Tuesday, 29 March 2016

கடவுள் அனுபவம்!

கடவுள் அனுபவம் என்பது நம்ப முடியாத வகையில், அதிசயிக்கத்தக்க வகையில் நடைபெறும் ஆச்சரியமான ஒரு அனுபவம் அல்ல, அது ஓர் எளிமையான அனுபவம். உள்ளத்தைத் தொடுகின்ற அனுபவம். நம் வாழ்வோடு கலந்த அனுபவம். வெறும் கவர்ச்சி, மாயை சார்ந்தது அல்ல.

வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த அனுபவம். அத்தகைய அனுபவம் நமக்கு கிடைக்கின்றபோது, பல வேளைகளில் அதை உணரவோ, நம்பவோ, அனுபவிக்கவோ மறந்து விடுகிறோம். அப்படி ஒரு அனுபவத்தைப்பெற்ற இரண்டு சீடர்களின் கதைதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

எம்மாவுக்கு இரண்டு சீடர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து செல்கிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்களிடம் கேள்விகள் கேட்கிறார். பதில் சொல்கிறார். ஆனால், சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

 அதற்கு, இயேசு உருமாறியிருந்தார் என்பது அர்த்தமல்ல. மாறாக, சீடர்களின் கடவுள் அனுபவத்தைப்பற்றிய தவறான பார்வைதான் காரணம். பொதுவாக, மக்கள் மத்தியில் கடவுள் அனுபவம் என்பது, ஆச்சரியமூட்டுகிற வகையில் ஏற்படுகின்ற ஒன்றாக கருதப்படுகிறது.

எனவேதான், யூதர்கள் இயேசுவிடம் அடையாளங்களையும், அருங்குறிகளையும் செய்துகாட்டுமாறு சொன்னார்கள். அதேவேளையில் அவர்களில் ஒருவராக வாழ்ந்த கடவுளின் மகனை முழுமையாக அடையாளம் காண அவர்களால் முடியவில்லை. கடவுள் அவர்களோடு இருந்தும், கடவுள் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

கடவுளை எங்கோ இருக்கிறவராக நாம் பார்க்கிறோம். ஆனால், கடவுள் நம்மில் ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியவில்லை.

ஆனால், கடவுள் அனுபவம் என்பது, கடவுள் நம்மில் ஒருவராக இருப்பதை உணர்ந்து கொள்வது என்பதை உயிர்த்த இயேசு அந்த இரு சீடர்களுக்கும் உணர்த்துகிறார். உண்மையான கடவுள் அனுபவத்தை, அவர்கள் பெற்றுக்கொள்ளச்செய்கிறார்.

நாமும் கூட கடவுள் அனுபவத்தைத்தேடி பல இடங்களுக்கு அலைகிறோம். பலர் வாழ்வை விட்டு விட்டு, காடு, மலை போன்ற இடங்களில் கடவுளைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் கடவுள் நம்மோடு இருக்கிறார். அவரை அறிந்து ஏற்றுக்கொள்வதுதான் கடவுள் அனுபவம். அத்தகைய கடவுள் அனுபவத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்வோம்.

No comments:

Post a Comment