Saturday, 4 June 2016

புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo)!

இவர் பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார்.

இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாக்கப்பட்டது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார்.

அப்போது பணியாற்றும் போது, ஒருநாள் தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587 ஆம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார்.

குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளிக்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துடனும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மன்நோயாளிகளையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.

இவரது பணி மிகவும் வளர்ச்சியடையவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து பெரிய குழுவாக காட்சியளித்தது. எனவே அவர்களை கொண்டு ஏழைகளை பராமரிப்பதற்கென ஒரு சபையைத் தொடங்கினார்.

1588 ஆம் ஆண்டு அச்சபை துறவற சபையாக, திருத்தந்தை 5ஆம் சிக்டஸ்(Pope Sixtus V) அவர்களால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபையை தொடர்ந்து, மிகப் பொறுப்போடு கவனிக்க ஜியோவானி அடோர்னோ(Giovanni Adorno) என்பவரை சபைத்தலைவராக தேர்ந்தெடுத்தார்.

1593 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றி இறந்துவிடவே, பிரான்ஸ் டி கராசியோலா சபைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அவர் அச்சபைக்கு "ஏழைகளின் நண்பர்" என்று பெயரிட்டார். மிக விரைவாக அச்சபை ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது.

இவர் தனது துறவற குழுமங்களை பார்வையிட அடிக்கடி ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இதனால் மீண்டும் நோய்தாக்கப்பட்டு தன் 44 ஆம் வயதில் இறந்தார்.

Friday, 3 June 2016

புனித லுவாங்கா சார்லஸ் (St Luwanga Charles)!

"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதியில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப்பணியில் இறங்கினர்.

1879 ஆம் ஆண்டு பெரிய சனிக்கிழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக்கரானவர்கள்.


கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண்டுதலால் 1886 ல் முவாஷ்கா(Muwashka) என்ற அரசன் கத்தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான். சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கைக்கு அடிமைப்பட்டவனாக இருந்தான்.

அவன் அரச அலுவல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்த போது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடுமையானது" என்று அறிவுரை கூறி ஓரினசேர்க்கை ஈடுபடாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ(Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

சார்லஸின் அறிவுரைப்படி மற்ற இளைஞர்கள் தங்கள் புனிதத்தில் நிலைத்து நின்றனர். 13 வயதான சிறு பெண் தனது கற்புக்காக மற்றவர்களைப்போல உயிரைத் தியாகம் செய்தார். இந்த வேதகலாபனை முடிந்த மறு ஆண்டிலேயே ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மறைபரப்பு பணி மிக விரைவாக பரவியது.

ஆப்பிரிக்காவில் இந்த மறைசாட்சிகளின் இரத்தம் சிந்தப்பட்டதன் பயனாக ஒரு புதுயுகம் தோன்றிவிட்டது. முழுமையான சுதந்திரம் பெற்று மகிழும் ஆப்பிரிக்காவாக பொலிவுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் வேதனையில் புதிய யுகத்தை சார்ந்த ஆப்பிரிக்கா மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கான பாடங்கள் பல மிளிர்கின்றன.

மறைசாட்சிகள் தூண்களில் கட்டப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்டையடிப்பட்டனர். ஈட்டிகளால் குத்தப்பட்டனர், சுட்டெரிக்கப்பட்டனர். தலைவெட்டப்பட்டனர். இப்படி இருந்தும் ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவர்கள் பலுகி பெருகினர்.

Thursday, 2 June 2016

புனித மார்சலினஸ்,புனித பீட்டர் (St.Marcelinas, St.Peter)!

மார்சலினஸ் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, குருத்துவ நிலையை அடைந்தார். பீட்டர் திருச்சபை வழங்கும் "பேய்களை ஓட்டும்" அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார்.

 இருவரும் தங்களின் வேத விசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட்டனர். அங்கு ஏற்கெனவே விசுவாசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் கிறிஸ்தவர்களை விசுவாசத்தின்பேரில் கொடுமைப்படுத்தி வந்தனர்.

அவர்களை இவர்கள் இருவரும் மனந்திருப்பினர். அவர்களை கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றினர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக் காவலன் ஆர்த்தியுஸ், அவர் மனைவி, மகள் ஆகியோர் கூட கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் வீரச்சாவு நாளன்று, நாயக்ரா என்றழைக்கப்படும் ஒரு காட்டிற்குள் கொண்டு போகப்பட்டனர். அங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படும்முன் இவர்களை புதைக்க ஒரு குழித்தோண்டப்பட்டிருந்தது.

உடனே இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலைஞனே வெளிக்கொணர்ந்துவிட்டார். இவரும் இறுதியில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார். லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து "திபூர்சியஸ் புதைக்குழி"யில் அடக்கம் செய்தனர். மன்னன் கான்ஸ்டாண்டின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர்.

 இவர் கல்லறைமேல் பேராலயம் எழுப்பியதுடன், புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் செய்தார். இவர்களின் வீரச்சாவு தொடக்கத் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் ரோமன் கேனன்(Roman Canon) என்று சொல்லப்படும். திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் "மாறாத ஜெபங்கள்" என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு காலங்காலமாக நினைவு கூரப்பட்டனர்.

"நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. வான் வெளியில் திரியும் தீய ஆவிகளோடு போராடுகிறோம், எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீது வெற்றி அடைந்து, நிலை நிற்க வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்" (எபே 6:12) என்ற இறைவாக்கை வாழ்வாக வாழ்ந்தனர்.

Wednesday, 1 June 2016

புனித ஜஸ்டின் (St.Justin)!

இவர் கிரேக்கமொழி பேசும் பெற்றோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே தத்துவ கலையை ஆழமாகக் கற்றுத்தேர்ந்தார்.

இவரது காலத்தில் இருந்த ப்ளேட்டோ(Plato) போன்ற தத்துவமேதைகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார்.

எல்லாம் வல்ல இறைவனைப்பற்றி இந்த தத்துவ ஞானம் தனக்கு முழுமையான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந்தார். ஒருநாள் அலெக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்கொண்டிருந்தார்.

தற்செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரை சந்தித்தார்.. அவருடன் நெடுநேரம் உரையாடினார். அதன்பயனாக விவிலியத்தில், இறைவாக்கினர்கள் எழுதிய இறைவாக்குகளைப்படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பு இறைவாக்கை சரியாக புரிந்துகொண்டார்.

கிறிஸ்தவர்கள் எத்தனை மனவலிமையுடன் கிறிஸ்துவிற்காக வேதனைகளை தாங்கிக்கொண்டார்கள். என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார். இறைவாக்கினர்களை நினைத்து வியப்படைந்தார்.


சாவைத் தழுவினாலும், இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும், ஆர்வமும் அவரை மிக ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலைப் படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.

கிறிஸ்துவுக்காக வாழ முடிவெடுத்தார். பின்னர் தமது தத்துவமேதைக்குரிய உடையிலேயே பல பயணங்களை மேற்கொண்டு, இறுதியாக உரோம் நகரை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதிய இறைவாக்குகளைப் பற்றி தெளிவாகப்படித்தார். முடிவில் அவர்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார்.

இதன் பயனாக, இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைப்பற்றி விரிவாக எழுதிவைத்தார். அனைத்திற்கும் மேலாக, திவ்விய நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை பற்றியும் அதில் நாம் கொண்டிருக்கவேண்டிய விசுவாசப் பற்றுறுதி பற்றியும் மிகவும் ஆழமாக விவரித்து எழுதியுள்ளார்.

147 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல, இனியும் துன்புறுத்தப்படக்கூடாது. என்று மன்னன் ஆன்றோனினுஸ் பயஸ்(Androninus Pius) ஆணை பிறப்பித்தான்.

 ஜஸ்டின் எழுதிய பல நூல்களில் ஒன்றில் "உலகில் எப்பகுதியிலும், எக்காலத்திலும் உண்மையை சுட்டிக்காட்டிய ஞானிகள் அனைவரும் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மிக அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

166 ல் ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூலில், நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் இந்நூல் அப்போதைய அரசன் மார்க்ஸ் அவுரேலியுசுக்கு(Marks Aureliyas) எரிச்சல் மூட்டியது. இதனால் கோபம்கொண்ட அரசன், கிறிஸ்துவ விசுவாசத்தையும், ஜஸ்டினையும் அழிக்க எண்ணி, அவரை சிறைப்பிடித்து சென்றான். அங்கு பல கொடுமைகளை அனுபவித்த

ஜஸ்டின் தனது 67 ஆம் வயதில் தலைவெட்டப்பட்டு இறந்தான். அவர்தான் இறக்கும்வரை, எந்த ஒரு தத்துவக்கலையும், இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டு சேர்க்கமுடியும் என்பதை இடையூறாது போதித்தார்.


Monday, 30 May 2016

புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )

இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர்.

பல வரலாற்று அறிஞர்களும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர்.

 பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப்புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண்ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க்கும்போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.

இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரேமிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

 இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன்படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது.

இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப்போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட்டார்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீரர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக்கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோறும் தன்னையே தயாரித்தார்.

1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக்கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார்.

அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவில்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார்.

 ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.

இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார்.

செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மாற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார். இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார்.

இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமுற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்னருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பித்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் விதமாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர்.

அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுப் போகப்பட்டார். எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமுடியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார்.

பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களுக்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.


Saturday, 28 May 2016

புனித கெர்மானூஸ் (St.Germanus)!

தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார்.

 அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார்.

தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது.

இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார்.

அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார்.

அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.

இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.

இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.

Friday, 27 May 2016

புனித அகஸ்டின் (St. Augustine)!

இவர் காண்டர்பரி நகரின் முதல் ஆயர். இவர் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர். உரோமைத் துறவற மடத்திலிருந்து, இவரது தலைமையில்தான், திருத்தந்தை பெரிய கிரகோரியார் 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.

 அப்போது அவர்கள் பிரான்சு நாட்டு வழியே சென்றார்கள். அச்சமயத்தில் இங்கிலாந்து நாட்டு மக்களின் சூழ்ச்சியைக் கண்டு அச்சமுற்றார்கள்.

அவர்கள் திருத்தந்தையின் ஆலோசனை என்ன என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள, தங்கள் தலைவரை உரோமுக்கு அனுப்பினர். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு சாக்சென் மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.

இதற்கு திருத்தந்தை வதந்திகளையும், பயமுறுத்தல்களையும் பார்த்து அஞ்சவேண்டாம். இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுங்கள். பல தியாகங்களை செய்யுங்கள். என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, இயேசுவின் பணியை செய்யத் தயாரானார்கள். இதனைத் தொடர்ந்து 597 ல் தானெட் (Thanet) என்ற தீவை அடைந்து பணியைத் தொடர்ந்தார்கள். இந்தத் துறவிகளின் அயராது உழைப்பும், அஞ்சா நெஞ்சமும் எந்த அளவுக்கு வெற்றியை கொணர்ந்தது என்பதைப்பற்றி புனித பேதா அவரின் வரலாற்றில் புகழ்ச்சியோடு எழுதியுள்ளார்.

இவர்கள் தானெட் தீவில் பணி செய்தபோது, புனித மார்ட்டின் பெயரால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று அங்கு இருந்தது. இவ்வாலயம் மிகவும் பாழடைந்து கிடந்தது. இதை இத்துறவிகளிடம் ஒப்படைத்தனர். அத்துறவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அக்கோவிலில் செபித்தனர். பண் இசைத்தனர். திருப்பலி நிறைவேற்றினர், போதித்தனர். திருமுழுக்கு கொடுத்து வந்தனர்.

இவர்களது எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த ஜெப வாழ்வும் அந்நாட்டு அரசனை பெரிதும் கவர்ந்தது. அரசன் எதெல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவன்று மனந்திரும்பி புதிய ஞானஸ்நானம் பெற்றனர்.

நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத்தகு முறையில் வளர்ச்சியடைந்தது. இதையறிந்த திருத்தந்தை அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால் இவர்களுக்கும், திருத்தந்தைக்கும் இருந்த உறவு மேலும் வலுப்பெற்றது.

இவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்த புனித அகஸ்டீன், இங்கிலாந்து நாட்டில் காலடி எடுத்துவைக்கும்போதே காட்சியாகக் கண்டு இவையனைத்தும் நடக்கும் என்று சொன்னார். அவர் இச்சகோதரிகளை ஏஞ்சல்ஸ்(தேவ தூதர்கள்) என்றே கூறி வந்தாராம்.

மிக மேலான காரியங்களையும் இறைவனின் மேல் சுமத்திவிட்டு, இறைவன் பெயரால் செய்து இக்கன்னியர்களை கொண்டு மறையுரையாற்றி வெற்றி கண்டாராம் இப்புனிதர்.

Thursday, 26 May 2016

புனித பிலிப்புநேரி(St. Philip Neri)!

இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர், தனது 26 ஆம் வயதில் வணிகத் தொழிலைவிட்டுவிட்டு, தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோம் நகர் சென்றார்.

அங்கு இவர் வேதக்கலை, தத்துவக்கலையைப் பயின்றார். அவற்றோடு ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது உரோம் நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும், தினமும் மாலை பொழுதில் நடந்தே சென்று சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இரவில் புனித செபஸ்தியாரின் புதைக்குழி வளாகத்தில் தங்கினார்.

அதோடு நலிவுற்ற, ஏழை மக்களின் நலன்களை கருதி மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். அவர் தெரு வழியாக நடந்துசெல்லும்போது, ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இனங்கண்டு, தமது திறமையான பேச்சியினாலும், அணுகுமுறைகளினாலும் அவர்களை இறைவன் பால் ஈர்த்து மனம்மாற செய்தார்.

பிறகு 1548 ஆம் ஆண்டு தமது குறிக்கோளை ஏற்றுக்கொண்டவர்களை ஒருங்கிணைத்து, திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து, பல பக்திமுயற்சிகளை பரப்பி மக்களை இறைவன்பால் ஈர்த்ததோடு, இறைவனைப்பற்றி ஊர்களில் எடுத்துரைக்கவும் வழிவகுத்தார். இவ்வாறு இப்பணியில் 10 ஆண்டுகளை கழித்தார்.

அப்போது இவரின் ஆன்ம குரு, இவரிடம் குருத்துவதை நாட பணித்தார். பின்னர் இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 33 ஆண்டுகள் ஆரட்டரி(Aratery) என்று அழைக்கப்பட்ட ஜெபக்குழுவை உருவாக்கி, பல குருக்களின் துணையோடு அச்செபக்குழுவை தொடர்ந்து நடத்தினார். இதன்வழியாக ஏராளமான ஞானப்பலன் கிடைத்ததை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

அதன்பிறகு இக்குழுவை உயர்த்தி "ஆரட்டோரியன்ஸ் செபக்குழுவினர்" என்று பெயரிட்டு, அக்குழுவை தொடர்ந்து வழிநடத்தினார். இன்றுவரை இக்குழு செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் தொழிலாளர் பலர் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், ஆன்மீக ஆலோசனை பெறவும் வந்த வண்ணமாய் இருந்தனர். \

பல குருக்களும், கர்தினால்களும் இவரது ஆலோசனையை நாடி வந்தனர். இவர் எப்போது திருப்பலி நிறைவேற்றினாலும், தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்குக்கொண்டு சேர்த்தார்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், ஆழமான இறை அனுபவம் பெறவும், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளை கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தை பெறுதல் ஆகியவற்றால் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தம் அலுவலகத்திற்கு விரைந்து ஓடி போய்விடுவார். பூசையின் இறுதிவரை இருக்கமாட்டார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும்முறையில், பூசை உதவி செய்யும் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளைக் கொடுத்து, அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள் என்றார்.

இளைஞரும் தன் தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு, அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். இன்னொரு முறை, பிறரைப் பழி தூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்க சொன்னார். பறித்து முடித்தபின் அவற்றைக் காற்றில் பறக்கவிட சொன்னார். இதன்பின் அப்பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டார்.

பறித்த இறகுகளை ஒன்று சேர்த்து அவற்றைப் பறக்கவிட சொன்னார். பின்னர் பறக்கவிட்ட இறகுகளை ஒன்று சேர்த்து, தன்னிடம் கொண்டுவரச்சொன்னார். அப்போது அப்பெண் அவரிடம், அது என்னால் முடியாதே என்றார். "அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாமல் என்பதை புரிந்துக்கொள், திருத்திக்கொள்" என்று கூறினார். அப்பெண்ணும் தன் தவற்றை உணர்ந்து திருந்தினார்.

இவர் உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பெயருக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நாள்தோறும் பிலிப்பு, வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு, ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக்கொடுத்து விடுவான், என்று நாள்தோறும் மறவாமல் ஜெபிப்பார்.

Wednesday, 25 May 2016

புனித வணக்கத்துக்குரிய பேதா (St.Beda, the Reverend)!

இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். 

இவர் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர் இவருக்கு 7 வயது நடக்கும்போது நார்த்தம்பிரியாவில்(Narthampriya) இருந்த துறவற மடத்தில், புனித பெனடிக்ட் பிஸ்கோப்(Benedict Piskop) என்பவரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்தார். 

அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுதேர்வதில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பதுதான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம். 

இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலாந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூலை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழியாமல் பதிந்துவிடும். 


அவரது இறுதி நாளன்று, அவர் அவரது மாணவர்களில் ஒருவராகிய வில்பெர்ட் (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர்.

 அப்போது வில்பெர்ட், பேதாவை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதி கொண்டிருந்தோம். அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ்சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பேதா, "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். 

அப்போது பேதா, அம்மாணவரிடம் நல்லது பிள்ளாய்! இப்போது எனது தலையை உனது கைகளால் தாங்கிப்பிடி. இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போகிறேன் என்று கூறினார். வில்பெர்டும் அவர் சொன்னப்படியே செய்தார். அப்போது பேதா "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே உயிர் நீத்தார். 


Tuesday, 24 May 2016

சாலையோர மாதா!

இத்தாலி மொழியில் "மடோநாடெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம்.

இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.

கி.பி. 1538 ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது.

அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது 1538 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1539 மே வரை உரோமையிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது.

 புனித இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

 இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.


இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா(Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார்.

இவ்வாலயம் உரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு குருக்கள் உரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.