Friday, 6 May 2016

புனித டோமினிக் சாவியோ இளைஞர்களின் பாதுகாவலர்!

டோமினிக் சாவியோ, புனித தொன்போஸ்கோவின் முதல் மாணவர். இவர் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே ஆன்மீக வாழ்வில் சிறந்து காணப்பட்டார்.

இவரின் குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவருமே, இவரை பக்தியுள்ள குழந்தையாக வளர்த்தனர்.

இவரின் பங்கு ஆலயத்தில் இருந்த பங்குதந்தை ஜான், டோமினிக்கின் தெய்வீக ஆர்வத்தை கண்டு, இன்னும் அதிகமாக இயேசுவை நெருங்கி செல்ல வழிகாட்டினார். அன்னை மரியிடம் பக்தியை வளர்க்க எங்கும் நல்ல சூழ்நிலை இருந்தது. காற்று, மழை, குளிர், வெயில் என்று பாராமல் அதிகாலையிலேயே தினமும் தவறாமல் திருப்பலிக்கு சென்று பூசை உதவி செய்தார்.

டோமினிக் தான் பெற்ற திருமுழுக்கை பழுதின்றி பாதுகாத்து, புனிதத்துவத்தில் திளைத்தார். இதனால் சிறு வயதிலிருந்தே இவர் ஓர் புனிதராக கருதப்பட்டார். இவரின் வாழ்வு இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வாக இருந்தது.

 இவரின் தூய்மை, பக்தி, ஆன்ம வேட்கை மற்றவர்களின் வாழ்வை சிந்திக்க தூண்டியது. இவரின் கிறிஸ்துவ வாழ்வு உயிரோட்டம் நிறைந்த வாழ்வாக இருந்தது என்று திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் குறிப்பிடுகின்றார்.

இவர் இறப்பதற்குமுன், விண்ணகவாழ்வைப்பற்றி காட்சியாக கண்டு, ஆஹா, என்ன ஒரு அற்புதமான, இன்பமயமான காட்சி என்று கூறி மகிழ்வோடு உயிர்துறந்தார்.

1954 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் புனிதர் பட்டம் கொடுக்கும்போது, இன்றைய இளைஞர்கள் டோமினிக்கின் வாழ்வை பின்பற்ற வேண்டுமென்று கூறினார். தீமையைவிடுத்து, நன்மையை நாடி இறைப்பற்றோடு வாழ்ந்து சான்று பகர வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

1 comment:

  1. Hi Good information about Dominic Savio, he is also the parton saint of Alter Servers. Good kalai.

    ReplyDelete