Monday, 2 May 2016

புனித அத்தனாசியார்!

அலெக்சாந்திரியா நகரில் வசித்த கிறிஸ்தவர்களில் மிகவும் பக்தியான கிறிஸ்துவ பெற்றோர்க்கு மகனாக அத்தனாசியார் பிறந்தார். கிரேக்க பள்ளியில் படித்த இவர், இளம் வயதிலிருந்தே அறிவுத்திறன் மிகுந்தவராய் காணப்பட்டார்.

தமது 21 ஆம் வயதிலேயே திருத்தொண்டர் பட்டம் பெற்ற இவர், ஆயர் அலெக்சாண்டரின் செயலராக விளங்கினார். அப்போது மனித அவதாரம் என்ற நூலை எழுதினார். இவர் இளைஞனாக இருந்தபோதிலிருந்தே, பாலைநிலத்தில் தனிமையை தேடி வாழ்ந்து வந்த தவ முனிவர்களுக்கும், சிறப்பாக வனத்து அந்தோணியாருக்கும் மிகவும் அறிமுகமானவராக இருந்தார்.


323 ஆம் ஆண்டு ஆரியுஸ் என்ற கத்தோலிக்க குரு, ஒரு தவறான கொள்கையை உருவாக்கி அதை திருச்சபை முழுவதும் பரப்பி வந்தார். இதனால் ஆயர் அலெக்சாண்டர் இந்த தவறான கொள்கையை பற்றி பேசவேண்டாம் என்று ஆரியுசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் ஆரியுஸ் ஆயருக்கு எதிராக செயல்பட்டு, மேலும் செசாரியா பகுதிக்கு சென்று அங்கும் பரப்பிவந்தார். மக்களை கவரக்கூடிய முறையில் இத்தவறான கொள்கைகளை பாடல்களாக தொகுத்து அவற்றை பாடவைத்தார். இந்நிலையில் 325 இல் மிகவும் புகழ்பெற்ற நீசேயா பொதுசங்கம் கூட்டப்பட்டது.

 இச்சங்கத்தில் தான் விசுவாசப் பிரமாணம் திருச்சபையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஆரியுசின் தவறான கொள்கையை சுட்டிகாட்டி, அவர்மீது குற்றம் சாட்டி, அவரை சபைக்கு புறம்பாக தள்ளிவைத்தனர். அப்போது சங்கம் முடிந்த சில நாட்களிலேயே ஆயர் அலெக்சாண்டர் காலமானார்.

 அப்போது 30 வயதே ஆகியிருந்த அத்தனாசியார், அலெக்சாண்டிரியா நகர் ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆயர் அத்தனாசியார், ஆரியுசின் தவறுகளையும், அவருக்கு உதவி செய்த ஆயர்களையும் வன்மையாக கண்டித்தார். இதனால் 5 முறை ஆயர் அத்தனாசியர் நாடுகடத்தப்பட்டார். 17 ஆண்டுகள் அவர் ஆயராக வாழ்ந்தார்.

இருப்பினும் அவர் கிறிஸ்துவின் மீது இடைவிடாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தார். அவரை துன்புறுத்தியவர்களின் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் புனிதராகவே வாழ்ந்தார். அவர்மீது கொடுமையாக குற்றம் சாட்டியவர்களையும், பொறுமையோடு ஏற்று, அன்பு செய்தார்.

அப்போது ஆயர் அத்தனாசியாரை பழிவாங்கும் நோக்கத்துடன், அலெக்சாண்டிரியா ஆயர்களும், ஆரியூசும் ஒன்று சேர்ந்து, கப்படோசியாவை சேர்ந்த கிரகோரி என்பவரை அலெக்சாண்டிரியாவின் ஆயராக தேர்ந்தெடுத்தனர். இதனால் ஆயர் அத்தனாசியார் ரோம் சென்று திருத்தந்தையிடம் நடந்தவைகள் அனைத்தையும் எடுத்துக்கூறினார். பின்னர் திருத்தந்தையின் அனுமதி பெற்று மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு திரும்பினார்.

அப்போது ஆயராக இருந்த கிரகோரியின் வன்முறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர் திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்டு, இவற்றிற்கு நீதி கிடைக்கவேண்டுமென்று இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன் விளைவாக ஆயர் கிரகோரியும், அலெக்சாண்டிரியா அரசரும் இறந்துவிட்டனர்.

அதன்பிறகு அரசன் ஜூலியன் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசரானதும் முதலில் ஆயர் அத்தனாசியாரை மீண்டும் ஆயர் பதவியில் அமர்த்தினார். ஆனால் ஆரிய வெறியர்கள் இதனால் சீற்றம் கொண்டு, "அமைதியைக் குலைப்பவர் அத்தனாசியர்" என்று முத்திரையிட்டு, அரசன் ஜூலியனை நாடு கடத்தினர்.

அதன்பிறகு பகைவர்களால் அரசன் அம்பெய்து, குத்தி கொல்லப்பட்டார். இதனால் மன்னன் வாலென்ஸ் அரசு பதவியை ஏற்றார். இவர் ஆயர் அத்தனாசியருக்கு மிக பெரிய உதவிகளை செய்து, திருச்சபையைக் காத்தார்.

 ஏறக்குறைய 50 ஆண்டுகள் பல்வேறு துன்பங்களை தாங்கி கொண்டு, ஆயர் அத்தனாசியார் திருச்சபையில் கிறிஸ்துவின் படிப்பினைகளை நிலைநாட்டினார். அலெக்சாண்டிரியாவில் இவர் இறந்தாலும், இவரது உடல் வெனிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment