Sunday, 7 February 2016

செபிக்கத்தெரிந்த மனிதன்!

இயேசு வாழ்ந்த காலத்தில் எத்தனையோ போதகர்கள், மாந்திரீகர்கள் புதுமைகள் செய்தாலும் இயேசு செய்த புதுமைகளையும், அற்புதங்களையும் பார்த்த மக்கள் மலைத்துப்போனதைப் பார்க்கிறோம். அவரைப்பற்றியப்பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியிருந்தது.

மக்கள் அவரைப்பார்க்கவில்லை என்றாலும் கூட, அவர் அற்புதங்கள் செய்வதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தனர். அவரைப்பார்க்காமலே அவரைப்பற்றிய ஒரு தோற்றத்தை தங்கள் மனதில் உருவாக்கியிருந்தனர்.

அதனால்தான், அவரைப்பார்க்கவில்லை என்றாலும் மக்கள் சொல்லும் அடையாளங்களை வைத்து அவர் நேரில் வந்தால் அடையாளம் காணும் அளவுக்கு இயேசு மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார்.

நாளைய நற்செய்தியிலும் இப்படிப்பட்ட மக்களைத்தான் பார்க்கிறோம். இயேசுவை பார்த்தவுடன், இன்னார் என்று கண்டுணர்ந்து நோயாளிகள், உடல் நலம் குன்றியவர்களை அவரிடம் கொண்டுவருகிறார்கள்.

இயேசுவை தொட்ட உடனே அவர்கள் நலமடைந்ததாக நற்செய்தியாளர் கூறுகிறார். இயேசு கடவுளின் அருளால் நிரம்பியிருந்தார். இன்னாருக்கு அருள் கிடைக்கவேண்டுமென்று அவர் நினைத்தால் மட்டும்தான் அவருக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்றில்லை:

நம்பிக்கையோடு மன்றாடுகிற ஒவ்வொருவரும் இயேசுவிடமிருந்து நாமே அருளைப்பெற்றுக்கொள்ளலாம் என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது. ஏனெனில் அவரைத்;தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

புனித மரிய வியான்னி அருளப்பர் கூறுகிறார்: “கடவுளைவிட சக்திவாய்ந்த மனிதனை எனக்குத்தெரியும். அவன்தான் செபிக்கத்தெரிந்த மனிதன். கடவுள் ‘முடியாது’ என்று சொன்னாலும், செபிக்கும் மனிதன் தன் செபத்தினால் கடவுளை ‘முடியும்’ என்று செய்ய வைக்கிறான். கடவுள் உலகையே ஆள்கின்றார். செபிக்கும் மனிதன் கடவுளையே ஆள்கிறான்”.

நம்பிக்கையோடு இயேசுவின் ஆடையைத்தொட்டு இறை அருளை எடுத்துக்கொண்ட 12 ஆண்டுகள் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணைப்போல, நாமும் நம்பிக்கையோடு கடவுளிடம் மன்றாடும்போது இறைஅருளை நிரம்பப்பெற்றுக்கொள்ள முடியும்.

1 comment: