Wednesday, 7 September 2016

அன்னை மரியாளின் பிறப்பு விழா - தாயின் அன்பு!

இன்றைக்கு நம் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான நாள். மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். நம் தாய் அன்னை கன்னிமரியாளின் பிறந்த நாள்.

இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற கத்தோலிக்கத் திருச்சபை அந்த தாயின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் அகமகிழ்கிறது. எத்தனை சோதனைகள், எத்தனை தப்பறைக்கொள்கைகள், எத்தனை எதிர்ப்புக்கள் – இவற்றிற்கு நடுவில், நிச்சயம் அன்னை கன்னிமரியாள் மீது வைத்திருக்கிற மக்களின் பக்தி, நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

அகில உலக திருச்சபையின் தூணாக இருந்து, தனது செபத்தாலும், பரிந்துரையாலும் ஒவ்வொருநாளும் அன்னை கன்னிமரியாள் நம்மைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற ஆலயங்களில் அன்னை கன்னிமரியாளுக்குத்தான் அதிகம் என்கிற அளவுக்கு, அன்னை மரியாளின் மீது மக்கள் அளவுகடந்த பாசம் வைத்திருக்கின்றனர்.

இதற்கு அடித்தளமாக இருப்பது, அன்னை நம்மீது, தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கிற, நிரந்தரமான அன்பு. ஒரு தாயின் அன்பை நாம் ஒரு குறுகிய எல்கைக்குள் அடக்கிவிட முடியாது. அது அனைத்தையும் கடந்தது. எதனையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புகொண்டது. தான் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளை, தன் மகன் இயேசுவுக்கும் ஊட்டி, அவரையும் இந்த உலகம், வரலாற்றைப்பிரிக்கக்கூடிய அளவுக்கு வலிமை மிகுந்தவராக எண்ண, காரணராக இருந்திருக்கிறார்.

அந்த தாயிடம் நம்மையே ஒப்படைப்போம். அவரிடத்தில் நமக்கு வேண்டியதைக் கேட்போம். அவர் நமக்கு நிச்சயமாக, தந்தையாகிய கடவுளிடமிருந்து, நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொடுப்பார் என்கிற உறுதியான உள்ளத்தோடு, அன்னையின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment