Tuesday, 6 September 2016

இறைவேண்டல் (ஜெபம்) வாழ்விற்கான ஆற்றல்!

ஒரு பிரபலமான பங்கில் இருந்த கிறிஸ்தவர் ஒருவர் கோவிலுக்குப் போகாமல், ஜெபம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அவர், கடவுளைத் தான் நேரடியாக வணங்கிவிட்டுச் சென்றுவிடலாமே, எதற்காக கோவில், குரு எல்லாம் என்று, தான் சந்தித்த மக்களிடம் சொல்லிவந்தார்.

இச்செய்தி பங்குத் தந்தையின் காதுகளை எட்டியது. உடனே பங்குத்தந்தை அந்த கிறிஸ்தவருக்கு ஜெபம், கோவில் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய இல்லத்திற்கு வந்தார். இல்லத்திற்கு வந்ததும் குருவானவர் அவரிடம், “நாம் இருவரும் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு வருவோமா? என்று கேட்டார். பங்குத்தந்தையின் வருகையை சிறிதும் எதிர்பாராத அந்த கிறிஸ்தவர் குருவானவர் ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால் குருவானவர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அவர்கள் இருவரும் நீண்ட தூரம் நடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் போகிற வழியில் பெண்ணொருத்தி பெரிய அடுப்பில் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது குருவானவர் அந்த கிறிஸ்தவரை அடுப்பிற்க்குப் பக்கத்தில் அழைத்துச் சென்றார். பின்னர் கொழுந்துவிட்டு எரிகின்ற அந்த அடுப்பிலிருந்து ஒரு துண்டு கங்கினை எடுத்து ஓரமாக வைத்தார். சிறுது நேரம் குருவும், அந்த கிறிஸ்தவரையும் கங்கினையே உற்று நோக்கினார்கள். அந்த கங்கானது  சிறுது நேரத்தில் சாம்பலாகிப் போனது.

பின்னர் குருவானவர் அந்த கிறிஸ்தவரை அழைத்து, தனியே எடுத்து வைக்கப்பட்ட ஒரு துண்டுக் கங்கு விரைவிலே சாம்பலானது. ஆனால் அடுப்பிலே இருக்கும் கங்கு இன்னும் அணையாமல் நெருப்பாகவே இருக்கிறது. இது போன்றுதான் நீயும் ஜெபம் வேண்டாம், கோவில் வேண்டாம் என்று தனித்து வாழ்ந்தாய் என்றால் விரைவிலே நீ அழிந்து போய்விடுவாய். மாறாக நெருப்பு என்னும் ஜெபத்தோடு நீ இணைத்திருந்தாய் என்றால் நீண்ட நாட்கள் அணையாது வாழ்வாய். ஆதலால் ஜெபத்தில் இணைந்திரு” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த கிறிஸ்தவர் தன்னுடைய தவற்றை உணர்ந்துகொண்டு அன்றிலிருந்து கோவிலுக்கு வழக்கமாக வந்து, ஜெபத்தில் கடவுளோடு இணைந்திருந்தார். ஜெபம்தான் நம்முடைய வாழ்விற்கான உற்று, ஆற்றல், எல்லாம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனியாக ஒரு மலைக்குச் சென்று, அங்கே இரவெல்லாம் இறைவனிடம் ஜெபித்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு இறைமகன், மூவொரு கடவுளில் இரண்டாமாளாகிய சுதன். அப்படியிருந்தும் அவர் தந்தைக் கடவுளிடம் ஜெபித்தார் என்றால், நாமெல்லாம் எந்தளவுக்குச் ஜெபிக்கவேண்டும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார். தன்னுடைய பணியைத் தொடங்கும்போது ஜெபித்தார்; சீடர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஜெபித்தார்; கெத்சமணி தோட்டத்தில் ஜெபித்தார்; தன்னுடைய இறுதி மூச்சை விடும்போது ஜெபித்தார்.  இவ்வாறு அவர் தந்தைக் கடவுளோடு ஜெபத்தில் இணைத்திருந்தார். அந்த ஜெபம்தான் அவருக்கு எல்லாவிதமான ஆசிர்வதத்தையும் தந்தது.  ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் ஜெபிக்க வேண்டும். அதுவும் நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நாம் இறைவனிடமிருந்து எல்லா ஆசிர்வாதங்களையும் பெறமுடியும்.

ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “நான் என்னுடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் ஜெபத்திலிருந்துதான் பெறுகிறேன்” என்று. இது உண்மை. ஜெபம் செய்யாமல், நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

நற்செய்தி வாசகம் உணர்த்தும் இன்னொரு உண்மை. உண்மையான இயேசுவின் சீடன் என்பவன் ஜெபத்தில் மட்டும் தன்னுடைய காலத்தைக் கழிக்கக் கூடாது. மாறாக அவன் செயல்வீரனாக இருக்கவேண்டும். இயேசு மலையிலிருந்து ஜெபித்து, சீடர்களைத் தேர்ந்துகொண்ட பிறகு, அவர் அப்படியே மலையில் நிற்கவில்லை. மாறாக சமவெளிக்கு வருகிறார். சமவெளி என்பது மக்கள் இருக்கும் பகுதி. மக்கள் மத்தியில் தன்னுடைய பணியை ஆற்ற முன்வருகிறார்.

இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஜெபிக்க வேண்டும். அதே நேரத்தில் செயல்வீரர்களாக இருக்கவேண்டும். ஜெபம் மட்டும் இருந்து செயல் இல்லையென்றால் நமது வாழ்வு அடித்தளமற்றதாகிவிடும். அதேநேரத்தில் செயல் இருந்து ஜெபம் இல்லையென்றால் அது உயிரற்றதாகிவிடும்.

ஆகவே இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் இயேசுவைப் போன்று ஜெபத்திலும், செயலிலும் இணைத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

1 comment:

  1. PRAYER IS THE MOST POWERFUL WEAPON WITH WHICH WE CAN HEAL, BLESS, EXPERIENCE VICTORY IN EVERYTHING AND DEFEAT EVERY EVIl. THANK YOU KALAI for the message. and the detailed explanations.

    ReplyDelete