Friday, 20 May 2016

புனித சியென்னா பெர்னார்டின் (St. Bernardine of Siena)!

இவர் ஓர் பிரான்சிஸ்கன் துறவற சபையை சார்ந்த குரு. இவர் அச்சபையில் இருக்கும்போது பலவற்றை சீர்திருத்தி அமைந்தார். இவர் தன்னுடைய 20 ஆம் வயதிலேயே தன்னுடன் ஏராளமான இளைஞர்களை நண்பர்களாக வைத்திருந்தார்.

இவர்களின் ஒத்துழைப்பினால், சியென்னா நகரில் ஒரு மருத்துவமனையில் சமூகசேவை செய்ய முழு பொறுப்பையும் ஏற்றார். அங்கு நாள்தோறும் குறைந்தது 20 பேர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு பலியானார்கள். ஆனால் பெர்னார்டின் இந்நோயைக் கண்டு பயப்படாமல் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் முழு நேரத்தையும் செலவழித்து தொண்டு புரிந்தார்.


பின்னர் 2 ஆண்டுகளுக்குப்பின் பிரான்சிஸ்கன் சபையில் குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 12 ஆண்டுகள் தனிமையாக ஜெபிப்பதில் தன் நாட்களைக் கழித்தார். பின்னர் பல இடங்களுக்கும், கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரை ஆற்றினார். பிறகு பிரான்சிஸ்கன் சபைக்கு தலைவரானார். நாளடைவில் திருத்தந்தையின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மக்களிடையே மறையுரையாற்றத் தொடங்கினார்.

உத்தம மனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது காலத்தில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லும்போது புண்ணியம் அடைகிறோம் என்றும், அன்னை மரியாளைப் பற்றியும், தூய வளனாரைப்பற்றியும் ஏராளமாக எடுத்துரைத்து மறையுரையாற்றினார். IHS என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுருக்கம் என்றுணர்ந்து, இந்த 3 எழுத்துக்களையும் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து, அதை மக்கள் மீது வைத்து அவர்களை மந்திரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவரது அர்த்தமுள்ள, உருக்கமான மறையுரையைக் கேட்க, சில வேளைகளில் 50,000 பேருக்கும் மேலாக ஆலயத்திலும், வெளியிலும் காத்திருப்பார்கள். குருக்களைப் பற்றியும், கன்னியர்களைப் பற்றியும் பொதுநிலையினர் எப்போதும் தவறாக பேசாமல், மிகவும் கண்ணியமாகப் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களைப் பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித்திரியக்கூடாது என்றும் இவர் எப்போதும் அறிவுரை கூறி வந்துள்ளார்.

 இவர் IHS என்ற இயேசுவின் பெயருக்கு காட்டிய சிறப்பு பக்தி விளக்கம், விரைவில் மக்களிடையே பரவியது. இச்சின்னம் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. இதனால் இவர்மேல் பொறாமைக் கொண்ட சிலர் இவரைப்பற்றி மூன்று முறை திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம், இக்குற்றச்சாட்டுகளின் நடுவே, முந்தைய நிலையைவிட மிகவும் அதிகமாகவே கூடியது. இவர் இத்தாலி நாட்டிலேயே மிகச்சிறந்த மறைபோதகப் பேச்சாளராக திகழ்ந்தார்.

இவர் சபைத்தலைவராக இருக்கும்போது வெறும் 300 பேர் மட்டுமே இச்சபையில் இருந்தனர். பல சீர்திருத்தம் பெற்றதன்பின், இச்சபை ஆல்போல் தழைத்து, இவரது இறுதி நாட்களில் ஏறக்குறைய 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. தன் மறைபோதக பணியால் பலரை இறைவன் பால் ஈர்த்த பெர்னார்டின் இறைமகன் இயேசு விண்ணேற்பு அடைந்த நாளன்று இறைவாழ்விற்கு விண்ணகம் சென்றார்.

No comments:

Post a Comment