Sunday, 29 January 2017

வாழும் நற்செய்தியாய் மாறுவோம்!


காடுகளும், திராட்சைத்தோட்டங்களும், பாழடைந்த இடங்களும், கல்லறைத்தோட்டங்களும் பேய்களின் வாழிடம் என்று யூத மக்கள் நம்பினர். இயேசுவும் அவருடைய சீடர்களும் வந்தநேரம் இருளடைந்திருந்த நேரமாக இருந்திருக்க வேண்டும். தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனின் பெயர் இலேகியோன் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உரோமைப்படைப்பிரிவில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. ‘இலேகியோன்’ என்பது உரோமைப்படையின் 6,000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. பேய் பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இந்த வார்த்தை பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். தனக்குள்ளாக பெரிய தீய ஆவிகளின் படையே குடிகொண்டிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பதில். மேலும் பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமையாக இருந்த இந்த காலக்கட்டத்தில், வன்முறைகள், கலகங்கள் ஏற்பட்டால், அதனை அடக்க இந்த படைப்பிரிவு கொடுமையான முறையில் மக்களை அடக்கி ஒடுக்கியது. இதுவும் இந்தப்பெயரை தீய ஆவி பிடித்தருந்த மனிதன் பயன்படுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள்ளாக வன்முறையான தீய ஆவிகள் குடிகொண்டிருப்பதை இப்படி அவன் வெளிப்படுத்தியிருக்கலாம்.

தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன் உறவுகளை இழந்த மனிதனாக இருந்தான். இயற்கையிடமிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்தான்.(5:3 கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்). மனிதர்களிடமிருந்கு ஒதக்கி வைக்கபட்டிருந்தான் (5:4 விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டியிருந்தார்கள்). கடவுளின் சாயலை இழந்திருந்தான். (5:5 தம்மையே கற்களாலும், காயப்படுத்தி வந்தார்). ஆக, அடிப்படை உறவுகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தான். இயேசு, அந்த மனிதன் இழந்த மூன்று உறவுகளையும் புதுப்பித்துக்கொடுக்கிறார். அந்த மனிதன் இயேசுவுக்கு சாட்சியாக மாறி, இறைவன் தனக்கு செய்த நன்மைகளையெல்லாம், அந்தப்பகுதி முழுவதும் அறிவிக்கிற உண்மையுள்ள சீடராக மாறுகிறான்.

"உன்னத கடவுளின் மகனே உமக்கு இங்கு என்ன வேலை?" நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி. ஆமாம். இறைமகனுக்கு பேய்களோடு என்ன வேலை? கடவுளுக்கு கல்லரையில் என்ன வேலை? பாவமும் பாவச் செயல்களும் நடைபெரும் இடத்தில் பக்தனுக்கு என்ன வேலை? அநீதியும் அவமானமும் மலிந்த இடத்தில் ஆண்டவனின்அடியானுக்கு என்ன வேலை? மனிதமும் மனிதாபிமானமும் சிதைக்கப்படும் இடத்தில் மதத்திற்கு என்ன வேலை? கொள்ளையும் கொலையும் குவியும் இடத்தில் கோயில் தெய்வத்திற்கு என்ன வேலை? ஏழ்மையும் வறுமையும் வளர்த்து உருவாக்கப்படும் இடத்தில் வானக இறைவனை வழிபடும் மக்களுக்கு என்ன வேலை? நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி.

இறைவன் விண்ணகத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆண்டவன் ஆலயத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆயர்கள் ஆட்டுப்பட்டியோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமல்லவா! நல்லவர்கள் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிட வேண்டியதுதானே? திருச்சபை, திருவருட்சாதனங்களோடு நின்று விடவேண்டும். வழிபாடு, தேர், திருவிழா, அர்ச்சனை, ஆராதனை இவற்றோடு முடித்துக்கொள்ள வேண்டும். இதுவும் நியாயமான கேள்விதானா?

இன்று எழும்பும் இத்தகைய கேள்விகளுக்கும் சருக்கல்களுக்கும் சவாலாக இயேசு செயல்பட்டதைப் பார்க்கிறோம். தெய்வம் பேயை சந்திக்கிறது. கடவுள் கல்லரையை நெருங்குகிறார். புனிதர்; பாவியை அரவணைக்கிறார்.

அநீதியை, அசிங்கத்தை அப்புறப்படுத்த காலம், நேரம், இடம் பார்க்க அவசியமில்லை. ஒதுங்கி, ஒடுங்கி, அடங்கிப்போக அவசியமில்லை. வேதம் வீதிக்கு வர வேண்டும். தெய்வம் தெருவுக்கு வர வேண்டும். எங்கெல்லாம் இருள் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் பற்றிப் படர்ந்து சுடர்விட்டு எரியவேண்டும்.

எல்லோர் வாழ்விலும் வசந்தம் வீச நல்லவர்கள் நாம் ஒதுங்காமல் ஓரம்கட்டாமல் உட்புகுந்து செயல்பட வலுவேண்டுகிறேன்,தெய்வமே.

கடவுள் நமது வாழ்க்கையில் எவ்வளவோ நன்மைகளைச்செய்து வந்திருக்கிறார். அவரது அளவுகடந்த இரக்கத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சாட்சியாக மாற வேண்டும். இறைஇரக்கத்தை மற்றவர்கள் உணரும் வண்ணம் தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனைப்போல, நம்முடைய வாழ்வே மற்றவர்களுக்கு ஒரு நற்செய்தியாக விளங்க வேண்டும்.

வாழ்வில் வசந்தம் வீச வேதம் வீதிக்கு வர வேண்டும்.

No comments:

Post a Comment