Monday, 8 February 2016

மூதாதையர் மரபு!

இயேசுவிடத்திலே பரிசேயரும், மறைநூல் அறிஞரும் குற்றம் சுமத்துகின்றனர். மூதாதையர் மரபு என்று இங்கே குறிப்பிடப்படுவது என்ன?

பொதுவாக, யூதர்களுக்கு சட்டம் என்பது, கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகளும், பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களும் தான். முதல் ஐந்து புத்தகங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

 ஆனால், அவற்றிற்கு சரியான புரிதலோ, விளக்கமோ இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக, கி.மு 4 மற்றும் 5 ம் நூற்றாண்டுகளில் மறைநூல் அறிஞர்கள் என்ற ஒரு புதிதாக குழு ஒன்று தோன்றி, அவர்கள் இந்த சட்டங்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஹில்லல் மற்றும் ஷம்மாய் போன்றோர் இதற்கு பெயர் போனவர்கள்.  இதுதான் மூதாதையர் மரபு அல்லது வாய்மொழிச்சட்டம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 3ம் நூற்றாண்டில், இந்த சட்டங்களுக்கான தொகுப்பும் வழக்கிற்கு வந்தது. அதுதான் மிஷ்னா என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

இயேசுவுக்கும், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்ததே இதில் தான். இயேசு சட்டங்களுக்கு எதிரானவர் அல்ல. மூதாதையர் மரபுகளையும் இயேசு மதிக்காதவர் அல்ல.

ஆனால், பொருளோ, அர்த்தமோ இல்லாத, காலச்சூழ்நிலையோடு ஒத்துப்போகாத, மக்களுக்கு எந்த பயனும் தராத சட்டங்கள் மாற்றப்பட வேண்டும், என்பது இயேசுவின் கருத்து.

ஆனால், பரிசேயர்களுக்கு இத்தகைய மரபுகள் வாழ்வோடு கலந்தவை. அவை எத்தனை தலைமுறைகளானாலும் மதிக்கப்படக்கூடியவை. அவை போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

அதற்கு எதிர்ப்பாக யார் வந்தாலும், எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அவற்றைக்கடைப்பிடித்தால், கடவுளை பெருமைப்படுத்துகிறோம், இல்லையென்றால், கடவுளை பழித்துரைக்கிறோம் என்று சொல்லி, கடவுளையும் இவற்றோடு தொடர்புபடுத்தினார்கள்.

நமது வாழ்வையும் பாரம்பரியம், மூதாதையர் மரபு கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில், பலநேரங்களில் நாம் பரிசேயர்களைப்போல, அழிவுக்கு செல்லக்கூடிய பாதைகளைத் தேர்ந்தெடுத்து சென்று கொண்டிருக்கிறோம். அனைத்துச் சட்டங்களையும், இயேசுவின் பார்வையில் பார்ப்போம்.

No comments:

Post a Comment