Tuesday, 1 March 2016

முதலில் கடைபிடி!பின்பு பிறருக்குக் கற்பி!

திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வரவில்லை, மாறாக அதை நிறைவேற்றவே வந்தேன்’ என்று இயேசு கூறுகிறார்.

‘நிறைவேற்றுதல்’ என்பதை முழுமைப்படுத்துதல், முழு அர்த்தத்தைக்கொண்டு வருதல், உண்மையான பொருளை உணரவைத்தல் என்று நாம் பொருள்படுத்தலாம்.

 திருச்சட்டம் வாயிலாக கடவுளின் திருவுளம் என்பதை அறிந்து, அதை நிறைவேற்றுவதற்காக, தன்வாழ்வையே முழுமையாக அர்ப்பணிப்பதாகும். இயேசு திருச்சட்டத்தை அழிக்கவரவில்லை, மாறாக, அதனுடைய உண்மையான அர்த்தத்தை நாம் அறியவேண்டும் என்பதற்காக வந்திருப்பதாகச்சொல்கிறார்.

 அப்படியானால், திருச்சட்டத்திற்கு பொறுப்பாளர்களாக அதுவரை இருந்த, மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் அதனுடைய உண்மையான அர்த்தத்தைக்கூறவில்லையா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் கடவுளின் திருவுளத்தை, திருச்சட்டம் வாயிலாக அறிவதில் முழுமுனைப்பு காட்டினார்கள். உண்மைதான்.

அதை அறிந்து அர்ப்பண உணர்வோடு வாழ முனைப்பும் காட்டினார்கள். ஆனால், பிரச்சனை அவர்களின் செயல்பாட்டில் இருந்தது.

உதாரணமாக, அனைத்துக்கட்டளைகளுக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய பத்துக்கட்டளைகளை எடுத்துக்கொண்டால், அவற்றின் பொருளை ஒரே வார்த்தையில் நாம் அடக்கிவிடலாம். அதுதான் அன்பு. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்புசெய்வதும், தன்னை அன்பு செய்வதுபோல மற்றவர்களை அன்புசெய்வதுதான் அதன் பொருள்.

அந்த அன்பை செயல்படுத்துவதில் பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் சரியான புரிதல் இல்லாமல், சட்டத்தை அன்பாகக்கொண்டிருந்தனர். கடவுள் அன்பு, மற்றவர் அன்பு என்றால் என்ன? என்பதை வாழ்ந்துகாட்டவே இயேசு இந்த உலகிற்கு வந்தார். அந்த அன்பு கடவுளுக்கு வெறும் பலி செலுத்துவதில் இல்லை, மற்றவர்களுக்கு காட்டும் இரக்கத்தில் இருக்கிறது என்பதை இந்த உலகிற்கு உணர்த்துகிறார்.

இதைச்செய், இதைச்செய்யக்கூடாது என்று சொல்கிற சட்டத்தில் இல்லை அந்த அன்பு. மாறாக, வாழ்வை இப்படி வாழவேண்டும் என்று விழுந்தாலும், தூக்கிவிடுகிற பண்பில் இருக்கிறது அந்த அன்பு. அப்படிப்பட்ட அன்பைத்தான், இயேசு இந்த உலகத்திற்கு கொடுக்க வந்தார்.


‘புரிந்துகொள்ளுதல்’ என்பது நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அரிய பண்பாகும். இன்றைக்கு உறவுச்சிக்கல்களுக்கு அடிப்படைக்காரணம் ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ளாமை. நம்முடைய தவறான எண்ணங்கள், நான் சொல்வது மட்டும்தான் சரி என்கிற மனப்பாங்கு, எதையும் தீர விசாரிக்காமை போன்ற செயல்பாடுகள், நல்லவரையும் பண்பற்றவராக மாற்றிவிடுகிறது.


பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் நல்லவர்கள் தான். ஆனால், சரியான புரிதல் இல்லாமை தான் இயேசுவை அவர்களுக்கு விரோதியாகக்காட்டியது. மற்றவர்களை புரிந்து கொள்ளக்கூடிய அருள் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.

1 comment:

  1. Hi Kalai Thank you for reminding us to pray for the grace of understanding others.

    ReplyDelete