Tuesday, 6 September 2016

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்!

ஆங்கில அகராதியை முதல் முதலாகத் தொகுத்தளித்தவர் சாமுவேல் ஜான்சன்  (1709 -1984) என்பவர். இவர் ஆங்கில இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். எளிய குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டவர்.

இவர் ஒவ்வொருநாளும் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும்போது பாதையோரம் இருக்கின்ற பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காமல் போகவே மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் தங்க இடமில்லாத வறியவர்களையும், எளியவர்களையும், பிச்சைக்காரர்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு இடமளிப்பார். இதனால் சில நேரங்களில் பிச்சைகாரார்களால் அவருடைய வீடு நிரம்பி வழியும்.

இதைப் பார்த்த சாமுவேல் ஜான்சனின் பணக்கார நண்பர் ஒருவர் அவரிடம், “எதற்காக நீங்கள் உங்களுடைய வீட்டில் பிச்சைக்காரார்களுக்கும், அனாதைகளுக்கும் இடமளித்து வருகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒருவேளை நான் அவர்களுக்கு வீட்டில் தங்குவதற்கு இடமளிக்கவில்லை என்றால், அவர்கள் தெருக்களிலும், பாதையோரங்களிலும்தான் படுக்க நேரிடும். மேலும் என்னைத் தவிர வேறு யாரும் இவர்களுக்கு தங்குவதற்கு இடமளிப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் நான் அவர்களுக்கு இடமளிக்கிறேன்” என்றார்.

சாமுவேல் ஜான்சனின் பேச்சைக் கேட்ட அந்த பணக்கார நண்பர், “எவ்வளவு வசதிகள் இருந்தும் நான் அவர்களுக்கு இடமளிக்கவில்லையே” என்று வருந்தினார்.

ஏழைகள் – எளியவர்கள் – எப்போதும் இரக்கமும், அடுத்தவர் மட்டில் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேறுபெற்றவர்கள் யாராரென்றும் கடவுளின் கோபத்திற்கு ஆளாகுபவர்கள் யாராரென்றும் பட்டியலிடுகிறார். அப்படி இயேசு பேறுபெற்றவர்கள் என்று பட்டியலிட்டவர்களில் முதலாவதாக வருபவர்கள் ஏழைகளே. எதற்காக இயேசு ஏழைகளைப் பேறுபெற்றவர்கள்? என்று அழைக்கிறார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதற்கு முன்னதாக இப்பகுதியை நாம் ஒத்தமை நற்செய்தியான மத்தேயு நற்செய்தியோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நமக்கு ஒருசில உண்மைகள் புலப்படும்.

மத்தேயு நற்செய்தியில் இப்பகுதி மலைப்பொழிவு என அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கோ இப்பகுதி சமவெளிப்பொழிவு என அழைக்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறுபவை மூன்றாம் நபரிடம் பேசுவது போன்று இருக்கும் (ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது). ஆனால் இங்கோ இயேசு நேரடியாகப் பேசுவது போன்று இருக்கின்றது (ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே). மத்தேயு நற்செய்தியாளர் ஆன்மீக ஏழ்மையையும் (Spiritual Poverty), லூக்கா நற்செய்தியாளர் பொருளாதார ஏழ்மையையும் (Economical Poverty)பற்றிப் பேசுவதாக விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் ஏழைகள் எப்போதும் இறைவனின் சிறப்புக் கவனத்திற்கு உரியவர்கள் என்பதை நாம் நமது மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இயேசு ஏழைகளை எதற்காகப் பேறுபெற்றவர்கள் என்று அழைக்கிறார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். பொதுவாகவே ஏழைகள் இரக்கமுள்ளவர்களாக, அடுத்தவர் மட்டில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் கடவுள் மட்டில் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் பற்றும் கொண்டிருப்பார்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வும் ஒரு சான்று. இன்னொரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி ஒருமுறை பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் இருந்த ஓட்டுநரும், லியோனியும் பலத்த காயத்தோடு அடிப்பட்டுக் கிடக்கிறார்கள். அப்போது அந்த வழியாக எத்தனையோ மனிதர்கள் கடந்து போனார்கள். ஆனால் யாருமே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

காட்டு வேலைக்குச் சென்ற ஒரு சாதாரண மூதாட்டிதான் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு தன்னிடம் இருந்த கேழ்வரகுக் கஞ்சியைக் கொடுத்தார். பின்னர் அவர்கள் தெளிவு பெற்றதும் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்தவர்களை அழைத்துவந்து, அவர்களுடைய உதவியுடன் லியோனியையும், ஓட்டுநரையும் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்து ஆவணசெய்தார். ஏறக்குறைய இயேசு கூறும் நல்ல சமாரியன் உவமை போன்றுதான் இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை ஏழைகளுக்கு இருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

எனவேதான் இயேசு அவர்களை பேறுபெற்றவர்கள் என்று பாராட்டுகிறார். ஆகவே நாமும் ஏழைகளைப் போன்று அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம். 

1 comment:

  1. BEING COMPASSIONATE TO OTHERS IN NEED, JESUS taught us and he was full of compassion, being closer to the poor and their help is the blessing. the good deed of Salaam Johnson is once again a reminder for all of us to be always at the service of our brothern. Thank you Kalai

    ReplyDelete