ற பணி நமக்குத் தரப்பட்டுள்ளது.

யோவானைப் போல நாமும் இயேசு யார் என மக்களுக்குச் சுட்டிக்காட்ட அழைக்கப்படுகிறோம். இயேசுவே மெசியா என நாம் நாவினால் மட்டும் அறிக்கையிடுவதோடு நின்றுவிடாமல் நம் சொல் செயல் வழியாகவும் சிந்தனைப் பாணிகள் வழியாகவும் இயேசுவிடம் மக்களை இட்டுச் செல்ல வேண்டும். யோவான் நமக்கு முன் உதாரணமாக உள்ளார்.

நாம் வாழும்; இக்காலத்தில் இந்த திருமுழுக்கு யோவான்போல தாழ்ச்சியும் தயாகமும் உள்ள மனிதர்களைப் பார்ப்பது அறிதாக உள்ளது. ஒண்ட இடம் கொடுத்தால் வீட்டையும் ஊரையும் அபகரித்துக்கொள்ளும் அவல நிலையைக் காண்கிறோம்.

வேலை வசதி இல்லாத மனிதன் என்று இரக்கப்பட்டு நம் தொழிலில் ஒரு வாய்ப்புக் கொடுத்தால், சில நாட்களில் அவனே நமக்கு எதிராக அதே தொழிலில் ஈடுபட்டு போட்டியும் பொறாமையும் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். வளர்ச்சியையும் முன்னேற்றத்;தையும் இங்கு குறை சொல்லவில்லை.

திருமுழுக்கு யோவானிடமிருந்த நற்பண்பு இருந்தால் நம் வாழ்வில் குறை இருக்காது. எப்பொழுதும் முன்னேற்றம் இருக்கும். உண்மையான தொண்டனாக, உடன் உழைப்பாளியாக, நன்றி மறவா ஊழியனாக திருமுழுக்கு யோவான் திகழுகிறார்.

 தன் எஐமானின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைகிறார். "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்"(யோவா 3:30) என்ற திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி நிறைந்த இவ் வார்த்தைகள் அவரது தொண்டு மனப்பான்மையை அருமையாக விவரிக்கின்றன.

"நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்" என்ற அவரின் ஏற்புடைமை உண்மைத் தொண்டனின் தியாகத்திற்குச் சான்று.

அரசியலிலும் அன்றாட வாழ்விலும் குழப்பம் உண்டாக்கி, புரட்சிசெய்து ஆட்சியை, சொத்துக்களை அபகரிக்கும் இன்றைய உலகுக்குத் திருமுழுக்கு யோவான் ஓரு மேல்வரிச்சட்டம், ஒரு பாடம். அவரிடம் கற்றுக்கொள்வோம். வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் தேடிவரும்.

நாமும் திருமுழுக்கு யோவானைப் போன்று  உண்மைத் தொண்டனாக வாழ்ந்து இயேசுவுக்ககாக  உயிர் துறப்போம்.

No comments:

Post a Comment