Sunday, 3 January 2016

உள்ளார்ந்த மாற்றம்!

''இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'
எனப் பறைசாற்றத் தொடங்கினார்'' (மத்தேயு 4:17).


நாளை இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம் பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார்.

அவருடைய பணி அவர் உரைக்கின்ற சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார்.


அதாவது, ''மனம் மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' (மத் 4:7) என்னும் அறிவிப்பு இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக் குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் விண் என்றாலே கடவுளைக் குறிக்கும் சொல் ஆயிற்று. ஆக, கடவுளின் ஆட்சி நெருங்கி வந்துவிட்டது என இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார்.

 மக்கள் தம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கடவுளின் பார்வையைப் பெற வேண்டும், கடவுளின் திருவுளம் யாதென அறிந்துணர்ந்து அதைத் தம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் - இதுதான் இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த நற்செய்தியின் சாரம். மனம் மாற வேண்டும் என்றால் மனித சிந்தனை நன்னெறிக்கு ஏற்ப அமைய வேண்டும் எனப் பொருள்படும்.


சிந்தனை நலமாக மாறும்போது அதிலிருந்து பிறக்கின்ற செயல் நலமாக இருக்கும். செயல் நலமாகும்போது அது பிறருக்கு நலம் பயக்கும். மனம் உள்ளிருந்து செயலாற்றும் சக்தி.

எனவே மனம் மாறும்போது நம்மில் உள்ளார்ந்த மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்; உள்ளம் கடவுளிடம் திரும்பவேண்டும்; தீமையை எண்ணுகின்ற போக்கு மறைந்து நன்மையை நாடுகின்ற வேட்கை வளர வேண்டும். இவ்வாறு நாம் மனம் மாறினால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க கடவுள் நமக்கு அருள்வார்.


ஹென்றி நூவென் எனும் ஆன்மீக  எழுத்தாளர் சொல்வார்,"நானும் எனக்குள் இருக்கும் கடவுளும் இணைந்து பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம் என்று எண்ண ஆரம்பியுங்கள்.எதுவுமே நம்மை வேதனைப்படுத்தாது.கடவுளை உணரும் கடினமான காரியத்தைத் தவிர்க்கும் எந்த மனிதரும் மேலோட்டமான, சுமையான வாழ்வைத்தான்  வாழ முடியும்"என்றார்.

ஆக,கடவுள் பிரசன்னத்தை ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் உணர்ந்து வாழ்வோம்.

1 comment:

  1. wish you a happy new year of 2016. May God bless your writings and life.

    ReplyDelete