Thursday, 22 September 2016

நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?

முன்பொரு காலத்தில் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான். தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே!, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.

நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.  தூதுவன் அரசரிடம் சென்று, “நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை” என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப்பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான். இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான்
உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள்,  நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான். நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே? “ஆம், அதுவேதான்”. “தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார். அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென். அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார். துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது. “அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார். “அது எப்படி? அவை நுகத்தடிகள், அது ரதமல்ல”.

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை. துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப்பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார். அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘? நீ எங்கேயும் ‘நானை’ கண்டுபிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று
சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும். (ஓஷோ சொல்லக்கூடிய கதை இது)

நான், நான் என்று அலைபவர்கள் “நான்” என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் கதை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?, நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். இயேசுவின் இந்த கேள்வி ஆணவத்தில் எழுந்த கேள்வி அல்ல. இயேசு தாழ்ச்சியே உருவானவர்), மாறாக தான் பணிபுரிந்த இடங்களில் இருந்த மக்கள், தன்னோடு இருந்த சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி. இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அளித்த பதிலைப் பார்த்துவிட்டு சற்று அதிருப்திகொள்கிறார். பின்னர் அவர்களுக்கு தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

யூதர்கள் (சீடர்களும் இதில் அடங்கும்) மெசியா என்பவர் எல்லா மக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் அரசராக பார்த்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பார்வை இதற்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவர் மெசியா என்பவர் மக்களுக்காக, அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக துன்புறக்கூடியவராகப் பார்த்தார். மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக தன்னுடைய உயிரையே பலியாகத் தந்தார். எனவே நம் இயேசுவைப் பற்றிய/ மெசியாவைப் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டு வாழ்வோம்.

இறையியலாளரான மோல்ட் மோர்கன் கூறுவார், “மெசியாவைப் பற்றிய பார்வைக்கும் நமது வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்று. எப்படி என்றால் நாம் மெசியாவை அதிகாரம் செலுத்துபவராகப் பார்த்தால், நாமும் பிறர்மீதும் அதிகாரம் செலுத்துகின்றவர்களாவோம். மாறாக மெசியாவைத் துன்புறும் ஊழியராக, பிறருக்காகத் தன்னுடைய வாழ்வையே அர்ப்பணிப்பவராகப் பார்த்தால், நாமும் பிறருக்காகத் துன்புறத் தயாராவோம்.

எனவே இயேசுவே மெசியா என உணர்வோம். அவரைத் துன்புறும் ஊழியராக உணர்ந்துகொள்வோம். பிறருக்காக, பிறர் வாழ்வு நலமடைய துன்புறும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Tuesday, 20 September 2016

இன்றைய புனிதர் - புனித எஸ்தாக்கியுஸ் St. ஐஸ்தாசிஸ்

எஸ்தாக்கியுஸ் என்பது ஓர் கிரேக்கப்பெயர். இவர் மனமாற்றம் பெறுவதற்கு முன் பிளாசிடஸ் Placidus என்றழைக்கப்பெற்றார். உரோமில் அதிரியான் Adrian ஆட்சி செய்த காலத்தில் தேயோபிஷ்டா Theopista மற்றும் அவரின் மகன்கள் அகாபியஸ்(Agapius), தேயோபிஷ்டஸ்(Theopistus) என்பவர்களுடன் சேர்த்து துன்பப்படுத்தப்பட்டார். எஸ்தாக்கியுஸ் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி மறைப்பணியை ஆற்றியுள்ளார். இவர் தனது 12 வயதிலிருந்து திருச்சபைக்காக உழைத்தார்.

இவர் இறந்தபிறகு இவரின் உடலிலிருந்த எலும்புகள் அனைத்தையும் ஒன்றாக் சேர்த்து 1567 ல் பாரிஸ் நாட்டில் புனித எஸ்தாக்கியுஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது, இவர் நீதியோடும், நேர்மையோடு வாழ்ந்தார். மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். சாதி, மதம் பார்க்காமல் பணியாற்றினார். மனசாட்சிக்கு மட்டுமே செவிசாய்த்தார். இவருக்கு தீங்கு செய்தவர்களிடமும் அன்பாக இருந்தார். அவர்களை மன்னித்து, அவர்களிடத்தில் அளவில்லா அன்பு காட்டி, வாழ்வையும் மாற்றினார். பிறரை பாராட்டுவதிலும் எப்போதும் முதலிடம் வகித்தார்.

மற்றவர்களின் பலவீனங்கலை அறிந்து, அவைகளிலிருந்து வெளியேற உதவினார். இவரின் நல்ல குணங்கலை அறிந்த எதிரிகள் , சமுதாயத்தில் இவரின் பெயரை கெடுக்க திட்டமிட்டனர். கொடூரமான பழிகளை அவரின் மேல் சுமத்தினர். பல அநீதிகளை செய்ததாக குற்றம் சாட்டினர். அப்போதும் கூட இவர் பொறுமையை கடைபிடித்து, கடவுளை மட்டுமே தன் வாழ்வின் மையமாக கொண்டு செயல்பட்டார். எதிரிகளின் இதயங்களிலும், ஈரத்தை ஏற்படுத்தி இறையுறவை வளர்த்து, மனமாற்றினார்.

பாதுகாவல்: தீயணைப்பு வீரர்கள், வேட்டைக்காரர்கள், பெண்விடுதலை

இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடத்தல்!

இராணுவ முகாமில் தங்கி பயற்சி எடுத்துக்கொண்டு வந்த கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த இராணுவ வீரன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல இரயில் நிலையத்தில் வேக வேகவேகமாக ஓடிவந்தான். எப்படியாவது இரயிலில் இடம் பிடித்துவிடவேண்டும் என்ற பரபரப்பில் இருந்ததால் அவன் எதிரே வந்த பழங்களைக் கூடையில் வைத்து விற்கும் சிறுவனைக் கவனிக்கவில்லை. அதனால் அவன் சிறுவன்மீது மோதி, சிறுவன் வைத்திருந்த பழங்கள் எல்லாம் சிதறி ஓடின.

ஒரு நிமிடம் அவன்  நிலைகுலைந்து நின்றான். நாம் இருக்கும் அவசரத்தில் இது வேறு நடக்கவேண்டுமா? என்று தன்னுடைய நிலையை நினைத்து நொந்துக்கொண்டான். பின்னர் அவன் அந்த சிறுவனைப் பார்த்தபோது அவனுடைய உள்ளத்தில் ஓர் இரக்க உணர்வு தோன்றியது. ஏனென்றால் அந்த சிறுவன் ஒரு பார்வையற்றவன். எனவே தன்னால் நடைபாதை எங்கும் சிதறிக் கிடக்கும் பழங்களை ஒன்றாக சேர்த்துத்தருவது என்று முடிவு செய்தான். அதன்படி ஆங்காங்கே சிதறிக் கிடந்த பழங்களை ஒன்றாகச் சேர்ந்து அவன் அந்த சிறுவனின் பழக்கூடையில் வைத்தான்.

இதை அறிந்து அந்தச் சிறுவன் இராணுவ வீரனின் கைகளை பிடித்துக்கொண்டு, “நீங்கள்தான் இயேசுவா?” என்று கேட்டான். அதற்கு அந்த இராணுவ வீரன், “இல்லை இல்லை. நான் இயேசு அல்ல, இயேசுவைப் போன்று வாழ முயற்சிப்பவன்” என்றான்.

ஆம், ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துவாழும்போது, வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்போது நாம் இயேசுதான், அவருடைய அன்புப்  பணியாளர்கள்தான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப் போதித்துக் கொண்டிருகும்போது, அவரைக் காண அவருடைய தாயும், சகோதரர, சகோதரிகளும் வருகிறார்கள். இச்செய்தியை மக்கள் இயேசுவிடம் சொல்லியபோது அவர் அதற்கு பதில்மொழியாக, “இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்” என்கிறார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு பல உண்மைகளை எடுத்துக்கூறுகிறது. முதலாவதாக இயேசு இரத்த உறவுகளைக் கடந்தவராக இருக்கின்றார் என்பதே ஆகும். இயேசு தன்னுடைய தாய், சகோதர, சகோதரிகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு வாழவில்லை. இன்றைக்கு தங்களை மக்கள் பணியாளர்கள், எல்லாருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் தலைவர்களைப் போன்று அல்லாமல் இயேசு எல்லாரும் ஒரே குடும்பம் என்ற மனநிலையில் வாழந்தவர். அதனால்தான் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும் யாவருமே என்னுடைய தாயும், சகோதரர்களும் ஆவார்கள் என்கிறார்.

அடுத்ததாக நாம் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறவேண்டும் என்றால் தந்தைக் கடவுளின் திருவுளத்தை ஏற்று நடக்கவேண்டும் என்று சொல்கிறார். இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரிகளாக மாறுவது என்பது  மிகப்பெரிய கொடை, மிகப்பெரிய பாக்கியம்.  இது யாருக்குமே கிடைக்காத ஒரு வரம். அப்படிப்பட்ட வரத்தை ஆண்டவர் இயேசு தன்னுடைய தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழியாக அடையலாம் என்கிறார்.

நிறைவாக ஒருவர் இயேசுவைப் பெற்று எடுப்பதானாலோ அல்லது இயேசுவோடு பிறப்பதனாலோர் இயேசுவுக்கு தாயாகவோ அல்லது சகோதர, சகோதரிகளாக மாறிவிடமுடியாது. யூதர்கள் தாங்கள் ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லிக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வந்தார்கள். அவர்களின் நினைப்பு எல்லாம் தாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வந்தாலும் கடவுளின் மக்கள் என்பதுதான். ஆனால் திருமுழுக்கு யோவான் அவர்களைப் பார்த்து, “ஆபிரகாம் எங்கள் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ளவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என்கிறார் (மத் 3:9).

இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு சிந்தித்துப் பார்க்கும்போது ஒருவர் இயேசுவைப் பெற்றெடுப்பதனாலும், இயேசுவோடு பிறப்பதனாலும் அவருக்குத் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறிவிட முடியாது. மாறாக தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவேண்டும்.

இயேசு கூறும் இந்த வரையறைகளை வைத்துப் பார்க்கும்போது அன்னை மரியா இயேசுவை பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்ததனாலும் இயேசுவுக்குத் தாயாகிறார். ஆகவே, நாம் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் அதனால் நமக்கு மீட்பு உண்டு என்ற தவறான எண்ணத்தில் வாழாமல், உண்மையிலே தந்தைக் கடவுளின் திருவுளத்தை ஏற்று வாழ்வோம். இயேசுவின் தாயாகும், சகோதர சகோதரிகளாகும் பேற்றினைப் பெறுவோம்.

Wednesday, 7 September 2016

அன்னை மரியாளின் பிறப்பு விழா - தாயின் அன்பு!

இன்றைக்கு நம் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான நாள். மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். நம் தாய் அன்னை கன்னிமரியாளின் பிறந்த நாள்.

இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற கத்தோலிக்கத் திருச்சபை அந்த தாயின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் அகமகிழ்கிறது. எத்தனை சோதனைகள், எத்தனை தப்பறைக்கொள்கைகள், எத்தனை எதிர்ப்புக்கள் – இவற்றிற்கு நடுவில், நிச்சயம் அன்னை கன்னிமரியாள் மீது வைத்திருக்கிற மக்களின் பக்தி, நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

அகில உலக திருச்சபையின் தூணாக இருந்து, தனது செபத்தாலும், பரிந்துரையாலும் ஒவ்வொருநாளும் அன்னை கன்னிமரியாள் நம்மைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற ஆலயங்களில் அன்னை கன்னிமரியாளுக்குத்தான் அதிகம் என்கிற அளவுக்கு, அன்னை மரியாளின் மீது மக்கள் அளவுகடந்த பாசம் வைத்திருக்கின்றனர்.

இதற்கு அடித்தளமாக இருப்பது, அன்னை நம்மீது, தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கிற, நிரந்தரமான அன்பு. ஒரு தாயின் அன்பை நாம் ஒரு குறுகிய எல்கைக்குள் அடக்கிவிட முடியாது. அது அனைத்தையும் கடந்தது. எதனையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புகொண்டது. தான் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளை, தன் மகன் இயேசுவுக்கும் ஊட்டி, அவரையும் இந்த உலகம், வரலாற்றைப்பிரிக்கக்கூடிய அளவுக்கு வலிமை மிகுந்தவராக எண்ண, காரணராக இருந்திருக்கிறார்.

அந்த தாயிடம் நம்மையே ஒப்படைப்போம். அவரிடத்தில் நமக்கு வேண்டியதைக் கேட்போம். அவர் நமக்கு நிச்சயமாக, தந்தையாகிய கடவுளிடமிருந்து, நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொடுப்பார் என்கிற உறுதியான உள்ளத்தோடு, அன்னையின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்.

Tuesday, 6 September 2016

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்!

ஆங்கில அகராதியை முதல் முதலாகத் தொகுத்தளித்தவர் சாமுவேல் ஜான்சன்  (1709 -1984) என்பவர். இவர் ஆங்கில இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். எளிய குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டவர்.

இவர் ஒவ்வொருநாளும் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும்போது பாதையோரம் இருக்கின்ற பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காமல் போகவே மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் தங்க இடமில்லாத வறியவர்களையும், எளியவர்களையும், பிச்சைக்காரர்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு இடமளிப்பார். இதனால் சில நேரங்களில் பிச்சைகாரார்களால் அவருடைய வீடு நிரம்பி வழியும்.

இதைப் பார்த்த சாமுவேல் ஜான்சனின் பணக்கார நண்பர் ஒருவர் அவரிடம், “எதற்காக நீங்கள் உங்களுடைய வீட்டில் பிச்சைக்காரார்களுக்கும், அனாதைகளுக்கும் இடமளித்து வருகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒருவேளை நான் அவர்களுக்கு வீட்டில் தங்குவதற்கு இடமளிக்கவில்லை என்றால், அவர்கள் தெருக்களிலும், பாதையோரங்களிலும்தான் படுக்க நேரிடும். மேலும் என்னைத் தவிர வேறு யாரும் இவர்களுக்கு தங்குவதற்கு இடமளிப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் நான் அவர்களுக்கு இடமளிக்கிறேன்” என்றார்.

சாமுவேல் ஜான்சனின் பேச்சைக் கேட்ட அந்த பணக்கார நண்பர், “எவ்வளவு வசதிகள் இருந்தும் நான் அவர்களுக்கு இடமளிக்கவில்லையே” என்று வருந்தினார்.

ஏழைகள் – எளியவர்கள் – எப்போதும் இரக்கமும், அடுத்தவர் மட்டில் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேறுபெற்றவர்கள் யாராரென்றும் கடவுளின் கோபத்திற்கு ஆளாகுபவர்கள் யாராரென்றும் பட்டியலிடுகிறார். அப்படி இயேசு பேறுபெற்றவர்கள் என்று பட்டியலிட்டவர்களில் முதலாவதாக வருபவர்கள் ஏழைகளே. எதற்காக இயேசு ஏழைகளைப் பேறுபெற்றவர்கள்? என்று அழைக்கிறார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதற்கு முன்னதாக இப்பகுதியை நாம் ஒத்தமை நற்செய்தியான மத்தேயு நற்செய்தியோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நமக்கு ஒருசில உண்மைகள் புலப்படும்.

மத்தேயு நற்செய்தியில் இப்பகுதி மலைப்பொழிவு என அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கோ இப்பகுதி சமவெளிப்பொழிவு என அழைக்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறுபவை மூன்றாம் நபரிடம் பேசுவது போன்று இருக்கும் (ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது). ஆனால் இங்கோ இயேசு நேரடியாகப் பேசுவது போன்று இருக்கின்றது (ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே). மத்தேயு நற்செய்தியாளர் ஆன்மீக ஏழ்மையையும் (Spiritual Poverty), லூக்கா நற்செய்தியாளர் பொருளாதார ஏழ்மையையும் (Economical Poverty)பற்றிப் பேசுவதாக விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் ஏழைகள் எப்போதும் இறைவனின் சிறப்புக் கவனத்திற்கு உரியவர்கள் என்பதை நாம் நமது மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இயேசு ஏழைகளை எதற்காகப் பேறுபெற்றவர்கள் என்று அழைக்கிறார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். பொதுவாகவே ஏழைகள் இரக்கமுள்ளவர்களாக, அடுத்தவர் மட்டில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் கடவுள் மட்டில் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் பற்றும் கொண்டிருப்பார்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வும் ஒரு சான்று. இன்னொரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி ஒருமுறை பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் இருந்த ஓட்டுநரும், லியோனியும் பலத்த காயத்தோடு அடிப்பட்டுக் கிடக்கிறார்கள். அப்போது அந்த வழியாக எத்தனையோ மனிதர்கள் கடந்து போனார்கள். ஆனால் யாருமே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

காட்டு வேலைக்குச் சென்ற ஒரு சாதாரண மூதாட்டிதான் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு தன்னிடம் இருந்த கேழ்வரகுக் கஞ்சியைக் கொடுத்தார். பின்னர் அவர்கள் தெளிவு பெற்றதும் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்தவர்களை அழைத்துவந்து, அவர்களுடைய உதவியுடன் லியோனியையும், ஓட்டுநரையும் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்து ஆவணசெய்தார். ஏறக்குறைய இயேசு கூறும் நல்ல சமாரியன் உவமை போன்றுதான் இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை ஏழைகளுக்கு இருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

எனவேதான் இயேசு அவர்களை பேறுபெற்றவர்கள் என்று பாராட்டுகிறார். ஆகவே நாமும் ஏழைகளைப் போன்று அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம். 

இறைவேண்டல் (ஜெபம்) வாழ்விற்கான ஆற்றல்!

ஒரு பிரபலமான பங்கில் இருந்த கிறிஸ்தவர் ஒருவர் கோவிலுக்குப் போகாமல், ஜெபம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அவர், கடவுளைத் தான் நேரடியாக வணங்கிவிட்டுச் சென்றுவிடலாமே, எதற்காக கோவில், குரு எல்லாம் என்று, தான் சந்தித்த மக்களிடம் சொல்லிவந்தார்.

இச்செய்தி பங்குத் தந்தையின் காதுகளை எட்டியது. உடனே பங்குத்தந்தை அந்த கிறிஸ்தவருக்கு ஜெபம், கோவில் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய இல்லத்திற்கு வந்தார். இல்லத்திற்கு வந்ததும் குருவானவர் அவரிடம், “நாம் இருவரும் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு வருவோமா? என்று கேட்டார். பங்குத்தந்தையின் வருகையை சிறிதும் எதிர்பாராத அந்த கிறிஸ்தவர் குருவானவர் ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால் குருவானவர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அவர்கள் இருவரும் நீண்ட தூரம் நடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் போகிற வழியில் பெண்ணொருத்தி பெரிய அடுப்பில் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது குருவானவர் அந்த கிறிஸ்தவரை அடுப்பிற்க்குப் பக்கத்தில் அழைத்துச் சென்றார். பின்னர் கொழுந்துவிட்டு எரிகின்ற அந்த அடுப்பிலிருந்து ஒரு துண்டு கங்கினை எடுத்து ஓரமாக வைத்தார். சிறுது நேரம் குருவும், அந்த கிறிஸ்தவரையும் கங்கினையே உற்று நோக்கினார்கள். அந்த கங்கானது  சிறுது நேரத்தில் சாம்பலாகிப் போனது.

பின்னர் குருவானவர் அந்த கிறிஸ்தவரை அழைத்து, தனியே எடுத்து வைக்கப்பட்ட ஒரு துண்டுக் கங்கு விரைவிலே சாம்பலானது. ஆனால் அடுப்பிலே இருக்கும் கங்கு இன்னும் அணையாமல் நெருப்பாகவே இருக்கிறது. இது போன்றுதான் நீயும் ஜெபம் வேண்டாம், கோவில் வேண்டாம் என்று தனித்து வாழ்ந்தாய் என்றால் விரைவிலே நீ அழிந்து போய்விடுவாய். மாறாக நெருப்பு என்னும் ஜெபத்தோடு நீ இணைத்திருந்தாய் என்றால் நீண்ட நாட்கள் அணையாது வாழ்வாய். ஆதலால் ஜெபத்தில் இணைந்திரு” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த கிறிஸ்தவர் தன்னுடைய தவற்றை உணர்ந்துகொண்டு அன்றிலிருந்து கோவிலுக்கு வழக்கமாக வந்து, ஜெபத்தில் கடவுளோடு இணைந்திருந்தார். ஜெபம்தான் நம்முடைய வாழ்விற்கான உற்று, ஆற்றல், எல்லாம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனியாக ஒரு மலைக்குச் சென்று, அங்கே இரவெல்லாம் இறைவனிடம் ஜெபித்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு இறைமகன், மூவொரு கடவுளில் இரண்டாமாளாகிய சுதன். அப்படியிருந்தும் அவர் தந்தைக் கடவுளிடம் ஜெபித்தார் என்றால், நாமெல்லாம் எந்தளவுக்குச் ஜெபிக்கவேண்டும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார். தன்னுடைய பணியைத் தொடங்கும்போது ஜெபித்தார்; சீடர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஜெபித்தார்; கெத்சமணி தோட்டத்தில் ஜெபித்தார்; தன்னுடைய இறுதி மூச்சை விடும்போது ஜெபித்தார்.  இவ்வாறு அவர் தந்தைக் கடவுளோடு ஜெபத்தில் இணைத்திருந்தார். அந்த ஜெபம்தான் அவருக்கு எல்லாவிதமான ஆசிர்வதத்தையும் தந்தது.  ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் ஜெபிக்க வேண்டும். அதுவும் நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நாம் இறைவனிடமிருந்து எல்லா ஆசிர்வாதங்களையும் பெறமுடியும்.

ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “நான் என்னுடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் ஜெபத்திலிருந்துதான் பெறுகிறேன்” என்று. இது உண்மை. ஜெபம் செய்யாமல், நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

நற்செய்தி வாசகம் உணர்த்தும் இன்னொரு உண்மை. உண்மையான இயேசுவின் சீடன் என்பவன் ஜெபத்தில் மட்டும் தன்னுடைய காலத்தைக் கழிக்கக் கூடாது. மாறாக அவன் செயல்வீரனாக இருக்கவேண்டும். இயேசு மலையிலிருந்து ஜெபித்து, சீடர்களைத் தேர்ந்துகொண்ட பிறகு, அவர் அப்படியே மலையில் நிற்கவில்லை. மாறாக சமவெளிக்கு வருகிறார். சமவெளி என்பது மக்கள் இருக்கும் பகுதி. மக்கள் மத்தியில் தன்னுடைய பணியை ஆற்ற முன்வருகிறார்.

இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஜெபிக்க வேண்டும். அதே நேரத்தில் செயல்வீரர்களாக இருக்கவேண்டும். ஜெபம் மட்டும் இருந்து செயல் இல்லையென்றால் நமது வாழ்வு அடித்தளமற்றதாகிவிடும். அதேநேரத்தில் செயல் இருந்து ஜெபம் இல்லையென்றால் அது உயிரற்றதாகிவிடும்.

ஆகவே இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் இயேசுவைப் போன்று ஜெபத்திலும், செயலிலும் இணைத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Friday, 2 September 2016

அடுத்தவரிடம் குறை கண்டுபிடிக்கும் மனது அழுக்கான மனது!

ஒரு நகரில் மெத்தப் படித்த மேதாவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே அடுத்தவரிடம் குறை கண்டுபிடிப்பதையே தன்னுடைய குலத்தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்தார். மக்கள் ஒன்றை எவ்வளவு நேர்த்தியாக, நிறைவாகச் செய்திருந்தாலும் அதில் அவர் குறைகண்டுபிடிப்பார். இதனால் மக்களுக்கு அவர்மீதான ஒரு வெறுப்புணர்வே இருந்தது.

ஒருநாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அகன்ற சாலை ஒன்றில் அவர் நடந்துசென்று கொண்டிருந்தார். அவருடைய முதுகில் பெரிய சுமை ஒன்று இருந்தது. அந்த சுமை எப்படிப்பட்டது, என் வந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை. அவர் நடக்க நடக்க அவர் முதுகில் இருந்த சுமை அவரை அழுத்தத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் அவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், “கடவுளே எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய சுமை?. இதை நான் ஏன் சுமக்கவேண்டும்? என்று கேட்டார். அதற்கு வானத்திலிருந்து கடவுள், “இந்த சுமை வேறொன்றும் இல்லை. மற்றவர்களிடம் நீ கண்டுபிடித்த குறைதான் இப்படி சுமையாக இருக்கிறது. எல்லாரும் நல்லதையே பார்த்தபோது, நீ மட்டும் குறைகளையே பார்த்தாய். ஆதலால்தான்  நீ கண்டுபிடித்த குறைகளை இப்போது நீ சுமந்துகொண்டு வருகிறாய்” என்றார்.

உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்; அறிவொளி பெற்றார். அன்றிலிருந்து அவர் மக்களிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே கண்டார்.

பிறரிடம் குறைகாண்போரது வாழ்க்கை பரிதாபத்திற்கு உரியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நாளைய  நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள் இயேசுவிடம், “உம்முடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார்கள்” என்று குறைசொல்கிறார்கள். அதற்கு இயேசுவின் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

கதிர்களைக் கொய்து தின்னுதல் என்பது குற்றம் கிடையாது (இச 23:24-25). ஆனால் சீடர்கள் கதிர்களைக் கொய்து, கசக்குதால்தான் மிகப்பெரிய குற்றமாக பரிசேயர்களுடைய கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குறைகூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள்.

பரிசேயர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசு, அவர்கள் ஏற்றுக்கொண்ட மறைநூலிலிருந்தே விளக்கம் தருகிறார். தாவீதும், அவருடைய சகாக்களும் பசியாய் இருந்தபோது குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்ணுகிறார்கள் (1 சாமு 21:1-6) என்ற இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி ஆண்டவர் இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிட மகனுகுக் கட்டுப்பட்டதே” என்கிறார். மேலும் மத்தேயு நற்செய்தி 9:13ல் “பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று சொல்லி இக்கருத்துக்கு இன்னும் வலுவூட்டுகிறார்.

பல நேரங்களில் நாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரக்கமே இல்லாமல் நடந்துகொள்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் யாருக்காக? மனிதர்களுக்குத் தானே. மனிதர்களுக்கு முக்கியத்துவம் தராமல், சட்டத்தைத் தூக்கிப் பிடித்தல் எந்தவிதத்தில் நியாயம்?.

சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் மாநிலம் தாதரி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி முகமது அக்லாக் என்பவரும் அவருடைய மகனும் கொல்லப்பட்டார்கள். ஒரு மாட்டை கொன்று சாப்பிட்டதற்காக இரண்டு உயிர்களைக் கொன்ற இந்த நிகழ்வு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதைக் காட்டுகிறது?. மனிதர்களைவிட சம்பிரதாயங்களும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதியமும் அல்லவா பெரிது என்று காட்டுகிறது. மனிதர்கள் இல்லாமல், சட்டமும், சம்பிரதாயங்களும் வீணிலும், வீண்.

எனவே சட்டங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த சட்டங்கள் குறித்துக் காட்டும் மானுட நேயத்தை நம்மில் வளர்ப்போம்.

அதைவிடவும் பிறரிடம் குறை கண்டுபிடிக்கும் எண்ணத்தை அடியோடு தவிர்ப்போம். “அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன” என்பார் கார்லைல் என்ற அறிஞர். ஆம், நம்மிடத்தில் அன்பு குறைந்தால் பிறரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரியும். மாறாக நம்மிடம் அன்பு பெருகினால், குற்றம் காணும் மனப்பான்மை குறையும்.

ஆகவே, குறைகாணும் போக்கைத் தவிர்ப்போம். சட்டங்களைக் கண்டு, மானுட நேயம் காப்போம். அதன்வழியாக் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Thursday, 1 September 2016

உண்மையான நோன்பு எது?

ஒரு காலத்தில் ஓர் அடர்ந்த வனத்தில் ஜஜாலி எனும் துறவி வாழ்ந்து வந்தார். அந்த துறவி மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார்.

நெடுங்காலமாக தவமிருந்து நிறைய ஆன்மீக அறிவைப் பெற்றார். ஆயினும் இதனால் அவர் தற்பெருமை கொள்ள ஆரம்பித்தார். ”இந்த உலகத்திலே நான் தான் சிறந்த ஞானி. என்னுடைய தவோபலத்தால்/ நோன்பால் நான் அளவற்ற ஆன்மீக அறிவைப் பெற்றுவிட்டேன். என்னைவிட சிறந்தவன் யாருமே இல்லை” என சத்தமாக சூளுரைத்தார்.

அப்போது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அந்த குரல், “அவ்வாறு தற்பெருமை கொள்ளலாகாது ஜஜாலி. ஊருக்குள் துலாதரன் எனும் வணிகன் இருக்கிறான். அறிவிலும் செயலிலும் உம்மை விட சிறந்தவன் அவன். எனினும் அவன் கூட இவ்வாறு தற்பெருமை கொண்டதில்லை.” என்றது.

ஜஜாலி வியப்படைந்தார். துலாதரன் என்பவர் யார்? அவர் தம்மை விட சிறந்தவனாக இருப்பது எப்படி? என ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். உடனே ஜஜாலி ஊருக்குள் சென்று துலாதரனைப் பற்றி விசாரித்தார்.

 நெடுநேர தேடலுக்குப் பின்னர், வாரணாசியின் சந்தை ஒன்றில் அவரைக் கண்டார். துலாதரன் ஜஜாலியைக் கண்டவுடன் பணிவுடன் எழுந்து கைக்கூப்பி வணங்கினார். “துறவியாரே, உங்களின் வருகையால் நான் மிகவும் அக மகிழ்கிறேன்.”என்று சொன்னார்.

ஜஜாலியும் தன் வருகைக்கான காரணத்தைக் கூறினார். வனத்தில் அசரீரியாக எழுந்த குரல் சொன்னதையும் துலாதரனிடம் கூறினார். துலாதரனும் புன்னகைத்தபடி, “துறவியாரே, தங்களைப் பற்றியும் தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களின் துறவற வாழ்க்கை எனக்கொரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது” என சொன்னார். துலாதரனும் சில நேரம் பேசினார். அவரின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு ஜஜாலியை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு வணிகனுக்கு இவ்வளவு ஞானமா? எப்பொழுதும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் எவ்வாறு இவ்வளவு ஞானத்தைப் பெற்றிருப்பான்? என்று சிந்திக்கலானார்.  “துலாதரா, உமக்கு எவ்வாறு இவ்வளவு ஞானம் கிடைத்தது?” என கேட்டார். அதற்கு அவர் “துறவியாரே, நான் ஒரு வணிகன் தான்.

அன்றாடம் பண்டங்களை வாங்குதல் மற்றும் விற்றல் என செய்துவருகிறேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் எந்தவொரு உயிரும் துன்புறுத்தப்படுவதில்லை; என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்கிறேன். தவறியும் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க நினைத்ததில்லை. யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நான் யாரையும் இதுவரை வெறுத்து ஒதுக்கியதுமில்லை.” எனக் கூறினார்.

“இதுவே, நல்லொழுக்கம் என சான்றோர்கள் கூறுவது. இதனாலே ஒருவன் பக்குவநிலை அடைந்து ஞானமடைகின்றான். இதைவிட புண்ணிய செயல் பிரிதில்லை.” எனவும் துலாதரன் தொடர்ந்தார். பிறகு துலாதரன் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.

துலாதரனின் அகன்ற அறிவாற்றலும் பக்குவநிலையும் ஜஜாலியின் மனக்கண்ணைத் திறந்தன. ஜஜாலியின் ஆணவமும் தற்பெருமையும் ஒழிந்துபோக அவர் துலாதரனை கைக்கூப்பி வணங்கினார். இருவரும் சிறந்த நண்பர்களாகி நிறைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

உண்மையான தவம்/நோன்பு ஒருவரிடத்தில் அன்பையும், பிறர்மீது  கரிசனையையும் வளர்க்கவேண்டுமே ஒழிய ஆணவத்தையும், அகங்காரத்தையும் வளர்க்கக்கூடாது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை” என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு அவர்களிடம், “மணமகன் மனவீட்டாரோடு இருக்கும்போது அவர்கள் நோன்பிருப்பதில்லை, மாறாக அவர் அவர்களைவிட்டுப் பிரியும் காலம் வரும், அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்” என்கிறார். அதாவது நோன்பிருக்க ஒரு காலமுண்டு அதை அந்தந்த நேரத்தில் செய்தால்போதும் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது.

இங்கே நாம் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவர் நோன்பிருப்பதும், இருக்காததும் அவரவர் விருப்பம். அதை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. திருமுழுக்கு யோவானின் சீடர்கள் நோன்பிருந்தார்கள் என்றால், அவர்கள் அவர்களுடைய விருப்பப்படி செய்திருக்கலாம்.

அதற்காக இயேசுவின் சீடர்கள் நோன்பிருக்கவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. பல நேரங்களில் நாமும் பிறர்மீது நம்முடைய கருத்துகளை, எண்ணங்களை திணிக்கிறோம். இது ஒருவிதத்தில் வன்முறைதான்.

ஆகவே, நோன்பிருப்பது  இருக்காதது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் என உணர்ந்துகொள்வோம். மேலும் நாம் மேற்கொள்ளும் நோன்பு நம்மில் பிறர்மீதான அக்கறையை வளர்க்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

துறவி கில்லஸ் (ஏகிடியுஸ்) Gilles (Ägidius)!

இவரின் கிரேக்கப்பெயர்: ஏகிடியுஸ் (Ägidius). ஜெர்மானியப்பெயர்: ஷில்டுஹால்டர் (Schildhaltar). பிரெஞ்ச் பெயர்: கில்லஸ் (Gilles) இவர் ஓர் துறவி. இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரோன்(Rhone) என்ற ஆற்றின் அருகே புனிதராக வாழ்ந்துள்ளார்.

இவர் பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவர் எப்போதும் தனிமையிலேயே வாழ்ந்துள்ளார். இவருக்கு துணையாக மான் ஒன்று இருந்திருக்கிறது. இவர் காட்டில் வாழ்ந்தபோதும் சைவ உணவு மட்டுமே உட்கொண்டுள்ளார்.

அரசர் ஒருவர் காட்டில் வேட்டையாட வந்தார். அப்போது கில்லசுக்கு சொந்தமான மானை வேட்டையாட அம்பு எறிந்துள்ளார். அம்பானது மானில் பாய்ந்தும், அடிபடாமல் இருந்தது. இதைக் கண்ட கில்லஸ் மானை குத்திய அம்பை பிடுங்கி எறிந்துவிட்டார்.

செபம்:
காடு, மரம், பறவைகள், வனவிலங்குகள் என்று இயற்கையோடு வாழ்ந்து, இறைவனை போற்றிய துறவி கில்லஸைப்போல நாங்களும் இயற்கையை போற்றி பாதுகாக்க வரம் தாரும். நீர் படைத்த இந்த அழகான உலகை மென்மேலும் அழகூட்டி உம்மை மகிமைப்படுத்துவேன். ஆமென்.
இவற்றை பார்த்த அரசர் கில்லசின் புனிதத்துவ வாழ்வை அறிந்தார். அவரை பின்பற்ற விரும்பினார். அவரின் வழியில் செல்ல கடினமாக இருந்தபோதும் முயற்சி செய்தார். கில்லசின் பெயரால் அக்காட்டில் மடம் ஒன்றை கட்டினார்.

கில்லஸ் தன் ஏழ்மையான வாழ்வின் வழியாக காட்டை சுற்றி வாழ்ந்த மக்களை மனந்திருப்பினார். நல்வாழ்வை வாழ கற்பித்தார். காட்டிலிருந்த தாவரங்களைக்கொண்டு, மக்களின் நோய்களை குணமாக்கினார். காட்டில் வாழ்ந்த விலங்குகள் இவரின் புனிதத்துவத்தைக் கண்டு, இவரை சந்திக்க வந்து சென்றது.

இவர் பல மடங்களை அரசரின் உதவி கொண்டு கட்டினார். பல துறவிகளை உருவாக்கினார். இவர் வாழ்ந்த வாழ்வையே, இவரின் மடத்துறவிகளும் வாழ்ந்தனர். இவர் இறந்தபிறகு, பிரான்சு நாட்டிலிருந்து எடுத்துச் சென்று காட்டில் வாழ்ந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை இன்று யாத்திரை தலமாக உள்ளது. 

Thursday, 4 August 2016

புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney!

மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய் (Bellei) என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்(Ars) என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார். 

இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார். 


செபம்:
அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.