Monday, 1 February 2016

உங்கள் குழந்தைகள் !

ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை நாளை  கொண்டாடுகிறோம்.

 “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு காணிக்கையாக கொடுக்கப்பட்டார். இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும் ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தான்.

இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண வேண்டும்.

அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர். நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு அர்ப்பணிப்போம்.


சிறந்த பெற்றோர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். எதிலும் முதலானவற்றை ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டும்.

முதலானது என்று சொல்லும்போது, எண்ணிக்கையை விட மிகச் சிறந்ததை கடவுளுக்குக் கொடுக்க வேண்டும். சிறப்பானதை கடவுளுக்குக் கொடுக்கும்போது, அது இறைவனுக்கு ஏற்ற காணிக்கையாக மாறுகிறது.

கடவுள் அதை ஏற்று, ஆபேலின் சார்பில் பேசியதுபோல உங்கள் சார்பில் பேசுவார். உங்கள் சார்பில் செயல்படுவார். கடவுள் உங்கள் சார்பில் இருக்கும்போது உங்களுக்கு என்ன குறை,நம்மிடையே சில நல்ல பழக்கங்கள் உண்டு.

 தற்சமயம் குறைந்து வருகிறது. முதல் தரமானதை கோயிலுக்குக் கொடுப்பார்கள். முதல் சம்பளத்தை முழுமையாக கோயில் நேர்ச்சையாகக் கொடுப்பார்கள். அவர்களுக்கு எதுவும் குறைந்து போனதும் இல்லை.

கடவுளுக்குக் கொடுக்கிறவர்கள், இன்னும் அதிகமாக கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "கடவுளுக்கு கொடுத்து குறைந்து ஒன்றும் போகவில்லை" என்று.

ஒரு வருடத்தில் அல்லது மாதத்தில் கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு கொடுத்ததை கணக்கிட்டுப் பாருங்கள்.

மற்ற எல்லாவற்றையும் விட அதுதான் மிகக் குறைவாக இருக்கும். நம் அன்னை மரியாபோல் முதலானவற்றை ஆண்டவருக்குக் கொடுப்போம். அவர் நம்மை எல்லாவற்றிலும் முதன்மையாக்குவார் .

No comments:

Post a Comment