Tuesday, 27 September 2016

தன்னை இழக்காமல் ஒருவன் இயேசுவின் சீடனாக இருக்க முடியாது!

முன்பொரு காலத்தில் உப்பு மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக தண்ணீரையும் அதன் பல்வேறு வடிவங்களான ஆறு, ஏரி, குளம், கடல் போன்றவற்றைப் பார்க்கவேண்டும் என்றும், அது எப்படியிருக்கிறது என்று அனுபவித்துப் பார்க்கவேண்டும்ம் என்று விருப்பம். அதனால் அந்த உப்பு மனிதன் தண்ணீரைத் தேடித் புறப்பட்டான்.

ஓரிடத்தில் உப்பு மனிதனுக்கு ஆற்று நீர் காணக் கிடைத்தது. அதைப் பார்த்ததும் அவன் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தான். மேலும் மேலே இருந்த நீலநிற வானமும் நிலவும் ஆற்றில் பட்டு பிரதிபலித்ததால் அந்த ஆற்று நீர் இன்னும் அழகாகத் தெரிந்தது. இதனால் உப்பு மனிதனுக்கு ஆற்று நீர் எப்படியிருக்கும் என்று அனுபவித்துப் பார்க்கும் ஆசை இன்னும் அதிகமாக ஏற்பட்டது.

எனவே உப்பு மனிதன் ஆற்றில் மெல்ல இறங்கினான். அவன் உள்ளே இறங்க இறங்க ஒருவிதமான பரவசத்தை உணர்ந்தான். இதுவரை அவன் அனுபவித்திராத ஒருவிதமான குளுமை, சுகம் அவனை என்னவோ செய்தது. அதனால் அவன் மேலும் மேலும் உள்ளே சென்றான்.

ஒருகட்டத்தில் அவன் தன்னுடைய கால் தன்னுடைய கண்முன்னாலே ஆற்றில் கரைந்துபோவதை உணர்ந்தான். அவனுக்குள் ஒருவிதமான திகிலும், பயமும் ஏற்பட்டது. எங்கே தான் இந்த ஆற்றிலே மூழ்கி இறந்துபோய்விடுவோமோ? என்று கலங்கினான். அதனால் அவன் கரைக்குத் திரும்பிச் செல்லலாம் என்று முடிவு செய்தான். அதன்படி அவன் கரையை நோக்கி நடக்க முற்பட்டான். ஆனால் அதற்குள் தண்ணீர் இடுப்பு, கழுத்து வரை வந்துவிட்டது.

இனிமேலும் கரைக்குச் செல்வது வீண் என நினைத்து, ஆற்று நீரோடு தன்னையே ஐக்கியமாக்கிக்கொண்டான். இப்போது அவன் உப்பு மனிதனாக இல்லை. ஆற்று நீராக மாறியிருந்தான். ஆற்றுநீராக மாறிய பிறகு அவன் உப்பு மனிதனாக இருந்ததைவிடவும் சுவை மிக்கவனாக இருந்தான்.

உப்பு மனிதர்களாக நாம் ஆற்று நீராகிய இறைவனோடு கலக்காதவரை நாம் சுவைமிக்கவர்களாக மாற முடியாது என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவரும் இயேசுவோடு/ இறைவனோடு ஒன்றாகக் கலக்காதவரை அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருக்கமுடியாது என்ற உண்மையையும் இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நற்செய்தி வாசகம் இயேசுவைப் பின்தொடர்ந்து வரவிரும்ப மக்களையும், அவர்களுக்கு இயேசு எத்தகைய பதிலைத் தந்தார் என்பதையும் குறித்துப் பேசுகிறது. நற்செய்தியில் முதலாவதாக வரும் மனிதர் இயேசுவிடம், “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கிறார். அதற்கு இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்கிறார். இதைக் கேட்டதும் அந்த மனிதர் அப்படியே போய்விடுகிறார்.

அம்மனிதர் நினைத்திருக்கலாம் இயேசுவைப் பின்தொடர்ந்து வாழ்வது என்பது எளிதான காரியம் என்று. இன்றைக்கும்கூட பலர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள கஷ்டம் சீடத்துவ வாழ்க்கை வாழ்கின்றவர்களுக்குத்தான் புரியும். இயேசுவைப் பின்பற்றினால் பதவியும், புகழும் கிடைக்கும் என்று அவர் தப்புக் கணக்குப் போட்டிருக்கிறார். அதனால்தான் இயேசு சீடத்துவ வாழ்க்கையில் உள்ள உண்மையச் சொன்னதும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் விலகிச் செல்கிறார்.

இரண்டாவதாக வரும் மனிதரை இயேசுவே, “என்னைப் பின்பற்றி வாரும்” என்கிறார். ஆனால் அவர் கடவுளது அழைப்பின் மகிமையை உணராமல், “முதலில் நான் போய் என்னுடைய தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்கிறார். இறைவனின் அழைப்பு எல்லாருக்கும் கிடையாது. எப்போதோ, யாரோ ஒரு மனிதருக்குத்தான் கிடைக்கும். ஆனால் இந்த மனிதரோ கடவுள் தனக்குக் கொடுத்த அழைப்பைக் கூட உணர்ந்துகொள்ளாமல், அதனைத் தட்டிக்கழிக்கிறார். அதனால் பாதிக்கப்பட்டதோ அவர்தான்.

பெரும்பாலான நேரங்களில் நாமும்கூட கடவுள் கொடுக்கும் மேலான அழைப்பை உணர்ந்துகொள்ளாமல், அதனைத் தட்டிக்கழிக்கிறோம்.

மூன்றாவதாக வரும் மனிதர், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன். ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்கிறார். அழைத்தல் வாழ்வில் இதுவும் ஒரு தவறுதான். கடவுளிடமிருந்து அழைப்பு வரும்போது அதற்கு உடனே செவிகொடுக்காமல், பிறகு பார்த்துக்கொள்ளலாம், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று தட்டிக்கழிக்கிறோம். ஆனால் இயேசு சீமான் பேதுருவை, அவருடைய சகோதரரை அழைக்கும்போது அவர்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார்கள்.

ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுள் நம்மை அழைக்குபோது அதற்கு உடனே செவிகொடுப்போம். ஏதாவது சாக்குப் போக்கு சொல்வதைத் தவிர்ப்போம். கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருந்து இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment