Monday, 29 February 2016

மன்னிக்கும் மனநிலை வளர்ப்போம்!

”இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்று மத்தேயு 5: 7 ல் பார்க்கிறோம்.

இயேசு பரலோக மந்திரம் செபத்தில், நாம் மற்றவர்களை மன்னிப்பதுபோல, நமது பாவங்களை கடவுள் மன்னிக்கிறார் என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் பாவங்களை மன்னிப்பதைச் சொல்கிறார். ”மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” மத்தேயு 6: 15. யாக்கோபு தனது திருமுகத்தில் ”இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்பு தான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்” (2: 13).

 இதிலிருந்து மற்றவர்களை மன்னிப்பது, கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கான அடிப்படை என்பது தெளிவாகிறது.

ஒரு தாலந்து என்பது பதினைந்து வருடக்கூலிக்கு இணையானது. சாதாரண மாகாணத்தின் வரவு, செலவைத்தாண்டக்கூடிய பணமதிப்பு. இதுமேயா, யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளிலிருந்து கிடைக்கும் மொத்த ஆண்டு வருமானமே 600 தாலந்துகள் தான்.

பணக்கார மாகாணம் என்று அழைக்கப்படும் கலிலேயாவின் மொத்த ஆண்டு வருமானம் 300 தாலந்துகள் தான். பத்தாயிரம் தாலந்துகளை சுமார் 8,600 வீரர்கள் சுமந்து வந்தால், கிட்டத்தட்ட, அந்த வரிசையே ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய அளவுக்கு தொகை பெரியது. மாறாக, தெனாரியம் என்பது தொழிலாளியின் ஒருநாள் கூலிக்கு இணையானது. 100 தெனாரியம் என்பது, பெரிய மதிப்பு அல்ல.

1000 தாலந்துகளைத் தலைவர் தள்ளுபடி செய்கிறார். தள்ளுபடி செய்யப்பட்டவன், 100 தெனாரியத்தைத்தள்ளுபடி செய்ய மறுக்கிறான்.

நாம் செய்கின்ற தவறுகள், குற்றங்கள் ஏராளம், ஏராளம். ஆனால், நமது பாவங்களை இறைவன், ஒரு பொருட்டாக எண்ணாமல், மன்னிக்கிறார்.

ஆனால், நாம் நமக்கெதிராக சிறிய தவறு செய்யும், நமது உடன் வாழ்கிற சகமனிதர்களை மன்னிக்க மறுக்கிறோம். நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால், கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.

Sunday, 28 February 2016

அவரின் போதனையும், தாக்கமும்!

நாளைய நற்செய்தியில்  இதுவரை கேட்டிராத போதனை யூதர்களை குழப்பத்திலும், இயேசுவின் மீது கோபத்தோடு தாக்கவும் செய்கிறது.

தாங்கள் மட்டும் தான் இறையாட்சி விருந்துக்கு தகுதியானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, இயேசுவின் போதனை புதிய போதனையாக இருக்கிறது.

இதுவரை கேட்டிராத போதனையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு குழப்பம் என்பதைக் காட்டிலும், கோபம் அதிகமாக இருக்கிறது.

யூதர்கள் மத்தியில் வாழ்ந்த போதகர்கள் அனைவருமே, யூதர்கள் மட்டும் தான், இறையாட்சி விருந்திற்கு தகுதிபெற்றவர்கள், என்கிற ரீதியில் போதித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களது போதனை மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் சொல்வது யூதர்களுக்கு மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்திருந்தது. ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர். கேட்கக்கூடிய பொய்யான வாக்குறுதிகளுக்கு அவர்கள் கட்டுண்டு கிடந்தனர்.

அதனைத்தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாழ்வு வறுமையாக இருந்தாலும், எதிர்கால இறையாட்சி விருந்து அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆனால், அதற்கு தடையாக வந்தது, இயேசுவின் புதிய போதனை.

தான் போதிப்பது மக்கள் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை, இயேசு தெரிந்திருந்தாலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், அதன் மூலமாக மக்களை சிந்திக்க வைப்பதிலும் இயேசு கருத்தோடு செயல்படுகிறார்.

இன்றைக்கு மக்களை சிந்தனையில்லாத மழுங்கட்டைகளாக இருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். எனவே தான், தொலைக்காட்சியைக் கொடுத்து, அவர்களின் வாழ்வை கெடுத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

மக்கள் சிந்திப்பதை மறந்து, ஒருவிதமான மயக்கநிலையிலும், அடிமைநிலையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு நமது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் போதிக்க, முயற்சி எடுப்போம்.

Saturday, 27 February 2016

திருந்திவாழ அழைப்பு!

பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை, யூதா்கள் இயேசுவுக்கு அறிவிக்கின்றனர்.

ஆனால், இயேசுவின் பதில், கேள்வியாக அமைவது நமக்கு வியப்பைத் தருகிறது.

பிலாத்து கொன்றான் என்ற செய்திக்கும், இறந்தவர்கள் மற்றெல்லாரையும் விட பாவிகள் என நினைக்கிறீர்களா? என இயேசு கேட்ட கேள்விக்கும் தொடர்பு இல்லாதது போல தோன்றுகிறது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய உண்மையான விளக்கம் நமக்கு தெரியவரும்.


இயேசுவிடம் அந்த செய்தியைச் சொன்னவர்கள், உள்ளத்தில் ஒன்றை வைத்து, இயேசுவிடத்தில் வெறும் செய்தியை மட்டும் சொல்கிறார்கள். அவர்களின் உள்ளத்தில் மறைத்த செய்தி என்ன?

வாழ்வை முழுமையாக முடிக்காமல் கொலை செய்யப்பட்டோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ இறக்கிறவர்கள், பாவிகள் என்ற மனநிலை, யூதா்கள் மத்தியில் இருந்தது. அதனால் தான் கடவுள் அவர்களைத் தண்டித்துவிட்டார் என்று, அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், இயேசு இங்கிருக்கிறவர்களை விட, அவர்கள் பெரிதாக குற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை, என்று பதில்கொடுக்கிறார்.

இன்றைக்கு நாமும் நமது குற்றங்களை மறைத்து, அடுத்தவர் செய்யும் தவறுகளை, சிறிய குற்றங்களை, மிகப்பெரிதாக நாம் உருவாக்கிவிடுகிறோம்.

நாம் செய்கிற பாவம், நமது கண்களுக்கு தெரிவதில்லை. அடுத்தவரின் குற்றங்கள் தான், நமக்கு மிகப்பெரிதாகத் தெரிகிறது. அந்த தவறான மனநிலையிலிருந்து திருந்தி வாழ, இயேசு விடுக்கும் அழைப்பிற்கு செவிகொடுப்போம்.

Friday, 26 February 2016

வாழ்வில் உயர்ந்த மதிப்பீட்டைக் கடைப்பிடிப்போம்!

யூதச்சட்டப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் அவரது விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக்கொடுக்க முடியாது. சொத்துக்களை பிரிப்பதில் ஒருசில ஒழுங்குகளை அவர்கள் வகுத்திருந்தனர். இணைச்சட்டம் 21: 17 ல் சொல்லப்பட்டிருப்பதுபோல மூத்தமகனுக்கு சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், அடுத்தவருக்கு மீதியுள்ள ஒரு பங்கும் செல்லும்.

தந்தை இறப்பதற்குமுன் சொத்துக்களை பிரிப்பது என்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று. நாளைய நற்செய்தியில் இளையமகன் கேட்பது, தன்னுடைய பங்கைத்தான். ஆனால், அவன் கேட்கிற முறையிலேயே, அவனுடைய தவறான ஒழுக்கமுறைகளும், பழக்கவழக்கங்களும் வெளிப்படுகின்றன.

தந்தை உயிரோடு இருக்கும்போதே சொத்துக்களை பங்குகேட்கிறான் என்றால், தந்தையின் உயிரை அவன் பொருட்டாக மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், தந்தை முழுமையான அன்போடு அவன்கேட்டபொழுது மறுப்பேதும் இன்றி கொடுக்கிறார்.

தன்னுடைய மகன் துன்பத்தில்தான் வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறர். அவனுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கிறார். அதேபோல், அவன் திருந்தி வரும்போது அவனை ஏற்றுக்கொள்கிறார்.

நாளைய  நற்செய்தியில் ஊதாரி மைந்தனின் மனமாற்றமும், கடவுளின் மன்னிப்பும் அதிகமாக பேசப்பட்டாலும், இந்த உவமை மற்றொரு முக்கியமான கருத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது.

இந்த உவமை யாருக்கு சொல்லப்படுகிறது? என்பதில்தான் இந்தப்பகுதியின் முக்கியமான கருத்து அமைந்திருக்கிறது. இயேசு இந்த உவமையைச்சொன்னபோது, பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். (லூக்கா 15: 2).


இந்த உவமையில் வருகிற மூத்தமகன்தான் கவனிக்கப்பட வேண்டியவனாக இருக்கிறான். மூத்தமகனை பரிசேயர்களோடும், மறைநூல் அறிஞர்களோடும் இயேசு ஒப்பிடுகிறார். இந்த மூத்தமகன் தான் நேர்மையாளன் என்ற மமதையோடு காணப்படுகிறான். அவன் தன்னை முன்னிலைப்படுத்துகிறவனாக இருக்கிறான்.


தன்னுடைய மகன் திரும்பி வந்ததும் அவனை ஏற்றுக்கொள்கிற தந்தையின் மீது கோபம் கொள்கிறவனாக இருக்கிறான். அடுத்தவரை குறைகூர்கிறவனாக இருக்கிறான்.

தாங்கள் மட்டும்தான் நீதிமான், தாங்கள் தான் நேர்மையாளர்கள் என்று மக்கள் மத்தியில் காட்டிக்கொண்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய சாட்டையடியாக இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் எப்போதுமே நம்மைப்பற்றி உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கிறோம். அது தவறில்லை. ஆனால், நம்மை முன்னிறுத்தி, மற்றவர்களை தரம்தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எப்போதும் மற்றவர்களைப்பற்றியும் உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சியான, பக்குவமடைந்த மனநிலையை. அத்தகைய மனநிலையை இறைவனிடம் வேண்டுவோம்.

Thursday, 25 February 2016

இறைவன் தரும் சுதந்திரம்!

இஸ்ரயேல் மக்கள் திராட்சைத்தோட்டத்தோடு தங்களை ஒப்பிடுவதை பழையஏற்பாட்டில் நாம் பார்க்கலாம். எசாயா 5: 7 “படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே”. பொதுவாக திராட்சைத்தோட்டங்கள் முள்வேலிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

கரடி போன்ற கொடூரமான காட்டுவிலங்குகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்து பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு திராட்சைத்தோட்டத்திலும் அகன்ற, வாய்திறந்த தொட்டி, மேல் ஒன்றும், அதை ஒட்டி கீழேயும் அமைக்கப்பட்டிருந்தது. மேல் உள்ள தொட்டி திராட்சைப்பழங்களைப் பிழிவதற்கும், கீழே உள்ள தொட்டி பிழிந்த சாறுகளை எடுப்பதற்கும் பயன்பட்டது.

இரண்டு தொட்டிகளையும் குழாய்போன்ற அமைப்பு இணைத்தது. அதுமட்டுமல்லாது, திராட்சைத்தோட்டத்தில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தினால் இரண்டு பயன்பாடுகள் இருந்தன. திருடர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கையாக தோட்டத்தைப் பாதுகாப்பதற்கும், திராட்சைத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் தங்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாலஸ்தீனம் ஆடம்பர வாழ்வுக்கு ஏற்ற இடமில்லை என்பதால், பொதுவாக திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் தங்களின் திராட்சைத்தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, குத்தகைப்பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கவனமாக இருந்தார்கள். இதுதான் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலை.


இயேசு இந்த உவமையை தலைமைக்குருக்களுக்கும், மக்களின் மூப்பர்களுக்கும் கூறுகிறார். அதாவது கடவுள் மக்களை வழிநடத்தும் பொறுப்பைக்கொடுத்தவர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, கடவுளுக்கு கணக்கு கொடுக்க தவறிவிடுகின்றனர். கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி அவர்களின் பொறுப்புக்களை நினைவூட்டுகிறார்.

அவர்களோ கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, தன்னுடைய மகனை அனுப்பினாலாவது திருந்திவிடுவார்கள் என நினைக்கிறார். ஆனால், அவர்களோ அவரைக்கொன்றுவிடுகிறார்கள். ஆனாலும், கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆனதுபோல, அவர்கள் கொன்ற அவருடைய மகன் வழியாக, இந்த உலகத்திற்கு கடவுள் வாழ்வுகொடுக்கிறார்.

இங்கே நமக்கு சிந்தனையாக தரப்படுவது, கடவுள் நமக்குத்தருகிற முழுமையானச்சுதந்திரம். கடவுள் எப்போதுமே நம்மை வற்புறுத்துவது கிடையாது. நமக்குத்தேவையான அனைத்தையும் கொடுத்து முழுமையானச் சுதந்திரத்தை அவர் எப்போதும் தருகிறார்.

ஆனால், நம்முடைய கர்வம், ஆணவம், அகந்தை நமது பொறுப்பை தவறாகப்பயன்படுத்த நம்மைத்தூண்டுகிறது. தொடக்கநூலில் நம்முடைய முதல்பெற்றோர் செய்த பாவமும் இதுதான்.

இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக்கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம்.

Wednesday, 24 February 2016

இறை மடி தவழும் குழந்தை!

"அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்"

நேற்றைய தினம் வலப் பக்கம் அல்லது இடப்பக்கம் அமர, கிண்ணத்தை இயேசுவின் இரத்தத்தால் அல்லது உழைப்பின் வியர்வைத் துளிகளால் நிரப்பி நாமும் குடித்து பிறரும் குடித்து நிறைவடையச் செய்ய வேண்டும் என இயேசு கூறியதைப் படித்தோம்.

இரண்டு மனிதர்களை நாளைய வாசகத்தில் சந்திக்கிறோம். ஒருவர் தன் கிண்ணத்தை விலையுயர்ந்த தண்ணீரால் நிரப்பியிருக்கிறார்.

 ஒருவேளை விலையுயர்ந்த மதுவினால் நிரப்பியிருப்பார் என தெரிகிறது. ஏனெனில் அவர் பணக்காரர். செல்வர். மற்றவர் பெயர் இலாசர்.

 இவர் வருமையின் மையத்தில் நசுங்கி கசங்கியதால் தன் கிண்ணத்தை கண்ணீராலும் செந்நீராலும் நிரப்பியிருந்தார்.

தன் துன்பக் கிண்ணத்தைத் தினமும் பருகி, இயேசுவின் பாடுகளின் கிண்ணத்தில் தனக்கென ஒரு பங்கும் வைத்துக்கொண்டார்.

தன் துன்பக்கிண்ணத்தை இயேசுவின் புதிய உடன்படிக்கையின் கிண்ணமாக இந்த ஏழை இலாசர் தினமும் குடித்து வாழ்ந்ததால், வலப் பக்கமோ அல்லது இடப்பக்கமோ அல்ல, மடியில் அமர்த்தி அழகு பார்க்கும் அருமையான ஆசீரை அருள்வதைக் காண்கிறோம்.

 அன்றாடம் நம் கிண்ணங்களை இவ்வாறு நிரப்பி, குடித்து, பகிர்ந்து வாழ்ந்தால், தந்தை இறைவனின் மடியில் தவழும் குழந்தையாக இருப்போம். இவ்வுலகிலும் அன்பு இயேசுவின் அருள் பெற்ற மக்களாக  இனிது வாழ்வோம்.

Friday, 19 February 2016

அன்பு வாழ்வு!

பகைவர்களிடமும், துன்புறுத்துவோரிடமும் நம் அனைவரையும் அன்பு செய்ய இயேசு அழைப்பு விடுக்கின்றார். எதற்காக இத்தகைய அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்? நாம் கடவுளின் பிள்ளைகளாக, கடவுளைப்போல இருக்க வேண்டும் என்பதுதான், இயேசுவின் விருப்பம்.

அப்படி இருப்பதற்கு, பகைவரை அன்பு செய்ய வேண்டும். இங்கு இயேசுவின் ”உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்” என்கிற வார்த்தைகள் நினைவுகூறத்தக்கவை. நமக்குள்ளாக கேள்வி எழலாம்? விண்ணகத்தந்தையைப் போல நாம் எப்படி நிறைவுள்ளவராக முடியும் என்று? அதற்கான வழிதான், பகைவரை அன்பு செய்வது.

இயேசு கடவுளின் இரக்க குணத்தை உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார்? கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழைபொழியச்செய்கின்றார். அவர் இஸ்ரயேலுக்கு வெயிலையும், புறவினத்தார்க்கு புயலையும் கொடுப்பதில்லை. அவருடைய இரக்கம் அனைவருக்கும் சமமே. யூத போதகர் நடுவில், கடவுளின் இரக்கக்குணத்திற்கு கதை ஒன்று சொல்லப்படுகிறது.

எகிப்தியப்படைகள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறபோது, செங்கடலிலே மூழ்கி இறக்க நேரிடுகிறது. அப்போது, வானதூதர்கள் எல்லாரும் இணைந்து மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிக்கிறார்கள். அதைப்பார்த்த கடவுள், “என்னுடைய படைப்பு தண்ணீரில் மூழ்கி சாகிறபோது, நீங்கள் இப்படியா மகிழ்ச்சியடைவீர்கள்?“ என்று அவர்களைப்பார்த்து கேட்கிறார். இதுதான் கடவுளின் அன்பு. இதுதான் கடவுளின் இரக்ககுணம்.

நம் அயலார் யார்? அடுத்திருப்பவரா? அல்லது தேவையிலிருப்பவரா! அயலார் யார் என்ற கேள்விக்கான பதிலை இயேசு நல்ல சமாரியன் உவமையில் தருகிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்பதே இயேசுவின் நிலைப்பாடு.சாதி,சமய,இன ,மொழிகளைத் தாண்டி மனித நேயத்தோடு எவர் ஒருவர் செயல்படுவாரோ,அவரே கடவுளுக்குரியவர்.


பகைவரை மன்னிப்பதற்கு வலிமையான உள்ளமும்,எளிமையான மனமும் வேண்டும்.தான் தோற்றாலும் பரவாயில்லை,தன பகைவர் தோற்க்கவேண்டும் என்ற வெறி ஒரு முரண்பாட்டுத் தத்துவம்.அது போருக்கான தத்துவம்.

அங்கே உறைந்திருக்கும் பிடிவாத குணம்,அகங்காரம் இவை ஒருவரது சுயமதிப்பின் தரத்தையும்,உறவின் தரத்தையும் பாதித்து பழுதடையச்செய்துவிடும்.

அன்பைப்பற்றித் தெரிந்துகொள்ள ஒருவர் விரும்பினால் மற்றவர்களுக்காகத் தியாகம் செய்தவர்களைப் பற்றிப் படிக்கவேண்டும்.இயேசு தியாகம் செய்தவர், அவரைப் பாடமக்குவோம்.அவருடைய குணங்களை நமதாக்குவோம்.

கடவுளின் சாயலைப்பெற்றிருக்கிற நாம் அனைவரும் அத்தகைய அன்பை மற்றவர் மீது காட்டுவதற்கு அழைக்கப்படுகிறோம். பகைமையும், வெறுப்புணர்வும் அதிகமாகிக்கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், அன்பு வாழ்வு வாழ்வோம்.

Thursday, 18 February 2016

கோபம் அகற்றுவோம்!

விடுதலைப்பயணம் 20: 13 சொல்கிறது: கொலை செய்யாதே. இயேசு இதற்கு மாற்றாக ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார்.
 “தம் சகோதரர், சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார்” (5: 22).

மற்றவரிடம் கோபப்படுதலே நம்மை தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாக்கும் என்பது இயேசுவின் வாதம். கோபம் என்றால் என்ன? விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கோபம் என்ற வார்த்தையின் உண்மையான பொருளென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கிரேக்க மொழியில் ‘கோபம்’ என்ற பொருளுக்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. முதல் வார்த்தை: ‘துமோஸ்’. காய்ந்த வைக்கோற்புல்லில் எரிவதற்கு சமமாக இதனைப் பொருள்படுத்தலாம். காய்ந்த வைக்கோற்புல் உடனடியாக எரியக்கூடியது. அதேபோல் எரிந்த வேகத்தில் அணையக்கூடியது.

இந்த வகையான கோபம் உடனடியாக வந்து, வந்த வேகத்தில் மறைந்துவிடக்கூடியது. இரண்டாம் வார்த்தை: ‘ஓர்கே’. இது ஆழமானது. நீண்டநாள் இருக்கக்கூடியது. இந்த வகையான கோபம் எளிதில் மறையாத, வைராக்யம் நிறைந்தது. இங்கே இயேசு பயன்படுத்துகிற வார்த்தை இந்த இரண்டாம் வகையான வார்த்தையாகும். இதனை இயேசு கண்டிக்கிறார்.

விவிலியத்தின் ஆங்காங்கே கோபம் கண்டிக்கப்படுகிறது. யாக்கோபு 1: 20 சொல்கிறது: “மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது”. கொலோசையர் 3: 8 ல் பார்க்கிறோம்: “நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள்”

கோபம் கடவுளுடைய அருளைப் பெற தடையாயிருக்கிறது என்று இறைவார்த்தை சொல்கிறது. அப்படியென்றால், கோபம் எந்த அளவுக்கு நமக்கு அழிவைத்தர வல்லது என்பது இதிலிருந்து புலனாகிறது. கோபத்தை அறவே நம்மிடமிருந்து அகற்ற நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் கடவுளின் வல்லமையை நாம் பெற முடியும்.

இயேசு கூறுவது முற்றிலும் உண்மை. கொலை மட்டுமே மனிதனின் நிம்மதி வாழ்வைக் குலைத்துவிடுவதாக நினைக்கக் கூடாது. சினம், இன்னும் ஒரு படி இறங்கிச் சென்றால், கடின வார்த்தை மனிதனின் வாழ்வைக் கெடுத்துவிடுகிறது.

எனவேதான் இயேசு இறை வெளிப்பாட்டின் நிறைவை இத்தகைய மாற்றங்கள் வழியாக வளங்குகிறார். எனவே கொலை செய்வதுதான் பாவம் என்னும் பழைய ஏற்பாட்டு நியதியை மாற்றி, கோபமும் கடின வார்த்தையும் கொலைக்குச் சமமானது என வலியுறுத்துகிறார்.

இவ்வாறு கடின வார்த்தைகளால், கடுஞ்சினத்தால் கொலைக்குச் சமமான மன இருக்கத்தையும் அழுத்தத்தையும் தனக்கும் அயலானுக்கும் கொடுத்து அவர்களில் வாழ்வை அழித்துவிடுவதால், கடினவார்த்தையும் கோபமும் கொலைக்குச் சமமானவை.

இச் சூழல்களில் ஆலயம் வந்தால் அந்த மன இருக்கமும் அழுத்தமும் குறைந்துவிடும். பாவ மன்னிப்பும் பரிகாரப்பலியும் செலுத்தினால் குற்றமும் குறையும் நீங்கிவிடும்,உண்மைதான்.

ஆயினும் இயேசு உணர்த்தும் உண்மை பெரிது. வெறும் சடங்கும் ஆச்சாரப் பலியையும்விட, ஆண்டவனோடு மனம் ஒன்றித்து,செய்த தவறுக்காக மனம் வருந்தி, மனமாற்றம் அடைந்து, வருத்திய நபரோடு நல்லுறவை ஏற்படுத்திய பின் ஆண்டவனுக்குச் செலுத்தும் பலியே இறைவனுக்கு ஏற்புடைய பலியாகும் என்பது முற்றிலும் சரியான புதிய வெளிப்பாடு மட்டுமல்ல. எல்லோருடைய வாழ்வுக்கும் உகந்தது.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

Wednesday, 17 February 2016

இறை ஆற்றலைத்தருவது செபம்!

செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம் என்பது அவர்களின் எண்ணம்.

செபத்தைப்பற்றி யூதர்களுக்கு ஏதாவது கவலை இருந்தததென்றால், அது நாள்முழுவதும் நம்மால் செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள்.


 யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு, செபிப்பதால் கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம் செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன் நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்கு பதிலையும் இன்றைய நற்செய்தியிலே தருகிறார்.

செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயுதம் என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இயேசு இங்கே தருகிற எடுத்துக்காட்டு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவு. அதாவது, ஒரு மகன் ஊதாரித்தனமாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.


வீட்டில் யார் பேச்சையும் கேட்காமல், தான்தோன்றித்தனமாக திரிகிறான். தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறான். குற்றங்கள் பல செய்கிறான். அப்படி ஒருவருடைய மகன் இருப்பதால், அந்த தந்தை அவனை வெறுத்து விடுவாரா? ஒருவேளை அந்த மகனுக்கு அடிபட்டு விட்டது, அல்லது அவன் தவறுசெய்தது தெரிந்து காவல்துறை அழைத்துச்சென்று விட்டது, அல்லது நோயுற்று இருக்கிறான்.

அவனுடைய தந்தை சும்மா விட்டுவிடுவாரா? எப்படி இருந்தாலும் தன் மகன் என்ற பாசம் அவரை உடனடியாக அவனுக்கு உதவ உந்தித்தள்ளாதா? எப்படி இருந்தாலும் தன் இரத்தம் என்கிற அந்த உணர்வு அவனைக்காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்குமா?

சாதாரண மனிதர்களுக்கே இந்த உணர்வு என்றால், படைப்பின் சிகரமான மனிதனை தன் முழுமையான அன்பில், தனது சாயலில் படைத்த இறைவனுக்கு நம்மீது எவ்வளவு அன்பிருக்கும்? நாம் கேட்பதை தராமல் இருப்பாரா? நம்மை தேவையில் இருக்கவிடுவாரா? என்பதுதான் இயேசுவின் கேள்வி.

இறைவன் நிச்சயம் நம்முடைய தேவைகளை அறிந்தவராக இருக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் தந்தால் அவர் நல்ல தந்தையாக இருக்க முடியாது. மாறாக, நமக்குத் தேவையானதை தருவார். அதுவும் நாம் விரும்புகிறபடியெல்லாம் அல்ல, அவரது திருவுளத்தின்படி.

ஏனென்றால் அவர் முக்காலமும் அறிந்தவர். நம்முடைய தேவைகளை நிறைவாகத் தெரிந்தவர். எனவே, கடவுள் நிச்சயம் நமக்குத் தேவையானதை, அவருடைய வழியில் தருவார் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

இறைவன் நம்மைப் படைத்தவர் மட்டுமல்ல, பராமரித்து பாதுகாக்கிறவரும் கூட. நமக்கு பார்த்து பார்த்து நல்லது செய்கிறவர். நம்முடைய தேவை அறிந்து நமக்கு உதவி செய்கிறவர்.

 இறைவனை நம்பிக்கையோடு அணுகுவதுதான் கடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவரின் பிள்ளைகளாகிற நம் அனைவரின் கடமையாகும்.

Monday, 15 February 2016

மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில்!

‘பாவம்’ என்கிற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டிலே ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஐந்து வார்த்தைகளின் பொருளை நாம் பார்ப்போம்.

1.‘hamartia’ இதன் பொருள் இலக்கிலிருந்து தவறுவது. இலக்கை நோக்கி குறிவைத்து சுடும்போது, இலக்கு தவறுவது. அதாவது, நாம் அடைய வேண்டிய இலக்கிலிருந்து வழிதவறிச்செல்வது பாவம்.

2. ‘parabasis’ இந்த வார்த்தையின் பொருள், வரைமுறையைக்கடந்து செல்வது. இதுதான் நமது வரைமுறை என்று தெரிந்திருந்தும், அதற்குமேல் செல்வது பாவம்.

3. ‘paraptoma’ என்பது, தவறி விழுவது. சகதி நிறைந்த சாலையில் நடந்துசென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், நம்மையறியாமல் திடீரென்று வழுவி கீழே விழுந்துவிடுகிறோம்.

4. ‘anomia’ என்பது, சட்டத்தை மீறுவது. நன்மை எது? தீமை எது? என்று நமக்கு நன்றாகத்தெரியும். இருந்தும், வேண்டுமென்றே தீமையைத்தேர்ந்தெடுப்பது.

5. ‘opheilema’ என்பது, கடமையில் தவறுவது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கடமையில் இருந்து தவறுவது.

நாளைய   நற்செய்தியிலே இயேசு கற்றுத்தந்த செபத்திலே இடம்பெற்றிருக்கிற பாவம் (குற்றம்) என்கிற சொல்லுக்கு பொருளாக மேற்கண்ட ஐந்தாவது வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதாவது கடமையில் தவறுவது (opheilema’).

கடவுளுக்கும், நம் அயலாருக்கும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஒரு தந்தையாக, தாயாக, சகோரனாக, சகோதரியாக, உறவினராக, ஒரு நாட்டின் குடிமகனாக, நமக்கென்று பல்வேறு கடமைகள் இருக்கிறது. இந்த உலகத்திலே இருக்கிற யாரும், நான் என்னுடைய கடமையை முழுமையாகச்செய்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

அத்தகைய கடமையில் இருந்து நான் தவறும்போது, இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ஆனால், இறைவன் நம்முடைய குறைகளை, குற்றங்களை அறிந்தவராக, நம்மையெல்லாம் மன்னிக்கிறவராக இருக்கிறார்.

நாம் செய்த தவறுகளை கடவுள் மன்னிக்கத்தயாராக இருப்பதுபோல, நாமும் மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் எதிர்பார்ப்பு.

கடவுள் என்னை மன்னிக்க வேண்டும், எனதுநிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிற நான், மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும், மற்றவர்களின் நிலையையும் அறிந்துகொள்ள முன்வர வேண்டும்.

சிலுவையில் கடினமான வேதனைகளுக்கு நடுவிலும், தான் தண்டிக்கப்படுவது முறையே அல்ல என்று தெரிந்திருந்தும், தன்னுடைய இந்த அவலநிலைக்குக் காரணமானவர்களை, இயேசு முழுமனதோடு மன்னித்து, மன்னிப்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த உலகத்திற்கு தேவை மன்னிக்கின்ற உள்ளங்கள். நாம் அனைவரும் இறைவன் நம்மை மன்னிப்பது போல, மற்றவர்களை மன்னிக்கும் வரம் வேண்டுவோம்.

Sunday, 14 February 2016

கொடுப்பவர்களாக வாழ்வோம்!

தவக்காலம் என்பது நம்மைப் பண்படுத்துகின்ற காலம். நம்மைப் பக்குவப்படுத்துகின்ற காலம். நமது வாழ்வை செதுக்குகின்ற காலம்.

தவக்காலம் நமக்குக் கற்றுத்தரும் ஒரு முக்கியமான பாடம் ”கொடுத்தல்”. கொடுத்தல் நமது வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும்.

கொடுத்தல் இயல்பானதாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்ப்பதாக இருக்கக்கூடாது. நாம் கொடுக்கிறபோது, அது நமக்குள்ளாக வலியை ஏற்படுத்த வேண்டும். வலியோடு கொடுப்பதுதான் உண்மையான கொடுத்தல்.

நாளைய  நற்செய்தியில் கொடுப்பவர்களுக்கு கடவுள் எப்படி கொடுக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகச்சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்தவர்கள், தாங்கள் கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தோடு கொடுக்கவில்லை.

தாங்கள் கொடுத்தால் தங்களுக்கு பிரதிபலன் கிடைக்கும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. கொடுத்தல் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. ஆனால், இடதுபுறம் உள்ளவர்கள் ஏதாவது கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், கொடுத்திருப்போம் என்று சொன்னவர்கள்.

அது உண்மையான கொடுத்தல் அல்ல. அவர்களுக்குரிய கைம்மாறை அவர்கள் நிச்சயமாகப் பெற்றுக்கொண்டார்கள்.

நம் வாழ்வு ஒரு தண்டனையாக மாறுவதும் ரம்மியமான நிலை வாழ்வாக மாறுவதும் நம்  கையில் உள்ளது. இந்த உலகில் வாழும்போதும் இனிய இதய மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக அதை மாற்றுவதும், வேதனையும் விரக்தியும் நிறைந்த நரக வாழ்வாக மாற்றுவதும் உங்களிடமே உள்ளது.

தனக்காக வாழும் எவரும் தங்கள் வாழ்வை ஒரு தண்டமாக, தண்டனையாக மாற்றிவிடுகின்றனர். பிறருக்காக வாழும் அனைவரும் தங்கள் வாழ்வை எல்லாம் பெற்ற நிறை வாழ்வாக அமைத்துவிடுகின்றனர்.

இன்னும் சிறப்பாக, சமுதாயத்தின் சின்னஞ்சிறியோர்க்காக நாம் வாழும்போது, அந்த நிறைவான வாழ்வின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறேரம்.

"நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்"

இத்தகைய சின்னஞ்சிறார்களுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு இழப்பும் தியாகமும் உங்களுக்கு ஒரு முதலீடு. உங்கள் நிறை வாழ்வின் மூலதனம்.இனிது வாழ்வோம்.

கடவுள் கொடுத்த இந்த வாழ்வில் மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே, வாழ்விற்கு நாம் செய்கிற உண்மையான கைம்மாறாகும். வாழ்வு நமக்குக் கொடுத்திருக்கிற அனைத்து கொடைகளுக்கும் நன்றி செலுத்துவோம். அதை நமது வாழ்வை மற்றவருக்காக வாழ்ந்து செலுத்துவோம்.

Saturday, 13 February 2016

சோதனைகள் வெல்வோம் சாதனைகள் படைப்போம்

மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகிறார். யூதர்களுக்கு மோசே மிகப்பெரிய இறைவாக்கினர். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை ‘புதிய மோசேயாக’ அறிமுகப்படுத்துகிறார்.

அதாவது திருச்சட்டத்தை நிறைவுசெய்ய வந்த புதிய மோசே தான் இயேசுகிறிஸ்து என்கிற கருத்தியலுக்கு மத்தேயு முக்கியத்துவம் தருகிறார்.


எனவே தான் மோசேயின் வாழ்வோடு நடந்த நிகழ்வுகளை இயேசுவோடு ஒப்பீடு செய்கிறார். மோசே பிறந்தபொழுது குழந்தையைக்கொல்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டது போல, இயேசுவின் பிறப்பின்போது நடந்த நிகழ்ச்சிகளையும் சூழ்ச்சிகளையும் விவரிக்கிறார்.


மோசே இஸ்ரயேல் மக்களை பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு வழிநடத்தியதுபோல, புதிய மோசே இயேசுகிறிஸ்துவும் பாவ இருளில் இருக்கிற மக்களை, ஒளிவாழ்வுக்கு அழைத்துச்செல்வதை படிப்படியாக விவரிக்கிறார். அதனுடைய முக்கியமான பகுதிதான் இயேசு அலகையினால் சோதிக்கப்படுகிற நிகழ்ச்சி.

சோதனை என்பது எல்லோருடைய வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. அதிலும் குறிப்பாக, நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, கடவுளின் இறையாட்சி இந்த மண்ணில் வர உழைக்கிற ஒவ்வொவருடைய வாழ்விலும் சோதனைகள் நிச்சயமாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்குத்தெளிவாகக்காட்டுகிறது.

அத்தகைய சோதனையைக்கண்டு பயப்படாமல், துணிவோடு, இறைவனின் துணையை நாம் நாடினால் நம்மால் சோதனைகளை வெல்லமுடியும் என்பது இயேசு கற்றுத்தருகிற பாடம். இயேசு பலவீனமாக இருக்கிறார். உடலால், உள்ளத்தால் சோர்ந்து இருக்கிறார். ஆனாலும், அவர் தெளிவாக, துணிவோடு இருக்கிறார்.

 ஒவ்வொரு முறையும் சாத்தான் அவரைச்சோதிக்கிறபொழுது, இறைவார்த்தையின் வழியாக இறைவனின் வல்லமை அவரிடமிருந்து வெளிப்படுகிறது. இறைவார்த்தையின் இறைப்பிரசன்னம் அவருக்கு உறுதுணையாக இருந்து அவரை வழிநடத்துகிறது. இறுதியில் சோதனைகளை எதிர்த்து வெற்றிபெறுகிறார்.

நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வை அணுகும்போது, நமக்கு ஏற்படுகின்ற தடைக்கற்கள் ஏராளம், ஏராளம். அதைவிட நமக்கு வருகிற சவால்கள் நம்மை பாதாளத்திற்கு இழுத்துச்செல்லும் வலிமை படைத்தவை.

ஆனால், எவற்றிற்கும் அஞ்சாமல் துணிவோடு, இறைப்பிரசன்னத்தை நாடி அவற்றை எதிர்கொண்டால், நாம் வெற்றி பெறுவோம்.


Friday, 12 February 2016

பாவிகளின் நண்பன்!

பாலஸ்தீனப்பகுதியில் வாழ்ந்த மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் வரிதண்டுபவர்கள். காரணம் ஏழை, எளிய மக்களை சுரண்டி அதிகச்சுமைகளை அவர்கள் மீது இந்த வரிதண்டுபவர்கள் திணித்ததால் தான். பாலஸ்தீனம் இயேசு வாழ்ந்த காலத்தில் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தது.

இப்போது நம்முடைய பழக்கத்தில் உள்ள குத்தகை முறை தான், உரோமையர்களின் காலத்திலும் இருந்தது. அதாவது, குறிப்பிட்ட ஒரு மகாணத்திற்கு அங்குள்ள மக்கள்தொகை அடிப்படையில், இவ்வளவு குத்தகைப்பணம் என்ற அளவில் ஏலம் விடப்பட்டது.

யார் அதிக ஏலத்திற்கு எடுக்கிறார்களோ, அவர்கள் அந்தத்தொகையை செலுத்திவிட்டு, அந்த மகாணத்தில் வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்றுக்கொள்வார்கள். இந்த வரிவசூலிக்கிற உரிமையைப்பெற்ற ஒப்பந்தக்காரர்கள் சில வேலையாட்களை பணியமர்த்தி, மக்களிடத்தில் வரிவசூலித்து பணத்தைப்பெற்று வந்தனர். இதில் தான் நிறைய முறைகேடுகள் நடந்து வந்தன.

அவர்கள் மனம்போல் வரிகளை மக்கள் மீது திணித்தனர். முறையான, நியாயமான, ஒழுங்கான வரிவசூலிக்காமல் தங்கள் சுயஇலாபத்திற்காக மக்களை சுரண்டிப்பிழைக்கிறப் பணியை வரிதண்டுபவர்கள் செய்து வந்தனர். எனவேதான், மக்கள் மத்தியில் அவர்களைப்பற்றி வெறுப்பு மேலோங்கியிருந்தது. எந்த அளவுக்கு என்றால், கொள்ளைக்காரர்கள், திருடர்களோடு மக்கள் இவர்களை ஒப்பிட்டுப்பேசினர்.


இப்படிப்பட்ட பிண்ணனியில்தான் இயேசு வரிதண்டுபவரான மத்தேயுவை இயேசு அழைக்கிறார். மக்கள் மத்தியில் அதிகமாக மதிக்கப்பட்ட இயேசு, மக்கள் மத்தியில் அதிகம் வெறுக்கப்பட்ட மத்தேயுவை அழைக்கிறார். இங்கே மத்தேயுவின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது.

மத்தேயுவுக்கு பெரும் மகிழ்ச்சி. தன்னை இயேசு மற்றவர்களுக்கு நடுவில் அடையாளப்படுத்தி, தன்னை பின்பற்றச்சொன்னது அவரது வாழ்வில் மறக்க முடியாத தருணம். இந்த மகிழ்ச்சியை தான் மட்டும் அனுபவிக்கவில்லை. பெற்ற மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் ஆசைப்படுகிறார். மகிழ்ச்சி என்பது ஒருவரோடு தேங்கிவிடக்கூடாது.

அது விரிவுபட்டு மற்றவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்கு மத்தேயு நல்ல உதாரணம். எனவே தான், தன் நண்பர்களையும், விருந்தினர்களையும் அழைத்து இயேசுவோடு மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்.

தான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை, இயேசு என்கிற விலைமதிப்பில்லாத செல்வத்தை தன்னுடைய தோழர்களுக்கும் அறிமுகப்படுத்தி, அவர்களது வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.

பெற்ற மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வது கிறிஸ்தவத்தின் தலையாய பண்புகளில் ஒன்று. உயிர்த்த இயேசுவைக்கண்ட சீடர்களின் வாழ்வும் இதை மையமாக வைத்தே இருந்தது.

தாங்கள் அனுபவித்த இயேசுவை, நற்செய்தியின் மகத்துவத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சீடர்கள், எவ்வளவோ துன்பங்களைத்தாங்கிக்கொண்டு ஆண்டவரின் நற்செய்தியை உலகமெங்கிலும் அறிவித்தனர். நாமும் வாழ்வில் நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களையும் சென்றடையும் வண்ணம் வாழ்வோம்.


Thursday, 11 February 2016

எதிலும் திருப்தி வேண்டும்!

எதிலும் திருப்தி வேண்டும் "போதுமென்ற மனமே பொன் செய் மருந்து" என்றெல்லாம் சொல்வார்கள். வாழ்க்கையில் திருப்தி கொள்வதென்பது , நிம்மதியான வாழ்க்கைக்கான வழியாகும்.விரும்பியது கிடைத்ததும் இது போதும் என்று எண்ணுவது திருப்தி.


கிடைத்த பின்னும் இது போதாது என்று ஏங்குவது அதிருப்தி. வாழ்க்கையில் தோன்றும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான  காரணம் இந்த திருப்தியின்மை, ஆசை ,பேராசை ஆகியவை. திருப்தியுடன் வாழ்வதென்பது ஒரு உயரிய பண்பு.


திருப்தியுடன் வாழ்வதனால், அதிக  நன்மைகள் உண்டு. ஆனால் திருப்தியுடன் வாழ்பவர்கள் வெகுக்குறைவு. எங்கெல்லாம் போதுமென்கின்ற மனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் எளிமை இருக்கும். அதுமட்டுமல்ல, போதுமென்கின்ற மனம் கொண்டவர்களிடையே கவலை, பயம், ஏமாற்றம், பொறாமை, இவைகளை காண  முடியாது." திருப்தியுள்ள ஏழை பணக்காரன் ஆவான்". அதிருப்தியுள்ள பணக்காரன் ஏழை ஆவான் என்கிறார் ஹென்றி போர்ட்.

ஒன்றை விரும்புவது  அல்லது  ஆசைப்படுவது  என்பதில் மூன்று வகைகள் உள்ளன.இது  வேண்டும், எப்போது கிடைக்கிறது பார்க்கலாம், என்று இருப்பது ஒன்று. விரைவில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பொறுத்திருப்பது அடுத்தது. உடனடியாக வேண்டும் இப்போதே வேண்டும் என்பது மூன்றாவது.இவை மூன்றுமே நிம்மதியின்மையை தரக்கூடியவை. அவற்றுள் மூன்றாவது நிம்மதியை மட்டுமல்ல விபரீதத்தையும் விளைவிக்க கூடியவை.

ஒன்றை உடனடியாக அடைய நேர்மையான வழி தெரியவில்லை என்றாலோ அல்லது வழியில்லை என்றாலோ முறைக்கேடாக முயற்சி தோன்றும். முயற்சி திசை திரும்பும், விளைவு விபரீதத்தில் முடியக்கூடும்.

அவசியத்திற்காக வாங்குவது எளிமை. அலங்காரத்திற்காக வாங்குவது ஆடம்பரம். எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் எது கிடைத்தாலும் இது போதுமென்று எண்ணி திருப்தி கொள்வார்கள்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எது கிடைத்தாலும் இது போதாது என்று எண்ணமே பிராதானமாக இருக்கும்.அதுமட்டுமல்ல, விரும்பியது கிடைத்த பின்னும் அத்துடன் திருப்திபடாமல் அது இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுவார்கள்.அவர்களது ஆசை அடங்காத ஆசை இதுவே அதிருப்தி என்பது.

திருப்தி என்பது பொருள்கள் சேகரிப்பதைக்  கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. உணவு, உடை, ஆசைகள், இன்னும் என்ற எதிர்பார்ப்புகள் இப்படி அனைத்திலும் அளவுடன் இருக்க வேண்டும்."அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்றனர்  நம் முன்னோர்கள்.

ஒன்றை விரும்பி அதை அடைந்தபின் மனம் சும்மாயிருப்பதில்லை வேறொன்றின் மீது தாவும்.அது மனித இயல்பு. அப்படியே சும்மா இருக்க முயற்சித்தாலும் சினிமா தொலைக்காட்சி விளம்பரங்கள் ஆகியவை மனதை நிலை குலைய வைக்க தயாராக உள்ளன.எனவே திருப்தி கொள்வதற்கு மன கட்டுப்பாடு மிகவும் அவசியம்.


ஒரு முறை பார்வதியும், பரமசிவனும்,வானமண்டலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பூலோகத்தில் மக்கள் படும் அவதியைப் பார்த்து மனம் பொறுக்காமல் பார்வதி பரமசிவனிடம் " உடனடியாக இவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தாக வேண்டும்" என்று   வேண்டினாள்.

"பார்க்கலாம்" என்றார் பரமசிவன்."அதெல்லாம் முடியாது இப்போதே வேண்டும்" என்று வற்புறுத்தியதின் பேரில் பூலோகத்திற்கு வந்து மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து விட்டு சென்றனர்.சில காலம் கழித்து மீண்டும் அதே வழியாக செல்ல நேர்ந்த போது , பூலோகம் வந்தனர்.

ஆனால் அவர்கள்  கண்ட காட்சி அவர்களுக்கு வேதனை தந்தது.தற்போது அவர்கள் வேறு ஏதேதோ தேவைகளுக்காக சண்டை போட்டு கொண்டிருந்தனர்.


இவர்களை திருப்திபடுத்தவும் முடியாது திருத்தவும் முடியாது என்று விரக்தியுடன் திரும்பி சென்றனர். என்று ஒரு கதை. மனித மனம் எதிலும் திருப்தி கொள்வதில்லை. அதுவே மனித சுபாவம் என்பது.

"சோபனேர்" எனும் அறிஞரிடம் "சந்தோசம்  என்றால் என்ன? என்றார் ஒரு நிருபர். அதற்கு அவர் "இதற்கு பதில் சொல்வது   சற்று கடினம். காரணம் சந்தோசம் என்பது ஒருவருக்கொருவர் விதியாசப்படக்கூடும் .

ஆனால் நிம்மதியின்மை  என்றால் என்ன என்கிற கேள்விக்கு எளிதாக பதில் சொல்லி விடலாம் . மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ ஆரம்பியுங்கள் நீங்கள் ஒருபோதும் நிம்மதியுடன் இருக்க முடியாது " என்றார்.உண்மை, தற்போது மக்கள் மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ்வது சர்வ சாதாரணமாகி விட்டது. அவருடைய மகனுக்கு துபாயில் வேலை . அவளுடைய மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை. இன்னொருவருடைய மகன் ஒரு டாக்டர். இன்னொருவருடைய மகன் என்ஜினியர்.

இப்படி , இவற்றை தன்  குடும்பத்தோடு ஒப்பிட்டு வாழ ஆரம்பித்தால் நிச்சயம் நிம்மதி இருக்காது.  அதுமட்டுமல்ல நிம்மதியின்மை ஒருபுறம் இருக்க பொறாமையும் பேராசையும் பொங்கி எழ ஆரம்பிக்கும். எனவே எதிலும் திருப்தி வேண்டும்.

மக்களுடைய வாழ்க்கைக்கு அதிருப்தியும் கூட தேவை என்கிறார் ஒரு அறிஞர் . ஆனால் அது அனுகூலமானதாக நன்மைபயக்க கூடியதாக இருக்க வேண்டும். பண்டைக்கால மனித வாழ்க்கைக்கும் , இப்போதுள்ள வாழ்க்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை ஒரு வகை.அதிருப்தியின் விளைவு என்றால் மிகையாகாது. அன்று மனிதன் நடந்தான், பிறகு ஓடினான், அடுத்து பிராணிகளின் மீது பயணித்தான்.

வண்டிகள் தோன்றின. வாகனங்கள் பிறந்தன. இன்று நான்கு சக்கர வாகனங்கள், கப்பல்,விமானம், என்று பயணிக்கிறான். அன்று அவனது நடையில் வேகத்தில், தோன்றிய  அதிர்ப்தியின் விளைவு இவைகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

 தினசரி வாழ்க்கையில் நாம் உபயோகிக்கும் புதுபுது கருவிகள், சாமான்கள்,முதலானவை அதிருப்தியின் விளைவே ஆகும்.அனைவரும் வியக்க தக்க கார் ஒன்றை கண்டுபிடித்து வீதியில் ஓடவிட்ட பின்னும், ஹென்றிபோர்டின் மனதில் ஒரு அதிருப்தி .

அது என்னவென்றால் சாதாரண மக்களும் வாங்கி ஓட்டக்  கூடிய கார் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பது. அதையும் தன்  வாழ்நாளிலேயே  செய்து முடித்தார் ஹென்றிபோர்ட் .

எதையும் செய்யலாம், ஆடம்பரத்துடன் வாழலாம் என்பது, ஒருபுறமிருக்க , எளிமையாக திருப்தியுடன் வாழ்வதென்பது தான்  புத்திசாலிதனமாகும். திறமையுமாகும்.இதற்கு திடமனதும் வைராக்கியமும் தேவை. இது எல்லோராலும் ஆகக் கூடியதில்லை.


இளைஞர்களிடையே இந்த அதிருப்தி ஓரளவுக்கு இருக்க வேண்டும். முன்பைவிட இந்த முறை சற்று சிறப்பாக செய்ய வேண்டும். கூடுதலாக சாதிக்க வேண்டும். கூடுதல் சாமர்த்தியத்துடனும், திறமையுடனும் விளங்க வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.

அந்த எண்ணங்கள் வாழ்க்கையில் வினாவாக முன்னேற பெரிதும் துணை புரியும்.அப்படியானால் திருப்தியா, அதிருப்தியா என்கிற சந்தேகம் வேண்டாம்.திருப்தி வாழ்க்கைக்கு நிம்மதியைத் தரக் கூடியதாகவும், அதிருப்தி முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.


எளிமையாகவும்,திருப்தியுடனும் வாழ்வதிலுள்ள நிம்மதி வேறெதிலும் கிடைக்காது. திருப்தியுடன் வாழ்வதும் கூட ஒரு பழக்கம். இளவயது முதலே பெற்றோர்கள், சிறுவர்களுக்கு சிக்கனமான , திருப்தியான வாழ்க்கையைப் போதிப்பது நல்லது.

எல்லோருமே திருப்தியுடன் வாழப்பழகிக்  கொண்டால் ஆரோக்கியம் பெரிதும் பாதுகாக்கப்படும்.நிம்மதியாக வாழலாம்.மற்றவர்களது ஆலோசனையை கேட்காமல், உங்கள் மனதிற்கு நல்லது எது என்று  தோன்றுவதை செய்யுங்கள்.எதிலும் திருப்தியோடு வாழுங்கள்.எப்போதும்   நிம்மதியாக இருங்கள். வாழ்க வளமுடன்.

Wednesday, 10 February 2016

தூய லூர்தன்னைப் பெருவிழா!

எல்லோருடைய பிறப்பும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பார்கள்.ஆனால், என் வாழ்வில் அந்த நாளே அர்த்தமுள்ளதாக இருப்பதை நினைத்து எனக்கு மகிழ்ச்சி.அதுவும் அன்னையின் நாளாக இருப்பதை நினைத்து எனக்கு பெரும் மகிழ்ச்சி.

நாளை  தூய லூர்தன்னைப் பெருவிழா இந்த விழா பிப்ரவரி 11ம் நாள் கொண்டாடப்படுகிறது.இந்நாளை என் வாழ்வின் மிகப்பெரிய மகத்தான நாளாக கருதுகிறேன்.


இந்த நாளில் என்னை கரங்களில் தாங்கி கொண்டிருக்கும் கடவுளுக்கு நன்றி.மேலும் சிறப்பாக, என் சபை நிறுவனர்,என் சபையின் மூத்த சகோதரிகள், என் ஞான தந்தையர்கள்,என் ஆசான் தந்தை யேசு  ,என்னை வளர்த்து விட்ட என்னுடன் குழு வாழ்வில் இருந்த சகோதரிகள், சக தோழிகள்,என் பெற்றோர்கள்,என் சகோதரிகள்,சகோதரர்கள் அனைவரையும் 
நன்றியோடு நினைத்து பார்க்கின்றேன்.

இது அன்னை மரியாள் பெர்னதெத் சூபிரெஸ் என்ற சிறுமிக்கு, காட்சி அளித்ததை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுகிறது. அதுவும் பிப்ரவரி 11 முதல் ஜீலை 16, 1858 வரையில் இந்த காட்சியானது, அவளுக்கு காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவை மரியாளின் காட்சியளிப்பு என்று முதலில் கொண்டாடினர். இரண்டாம் வத்திக்கான் சங்கம் இதை தூய லூர்தன்னை நினைவு விழா என்று பெயரிட்டு, அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மாற்றியமைத்தது.

பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிருஸ். 1858 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்கச் சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்தவேளையில் பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார். அன்னை மரியாள் அழகிய இளம்பெண்ணாக அந்தக் குகையில் தோன்றினார்.

வெண்ணிற ஆடையை உடுத்தியிருந்தார். முக்காடும் அணிந்திருந்தார். நீலநிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். அவரது கையில் ஒரு செபமாலையும் வைத்திருந்தார். ”நானே அமல உற்பவம்” என்று தன்னைப் பற்றிக் கூறினார். செபமாலையின் மறையுண்மைகளை தியானிக்கச் சொன்னார்.

அன்னை மரியாள் என்றும் எந்நாளும் நம்மோடு இருக்கிறாள் என்பதை, இது நமக்கு வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நமக்கு உதவுவதற்காக, நமக்காக இறைத்தந்தையிடம், அவரது அன்பு மைந்தனிடம் பரிந்துபேசுவதற்காக அவர் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார். அவரது பரிந்துரையிலும், அரவணைப்பிலும் நம்பிக்கை வைப்போம்.


நமது வாழ்விலும் பல இக்கட்டான நேரங்களை நாம் எதிர்கொண்டிருக்கலாம். அந்த தருணங்களில் கடவுளின் அருட்கரம் நிச்சயம் நம் அருகில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண்டவர் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார். அவர் நம்மைக் காப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். அந்த இறைவனிடம் நம்மையே நாம் ஒப்படைப்போம்.

உங்கள் எல்லோருக்கும் லூர்து அன்னை பெருவிழா வாழ்த்துக்கள்!

Tuesday, 9 February 2016

சாம்பற்புதன்!

நாளை நாம் தவக்காலத்தை தொடங்குகிறோம். தவக்காலம் ஓர் அருளின் காலம், மனமாற்றத்தின் காலம்.

 இயேசுவின் காலடிச்சுவட்டையும், கல்வாரி முகட்டையும், கண்முன் நிறுத்தும் காலம். தவம் என்பது காவி உடை தரிப்பதும் , கவலை கொள்வதாய் காட்டுவதும் அன்று.

மாறாக இதயத்தை உடைப்பதும் , இல்லார்க்கும், இயலார்க்கும் இரங்குவது. ஆசை வலைகளினின்று அகன்று வேடனில்லா, கபடமில்லா,சாதி-சமய பேதமில்லா வாழ்வு வாழ்வது. ஆனால் நாம் பகட்டிலும், ஆடம்பரத்திலும் , சமூகக்கௌரவம் இருப்பதாக ஓர் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம்.

ஆடம்பரம் அகற்றி அளவோடு அனுபவித்து எளிமையை கடை பிடித்து ஏழைகளை தாங்கி நிற்பதே உண்மையான தவம் என்றுணர தவறியதால் இன்று உலகம் பதட்டத்திலும் , பயத்திலும்,.பட்டினியிலும் பயணிக்கிறது.ஈதல் , இறைவேண்டல், நோன்பிருத்தல் ஆகிய செயல்களை ஓர் புதிய கோணத்தில் கொண்டு செல்ல அழைக்கும் இயேசுவின் பார்வையை நமதாக்குவோம்.

பக்தி செயல்கள் தம்பட்டம் அடிக்கவல்ல. நமக்குள் நம்மைத் தேடி நான் என்ற மனநிலையை விட்டு நாம் என்ற பொது நிலைக்கு நம் ஒவ்வொருவரையும் கொண்டு வரத் தேவையான அருமருந்து  அவை என்றுணர்வோம். நம் அக ஆன்மிகம் , இயேசுவின் ஆன்மிகமாகி நம்மில் ஒளிரட்டும்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது.

 இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.

தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறுத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது.

இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. மனமாற்றம் தான், இந்த தவக்காலம் நமக்கு விடுக்கக்கூடிய அழைப்பு. நமது வாழ்வை மாற்றுவதற்காக இந்த நாட்களிலே சிந்திப்போம். நாம் செயல்படுத்த வேண்டிய, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகளை யோசிப்போம். அதனை செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு தவக்காலமும் வெறும் சடங்கு, சம்பிரதாயமாக இருக்கக்கூடிய நிலைமை மாற வேண்டும். தவக்காலங்களில் மட்டும் கடின நோன்பு இருப்பதும், ஒறுத்தல் முயற்சி செய்வதும், தவக்காலம் முடிந்ததும், பழைய வாழ்வே கதி என்று கிடக்கக்கூடிய காலம் மாற வேண்டும். அந்த மாற்றத்திற்காக, நாம் பாடுபடுவோம்.

Monday, 8 February 2016

மூதாதையர் மரபு!

இயேசுவிடத்திலே பரிசேயரும், மறைநூல் அறிஞரும் குற்றம் சுமத்துகின்றனர். மூதாதையர் மரபு என்று இங்கே குறிப்பிடப்படுவது என்ன?

பொதுவாக, யூதர்களுக்கு சட்டம் என்பது, கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகளும், பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களும் தான். முதல் ஐந்து புத்தகங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

 ஆனால், அவற்றிற்கு சரியான புரிதலோ, விளக்கமோ இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக, கி.மு 4 மற்றும் 5 ம் நூற்றாண்டுகளில் மறைநூல் அறிஞர்கள் என்ற ஒரு புதிதாக குழு ஒன்று தோன்றி, அவர்கள் இந்த சட்டங்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஹில்லல் மற்றும் ஷம்மாய் போன்றோர் இதற்கு பெயர் போனவர்கள்.  இதுதான் மூதாதையர் மரபு அல்லது வாய்மொழிச்சட்டம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 3ம் நூற்றாண்டில், இந்த சட்டங்களுக்கான தொகுப்பும் வழக்கிற்கு வந்தது. அதுதான் மிஷ்னா என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

இயேசுவுக்கும், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்ததே இதில் தான். இயேசு சட்டங்களுக்கு எதிரானவர் அல்ல. மூதாதையர் மரபுகளையும் இயேசு மதிக்காதவர் அல்ல.

ஆனால், பொருளோ, அர்த்தமோ இல்லாத, காலச்சூழ்நிலையோடு ஒத்துப்போகாத, மக்களுக்கு எந்த பயனும் தராத சட்டங்கள் மாற்றப்பட வேண்டும், என்பது இயேசுவின் கருத்து.

ஆனால், பரிசேயர்களுக்கு இத்தகைய மரபுகள் வாழ்வோடு கலந்தவை. அவை எத்தனை தலைமுறைகளானாலும் மதிக்கப்படக்கூடியவை. அவை போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

அதற்கு எதிர்ப்பாக யார் வந்தாலும், எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அவற்றைக்கடைப்பிடித்தால், கடவுளை பெருமைப்படுத்துகிறோம், இல்லையென்றால், கடவுளை பழித்துரைக்கிறோம் என்று சொல்லி, கடவுளையும் இவற்றோடு தொடர்புபடுத்தினார்கள்.

நமது வாழ்வையும் பாரம்பரியம், மூதாதையர் மரபு கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில், பலநேரங்களில் நாம் பரிசேயர்களைப்போல, அழிவுக்கு செல்லக்கூடிய பாதைகளைத் தேர்ந்தெடுத்து சென்று கொண்டிருக்கிறோம். அனைத்துச் சட்டங்களையும், இயேசுவின் பார்வையில் பார்ப்போம்.

Sunday, 7 February 2016

செபிக்கத்தெரிந்த மனிதன்!

இயேசு வாழ்ந்த காலத்தில் எத்தனையோ போதகர்கள், மாந்திரீகர்கள் புதுமைகள் செய்தாலும் இயேசு செய்த புதுமைகளையும், அற்புதங்களையும் பார்த்த மக்கள் மலைத்துப்போனதைப் பார்க்கிறோம். அவரைப்பற்றியப்பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியிருந்தது.

மக்கள் அவரைப்பார்க்கவில்லை என்றாலும் கூட, அவர் அற்புதங்கள் செய்வதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தனர். அவரைப்பார்க்காமலே அவரைப்பற்றிய ஒரு தோற்றத்தை தங்கள் மனதில் உருவாக்கியிருந்தனர்.

அதனால்தான், அவரைப்பார்க்கவில்லை என்றாலும் மக்கள் சொல்லும் அடையாளங்களை வைத்து அவர் நேரில் வந்தால் அடையாளம் காணும் அளவுக்கு இயேசு மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார்.

நாளைய நற்செய்தியிலும் இப்படிப்பட்ட மக்களைத்தான் பார்க்கிறோம். இயேசுவை பார்த்தவுடன், இன்னார் என்று கண்டுணர்ந்து நோயாளிகள், உடல் நலம் குன்றியவர்களை அவரிடம் கொண்டுவருகிறார்கள்.

இயேசுவை தொட்ட உடனே அவர்கள் நலமடைந்ததாக நற்செய்தியாளர் கூறுகிறார். இயேசு கடவுளின் அருளால் நிரம்பியிருந்தார். இன்னாருக்கு அருள் கிடைக்கவேண்டுமென்று அவர் நினைத்தால் மட்டும்தான் அவருக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்றில்லை:

நம்பிக்கையோடு மன்றாடுகிற ஒவ்வொருவரும் இயேசுவிடமிருந்து நாமே அருளைப்பெற்றுக்கொள்ளலாம் என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது. ஏனெனில் அவரைத்;தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

புனித மரிய வியான்னி அருளப்பர் கூறுகிறார்: “கடவுளைவிட சக்திவாய்ந்த மனிதனை எனக்குத்தெரியும். அவன்தான் செபிக்கத்தெரிந்த மனிதன். கடவுள் ‘முடியாது’ என்று சொன்னாலும், செபிக்கும் மனிதன் தன் செபத்தினால் கடவுளை ‘முடியும்’ என்று செய்ய வைக்கிறான். கடவுள் உலகையே ஆள்கின்றார். செபிக்கும் மனிதன் கடவுளையே ஆள்கிறான்”.

நம்பிக்கையோடு இயேசுவின் ஆடையைத்தொட்டு இறை அருளை எடுத்துக்கொண்ட 12 ஆண்டுகள் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணைப்போல, நாமும் நம்பிக்கையோடு கடவுளிடம் மன்றாடும்போது இறைஅருளை நிரம்பப்பெற்றுக்கொள்ள முடியும்.

Saturday, 6 February 2016

முயற்சி!

பொறுமைக்கும் எல்லை இருக்கிறது என்று பொதுவாகச் சொல்வார்கள். பொறுத்துப்பொறுத்து பார்த்து, திருந்தாதவர்களைப் பார்த்து இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள். ஆனால், முயற்சிக்கு முடிவே இல்லை என்று சொல்வார்கள்.

நாம் எடுக்கக்கூடிய முயற்சி எப்பொது முடிய வேண்டும் என்றால், நமது உயிர்மூச்சு நிற்கிறபோதுதான். அத்தகைய முயற்சி நம் அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று என்ற பாடத்தை, இயேசு நமக்குக் கற்றுத்தருகிறார்.

மீனவர்கள் இரவெல்லாம் கண்விழித்து உழைத்திருக்கிறார்கள். முயற்சி செய்திருக்கிறார்கள். உடல் களைத்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கேற்ற பலன் இல்லை. மிகவும் உடல் அளவிலும், உள்ளத்து அளவிலும் சோர்ந்து போயிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையில், இயேசு அவர்களை, ”ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொல்கிறார். சீடர்கள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்கள். இயேசு சொல்வதற்கு முன்பாக, அவர்கள் முயன்றார்கள்.

 ஆனால், முடியவில்லை. முயற்சியை விட்டுவிட்டார்கள். இயேசு அந்த முயற்சியை விடக்கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார். நமது வாழ்வில் முயற்சி என்கிற வார்த்தைக்கு ஓய்வே இருக்கக்கூடாது.
நேற்று சற்று ஓய்வெடுங்கள் என்று இருந்தது அதையும் இயேசுதான் சொல்கிறார்.இன்று இதையும்  இயேசுதான் சொல்கிறார்.


இன்றைக்கு  நாம் சிறப்பாக வாழ்வதற்கு முயற்சி எடுக்கிறோம். அதனை செயல்படுத்தியும் பார்க்கிறோம். விரைவில் முயற்சியை விட்டுவிடுகிறோம். அப்படி விடாது முயல்வதுதான் வாழ்க்கை. அந்த பாடத்தை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

Friday, 5 February 2016

சற்று ஓய்வெடுங்கள்!

இயேசுவின் உளவியலும், ஞானமும் எண்ண எண்ண நம்மை மலைக்க வைக்கின்றன. நாளைய  நற்செய்தி வாசகம் அத்தகைய ஓர் அனுபவத்தை நமக்குத் தருகிறது.

இயேசுவின் சீடர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்துவிட்டுத் திரும்பிவந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் இயேசுவிடம் பகிர்ந்துகொண்டபோது, இயேசுவின் பதிலுரையைப் பாருங்கள்.

அவர்களைச் சற்றே ஓய்வெடுக்க அறிவுறுத்துகிறார். அத்துடன், தாமே அவர்களை அழைத்துக்கொண்டு ஓய்விடத்துக்கு இட்டுச் செல்கிறார். இயேசுவின் பரிவும், ஞானமும் இந்த அழைப்பில் நன்கு வெளிப்படுகின்றன.

இதே அழைப்பை இயேசு இன்றும் நமக்குத் தொடர்ந்து தருகிறார். நமது பல்வேறு பரபரப்பான பணிகளுக்கு இடையில் நமக்கு ஓய்வு தேவை. உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும்.  குறிப்பாக, இன்றைய விரைவுக் கலாசார உலகில் ஓய்வற்ற உழைப்பால் பலருக்கும் மன அழுத்தமும், பல்வேறு நோய்களும் வருகின்றன.

எனவே, நம்மை உடல், உள்ள, ஆன்ம ஓய்வெடுக்க இயேசு அழைக்கிறார். ஞாயிறு தோறும் வழக்கமான வேலைகளை விட்டுவிட்டு, வழிபாட்டில் பங்கெடுத்தல், இறைவார்த்தைக்கு செவி மடுத்தல். நற்செய்திப் பணியாற்றல், அன்புச் சேவைகள் செய்தல் போன்றவை நமக்கு இந்த மூன்று வகையான ஓய்வையும் தரும்.

ஆண்டவரே சொல்லிவிட்டார் ஆக, தேவைப்படும் போது சற்று ஓய்வேடுப்போமா?

Thursday, 4 February 2016

வாழ்வின் போராட்டம்!

”மனிதன் என்பவன் முரண்பாடுகளின் மூட்டை“ – என்று தத்துவ இயலில் சொல்வார்கள். ஒவ்வொரு மனிதரிடத்திலும் நல்ல குணங்களும் உண்டு. கெட்ட குணங்களும் உண்டு.

ஏரோது அரசன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. யோவான் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தான் ஏரோது. அதே வேளையில் அவரை சிறையில் அடைத்ததும் ஏரோது தான்.

 திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்டு குழப்பமுற்றிருந்தான். அதே வேளையில் அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். யோவானின் தலையை சிறுமி கேட்டபோது வருத்தமுற்றான், ஆனாலும் அவரைக்கொல்ல பணித்தான்.

மனித வாழ்வு உடல்சார்ந்த வாழ்வுக்கும், ஆவிக்குரிய வாழ்வுக்கும் இடையேயான மிகப்பெரிய போராட்ட வாழ்வு. இதைத்தான் பவுலடியார் தான் எதைச்செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ, அதை செய்ய முடியாமல் தவிப்பதாக கூறுகிறார்.

இந்தப்போராட்டம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். நாம் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வு வாழ போராட வேண்டும். அதற்கு இறைவனுடைய துணையை நாட வேண்டும். அப்படிப்பட்ட இறைத்துணையோடு கூடிய ஆவிக்குரிய வாழ்வை வாழ, நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

நமது வாழ்வை எண்ணிப்பார்ப்போம். ஆவிக்குரிய வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறதா?

அந்த எண்ணத்தை செயல்படுத்த நான் எடுக்கக்கூடிய முயற்சிகள் என்ன? அந்த வாழ்வு எனக்கு பிடித்தமான வாழ்வாக இருக்கிறதா? இந்த கேள்விகள் நமது உள்ளத்தில் எழும்போது, நிச்சயம் நமக்குள் தெளிவு பிறக்கும்.

நாளைய புனிதை தூய ஆகத்தா இவர் ஓர் சிறந்த பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இவரை, ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவராக வளர்த்தனர். பிறப்பிலிருந்தே மிக அழகுவாய்ந்த பெண்ணாக இருந்தார்.

இவர் இறைவனின் மேல் அளவுகடந்த பக்தி கொண்டவராக இருந்ததால் 30 நாட்கள் பகைவர்களால் மறைத்து வைக்கப்பட்டு வதைக்கப்பட்டார். தனது விசுவாச வாழ்வில், பல கொடுமைகளின் மத்தியிலும் சிறந்தவராக திகழ்ந்தார். இதனால் இன்னும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.

இவர் இன்னும் அதிகமாக இறைவனைப் பற்றிக்கொண்டதால் வெடிகள் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். பின்னர் மார்பு அறுக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டார். அத்துடன் நெருப்பினால் சுடப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் தள்ளப்பட்டார்.

 பல உடைந்த பொருட்களால் உடல் முழுவதும் அகோரமாக கிழிக்கப்பட்டார். இவர் அனைத்துத் துன்பங்களையும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் ஏராளமான வேண்டல்களோடும் தன் துன்பங்களைக் கடவுளுக்காக அர்ப்பணித்தார். 

Wednesday, 3 February 2016

ஆனந்தர் இவர் புனித அருளானந்தர்......!

"அரைக்கப்பட்டால் தான்  சந்தனத்திற்கு மணம்"!
"துளைக்கப்பட்டால் தான் மூங்கில் புல்லாங்குழல் ஆகும்"! "சிதைக்கப்பட்டால் தான் கரும்பு சர்க்கரையாகும்"!

தானுண்டு தன் வழக்கறிஞர் தொழி லுண்டு  என்றில்லாமல்  இந்திய  விடுதலைக்காய் அகிம்சையை ஆதரித்தவர் காந்தியடிகள்; விளைவு, கூப்பிய கரங்களுக்குள் இருந்து வெளிவந்த குண்டுகள் அவரைத் தரையில் சாய்த்தன.அடிமை முறையை அழிக்க முயன்றதால் ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டார்.

 கறுப்பர்களின் நலம் காக்க நிமிர்ந்து நின்ற மார்டின் லூதர் கிங் இரத்தம் சிந்தியபடி நிலத்தில் சாய்ந்தார். இந்தக் கோதுமை மணிகள் உலகுக்குத் தந்த பலன் மிக மிக உயர்ந்தது. பிறரின் உணர்வும், உரிமையும், சுதந்திரமும் நசுக்கப்படும் போது நாம் ஏன் பார்வையற்றவர்களாகவே    இருந்து விடுகிறோம். ஏன் பங்காளிகள் ஆவதில்லை?

சகமனிதரின் துயரத்தையும் , மனித மாண்பு மறுப்புகளையும் கண்டும் காணாமல் விட்டு விட்டு , இயேசுவை ஏற்க நினைப்போர் அவரது சீடத்துவத்தில் இணைய இயலாது. அராஜகமும் , வன்முறையும் மலிந்து கிடக்கும் இவ்வுலகில் அஹிம்சைக்கும் ,மனித உரிமைக்கும் குரல் கொடுப்பதும் ஒரு தேடல் .

 மந்தை உணர்வை மறந்து, கண்ணியச் சீற்றம் பெற்று உரிமைக்கான குரலாய் மாறினால் கால வெள்ளம் கைநீட்டி அழிக்க முடியா கல்வெட்டாக நம்மை மாற்றும். சகமனிதரை பற்றிச் சிந்திக்கும் சமூக மனிதராகப் பரிணமிப்போம்.

இவ்வாறு வாழ்ந்தவர் தான் நம் நாளைய நாளின் விழா நாயகன் தூய அருளானந்தர்.நாளை நாம் புனித அருளானந்தரின் விழாவை கொண்டாடுகிறோம்.போர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் ஜான் டி பிரிட்டோ பிறந்தார்.

சிறு வயதிலிருந்தே ஜானின் உடல் சீராக இருக்கவில்லை. 11 வயதில் தீவிர நோய்த்தாக்கத்தில் பிழைப்பதரிது என்ற நிலையில் அவரது தாய், புனித ஃபிரான்சிஸ் சவேரியாரிடம் உருக்கமாக மன்றாடினார். சிறுவன் பிழைத்தெழுந்தான்.

இயேசு சபையினரின் உடை போன்று ஓராண்டளவும் தம் மகனை உடுத்தச் செய்தார் தாய். அதிலிருந்து புனித சவேரியாரைப் போல தாமும் இயேசுவின் ஒளியை இந்திய மண்ணில் பரவச் செய்ய வேண்டும் என்ற பேராவல் அவரது இதயத்தில் பற்றியெரிய ஆரம்பித்தது. அவர் விரும்பியவாறே 15 வயதில் இயேசு சபையில் அனுமதிக்கப்பட்டார்.

குருபட்டம் பெற்றபோது கற்றலில் சிறந்த அவரது ஆற்றல் கண்டு, ஜானைப் போர்த்துக்கல்லில் இருத்திக் கொள்ள விரும்பினார். ஜானுக்கு இந்தியாவே இலக்காயிருந்தது. பாப்புவின் பிரதிநிதிவரை சென்று தம் மகனின் இந்தியப் பயணத்தைத் தடுக்க முயற்சித்தார் தாய். 'துறவற வாழ்வுக்கு என்னை அழைத்த இறைவன் இப்போது இந்தியாவுக்கு அழைக்கிறார்" எனக் கூறி அன்னையை ஆறுதல்படுத்தினார்.

கி.பி.1673ல், 16 சககுருக்களுடன் கோவாவில் கால்பதித்தார் ஜான். இறையியல் முதலான மேற்படிப்புக்களை முடித்தார். மதுரை மறைபரப்புத் தளத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பணி தொடங்கு முன் 30 நாள் ஞான ஒடுக்கம் செய்தார். தமிழில் பேசக் கற்றார். தமிழில் போதிக்கும் திறம் வளர்த்தார்.

இந்தியத் துறவி போல் காவி உடை அணிந்தார். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று அருளானந்த சுவாமியானார். தமக்குப் பழக்கமில்லாத தமிழக வெப்பத்தைப் பொருட்படுத்தாது, சென்னை, வேலூர், தஞ்சை, முகவை எனப் பல மாவட்டங்களிலும் நடந்தே சென்று போதித்தார். இவரது தவமிகு வாழ்வு, மிகுதியான ஆர்வம், மறைப்பணியில் தீவிரம் இவற்றின் விளைவாய் ஆயிரக்கணக்கானோர் திருமறை தழுவினர்.

தஞ்சைத் தளத்தில் அறுவடை மிகுதியானது. மறவர் நாட்டில் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. புதிய வேதத்தின் போதனையைத் தடுக்கப் புனிதரைக் கைது செய்தான் முகவை முதன் மந்திரி. விசாரணை இன்றியே துன்புறுத்திக் கொள்ள முயன்ற போது, முகவை மன்னன் தலையிட்டுப் புனிதரை விடுவித்து நாடு கடத்தினான்.

தந்தை ஜானைப் போர்த்துகல் வரவேற்றது. இயேசு சபை மாநிலத் தலைவர் பதவி அளிக்க முன் வந்தது. ஆயர் பதவி காத்திருந்தது. வறண்ட மறவர் நாட்டின் மீது தணியாகத் தாகம் கொண்டிருந்த அருளானந்தர் எதையும் ஏற்க மறுத்துத் தமிழகம் திரும்பினார். இராமநாதபுரத்தில் அரச குடும்பத்தைச் சார்ந்த சிலர் திருமுழுக்குப் பெற்றனர்.

குணமளிக்கும் வரம் பெற்றிருந்தார் புனிதர். அவரது மன்றாட்டால் மக்கள் உடல் நலம் பெற்றதைக் கண்டு அந்தணர்கள் அழுக்காறுற்றனர். இது பேய் வேலை என்றனர். நோயால் துன்புற்று மரணத்தை எதிர் நோக்கியிருந்த மறவ இளவரச தடியத் தேவர் புனிதர் தம்மிடம் வரப்பிரார்த்தித்தார்.

 ஜான்  தாம் செல்லாது தம்வேதியருள் சிறந்த ஒருவரை அனுப்பி இறைவேண்டல் செய்ய, தடியத் தேவர் நலம் பெற்றார். மறையறிவு பெற்று கிறித்தவரானார். அவருக்கு 5 மனைவியர். கிறித்தவரானதும், தம் முதல் மனைவியைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டார்.

புனித அருளானந்தர்- ஜான்- டி- பிரிட்டோ- St.John De Britto அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருவர் கடலாயி முகவைச் சேதுபதியின் நெருங்கிய உறவினர். மன்னனிடம் முறையிட்டாள். ஒரியுரிலிருந்த தன் தம்பி உடையத்தேவர் மூலம் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர்.

முகவையிலிருந்து ஒரியுருக்கு  நடத்திச் செல்லப்பட்டார். 'மரணத்தை எதிர்நோக்கியுள்ளேன். இதுவே என் வேண்டுதலின் இலக்காக இருந்தது. எனது உழைப்பிற்கும் வேதனைகளுக்கும் விலை மதிப்பற்ற பரிசாக இந்த நாள் அமைகிறது" என மரணத்திற்குமுன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு விரைந்து சென்றனர்.

வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.

மறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மக்கள் திரளாக திருயாத்திரையாக ஓரியூருக்கு வர ஆரம்பித்தார்கள். 1947ல் அருளானந்தருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மறவநாட்டுத் திருத்தூதர், மதுரை மறைத்தளத்தின் பாதுகாவலர் புனித அருளானந்தரின் நினைவைத் திருச்சபை பெப்ரவரி 4ல் போற்றுகிறது.

மேலும், அவர் மதுரை உயர் மறைமாவட்ட பாதுகாவலர் மட்டும் அல்ல மாறாக அவர் சிவகங்கை மரைமாவட்டத்திற்க்கும் பாதுகாவலரே!

செம்மண் புனிதரான தூய அருளானந்தரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!!!



Tuesday, 2 February 2016

வாழ்கை அனுபவங்கள் பல!

ஆண்டவர் இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை நாளைய  நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிறது. அவருடைய போதனையைக் கேட்ட அவருடைய சொந்த ஊரினர் அவரை நம்ப மறுத்தனர்.

அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும். எனவேதான், இயேசுவே கூறினார்; சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் என்று.

இத்தகைய அனுபவங்கள் சில நேரங்களில் நமக்கும் நடந்திருக்கும். நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நமது ஆர்வங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தபோது நாமும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்போம்.

 நமது பெற்றோர், உடன் பிறந்தோர் நமது திறமைகளை, ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது நாமும் மிகுந்த வேதனை அனுபவித்திருப்போம்.

ஆனால், இன்று இந்த வாசகம் வழியாக ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்பே பிறர் நமக்குச் செய்த தவறுகளை, நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்பதுதான். எனவே, நமது வீட்டில் நம்மோடு வாழ்பவர்களை இனி நிறைவான பார்வையால் பார்க்கக் கற்றுக்கொள்வோம்.

அவர்களுக்குரிய அங்கீகாரத்தை, தன் மதிப்பை வழங்க முன் வருவோம். அதுபோல, நம்மோடு பணிபுரிகின்ற, உழைக்கின்ற, படிக்கின்ற நண்பர்கள், தோழியரின் திறமைகளை, ஆற்றல்களை ஊக்கப்படுத்துவோம். அவரவர்க்குரிய தன் மதிப்பை வழங்குவோம்.

Monday, 1 February 2016

உங்கள் குழந்தைகள் !

ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை நாளை  கொண்டாடுகிறோம்.

 “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு காணிக்கையாக கொடுக்கப்பட்டார். இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும் ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தான்.

இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண வேண்டும்.

அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர். நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு அர்ப்பணிப்போம்.


சிறந்த பெற்றோர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். எதிலும் முதலானவற்றை ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டும்.

முதலானது என்று சொல்லும்போது, எண்ணிக்கையை விட மிகச் சிறந்ததை கடவுளுக்குக் கொடுக்க வேண்டும். சிறப்பானதை கடவுளுக்குக் கொடுக்கும்போது, அது இறைவனுக்கு ஏற்ற காணிக்கையாக மாறுகிறது.

கடவுள் அதை ஏற்று, ஆபேலின் சார்பில் பேசியதுபோல உங்கள் சார்பில் பேசுவார். உங்கள் சார்பில் செயல்படுவார். கடவுள் உங்கள் சார்பில் இருக்கும்போது உங்களுக்கு என்ன குறை,நம்மிடையே சில நல்ல பழக்கங்கள் உண்டு.

 தற்சமயம் குறைந்து வருகிறது. முதல் தரமானதை கோயிலுக்குக் கொடுப்பார்கள். முதல் சம்பளத்தை முழுமையாக கோயில் நேர்ச்சையாகக் கொடுப்பார்கள். அவர்களுக்கு எதுவும் குறைந்து போனதும் இல்லை.

கடவுளுக்குக் கொடுக்கிறவர்கள், இன்னும் அதிகமாக கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "கடவுளுக்கு கொடுத்து குறைந்து ஒன்றும் போகவில்லை" என்று.

ஒரு வருடத்தில் அல்லது மாதத்தில் கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு கொடுத்ததை கணக்கிட்டுப் பாருங்கள்.

மற்ற எல்லாவற்றையும் விட அதுதான் மிகக் குறைவாக இருக்கும். நம் அன்னை மரியாபோல் முதலானவற்றை ஆண்டவருக்குக் கொடுப்போம். அவர் நம்மை எல்லாவற்றிலும் முதன்மையாக்குவார் .