Sunday, 24 January 2016

நாமும் திருத்தூதர்களாக !

புனித பவுலடியாரின் மனமாற்றத்தை நாளை  கொண்டாடுகிறோம். பவுலடியாரின் வாழ்க்கையின் இந்த நாள் வரலாற்றை மாற்றி அமைத்த நாள்.

ஆகவே இந்த நாள் மிக முக்கியமான நாள்.சிறியதோ பெரியதோ எல்லா மனமாற்றத்திலும் இறைவன்தான் அதைத் தொடங்கி வைக்கிறார். ஆகவே அவரே அதை முடித்தும் வைப்பார்.

மனமாற்றம் அறிவு சார்ந்ததல்ல. கொள்கை சார்ந்ததல்ல. கோட்பாடுகளின் மாற்றம் அல்ல.உடலில், உடையில், உணவில் உள்ள மாற்றம் அல்ல.

 இயேசுவோடு உண்டான தனிப்பட்ட நெருக்கமான உறவில் விளைந்த ஒன்று. இந்த உறவை மறுக்க முடியாது. அதன் கவர்ச்சி எந்த ஈர்ப்பையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது.அப்படித்தான் பவுலடியார் மாட்டிக்கொண்டார்.

இத்தகைய மனமாற்றம் யாருக்கும் எப்பொழுதும் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.அதற்கென தகுதி, நேரம் காலம் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை அவசியமில்லை. அந்தஸ்து, அறிவு முக்கியமில்லை.

அன்புச் சகோதரா, அருமைச் சகோதரி, இயேசுவின் உறவில் நீ மகிழ்ந்து வாழவும், பிறரை வாழ்விக்கவும் உன்னையும் எதிர்பாராத வேளையில் அழைக்கலாம். வரலாற்றை நீ மாற்றலாம்.

 ஒவ்வொரு மனமாற்றமும் ஒரு அழைப்பே எனக் கொள்ளலாம். நாம் மனம் திரும்பும்போது, நமது வாழ்வு மாறுபடுவது மட்டுமல்லாது, பிறரது வாழ்வையும் மாற்றவேண்டிய கடமை நம்மேல் சுமத்தப்படுகிறது.

எனவே, நாம் நமது தீய வழிகள், பழக்கங்களைவிட்டு விலகினால், மட்டும் போதாது, நமது மனமாற்ற அனுபவத்தைக் கொண்டு, பிறரையும் மனமாற்றத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே இந்த விழா நமக்குத் தரும் செய்தி.

நமது வாழ்வு முறை மாறவும், நாமும் திருத்தூதர்களாக ஆகவும் வரம் வேண்டுவோம்.

Every Saint Has A Past And Every Sinner Has A Future!!!


No comments:

Post a Comment