Saturday, 16 January 2016

இட ஒதுக்கீடு !

கானாவூர் திருமணவிழா பற்றிய செய்தியைப் பலமுறை வாசித்து, சிந்தித்திருக்கிறோம். இன்று "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்னும் வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

திராட்சை இரசம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம், விருந்தின் அடையாளம், உறவின் அடையாளம். திராட்சை இரசம் தீர்வது என்பது அவமானத்தின் அடையாளமாக, உறவுச் சிக்கலின் அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அச்சிக்கலைத் தீர்க்க தம் மகனை அணுகினார் அன்னை மரியா.

நமது வாழ்வில், பணியில், குடும்பத்தில் "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதா?" என்று அவ்வப்போது நம்மைக் கண்காணித்துக்கொள்வது நல்லது. பல பணிகளில் பரபரப்பாக இருக்கும் பலரும், தங்களது நெருங்கிய உறவுகள் ஆழம் குறைந்துவருவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பணம் சேகரிப்பதிலே கவனம் செலுத்தும் இல்லத் தலைவன் மனைவி, பிள்ளைகளின் பாசம் குறைந்துவருவதைக் கவனிப்பதில்லை. பணியிலே நிறைவின்றி, மகிழ்ச்சியின்றி வேலைசெய்வது "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்பதைக் காட்டுகிறது.

இன்றைய நாளில் நமது வாழ்வை, பணியை, உறவுகளைக் கொஞ்சம் அலசிப்பார்ப்போம். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கண்டால், மனங் கலங்காமல், அன்னை மரியாவை நாடுவோம். அவர் நமக்காகப் பரிந்துபேசி, நமது வாழ்விலும் புதிய திராட்சை இரசம் என்னும் இனிமையை ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவார்.

அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் தாரகை என்று வர்ணித்தால் அது மிகையல்ல. ஒடுக்கப்பட்டோருக்கும், ஓரங்கட்டப்பட்டோருக்கும் சார்பாக வாதிட்டதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கு உயரிய பங்கைப் பெற்றுத் தந்தார் அன்னை மரியா.


திருமண வீடுகளில் முதற் பந்திகளில் பணக்காரர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும்தான் அமர்வர். அவர்களுக்கெல்லாம் திராட்சை ரசம் குறைபடாமல் கிடைத்து விட்டது. ஆனால், கடைசிப் பந்தியில் அமர்ந்த ஏழை, எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், திருமண வீட்டாரால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதப்படாதோர் முதலியோரே அமர்ந்திருப்பர்.

இவர்களுக்குத்தான் இரசம் குறைபட்டுவிட்டது. மற்றவர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக்கொள்ளாத சூழலில்தான் அன்னை மரியா துணிந்து, நீதியுணர்வுடனும், நம்பிக்கையுடனும் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். தனது நேரம் வரவில்லை என்று இயேசு மறுப்பு தெரிவித்தபிறகும்கூட அவரை வலியுறுத்தி தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றும் அருஞ்செயலை, தன் முதல் அற்புதச் செயலை இயேசு நிறைவேற்றக் காரணமானார்.

எனவே, ஒதுக்கப்பட்ட கடைசிப் பந்தில் அமர்ந்திருந்தவர்கள் முதல் பந்திகளில் அமர்ந்து இரசம் குடித்த செல்வாக்கு மிக்கோரைவிட அதிக சுவை நிறைந்த, நல்ல இரசத்தை அவர்கள் மனம் நிரம்பும்வரை அனுபவிக்க முடிந்தது. இவ்வாறு, ஒதுக்கப்பட்டோருக்கு அதிக தரமும், அளவும் மிக்க திராட்சை இரசம் கிடைத்தது. எனவே, அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டின் தாய் என்று பெருமையுடன் அழைக்கலாம்.


No comments:

Post a Comment