Wednesday, 17 May 2017

✠ புனிதர் பாஸ்ச்சால் பேலோன் ✠ (St. Paschal Baylon)

நற்கருணையின் தேவதூதன் :
(Seraph of the Eucharist)


பிறப்பு : மே 16, 1540
டோரேஹெர்மோசா, அரகோன்
(Torrehermosa, Aragon)


இறப்பு : மே 17, 1592
வாலென்சியா
(Valencia)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


அருளாளர் பட்டம் : 1618
திருத்தந்தை ஐந்தாம் பால்
(Pope Paul V)


புனிதர் பட்டம் : அக்டோபர் 16, 1690
திருத்தந்தை எட்டாம் அலெக்ஸாண்டர்
(Pope Alexander VIII)


முக்கிய திருத்தலங்கள் :
"விலா ரியல்" எனுமிடத்திலுள்ள "ராயல் சிற்றாலயம்"
(Royal Chapel in Vila-real)


நினைவுத் திருநாள் : மே 17


பாதுகாவல் :
நற்கருணைச் சங்கங்கள் (Eucharistic Associations)
நற்கருணை மகாசபைகள் (Eucharistic Congress)
ஒபாண்டோ (Obando), புலகன் (Bulacan) நற்கருணைச் சங்கங்கள் (Eucharistic Associations)


புனிதர் பாஸ்ச்சால் பேலோன், ஒரு ஸ்பேனிஷ் துறவியும் கத்தோலிக்க புனிதருமாவார். இவர் நற்கருணை மகாசபைகள் (Eucharistic Congress) மற்றும் ஆகியவற்றின் பாதுகாவலர் ஆவார்.


ஒரு ஏழை விவசாயியான "மார்ட்டின் பேலோன்" (Martin Baylon) இவரது தந்தை ஆவார். "எலிசபெத் ஜூபேரா" (Elizabeth Jubera) இவரது தாயார் ஆவார். பாஸ்ச்சால் பேலோன் இளமைக் காலத்தில் ஆடுகளை மேய்க்கும் பணியில் இருந்தார். ஆடுகளை பராமரிக்கும் ஆயனாக கூலி வேலைக்கு சேர்ந்தார். இவர் ஒருபோதும் பள்ளிக்கூடம் போனதேயில்லை. ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு போகும்போதெல்லாம் தம்முடன் ஒரு புத்தகத்தையும் கொண்டு செல்வார். வழிப்போக்கர்களிடமெல்லாம் தமக்கு எழுதப்படிக்க கற்றுத் தரும்படி கெஞ்சுவார். அப்படியே இவர் தானாகவே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டார். ஆடு, மாடுகளை வயலில் மேய்க்கும்போது கடவுளின் படைப்பை கண்டு ரசித்த இவர் ஆன்மீக புத்தகங்களை படிக்க கற்றுக்கொண்டார்.


சுமார் 1564ல் சீரமைக்கப்பட்ட ஃபிரான்சிஸ்கன் சபையில் (Reformed Franciscan Order) பொதுநிலை சகோதரராக (Lay Brother) இணைந்தார். அப்போதுதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள்விப்பட்டு, அவர்களைப்பற்றி அறிந்துகொண்டார்.


அங்கு அவர் எளிமை மற்றும் தாழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். திவ்விய நற்கருணை பீடத்தின் முன் மணிக்கணக்காக - பல நாட்களில் முழு இரவு அமர்ந்து செபிப்பார். அதிலிருந்து தாம் அளவற்ற மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ்வில்லத்திலிருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொடர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலங்கா அற்புதங்கள் இன்று வரை நடந்து வருகின்றது.

Tuesday, 16 May 2017

✠ புனிதர் ஆண்ட்ரூ பொபோலா ✠(St. Andrew Bobola)

✠ புனிதர் ஆண்ட்ரூ பொபோலா ✠
(St. Andrew Bobola)


போலந்து நாட்டின் மறைசாட்சி :
(Martyr of Poland)


பிறப்பு : 1591
சண்டோமிர் பலடைன், போலந்து அரசு
(Sandomir Palatine, Kingdom of Poland)


இறப்பு : மே 16, 1657
ஜானாவ், போலந்து
(Janow, Poland)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : அக்டோபர் 30, 1853
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)


புனிதர்பட்டம்: ஏப்ரல் 17, 1938
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
(Pope Pius XI)


நினைவுத் திருநாள் : மே 16


பாதுகாவல் :
போலந்து, வார்சாவ் உயர்மறை மாவட்டம்
(Poland, Archdiocese of Warsaw)


புனித ஆண்ட்ரூ, ஒரு போலிஷ் மறைப்பணியாளரும், இயேசு சபையின் மறைசாட்சியும் (Martyr of the Society of Jesus) ஆவார். லித்துவானியாவின் அப்போஸ்த்தலர் என்றும், "ஆன்மாக்களை வேட்டையாடுபவர்" (Apostle of Lithuania and the "Hunter of souls") என்றும் அறியப்படுகிறார்.


1591ல் பிறந்த பொபோலா, 1611ல் தமது இருபதாம் வயதில் "விளினஸ்" எனும் இடத்திலுள்ள இயேசு சபையில் (Society of Jesus in Vilnius) இணைந்தார். 1622ல் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், ஆலோசகராகவும், போதகராகவும் இயேசு சபை இல்ல தலைவராகவும் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.


1652 முதல் கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்களால் போலந்து நாட்டில் குழப்ப சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் லித்துவேனியாவில் (Lithuvenia) மறைபணியாளராக பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. பிரிவினையாளர்கள் வெறி பிடித்தவர்களைப் போல நடந்துகொண்டனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், பணிவுடன் மறைப் பணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் பரவியபோது, நோயுற்ற மக்களை பரிவுடன் கவனித்துக்கொண்டார்.


கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார்.


அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம், நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், "நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பன்மடங்கு துன்புறுத்தினர். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப் பிரமாணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.


இவரின் விசுவாசத்தைக் கண்ட அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து துன்புறுத்தினர். இறுதியாக இரக்கமற்றவர்களின் துன்புறுத்தல்களை தாங்கமுடியாமல், மே 16, 1657 அன்று புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.

Monday, 15 May 2017

✠ புனிதர் சோஃபியா ✠(St. Sophia)

 † இன்றைய புனிதர் †
(Saint of the Day)
(மே 15)
✠ புனிதர் சோஃபியா ✠
(St. Sophia)

மறைசாட்சி :
(Martyr)

பிறப்பு : இத்தாலி

இறப்பு : 137
ரோம்


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)


நினைவுத் திருநாள் : மே 15

புனிதர் சோஃபியா, ஓர் திருமணமான பெண் ஆவார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் (Faith). இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை (Hope). மூன்றாவது குழந்தையின் பெயர் "கருணை" (Charity).

1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெயராக வைத்தார் சோஃபியா. கிறிஸ்துவை இவர்கள் தங்களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள்.


117 முதல் 138 வரையான காலகட்டத்தில் "ஹட்ரியான்" (Hadrian) எனும் கொடுங்கோல் அரசனில் ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டனர்.


கிறிஸ்துவில் கொண்ட விசுவாசத்தினால் சோஃபியாவும் அவரது மூன்று மகள்களும் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள். குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன்றார்கள். அதன்பின் தாய் சோஃபியாவையும் கொன்றார்கள். சோஃபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைகளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோஃபியாவை குழந்தைகளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார்கள்.


778ம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace) உள்ள "எஸ்ச்சாவ்" (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவற மடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனிதரின் பெயர் கொண்டு சோஃபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோஃபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோஃபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகின்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.

Tuesday, 28 February 2017

ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது.

இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.

தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது. இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. மனமாற்றம் தான், இந்த தவக்காலம் நமக்கு விடுக்கக்கூடிய அழைப்பு. நமது வாழ்வை மாற்றுவதற்காக இந்த நாட்களிலே சிந்திப்போம். நாம் செயல்படுத்த வேண்டிய, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகளை யோசிப்போம். அதனை செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு தவக்காலமும் வெறும் சடங்கு, சம்பிரதாயமாக இருக்கக்கூடிய நிலைமை மாற வேண்டும். தவக்காலங்களில் மட்டும் கடின நோன்பு இருப்பதும், ஒறுத்தல் முயற்சி செய்வதும், தவக்காலம் முடிந்ததும், பழைய வாழ்வே கதி என்று கிடக்கக்கூடிய காலம் மாற வேண்டும். அந்த மாற்றத்திற்காக, நாம் பாடுபடுவோம்.

Wednesday, 1 February 2017

உங்கள் குழந்தைகள் !

ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை இன்று கொண்டாடுகிறோம். “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு காணிக்கையாக கொடுக்கப்பட்டார்.

இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும் ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தான். இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண வேண்டும்.

அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர். நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு அர்ப்பணிப்போம்.

நம்மிடையே சில நல்ல பழக்கங்கள் உண்டு. தற்சமயம் குறைந்து வருகிறது. முதல் தரமானதை கோயிலுக்குக் கொடுப்பார்கள். முதல் சம்பளத்தை முழுமையாக கோயில் நேர்ச்சையாகக் கொடுப்பார்கள்.

அவர்களுக்கு எதுவும் குறைந்து போனதும் இல்லை. கடவுளுக்குக் கொடுக்கிறவர்கள், இன்னும் அதிகமாக கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "கடவுளுக்கு கொடுத்து குறைந்து ஒன்றும் போகவில்லை" என்று.

ஒரு வருடத்தில் அல்லது மாதத்தில் கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு கொடுத்ததை கணக்கிட்டுப் பாருங்கள். மற்ற எல்லாவற்றையும் விட அதுதான் மிகக் குறைவாக இருக்கும்.

 நம் அன்னை மரியாபோல் முதலானவற்றை ஆண்டவருக்குக் கொடுப்போம். அவர் நம்மை எல்லாவற்றிலும் முதன்மையாக்குவார் . ஆசீர்.

Tuesday, 31 January 2017

வாழ்கை அனுபவங்கள் பல!

ஆண்டவர் இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிறது. அவருடைய போதனையைக் கேட்ட அவருடைய சொந்த ஊரினர் அவரை நம்ப மறுத்தனர்.

அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும். எனவேதான், இயேசுவே கூறினார்; சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் என்று.

இத்தகைய அனுபவங்கள் சில நேரங்களில் நமக்கும் நடந்திருக்கும். நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நமது ஆர்வங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தபோது நாமும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்போம்.

நமது பெற்றோர், உடன் பிறந்தோர் நமது திறமைகளை, ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது நாமும் மிகுந்த வேதனை அனுபவித்திருப்போம்.

ஆனால், இன்று இந்த வாசகம் வழியாக ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்பே பிறர் நமக்குச் செய்த தவறுகளை, நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்பதுதான். எனவே, நமது வீட்டில் நம்மோடு வாழ்பவர்களை இனி நிறைவான பார்வையால் பார்க்கக் கற்றுக்கொள்வோம்.

அவர்களுக்குரிய அங்கீகாரத்தை, தன் மதிப்பை வழங்க முன் வருவோம். அதுபோல, நம்மோடு பணிபுரிகி;ன்ற, உழைக்கின்ற, படிக்கின்ற நண்பர்கள், தோழியரின் திறமைகளை, ஆற்றல்களை ஊக்கப்படுத்துவோம். அவரவர்க்குரிய தன் மதிப்பை வழங்குவோம்.

Sunday, 29 January 2017

வாழும் நற்செய்தியாய் மாறுவோம்!


காடுகளும், திராட்சைத்தோட்டங்களும், பாழடைந்த இடங்களும், கல்லறைத்தோட்டங்களும் பேய்களின் வாழிடம் என்று யூத மக்கள் நம்பினர். இயேசுவும் அவருடைய சீடர்களும் வந்தநேரம் இருளடைந்திருந்த நேரமாக இருந்திருக்க வேண்டும். தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனின் பெயர் இலேகியோன் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உரோமைப்படைப்பிரிவில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. ‘இலேகியோன்’ என்பது உரோமைப்படையின் 6,000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. பேய் பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இந்த வார்த்தை பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். தனக்குள்ளாக பெரிய தீய ஆவிகளின் படையே குடிகொண்டிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பதில். மேலும் பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமையாக இருந்த இந்த காலக்கட்டத்தில், வன்முறைகள், கலகங்கள் ஏற்பட்டால், அதனை அடக்க இந்த படைப்பிரிவு கொடுமையான முறையில் மக்களை அடக்கி ஒடுக்கியது. இதுவும் இந்தப்பெயரை தீய ஆவி பிடித்தருந்த மனிதன் பயன்படுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள்ளாக வன்முறையான தீய ஆவிகள் குடிகொண்டிருப்பதை இப்படி அவன் வெளிப்படுத்தியிருக்கலாம்.

தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன் உறவுகளை இழந்த மனிதனாக இருந்தான். இயற்கையிடமிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்தான்.(5:3 கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்). மனிதர்களிடமிருந்கு ஒதக்கி வைக்கபட்டிருந்தான் (5:4 விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டியிருந்தார்கள்). கடவுளின் சாயலை இழந்திருந்தான். (5:5 தம்மையே கற்களாலும், காயப்படுத்தி வந்தார்). ஆக, அடிப்படை உறவுகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தான். இயேசு, அந்த மனிதன் இழந்த மூன்று உறவுகளையும் புதுப்பித்துக்கொடுக்கிறார். அந்த மனிதன் இயேசுவுக்கு சாட்சியாக மாறி, இறைவன் தனக்கு செய்த நன்மைகளையெல்லாம், அந்தப்பகுதி முழுவதும் அறிவிக்கிற உண்மையுள்ள சீடராக மாறுகிறான்.

"உன்னத கடவுளின் மகனே உமக்கு இங்கு என்ன வேலை?" நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி. ஆமாம். இறைமகனுக்கு பேய்களோடு என்ன வேலை? கடவுளுக்கு கல்லரையில் என்ன வேலை? பாவமும் பாவச் செயல்களும் நடைபெரும் இடத்தில் பக்தனுக்கு என்ன வேலை? அநீதியும் அவமானமும் மலிந்த இடத்தில் ஆண்டவனின்அடியானுக்கு என்ன வேலை? மனிதமும் மனிதாபிமானமும் சிதைக்கப்படும் இடத்தில் மதத்திற்கு என்ன வேலை? கொள்ளையும் கொலையும் குவியும் இடத்தில் கோயில் தெய்வத்திற்கு என்ன வேலை? ஏழ்மையும் வறுமையும் வளர்த்து உருவாக்கப்படும் இடத்தில் வானக இறைவனை வழிபடும் மக்களுக்கு என்ன வேலை? நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி.

இறைவன் விண்ணகத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆண்டவன் ஆலயத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆயர்கள் ஆட்டுப்பட்டியோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமல்லவா! நல்லவர்கள் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிட வேண்டியதுதானே? திருச்சபை, திருவருட்சாதனங்களோடு நின்று விடவேண்டும். வழிபாடு, தேர், திருவிழா, அர்ச்சனை, ஆராதனை இவற்றோடு முடித்துக்கொள்ள வேண்டும். இதுவும் நியாயமான கேள்விதானா?

இன்று எழும்பும் இத்தகைய கேள்விகளுக்கும் சருக்கல்களுக்கும் சவாலாக இயேசு செயல்பட்டதைப் பார்க்கிறோம். தெய்வம் பேயை சந்திக்கிறது. கடவுள் கல்லரையை நெருங்குகிறார். புனிதர்; பாவியை அரவணைக்கிறார்.

அநீதியை, அசிங்கத்தை அப்புறப்படுத்த காலம், நேரம், இடம் பார்க்க அவசியமில்லை. ஒதுங்கி, ஒடுங்கி, அடங்கிப்போக அவசியமில்லை. வேதம் வீதிக்கு வர வேண்டும். தெய்வம் தெருவுக்கு வர வேண்டும். எங்கெல்லாம் இருள் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் பற்றிப் படர்ந்து சுடர்விட்டு எரியவேண்டும்.

எல்லோர் வாழ்விலும் வசந்தம் வீச நல்லவர்கள் நாம் ஒதுங்காமல் ஓரம்கட்டாமல் உட்புகுந்து செயல்பட வலுவேண்டுகிறேன்,தெய்வமே.

கடவுள் நமது வாழ்க்கையில் எவ்வளவோ நன்மைகளைச்செய்து வந்திருக்கிறார். அவரது அளவுகடந்த இரக்கத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சாட்சியாக மாற வேண்டும். இறைஇரக்கத்தை மற்றவர்கள் உணரும் வண்ணம் தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனைப்போல, நம்முடைய வாழ்வே மற்றவர்களுக்கு ஒரு நற்செய்தியாக விளங்க வேண்டும்.

வாழ்வில் வசந்தம் வீச வேதம் வீதிக்கு வர வேண்டும்.

Friday, 27 January 2017

ஆழமான விசுவாசம்!

கலிலேயா கடல் ஒரு சில விசித்திரங்களுக்கு பெயர் பெற்றது. எப்போது புயல் அல்லது கடுமையான காற்று வீசும் என்று தெரியாத அளவுக்கு, தீடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக்கடல். பொதுவாக புயல் சின்னம் உருவாவதை இயற்கையின் அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம். வானம் மேகமூட்டமாகத்தோன்றும். காற்று வழக்கத்திற்கு மாறாக பலமாக வீசும்.

ஆனால் கலிலேயக்கடல் இதிலிருந்து வேறுபட்டது. வானம் தெளிவாக இருந்தாலும், காற்றே இல்லாத சூழ்நிலை இருந்தாலும் அதனை நம்பி புயல் வருவதற்கில்லை என்று ஒருவராலும் அறுதியிட்டுச்சொல்ல முடியாது. கலிலேயா கடல் அமைந்திருக்கின்ற அந்த இட அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்திற்கு காரணம்.அதேபோல எப்போது புயலும், காற்றும் ஓயும் என்பதையும் பருவநிலை மாற்றத்தை வைத்து அறுதியிட்டுச்சொல்ல முடியாது.

சீடர்களுக்கு இதைப்பற்றி நன்றாகத்தெரியும். எனவே, சாதாணமானச்சூழ்நிலை என்றால் அவர்கள் இயேசுவின் உதவியை நாடியிருக்க மாட்டார்கள். அவர்களின் வாழ்வே கடல்தான். ஆனால், இயேசுவோடு பயணம் செய்த அன்றைக்கு கடலில் பார்த்த மாற்றம், அவர்கள் என்றைக்குமே சந்தித்திராதது. உயிர்ப்பயம் அவர்களை கலக்கமுறச்செய்துவிட்டது.

சாவு பற்றிய பயம் அவர்களை வாட்டியெடுக்க ஆரம்பித்தது. கடைசியில் இயேசுவின் உதவியை நாடுகிறார்கள். இயேசு கடலை அமைதிப்படுத்தியபின் சீடர்களைப்பார்த்துக்கேட்கும் கேள்வி: உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? என்பது. காரணம்: கடலின் மாறுதலுக்கு தீய ஆவிகள்தான் காரணம் என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த நம்பிக்கை. மாற்கு 1: 21 – 28 ல் இயேசு தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துகிறார்.

மக்கள் அவரைப்பார்த்து “இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்: அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று வியந்து போற்றினார்கள். அப்போது சீடர்களும் உடனிருந்து இயேசுவின் ஆற்றலைப்பார்த்து வியந்துநின்றனர். அப்படிப்பட்டவர்கள் உயிர்ப்பயம் வந்தவுடன், கடவுளின் ஆற்றலை, வல்லமையை மறந்து, நம்பிக்கையிழந்து நிற்கின்றனர். இயேசு மீண்டும் அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

வாழ்க்கைக்கவலைகளும், ஏமாற்றங்களும் கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எந்தச்சூழ்நிலையிலும் நம் நம்பிக்கையை இழந்துவிடச்செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், நாம் பெற்றிருப்பது உண்மையான, ஆழமான விசுவாசம் அல்ல. வெறும் மேலோட்டமான விசுவாசம் தான். ஆழமான விசுவாசத்தில் வளர முயற்சி எடுப்போம்.

Thursday, 26 January 2017

விதையுங்கள் !

நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. அறிவியல் ஒரு எல்லைவரை எட்டிச்சென்று, பயிர் வளர்வதற்கும், வளர்ந்த பயிர் விளைச்சலுக்கான காரணத்தை விளக்கலாம். அந்த எல்லைக்குப் பின், அறிவியலும் மௌனம் சாதித்துவிடுகிறரது. மனிதனின் கையை மீறிய ஒரு சக்தி அந்த பயிறுக்குள் இருந்து, நிலம் தானாக விளைச்சல் கொடுக்கச் செய்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தன் கையை மீறிய ஒரு ஆற்றல் நம்மை அறியாமல் நமக்குள்ளும் புறமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுதான் இறை ஆட்சி. சில விசித்திரமான நிகழ்ச்சிகள் நம்மில் குருக்கிடும்போது, ஆச்சரியமாக அந்த தெய்வீக சக்தி நம்மை பத்திரமாக பாதுகாத்த சம்பவங்கள், நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்களுக்கும் நிகழ்ந்தது நாம் அறியாததல்ல.

வாசிக்கும் அனைவரும் உங்கள் வாழ்வில் உங்களை அறியாமல் இறையாட்சி செயல்பட்டு உங்களை பாதுகாத்த நிகழ்வுகளை மின் அஞ்சலில் எழுதுங்கள். இறை ஆட்சியின் செயல்பாட்டை அனைவரும் அறிய வாய்ப்பாகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியைத் தானாகவே முளைத்து வளரும் விதைக்கு ஒப்பிடுகிறார். நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அத்துடன், அவரது பணி முடிந்துவிடுகிறது. பின்னர், அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. பின்னர், விளைச்சல் அளிக்கிறது.

இந்த உவமை நம் அனைவருக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்திருக்கிறது. நமது பணிகளுக்கு நேரடியாக வெற்றியோ, பலனோ கிடைக்கவில்லை என்று நாம் வருந்தினால், இந்த உவமை நமக்கு உற்சாகம் தருவதாக அமைந்திருக்கிறது. நாம் விதை விதைப்பவர்கள். அதை வளரச் செய்து, பலன் தருபவர் இறைவனே.

எந்த நேரத்தில், எத்தகைய பலன் தரவேண்டும் என்பது அவரது திருவுளமே என்பதை ஞானத்தோடு ஏற்றுக்கொள்வோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல எண்ணங்களை, நல்ல திட்டங்களை விதையாகத் தூவுவது மட்டுமே. மற்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார்.

 இந்த நம்பிக்கையில் நம் பணிகளை ஆர்வமுடன் செய்வோம்.இறை ஆட்சி வெளிப்படையாக ஒருநாள் வெளிப்படும். அதுவரை காத்திருப்போம், விழிப்போடு செபிப்போம்.

Wednesday, 25 January 2017

விளக்கு எதற்காக ?

இன்று ஆயர்களான புனித திமொத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம். தொடக்கத் திருச்சபையின் ஆயர்கள் இவர்கள். இவர்களுக்குப் பவுலடியார் எழுதிய மூன்று திருமடல்களும் தொடக்கத் திருச்சபை எவ்வாறு இயங்கியது, ஆயர்கள், மூப்பர்கள், இறைமக்கள் என்னும் படிமுறை அப்போதே எவ்வாறு செயல்பட்டது என்னும் தகவல்களைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா?" எனக் கேட்கிறார். விளக்கு விளக்குத் தண்டின்மீது வைக்கப்பட்டு, ஒளி தரவேண்டும். அதனால், நமது பணிகள் இருளையும் பொருட்படுத்தாது தொடரவேண்டும் என்பதே விளக்கைக் கொண்டுவருவதன் நோக்கமாகும்.

திருச்சபையின் தலைமைப் பொறுப்புகளும் அவ்வாறே விளக்குகள்போலவே. ஆயர்கள், குருக்கள், பொதுநிலைத் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை, திறமைகளை மரக்காலின்கீழோ, கட்டிலின்கீழோ வைக்காமல், அதாவது எப்பணியும் செய்யாது சோம்பியிராமல், விளக்குத் தண்டின்மீது அனைவரும் காணும்படியாகப் பணியாற்றவேண்டும். அப்போதுதான், அதைப் பார்க்கின்ற பிறரும் பணியாற்றுவர், பிறருக்கு அது எடுத்துக்காட்டாகவும் அமையும்.

தொடக்கத் திருச்சபையின் ஆற்றல்மிகு ஆயர்கள் திமொத்தேயு, தீத்து போலவே, இன்றைய தலைவர்களும் தங்கள் பணிகளை அனைவரும் கண்டு பின்பற்றும் வண்ணம் ஆற்ற மன்றாடுவோம்.