Thursday, 11 February 2016

எதிலும் திருப்தி வேண்டும்!

எதிலும் திருப்தி வேண்டும் "போதுமென்ற மனமே பொன் செய் மருந்து" என்றெல்லாம் சொல்வார்கள். வாழ்க்கையில் திருப்தி கொள்வதென்பது , நிம்மதியான வாழ்க்கைக்கான வழியாகும்.விரும்பியது கிடைத்ததும் இது போதும் என்று எண்ணுவது திருப்தி.


கிடைத்த பின்னும் இது போதாது என்று ஏங்குவது அதிருப்தி. வாழ்க்கையில் தோன்றும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான  காரணம் இந்த திருப்தியின்மை, ஆசை ,பேராசை ஆகியவை. திருப்தியுடன் வாழ்வதென்பது ஒரு உயரிய பண்பு.


திருப்தியுடன் வாழ்வதனால், அதிக  நன்மைகள் உண்டு. ஆனால் திருப்தியுடன் வாழ்பவர்கள் வெகுக்குறைவு. எங்கெல்லாம் போதுமென்கின்ற மனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் எளிமை இருக்கும். அதுமட்டுமல்ல, போதுமென்கின்ற மனம் கொண்டவர்களிடையே கவலை, பயம், ஏமாற்றம், பொறாமை, இவைகளை காண  முடியாது." திருப்தியுள்ள ஏழை பணக்காரன் ஆவான்". அதிருப்தியுள்ள பணக்காரன் ஏழை ஆவான் என்கிறார் ஹென்றி போர்ட்.

ஒன்றை விரும்புவது  அல்லது  ஆசைப்படுவது  என்பதில் மூன்று வகைகள் உள்ளன.இது  வேண்டும், எப்போது கிடைக்கிறது பார்க்கலாம், என்று இருப்பது ஒன்று. விரைவில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பொறுத்திருப்பது அடுத்தது. உடனடியாக வேண்டும் இப்போதே வேண்டும் என்பது மூன்றாவது.இவை மூன்றுமே நிம்மதியின்மையை தரக்கூடியவை. அவற்றுள் மூன்றாவது நிம்மதியை மட்டுமல்ல விபரீதத்தையும் விளைவிக்க கூடியவை.

ஒன்றை உடனடியாக அடைய நேர்மையான வழி தெரியவில்லை என்றாலோ அல்லது வழியில்லை என்றாலோ முறைக்கேடாக முயற்சி தோன்றும். முயற்சி திசை திரும்பும், விளைவு விபரீதத்தில் முடியக்கூடும்.

அவசியத்திற்காக வாங்குவது எளிமை. அலங்காரத்திற்காக வாங்குவது ஆடம்பரம். எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் எது கிடைத்தாலும் இது போதுமென்று எண்ணி திருப்தி கொள்வார்கள்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எது கிடைத்தாலும் இது போதாது என்று எண்ணமே பிராதானமாக இருக்கும்.அதுமட்டுமல்ல, விரும்பியது கிடைத்த பின்னும் அத்துடன் திருப்திபடாமல் அது இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுவார்கள்.அவர்களது ஆசை அடங்காத ஆசை இதுவே அதிருப்தி என்பது.

திருப்தி என்பது பொருள்கள் சேகரிப்பதைக்  கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. உணவு, உடை, ஆசைகள், இன்னும் என்ற எதிர்பார்ப்புகள் இப்படி அனைத்திலும் அளவுடன் இருக்க வேண்டும்."அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்றனர்  நம் முன்னோர்கள்.

ஒன்றை விரும்பி அதை அடைந்தபின் மனம் சும்மாயிருப்பதில்லை வேறொன்றின் மீது தாவும்.அது மனித இயல்பு. அப்படியே சும்மா இருக்க முயற்சித்தாலும் சினிமா தொலைக்காட்சி விளம்பரங்கள் ஆகியவை மனதை நிலை குலைய வைக்க தயாராக உள்ளன.எனவே திருப்தி கொள்வதற்கு மன கட்டுப்பாடு மிகவும் அவசியம்.


ஒரு முறை பார்வதியும், பரமசிவனும்,வானமண்டலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பூலோகத்தில் மக்கள் படும் அவதியைப் பார்த்து மனம் பொறுக்காமல் பார்வதி பரமசிவனிடம் " உடனடியாக இவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தாக வேண்டும்" என்று   வேண்டினாள்.

"பார்க்கலாம்" என்றார் பரமசிவன்."அதெல்லாம் முடியாது இப்போதே வேண்டும்" என்று வற்புறுத்தியதின் பேரில் பூலோகத்திற்கு வந்து மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து விட்டு சென்றனர்.சில காலம் கழித்து மீண்டும் அதே வழியாக செல்ல நேர்ந்த போது , பூலோகம் வந்தனர்.

ஆனால் அவர்கள்  கண்ட காட்சி அவர்களுக்கு வேதனை தந்தது.தற்போது அவர்கள் வேறு ஏதேதோ தேவைகளுக்காக சண்டை போட்டு கொண்டிருந்தனர்.


இவர்களை திருப்திபடுத்தவும் முடியாது திருத்தவும் முடியாது என்று விரக்தியுடன் திரும்பி சென்றனர். என்று ஒரு கதை. மனித மனம் எதிலும் திருப்தி கொள்வதில்லை. அதுவே மனித சுபாவம் என்பது.

"சோபனேர்" எனும் அறிஞரிடம் "சந்தோசம்  என்றால் என்ன? என்றார் ஒரு நிருபர். அதற்கு அவர் "இதற்கு பதில் சொல்வது   சற்று கடினம். காரணம் சந்தோசம் என்பது ஒருவருக்கொருவர் விதியாசப்படக்கூடும் .

ஆனால் நிம்மதியின்மை  என்றால் என்ன என்கிற கேள்விக்கு எளிதாக பதில் சொல்லி விடலாம் . மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ ஆரம்பியுங்கள் நீங்கள் ஒருபோதும் நிம்மதியுடன் இருக்க முடியாது " என்றார்.உண்மை, தற்போது மக்கள் மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ்வது சர்வ சாதாரணமாகி விட்டது. அவருடைய மகனுக்கு துபாயில் வேலை . அவளுடைய மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை. இன்னொருவருடைய மகன் ஒரு டாக்டர். இன்னொருவருடைய மகன் என்ஜினியர்.

இப்படி , இவற்றை தன்  குடும்பத்தோடு ஒப்பிட்டு வாழ ஆரம்பித்தால் நிச்சயம் நிம்மதி இருக்காது.  அதுமட்டுமல்ல நிம்மதியின்மை ஒருபுறம் இருக்க பொறாமையும் பேராசையும் பொங்கி எழ ஆரம்பிக்கும். எனவே எதிலும் திருப்தி வேண்டும்.

மக்களுடைய வாழ்க்கைக்கு அதிருப்தியும் கூட தேவை என்கிறார் ஒரு அறிஞர் . ஆனால் அது அனுகூலமானதாக நன்மைபயக்க கூடியதாக இருக்க வேண்டும். பண்டைக்கால மனித வாழ்க்கைக்கும் , இப்போதுள்ள வாழ்க்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை ஒரு வகை.அதிருப்தியின் விளைவு என்றால் மிகையாகாது. அன்று மனிதன் நடந்தான், பிறகு ஓடினான், அடுத்து பிராணிகளின் மீது பயணித்தான்.

வண்டிகள் தோன்றின. வாகனங்கள் பிறந்தன. இன்று நான்கு சக்கர வாகனங்கள், கப்பல்,விமானம், என்று பயணிக்கிறான். அன்று அவனது நடையில் வேகத்தில், தோன்றிய  அதிர்ப்தியின் விளைவு இவைகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

 தினசரி வாழ்க்கையில் நாம் உபயோகிக்கும் புதுபுது கருவிகள், சாமான்கள்,முதலானவை அதிருப்தியின் விளைவே ஆகும்.அனைவரும் வியக்க தக்க கார் ஒன்றை கண்டுபிடித்து வீதியில் ஓடவிட்ட பின்னும், ஹென்றிபோர்டின் மனதில் ஒரு அதிருப்தி .

அது என்னவென்றால் சாதாரண மக்களும் வாங்கி ஓட்டக்  கூடிய கார் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பது. அதையும் தன்  வாழ்நாளிலேயே  செய்து முடித்தார் ஹென்றிபோர்ட் .

எதையும் செய்யலாம், ஆடம்பரத்துடன் வாழலாம் என்பது, ஒருபுறமிருக்க , எளிமையாக திருப்தியுடன் வாழ்வதென்பது தான்  புத்திசாலிதனமாகும். திறமையுமாகும்.இதற்கு திடமனதும் வைராக்கியமும் தேவை. இது எல்லோராலும் ஆகக் கூடியதில்லை.


இளைஞர்களிடையே இந்த அதிருப்தி ஓரளவுக்கு இருக்க வேண்டும். முன்பைவிட இந்த முறை சற்று சிறப்பாக செய்ய வேண்டும். கூடுதலாக சாதிக்க வேண்டும். கூடுதல் சாமர்த்தியத்துடனும், திறமையுடனும் விளங்க வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.

அந்த எண்ணங்கள் வாழ்க்கையில் வினாவாக முன்னேற பெரிதும் துணை புரியும்.அப்படியானால் திருப்தியா, அதிருப்தியா என்கிற சந்தேகம் வேண்டாம்.திருப்தி வாழ்க்கைக்கு நிம்மதியைத் தரக் கூடியதாகவும், அதிருப்தி முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.


எளிமையாகவும்,திருப்தியுடனும் வாழ்வதிலுள்ள நிம்மதி வேறெதிலும் கிடைக்காது. திருப்தியுடன் வாழ்வதும் கூட ஒரு பழக்கம். இளவயது முதலே பெற்றோர்கள், சிறுவர்களுக்கு சிக்கனமான , திருப்தியான வாழ்க்கையைப் போதிப்பது நல்லது.

எல்லோருமே திருப்தியுடன் வாழப்பழகிக்  கொண்டால் ஆரோக்கியம் பெரிதும் பாதுகாக்கப்படும்.நிம்மதியாக வாழலாம்.மற்றவர்களது ஆலோசனையை கேட்காமல், உங்கள் மனதிற்கு நல்லது எது என்று  தோன்றுவதை செய்யுங்கள்.எதிலும் திருப்தியோடு வாழுங்கள்.எப்போதும்   நிம்மதியாக இருங்கள். வாழ்க வளமுடன்.

1 comment:

  1. Very good sharing dear kalai. thanks for your lovely sharing

    ReplyDelete