Friday, 27 January 2017

ஆழமான விசுவாசம்!

கலிலேயா கடல் ஒரு சில விசித்திரங்களுக்கு பெயர் பெற்றது. எப்போது புயல் அல்லது கடுமையான காற்று வீசும் என்று தெரியாத அளவுக்கு, தீடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக்கடல். பொதுவாக புயல் சின்னம் உருவாவதை இயற்கையின் அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம். வானம் மேகமூட்டமாகத்தோன்றும். காற்று வழக்கத்திற்கு மாறாக பலமாக வீசும்.

ஆனால் கலிலேயக்கடல் இதிலிருந்து வேறுபட்டது. வானம் தெளிவாக இருந்தாலும், காற்றே இல்லாத சூழ்நிலை இருந்தாலும் அதனை நம்பி புயல் வருவதற்கில்லை என்று ஒருவராலும் அறுதியிட்டுச்சொல்ல முடியாது. கலிலேயா கடல் அமைந்திருக்கின்ற அந்த இட அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்திற்கு காரணம்.அதேபோல எப்போது புயலும், காற்றும் ஓயும் என்பதையும் பருவநிலை மாற்றத்தை வைத்து அறுதியிட்டுச்சொல்ல முடியாது.

சீடர்களுக்கு இதைப்பற்றி நன்றாகத்தெரியும். எனவே, சாதாணமானச்சூழ்நிலை என்றால் அவர்கள் இயேசுவின் உதவியை நாடியிருக்க மாட்டார்கள். அவர்களின் வாழ்வே கடல்தான். ஆனால், இயேசுவோடு பயணம் செய்த அன்றைக்கு கடலில் பார்த்த மாற்றம், அவர்கள் என்றைக்குமே சந்தித்திராதது. உயிர்ப்பயம் அவர்களை கலக்கமுறச்செய்துவிட்டது.

சாவு பற்றிய பயம் அவர்களை வாட்டியெடுக்க ஆரம்பித்தது. கடைசியில் இயேசுவின் உதவியை நாடுகிறார்கள். இயேசு கடலை அமைதிப்படுத்தியபின் சீடர்களைப்பார்த்துக்கேட்கும் கேள்வி: உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? என்பது. காரணம்: கடலின் மாறுதலுக்கு தீய ஆவிகள்தான் காரணம் என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த நம்பிக்கை. மாற்கு 1: 21 – 28 ல் இயேசு தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துகிறார்.

மக்கள் அவரைப்பார்த்து “இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்: அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று வியந்து போற்றினார்கள். அப்போது சீடர்களும் உடனிருந்து இயேசுவின் ஆற்றலைப்பார்த்து வியந்துநின்றனர். அப்படிப்பட்டவர்கள் உயிர்ப்பயம் வந்தவுடன், கடவுளின் ஆற்றலை, வல்லமையை மறந்து, நம்பிக்கையிழந்து நிற்கின்றனர். இயேசு மீண்டும் அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

வாழ்க்கைக்கவலைகளும், ஏமாற்றங்களும் கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எந்தச்சூழ்நிலையிலும் நம் நம்பிக்கையை இழந்துவிடச்செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், நாம் பெற்றிருப்பது உண்மையான, ஆழமான விசுவாசம் அல்ல. வெறும் மேலோட்டமான விசுவாசம் தான். ஆழமான விசுவாசத்தில் வளர முயற்சி எடுப்போம்.

No comments:

Post a Comment