Thursday, 5 May 2016

புனித.காடேஹார்டு(St.Godehard)!

காடேஹார்டு ஓர் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார். இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே இவரின் தந்தை தன் நிலத்தை பெனடிக்ட் சபையை சேர்ந்த குருக்களுக்கு தானமாக தந்தார்.

இச்சபையை சார்ந்தவர்களும் அந்நிலத்தில் ஒரு துறவற இல்லம் கட்டினர். நாளடைவில் சிறுவன் காடேஹார்டு பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தததால் குருக்களாலேயே பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டான். அறிவிலும், ஞானத்திலும் மிக சிறந்தவனாய் இருந்தான்.

கல்வியை முடித்துவிட்டு, துறவிகளின் மடத்திலேயே சிறுசிறு உதவிகளை செய்து கொடுத்து, அவர்களுடனே தங்கினார். அப்போது துறவிகளோடு சேர்ந்து பாடல்கள் பாடுவதிலும், திருப்பலியிலும் பங்கேற்றார்.

துறவற குருக்களின் வாழ்க்கை இவருக்கு பிடித்துவிடவே, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, 990 ஆம் ஆண்டு தனது துறவற வார்த்தைப்பாடுகளைபெற்று குருவானார். இவர் குருவானபிறகு ஜெர்மனியிலுள்ள ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பப்பட்டார்.

அப்போது ஜெர்மனியை ஆட்சி செய்த அரசர் இரண்டாம் ஹென்றி அவர்களால் 1022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் ஹில்டஸ்ஹைமிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயரான பிறகு ஜெர்மனி முழுவதும் 30 புதிய ஆலயங்களையும், ஒரு சில பெரிய தேவாலயங்களை பழுது பார்த்து திருத்தியமைக்கும் பணியையும், பல பள்ளிகளையும் கட்டினார்.

பின்னர் "குளுனி" என்ற சபையை நிறுவினார். அதன்பிறகு பிரான்ஸ் நாட்டிலும் இச்சபையை தொடங்கினார். ஆயர் காடேஹார்டு மக்களிடம் காட்டிய அன்பிற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. ஹங்கேரி, ஹாலந்து, போலந்து, சுவிட்சர்லாந்து என பல்வேறு நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை செய்து இறைவன்பால் மக்களை ஈர்த்தார்.

 ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார். எப்போதும் புன்முறுவலுடன் பணிசெய்து, மக்களின் நண்பனாகவும், இறைவனின் சீடனாகவும் இறுதிவரை வாழ்ந்தார். இவர் இறக்கும் வரை இறைவனின் பணியை இடைவிடாமல் ஆர்வமாக ஆற்றினார். இவர் இறந்தபின் இவரது உடல் ஹில்டஸ்ஹைமில் உள்ள பெரிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

1 comment:

  1. Thank you dear Kalai for the information about st Godehard. God Bless you!

    ReplyDelete