Thursday, 31 December 2015

தாயின் ஆசியோடு!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! 
"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண் 6'24-26) இவை, இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் வழங்கிய ஆசீர்.

நாளை  புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!

இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன?

குறிப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன?


நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன. உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.

இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.


கடந்த ஆண்டின் ஏமாற்றங்கள், தோல்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, புதிய எதிர்நோக்கோடு இந்த ஆண்டைச் சந்திக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நம் வாழ்வின் தனிப்பட்ட போராட்டங்கள், பொதுநீதிப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போகுமோ என்னும் கவலையும், கலக்கமும் நம்மைத் தாக்கலாம். ஆனால், இன்றைய இறைவாக்கு நமக்கு ஊக்கமூட்டுகிறது.

மரியா, யோசேப்புடன் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள் வியப்படைந்தனர், மகிழ்ச்சியும் அடைந்தனர். "அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது". எனவே, கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டே திரும்பிச் சென்றனர்.

 "ஆண்டவர் உனக்கு ஆசிவழங்கி உன்னைக் காப்பாராக" என்னும் ஆண்டவரின் ஆசிமொழி ஆண்டின் முதல் நாளில் நமக்கு வழங்கப்படுகிறது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு நமக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடர்வோம். அன்னை மரியாவின் ஆசியும், துணையும் நம்மோடு இருக்கும்.


இப் புதிய ஆண்டில் உங்களுக்கும் அதே பாதுகாப்பு, முன்னேற்றம், அமைதி என்னும் முப்பெரும் கொடைகளை இறைவன் வழங்குகின்றார். இதைப்பெற்று அனுபவிக்க நமக்குத் தகுதியிருந்தால் ஆண்டு முழுவதும் ஆண்டு அனுபவிக்கலாம். அது என்ன தகுதி?

நம் அன்னை மரியாள்தான் அந்த தகுதி அனைத்தும் உடையவள். அவளுடைய குணங்கள் நம்மிடம் இருந்தால் இந்த ஆசீர் குறைவின்றி உங்களில் தங்கும்.உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருத்தி, இறை பிரசன்னத்தில் தியானித்து செயல்படுங்கள். இறைவன் உங்களைப் பாதுகாப்பார்: உங்களை உயர்த்துவார்: உங்களுக்கு அமைதியும் நிம்மதியும் தருவார்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Thursday, 24 December 2015

எளிமையான இறைவன்!

''உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,
'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'
என்று கடவுளைப் புகழ்ந்தது'' (லூக்கா 2:13-14).

நான் கிறிஸ்துவை அறிந்து இன்றோடு 20-பது வருடம் ஆகிறது.அதேபோல் இது எனக்கு 19-பதாவது கிறிஸ்மஸ்.

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!


இயேசு இவ்வுலகில் ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு விழாவின் மையாமாக உள்ளது. அக்குழந்தை மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தை. அதே நேரத்தில் மனித இனத்தோடு தம்மை ஒன்றித்துக்கொண்ட கடவுளின் வெளிப்பாடு. மரியாவின் மகனாகப் பிறந்த குழந்தையைக் கண்டு வணங்கிட இடையர்கள் செல்கிறார்கள்.

இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த வகுப்பினர். உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை, மாறாக, இவ்வுலகம் கடையர் என யாரைக் கருதுகிறதோ அவர்களே கடையராக வந்து பிறந்து குழந்தையை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது என லூக்கா விளக்குகிறார். விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர் அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்த இசைத்த பண்புயர் கீதம் ''உன்னதத்தில்...'' எனத் தொடங்குகின்ற புகழ்ப்பாடல் ஆகும். அதில் கடவுளின் மாட்சி போற்றப்படுகிறது. அதே நேரத்தில் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்கின்ற மனிதருக்குக் கடவுளின் அமைதியும் வாக்களிக்கப்படுகிறது,

கடவுளின் மாட்சியும் மனிதரின் வாழ்வில் நிலவுகின்ற அமைதியும் தொடர்புடையனவா? கடவுளே மனிதராக மாறிவிட்டதால் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உருவாகிவிட்டது. அப்பிணைப்பின் விளைவுதான் மனித வாழ்வில் கடவுள் வழங்குகின்ற அமைதி. இந்த அமைதி வெறும் உளவியல் சார்ந்த சலனமற்ற நிலையைக் குறிப்பதில்லை.

 இந்த அமைதி கடவுளிடமிருந்து நமக்கு வருகின்ற ஒரு கொடை. கடவுளே தம்மை நம்மோடு பகிர்ந்துகொள்வதின் அடையாளம் இந்த அமைதி. இதை நம் வாழ்வில் ஒரு கொடையாக நாம் ஏற்கும்போது கடவுளின் மாட்சி ஆங்கே துலங்கி மிளிரும். மனிதரின் நிறை வாழ்வுதான் கடவுளின் மாட்சி என்றொரு கூற்று உண்டு. உண்மையிலேயே நாம் மனிதத்தை மதித்து வாழ்ந்தால் கடவுளின் உடனிருப்பு அங்கே ஒளிவீசும். அந்த ஒளியே கடவுளின் மாட்சியாக நம்மிடையே துலங்கி மிளிரும்.


உரோமைப் பேரரசு காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

முதலாவதாக, எத்தனை வரிகள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது. யூதர்களுக்கு இராணுவத்தில் சேர விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே, வரிமுறைக்காக அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது.

நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம் ஏறக்குறைய 8 மைல்கள். வழக்கமாக பயணம் செய்வோர் தங்குவதற்கென ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமும், சமைப்பதற்கு சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும்.

உணவு பயணியரைச் சார்ந்தது. மரியாவும், யோசேப்பும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்கு கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை. அந்த இடத்தில்தான் கடவுளின் குழந்தை பிறக்கிறது.

இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்கு கிடைத்த இடம் எளிய இடம்தான். சற்று ஆழமாக சிந்தித்தால், இதுவும் கூட நமக்கு சிறந்த பொருள் தருவதாக அமைகிறது. நமது இறைவன் எளிமையை விரும்புகிற இறைவன். பகட்டையோ, ஆடம்பத்தையோ அல்ல என்பதையே இது காட்டுகிறது.

இறைவனை ஆடம்பரத்திலோ, பெரும் கொண்டாட்டங்களிலோ அல்ல, மாறாக, எளிமையிலும், எளியவர்களிடத்திலும் தான் பார்க்க முடியும். ஏழைகளிலும், எளியவர்களிலும் இறைவனைக்காண முற்படுவோம்.

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் பெருநாள் வாழ்த்துக்கள்!

Wednesday, 23 December 2015

வாழ்வு ஒரு பாடல்!

இயேசுவின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதா? இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டம் உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதா?

கிறிஸ்மஸ் விழாக்கள் உங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும், குறிப்பாக நீங்கள் விரும்பாதவைகள் குருக்கிடும்போது இறைவனைப் புகழ்ந்து, நன்றி செலுத்தி மகிழ்ந்து கொண்டாட முடிகிறதா?

செக்கரியா இயேசுவின் பிறப்பில் உண்மையான மகிழ்ச்சியை கண்டார். ஆகவே அவர் மகிழ்ந்து
பாடிய பாடல் இது. தன் வாழ்நாளில் பல இழப்புக்களைச் சந்தித்தார். பல அவமானங்களை, பழிச் சொற்களைக் கேட்டார்.கடவுளின் சாபமாகக் கருதப்பட்ட குழந்தை இல்லாத நிலையால் மனம் நொந்து நொடிந்து வாழ்ந்தார்.


 ஆயினும் கடவுளைவிட்டு ஒருபோதும் பிரியவில்லை. எல்லாவற்றையும் நல்லது என்றே கண்டார். தன் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சியிலும் நல்லவற்றையே தன் மனதில் கொண்டார். தான் விரும்பாதவற்றிலும் கூட, அதில் மறைந்திருக்கும் நல்லவற்றைத் தேடி கண்டு, அதிலே மகிழ்ந்து ஆண்டவனுக்கு நன்றி கூறி பாடிய பாடல் இது.

செக்கரியாவின் இந்த அணுகுமுறையை நம் வாழ்வில் கடைபிடிக்க முயல்வோம். எதிலும் நல்லது ஒன்று மறைந்திருக்கும், புதைந்திருக்கும். அங்குதான் ஆண்டவன் அமைதியையும் மகிழ்ச்சியையும் மறைத்து வைத்துள்ளார்.

அதைக் கண்டுபிடித்து வாழ்வதுதான் திறமை. ஆன்மீகம் நிறைந்தவர்கள், ஆண்டவனோடு தொடர்புடையவர்கள் எளிதில் இதை கண்டுபிடிப்பர். அவர்களுக்கு எங்கும் எதிலும் என்றும் எல்லாம் இன்பமே, மகிழ்ச்சியே. வாழ்வே இனிய பாடல்தான்.

Tuesday, 22 December 2015

குழந்தையின் பெயர் !

''செக்கரியா என்ற அதன் பெயரையே குழந்தைக்குச் சூட்ட இருந்தார்கள்.
ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, 'வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்' என்றார்...
செக்கரியா எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி,
'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று எழுதினார்'' (லூக்கா 1:60-63)


திருச்சபை வழக்கில் புனிதர்கள் நினைவாகத் திருவிழாக்கள் கொண்டாடுகிறோம். பொதுவாக இயேசு பிறந்த நாள் தவிர வேறு யாருக்கும் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில்லை; கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த புனிதர்களின் இறந்த நாளே அவர்களுடைய ''விண்ணகப்'' பிறந்த நாளாகக் கொண்டாடப்படும்.

ஆனால் அன்னை மரியாவும் திருமுழுக்கு யோவானும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இருவருக்குமே பிறந்த நாள் கொண்டாட்டம் திருச்சபையில் உண்டு. மரியா பிறந்த நாள் செப்டம்பர் 8ஆம் நாளும், திருமுழுக்கு யோவான் பிறந்த நாள் ஜூன் 24ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றன.

இதற்கு முக்கிய காரணம் மரியாவின் பிறப்பிலும் யோவானின் பிறப்பிலும் கடவுளின் வல்லமை தனிப்பட்ட முறையில் வெளிப்பட்டதுதான். பிள்ளைகளுக்குப் பெயரிடும்போது அவர்களுடைய முன்னோரின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் நிலவியது.

முதுவயதில் பிறந்த குழந்தை ஆதலால் செக்கரியா என்று தந்தையின் பெயரையே குழந்தைக்கும் சூட்டலாம் என எல்லாரும் எண்ணிய வேளையில் அதன் தாய் மட்டும் ''குழந்தைக்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' (லூக் 1:60) எனக் கூறுகிறார்.

 வானதூதரும் அவ்வாறே ''யோவான்'' என்னும் பெயரைக் குழந்தைக்குச் சூட்ட வேண்டும் எனக் கேட்டிருந்தார் (லூக் 1:13). ஆனால், வானதூதர் அறிவித்த செய்தியை நம்ப மறுத்ததால் ''பேச்சற்றவராய்'' இருந்த செக்கரியா எழுது பலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ''இக்குழந்தையின் பெயர் யோவான்'' என எழுதுகிறார் (லூக் 1:63).

இவ்வாறு, வானதூதர் வழியாக அறிவிக்கப்பட்டு, எலிசபெத்தால் ஏற்கப்பட்ட பெயரை செக்கரியாவும் ஏற்ற பிறகுதான் ''செக்கரியாவின் வாய்திறந்து நா கட்டவிழ்ந்தது'' (லூக் 1:64).

 இழந்த பேச்சுத் திறனை மீண்டும் பெற்ற செக்கரியா மகிழ்ச்சியால் அக்களித்திருப்பார். அந்த மகிழ்ச்சி அவருடைய நாவில் ''கடவுளின் புகழாக'' உருவெடுக்கிறது: ''அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்'' (லூக் 1:64). கடவுள் நமக்கு வழங்கும் செய்தியை ஏற்க நாம் தயக்கம் காட்டுகின்ற நேரங்கள் உண்டு. அப்பொழுது நம் இதயத்தில் கடவுளுக்கு இடமளிக்க நாம் மறுக்கின்றோம்.

நம் இதயக் குரல் அடங்கிவிடுகிறது. ஒருவிதத்தில் நாம் செக்கரியாவைப் போல ''பேச்சற்றவர்களாக'' மாறிவிடுகின்றோம். மீண்டும் நம் உள்ளம் திறந்து கடவுளை நாம் அங்கே வரவேற்கும்போது நம் இதயம் மகிழ்ச்சிப் பாடல் இசைக்கத் தொடங்குகிறது; நாம் கடவுளின் புகழைப் பாடுகின்றோம்.

''யோவான்'' என்னும் பெயர் ''கடவுள் இரக்கம் காட்டினார்'' என்னும் பொருளைத் தரும். எனவேதான் அப்பெயரை ''அருளப்பன்'' எனத் தமிழாக்கம் செய்தனர். கடவுளின் அருளும் இரக்கமும் நம்மில் துலங்கி மிளிர வேண்டும் என்றால் நம் இதயத்தைத் திறந்து கடவுளுக்கு அங்கே நாம் உறைவிடம் அளித்திட வேண்டும். அப்போது நம் வாழ்வு முழுவதும் இறைபுகழாக ஊற்றெடுத்து வழிந்தோட நாமும் செழுமை பெறுவோம்.

ஒரு பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், அதன் இயல்பு மாறாதே என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், விவிலியப் பார்வையில் பெயர் என்பது பொருள் வாய்ந்தது. ஒரு மனிதனின் ஆளுமையையும், பணியையும், அவரது வாழ்வின் இலக்கையும் குறித்து நிற்பது. எனவேதான், விவிலிய மாந்தர் பலருக்கும் கடவுளே பெயர் சூட்டுவதைப் பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அவ்வாறே செக்கரியா-எலிசபெத் தம்பதியரின் குழந்தைக்கும் இறைத் திருவுளத்தின்படியே பெயர் சூட்டப்படுகிறது. தாயின் வயிற்றிலேயே இறையருளைப் பெற்றதாய் இருந்தது அக்குழந்தை.

 இறைமகன் இயேசுவைத் தன் திருவயிற்றில் சுமந்த மரியாவின் வாழ்த்தொலி கேட்டு, துள்ளி மகிழ்ந்தது அக்குழந்தை. பின் வரும் நாள்களில் ஆண்டவர் இயேசுவின் முன்னோடியாய் பணி செய்து, இறையருளை அறிவிக்கும் குரலொலியாய் இருக்கப் போவது அக்குழந்தை. எனவே, அக்குழந்தை யோவான் என அழைக்கப்பட வேண்டும் என்பதே இறைத் திருவுளம்.

அதன்படியே, அதன் தாய், தந்தை இருவருமே யோவான் என்னும் பெயரையே முன்மொழிகின்றனர். நமது குழந்தைகளுக்கும் நாம் நல்ல பெயர்களைச் சூட்ட வேண்டும். கவர்ச்சியான, உச்சரிக்க இனிமையான பெயர்கள் என்று தெரிவுசெய்யாமல், வாழ்வின் இலக்கைச் சுட்டும், ஆளுமையை அறிவிக்கும் பொருளுள்ள நல்ல பெயர்களைக் கொண்டு அவர்களை அழைப்போம். நாமும் நமது பெயருக்கேற்ப வாழ்ந்து பெற்றோருக்கும், இறைவனுக்கும் பெருமை சேர்ப்போம்.



Monday, 21 December 2015

புரட்சிப் பாடல்!

''ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்:
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்:
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்'' (லூக்கா 1:52-53).


 மரியாவின் வாழ்க்கையில் கடவுள் புரிந்த அரும் செயல்கள் மரியாவின் நன்றிக் கீதத்திற்கு அடிப்படை. இப்பாடல் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற அன்னாவின் பாடலைப் பெரிதும் ஒத்திருக்கின்றது.


பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாதிருந்த அன்னா கடவுளின் இரக்கத்தால் சாமுவேலைப் பெற்றதால் கடவுளுக்கு நன்றி கூறிப் பாடினார்  அதுபோல, மரியாவும் கடவுள் தமக்குப் புரிந்த அதிசய செயல்களை எண்ணி, கடவுளைப் போற்றுகின்றார்.

 இப்பாடலில் ஒரு தனித்தன்மை உண்டு. அதாவது உலகம் பெரிதாக மதிப்பதைக் கடவுள் பெரிதாகக் கருதுவதில்லை. மாறாக, உலகம் மதிப்பதற்றதாகக் கருதுவது கடவுளின் பார்வையில் மாண்புடைத்ததாகிறது. இது ''மனித மதிப்பீடுகளைப் புரட்டிப் போடுதல்'' என்னும் இலக்கிய மற்றும் இறையியல் உத்தி.


 மரியா பாலஸ்தீன நாட்டில் பிறந்த ஓர் ஏழைப் பெண். அவருக்கு சமுதாயத்தில் பெண் என்ற முறையில் மதிப்பு இருக்கவில்லை. அவர் பெரிய பதவியோ அதிகாரமோ கொண்டிருக்கவில்லை. ஆனால் கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்து தம் மகனின் தாயாக மாறுகின்ற பெரும் பேற்றினை அளித்தார்.

பசியால் வாடிய இஸ்ரயேலருக்குக் கடவுள் வானிலிருந்து இறங்கிய உணவை வழங்கினார்; அவர்களுடைய தாகத்தைப் போக்க அதிசயமான விதத்தில் நீரூற்று தோன்றியெழச் செய்தார். அதே நேரத்தில் தங்களுக்கு எல்லாம் இருக்கிறது என இறுமாப்புக் கொண்டு மமதையால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களைக் கடவுள் முறியடித்தார்.

 இதற்கும் விவிலியம் பல எடுத்துக்காட்டுகள் தருகிறது. நன்மைக்கும் தீமைக்கும் இவ்வுலகிலேயே பலன் கிடைத்துவிடும் என நாம் கூற முடியாது. என்றாலும், கடவுள் நேர்மையுள்ள நடுவர் என்பதால் அவர் மனிதரின் உள்ளத்தைத்தான் பார்க்கிறார். வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறுபவர் அல்ல அவர்.

எனவே, செல்வம் தங்களுக்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டு ஏழைகளை மதியாதவர்கள் கடவுளிடமிருந்தும் மதிப்பு எதிர்பார்க்க முடியாது. மரியாவின் பாடல் நமக்க உணர்த்தும் அரிய உண்மை என்னவென்றார்:

நாம் மரியாவைப் போலக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுதில் நிலைத்திருந்தால் கடவுள் நமக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருவார். அது இவ்வுலகிலேயே தொடங்கி மறுவுலகில் முழுமைபெறும்.



பாடல்கள் மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த மொழி நடை. எத்தனை மொழிகளில் என்னென்ன கவி நயத்துடன் பாடல்களை வடிவமைத்தாலும்,உலக வரலாற்றல் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் எல்லோராலும் எல்லா காலத்திலும் பாராட்டப்படுகிறது, பாடப்படுகிறது. அது நம் அன்னை மரியாளின் பாடல்.

இப்பாடலை எல்லா வயதினரும் பாடலாம். எல்லா சூழ்நிலையிலும் பாடலாம். இன்பத்திலும் பாடலாம். துன்பத்திலும் பாடலாம். வெற்றியிலும் பாடலாம். தோல்வியிலும் பாடலாம். உயர்விலும் பாடலாம். தாழ்விலும் பாடலாம். ஆயினும் இப் பாடலின் முழுமையை, நிறைவை ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.

அன்னை மரியாளிடமிருந்த அதே மனநிலை உள்ளவர்கள் மட்டுமே இப்பாடலின் சிறப்பைப் பெற முடியும். ஆண்டவரில் உள்ளம் மகிழ வேண்டும். "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற இறை திட்டத்திற்கு கீழ்ப்படிதலும் அர்ப்பணமும் தேவை. ஏழைக்கு இரங்கும் உள்ளம், உதவும் மனம்,தாழ்ச்சி நிறைந்த செயல்பாடு இவை இப் பாடலைப் பாட வலுவூட்டும்.

எந்தச் சமுதாயத்தில் இப்பாடலைப் பாடும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதோ, அந்த சமுகம் ஏற்றத்தாழ்வின்றி செழிக்கும். யாருடைய குடும்பங்கள் இந்த மனநிலையில் உருவாகுகிறதோ, அக்குடும்பங்கள் குறைவின்றி வாழும்.

Sunday, 20 December 2015

உறவின் நேரம் !

''அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்'' (லூக்கா 1:39).

தான் கருத்தரித்த குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து ஈன்றளிக்கின்ற பேறு பெண்களுக்கு மட்டுமே உரிய அனுபவம். பேறுகால வேதனையும் மகிழ்ச்சியும் என்னவென்பதை மரியாவும் எலிசபெத்தும் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து அறிந்தார்கள்.

அந்த இரு பெண்களின் வாழ்விலும் கடவுளின் அருள்செயல் தெளிவாக வெளிப்பட்டது. என்றாலும் அவர்கள் குழந்தைப் பேறு அடைந்ததில் வேறுபாடுகளும் உண்டு. எலிசபெத்து வயதில் முதிர்ந்தவர்; குழந்தை பெற இயலாதவர். குழந்தைப் பேறு தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்றிருந்த அவருக்குக் குழந்தை பிறக்கிறது கடவுளின் அருள்செயலால்.

 ஆனால் மரியாவோ இளம் வயதுக் கன்னிப் பெண். உரிய காலத்தில் தமக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என அவர் நினைத்திருப்பார். ஆனால் கணவனோடு கூடி வாழும் முன்னரே அவருக்குக் குழந்தைப் பேறு கிடைக்கிறது கடவுளின் அருள்செயலால். மரியாவின் வாழ்வில் கடவுள் வல்லமையோடு செயல்பட்டார் என்பதற்குச் சான்று முதிர்ந்த வயதில் எலிசபெத்து குழந்தைப் பேறு பெற்றதாகும் (காண்க: லூக் 1:36).

எலிசபெத்து மரியாவின் வயிற்றில் கருவாக இருந்த குழந்தை ''ஆசி பெற்றது'' எனப் போற்றுகிறார்; மரியாவை ''என் ஆண்டவரின் தாய்'' என வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:42-43). அதுபோலவே, எலிசபெத்துக்கு மகனாகப் பிறந்த திருமுழுக்கு யோவான் மரியாவுக்கு மகனாகப் பிறந்த இயேசுவைப் பார்த்து, ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார்'' எனச் சான்று பகர்வார் (காண்க: லூக் 3:16).

 மரியா எலிசபெத்தைத் தேடிச் சென்றது எதற்காக? எலிசபெத்தின் பேறு காலத்தில் அவரோடு கூட இருந்து அவருக்கு உதவி செய்வதற்காகவே மரியா சென்றிருக்கலாம். அதே நேரத்தில் மரியாவுக்கும் எலிசபெத்தின் உதவி தேவைப்பட்டது.

திருமண உறவில் புகுமுன்னரே கருத்தரித்திருந்த மரியா எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை எனவும், அவருடைய வயிற்றில் வளர்ந்துவருகின்ற கரு தூய ஆவியின் வல்லமையால் ஏற்பட்டதே என அவருக்கு உறுதியளிக்கவும், இரு பெண்களும் இணைந்து கடவுளின் அருள்செயலை வியந்து போற்றிடவும் மரியா-எலிசபெத்து சந்திப்பு தேவைப்பட்டது.


நம் வாழ்விலும் நாம் கடவுளின் அருள்செயலை உணர்ந்துகொள்ள நம்மை அடுத்திருப்போர் பல சமயங்களில் துணை செய்கின்றனர். நம் கண்களுக்கு மறைந்திருப்பது பிறர் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகின்ற நேரங்கள் உண்டு. கடவுள் நம் வாழ்வில் அதிசயங்களை நிகழ்த்துகிறார் என்பதை நாம் சில வேளைகளில் நம்மைப் பார்த்துப் பிறர் கூறுவதிலிருந்தும் அறிந்துகொள்கிறோம். அதுவும் கடவுளின் செயலே.


அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்:
(1) விரைவு
(2) வாழ்த்து.
(3) மகிழ்ச்சியின் துள்ளல்
 (4) துhய ஆவியின் ஆட்கொள்தல்
(5) ஆசி வழங்கல்.

ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே துhய ஆவியின் துணை வேண்டும்.

நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம்.

 எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது,வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், துhய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம். அந்த வாழ்த்து நம் உறவை ஆழப்படுத்தும்.

Saturday, 19 December 2015

ஒரு சிறப்பு உறவு !

''பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்'' (லூக்கா 1:42)


 இயேசுவை இவ்வுலகில் பெற்றுத் தந்த பெருமையுடைத்தவர் மரியா. அவரைத் திருச்சபை கன்னித் தாய் எனப் போற்றுகின்றது. கடவுளின் ஆவி வல்லமையோடு இறங்கிவந்ததால் மரியா கடவுளின் வார்த்தையைத் தம் வயிற்றில் தாங்கிக் குழந்தை இயேசுவாக ஈன்றளித்தார்.


எனவே, மரியாவை நாம் ''கடவுளின் தாய்'' எனவும் போற்றுகின்றோம். இத்தகைய உயர்ந்த பேற்றினை மரியா பெற்றதால் அவர் உண்மையிலேயே பெண்களுக்குள் ஆசிபெற்றவர்தாம் (காண்க: லூக் 1:42). மரியாவின் உறவினராகிய எலிசபெத்து உரைத்த வாழ்த்துரையை நாமும் மரியாவுக்கப் புகழாரமாகச் சூடுகின்றோம்.


 மரியா ஆசிபெற்றவர் என்பதன் பொருள் என்ன? கடவுள் மரியாவைத் தம் மகனின் தாயாகத் தேர்ந்துகொண்டார் என்பதே இங்குக் குறிக்கப்படுகின்ற ஆழ்ந்த பொருள். இவ்வாறு தாய்மைப் பேறு எய்திய மரியா நம் தாயாகவும் இருக்கின்றார்.


நாம் மரியாவைப் போன்று கடவுளை முற்றும் நம்புகின்ற போது கடவுளின் செயல் நம்மிலும் வல்லமையோடு துலங்கும். கடவுளின் திருவுளத்தை நாம் ஏற்போம்; அதன்படி செயல்படுவோம்.

 மரியா ஆசிபெற்றவர் என்பதன் இன்னொரு பொருள் அவர் தம் மகன் இயேசுவின் சீடராக மாறினார் என்பதாகும். சீடர்கள் எப்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என இயேசு போதித்தார்.


அப்பண்புகளை மரியா தலைசிறந்த விதத்தில் கொண்டிருந்தார். அவர் தம்மை முழுவதும் கடவுளிடம் கையளித்தார். நாமும் அவ்வாறு செய்யும்போது உண்மையிலேயே பேறுபெற்றவர் ஆவோம்.


பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மரியா சிறந்த முன்மாதிரியாக உள்ளார். அதாவது, மரியாவிடம் துலங்கிய நற்பண்புகள் மனிதர் அனைவருக்கும் பொருந்துவனவே. பெண்களோடு பெண்ணாக மரியா உள்ளார் என்பதால் அவருக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது என்றாலும், மரியா மனித இனத்திற்கே ஒரு சிறந்த முன்னோடியாக இருக்கின்றார்.

மனிதர் எவ்வாறு கடவுளை முழுமையாக ஏற்று வாழ முடியும், வாழ வேண்டும் என்பதற்கு மரியா எடுத்துக்காட்டாக அமைகிறார்.

Friday, 18 December 2015

பாடம் புகட்டுதல்!

''இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை.

ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்'

உம்மால் பேசவே இயலாது' என்றார்'' (லூக்கா 1:20)



நாளைய நற்செய்தியில் கபிரியேல் வானதூதர் மரியாவிடம் சென்று கடவுளின் செய்தியை வழங்கியதுபோல செக்கரியாவிடமும் ஒரு செய்தி வழங்குகிறார். மரியா தமக்க வழங்கப்பட்ட செய்தியை உடனடியாக ஏற்கத் தயங்கினார். ஆனால் அவர் தயங்கவேண்டியதில்லை என வானதூதர் உறுதியளித்ததும் மரியா கடவுளின் திருவுளத்திற்கு அமைந்தார்.


செக்கரியாவின் அனுபவம் சிறிது வேறுபட்டிருப்பதைக் காண்கின்றோம். இங்கேயும் கடவுளின் செய்தி செக்கரியாவுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அவர் தமக்கு வழங்கப்பட்ட செய்தி உண்மையாக இருக்க முடியாது என்று வாதாடுவதுபோலத் தெரிகிறது .


எனவேதான் வானதூதர் அவரைப் பார்த்து, ''என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை'' என்று இடித்துக் கூறுகின்றார். செக்கரியாவுக்கு ஒரு சிறு தண்டனையும் வழங்கப்படுகிறது. அதாவது, சிறிது காலம் அவர் பேச்சற்றவராக இருப்பார்.


 நம் வாழ்க்கை அனுபவத்திலும் நாம் கடவுளின் வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நேரங்களை உணரலாம். அப்போது கடவுளை விட நாம் அதிகம் தெரிந்தவர்கள் போல நாம் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் கடவுள் நமக்குச் சில வேளைகளில் ஒரு பாடம் புகட்டத் தவறுவதில்லை.


 நாம் நினைப்பதே சரி என்னும் மன நிலை நம்மிடம் இருத்தல் ஆகாது. பிறர் கூறுகின்ற சொற்களிலும் நமக்கென ஒரு கருத்துப் புதைந்திருப்பதை நாம் காணத் தவறலாகாது. இவ்வாறு பிறர் நமக்கு ஒரு கருத்தை உணர்த்தும்போது கடவுளே அவர்கள் வழியாக நம்மோடு பேசுகின்ற அனுபவத்தையும் நாம் சிலவேளைகளில் பெறுகிறோம்.


 கடவுளின் செயல்பாடு எப்போதும் நேரடியாக நிகழ்வதில்லை. சிலவேளைகளில் பிற மனிதர் வழியாகக் கடவுள் நம்மை வழிநடத்துவார். அப்போது கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க நாம் தவறிவிடல் ஆகாது. கடவுள் நமக்கு ஒரு பாடம் புகட்டும் வேளையிலும் நாம் நம்பிக்கை இழத்தல் ஆகாது என்பதற்கும் செக்கரியா ஓர் உதாரணமாகிறார்.


வயதில் முதிர்ந்த அவருக்கும் அவருடைய மனைவி எலிசபெத்துக்கும் யோவான் என்றொரு குழந்தை பிறந்த பிறகு செக்கரியா பேசும் திறனைப் பெறுகின்றார். நாமும் துன்ப நேரத்திற்குப் பிறகு மகிழ்ச்சியைப் பெறுவதும் உண்டு. அதுவும் கடவுளின் அருளே.

Thursday, 17 December 2015

இறைக்குடும்பம்!

''அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க
விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்'' (மத்தேயு 1:19).

 யோசேப்பு தம் வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத ஒரு நெருக்கடிக்கு உள்ளாகிறார். அவருடைய உள்ளத்தில் மாபெரும் கலக்கம். அவருக்கும் மரியாவுக்கும் மண ஒப்பந்தம் ஆகியிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் கணவனும் மனையுமாகக் சுடி இல்லறம் நடத்தாத நிலையில் மரியா ஒரு குழந்தையைத் தம் வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறார்.


 யோசேப்புக்கு ஏற்பட்ட கலக்கமும் குழப்பமும் அவருடைய உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் அவர் ''நேர்மையாளராக இருந்தார்'' (மத் 1:19). எனவே, அவருடைய உள்ளத்தில் நேர்மையும் கண்ணியமும் குடிகொண்டிருந்தன. அவர் தம் மனைவியின் நல்ல பெயரையும் காப்பாற்ற எண்ணுகிறார். எனவே, மரியாவைப் பொதுமக்கள் முன்னிலையில் குற்றப்படுத்த அவருடைய மனது உடன்படவில்லை. மரியாவை மறைவாக விலக்கிவிட யோசேப்ப திட்டமிடுகிறார்.


 நம் வாழ்க்கையிலும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. அந்நேரங்களில் நாம் உள்ளம் கலங்குவதும் உண்டு. இவ்வாறு சலனமுற்றிருக்கின்ற வேளைகளில் நாம் அவசரப்பட்டு முடிவெடுக்கத்தான் தோன்றும்.

ஆனால் நாம் உணர்ச்சிக்கு அடிமையாகிவிடாமல் நிதானமாகச் சிந்தித்தால் சில வேளைகளில் நம் சிக்கல்களுக்கு ஒரு சரியான தீர்வு ஏற்பட வாய்ப்புண்டு. யோசேப்பின் வாழ்வில் ஏற்பட்ட பல துன்பங்களையும் அவர் நேர்மையான மனத்தோடு சந்தித்தார்.

கடவுளின் உதவியை நாடினார். அந்த உதவி அவருக்கு எப்போதுமே கிடைத்தது. கடவுளின் செய்தி யோசேப்புக்கு வானதூதர் வழியாக வழங்கப்பட்டது என நற்செய்தி கூறுகின்றது. நமக்கும் கடவுளின் உதவி உண்டு. ஆனால் நாம் அந்த உதவியை நாடுவதற்குப் பதிலாக நம்முடைய சொந்த சக்தியிலேயே நம்பிக்கை கொண்டு வழிதவறிப்போவதும் உண்டு. எங்கு நேர்மையான உள்ளம் இருக்கிறதோ அங்கே கடவுளுக்கு உகந்த முடிவெடுக்கின்ற பண்பும் இருக்கும்.


அருமையான ஆனந்தம் நிறைந்த குடும்ப வாழ்வை, ஆட்கள் பலர் குறுக்கிட்டு கெடுத்து குட்டிட் சுவராக்கிவிடுவர். சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் சம்பவங்கள், கலையிழந்த மாளிகையாக்கிவிடும்.


சில ஆசைகள், கொள்கைகள் வண்ணம் காட்டி கண்ணை மறைத்து, குடும்பத்தை காரிருளில் தடுமாற வைத்துவிடும். ஆண்டவனும் கூட சில நேரங்களில் விழையாடலாம். இது போன்ற நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து, காவல்துறை, கோர்ட், விவாகரத்து என்ற விபரீதங்களில் சிக்கி, பெருமைமிக்க குடும்பங்களும் சிறுமையடைகின்றன.

யோசேப்பு, மரியாவின் குடும்பமும் அதற்கு விதி விலக்கல்ல. இறைவனின் திட்டத்தை புறியாதவரையில் புனிதனின் குடும்பமும் தப்பமுடியாது.மனைவியை விலக்கிவிடலாமா என்று சிந்திக்கிறார் யோசேப்பு. நேர்மையாளர். கடவுள் பக்தர்.

தன் குழப்பத்திற்குத் தீர்வு காண இறை உதவியைத் தேடுகிறார். அமைதியில், தூக்கத்தில், தியானத்தில் இறை உதவி, வெளிப்பாடு, தெளிவு அவருக்கு கிடைக்கிறது. இறை திட்டத்தை தெறிந்து கொள்கிறார். சமுதாயத்தில் தன் பங்கினை உணர்கிறார். தன் குடும்பச் சுமை இப்பொழுது சுவையாகத் தோன்றுகிறது.

குடும்பச் சுமைகள் நம்மை அழுத்தும் வேளைகளில் குடும்பங்களின் பாதுகாவலராம் புனித யோசேப்பின் துணை வேண்டுவோம். இறைவன் தன் தொண்டர்களை அனுப்பி உதவுவார். வாழ்க்கைப் பயணத்தில் குடும்பம் இப்பொழுது பல மடங்காக மகிழ்ச்சியை, நிறைவைத் தரும்.



Wednesday, 16 December 2015

குல பெருமை காப்போம்!

''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு'' (மத்தேயு 1:16)


 நாளை இயேசுவின் மூதாதையர் யார் என்னும் கேள்விக்குப் பதில் தருவதாக அமைந்துள்ள நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ளது (மத் 1:1-17). இதில் சில சிறப்புக் கூறுகள் உண்டு.


பொதுவாக இன்னாரின் தந்தை இன்னார் என்று வரிசைப்படுத்துவதே எபிரேய வழக்கம். ஆனால் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் நான்கு பெண்களின் பெயர் வருகிறது (தாமார், இராகாபு, ரூத்து, உரியாவின் மனைவி பத்சேபா (காண்க: 2 சாமு 11:3) என்னும் இந்நான்கு பெண்களுமே வெவ்வேறு வகைகளில் சமுதாயத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள்.


 இவர்களும் இயேசுவின் மூதாதையராகக் குறிக்கப்படுவது வியப்புக்குரிய செய்தியே. அதைவிடவும் வியப்புக்குரியது இயேசுவின் தாய் கணவரின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்து மகவாக ஈன்றளித்தது ஆகும். யோசேப்பின் வழியில் இயேசு தாவீது மன்னரின் வாரிசாகிறார். ஆனால் மரியா வழியாக அவர் கடவுளின் வல்லமையால் மனிதக் குழந்தையாகப் பிறக்கிறார்.

இயேசுவின் மனித வாழ்க்கையின் தொடக்கமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. கடவுள் கொணர்கின்ற ஒழுங்கு மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இங்கே காண்கின்றோம். குறையுள்ள மனிதரின் துணையோடு கடவுள் குறையற்ற செயல்களை நிகழ்த்த முடியும்.

 வரம்புக்கு உட்பட்ட மனித சக்தியைவிட கடவுளின் சக்தி வலிமை வாய்ந்தது. இதை நம் வாழ்வு அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனித வலுவின்மையில் கடவுளின் வல்லமை துலங்குகிறது. இக்கருத்தைப் பவுல் அழகாக விளக்கியுள்ளார்.

எப்போது நாம் நம் சொந்த சக்தியைப் பெரிதாக எண்ணுகிறோமோ அப்போது அது குறையுள்ளது என்பதையும் கடவுள் நமக்கு உணர்த்திவிடுகிறார். நம் பட்டறிவு நமக்குப் பாடம் புகட்டியபின் நாம் மீண்டும் கடவுளை அணுகிச் சென்று அவருடைய கைகளில் நம்மை ஒப்புவிக்கும்போது நம் வாழ்வு ஒளிபெறும்.


இது என்ன பெயர் பட்டியல் என்று நம்மில் பலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நற்செய்தியாளர் மத்தேயு இதை எழுதியதில் பொருள் உள்ளது. தன்னுடைய கிறிஸ்து இறையியலை இப்பகுதியில் மத்தேயு உள்ளடக்கியுள்ளார்.

தன்னுடைய நற்செய்தியை யூதருக்கு எழுதியதால், கிறிஸ்து தாவீதின் வழித்தோன்றல் என்னும் செய்தியையும், ஆபிரகாமின் வாரிசு என்பதையும் உறுதிப்படுத்த இவர்களை முன்னிலைப்படுத்தி முதன்மைப்படுத்தி தன் நற்செய்தியைத் தொடங்குகிறார்.

இயேசு தாவீதின் வழித்தோன்றல் என்று மத்தேயு எழுதுவதன் மூலம், தான் அறிவிக்கும் இந்த இயேசு யூத குலத்தைச் சேர்ந்தவர் என்றும், பேரரசரின் பரம்ரையைச் சார்ந்தவர் என்றும், அபிஷுகம் செய்யப்பட்டவர் என்றும் உணர்த்துகிறார்.

அவ்வாரே ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்து என்று குறிப்பிடுவதன் மூலம் தன் நற்செய்தியை எழுதிய யூத மக்களைப் பெருமைப்படுத்துவதும் அவரது நோக்கங்களுள் ஒன்றாகும்.

இவ்வாறு இயேசுவை, அவரது மனித இயல்பை இப்பகுதியில் வெளிக்கொணரும் அதே வேளையில், யூத மக்களின் சிறப்பை உணர்த்தி, கிறிஸ்துவோடு இணைந்து வாழ அவர்களை அழைக்கிறார்.


ஒரு மனிதரின் நற்பண்புகளும், நல்லியல்புகளும் பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்தே அவருக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம். உள நலப் பண்புகள், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், அறிவுக் கூர்மை போன்றவை அனைத்துக்கும் நாம் மட்டுமல்ல பொறுப்பு.


நமது முன்னோரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதை இன்று அறிவியல் நன்கு எண்பித்துவிட்டது. எனவே, நல்ல முன்னோரிடமிருந்து உடல், உள்ள, சமூக நலனைப் பெற்றுக்கொள்கிறோம். நமது முன்னோர் ஆற்றலும், நன்மைத்தனமும் குறைந்தவர்களாக இருந்தால், நாமும் அப்படியேதான் இருப்போம், பெரிய முயற்சிகள் எடுக்காவிட்டால். எனவே, தலைமுறை அட்டவணை என்பது இன்றளவும் முக்கியமானதாக இருக்கிறது.


எனவே, வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப் பெரிய செல்வம் இன்றைய நல்ல தலைமுறைதான். எனவே, நாம் உடல், உள்ள, ஆன்ம நலத்தோடு வாழ்ந்து, அடுத்த தலைமுறையும் அவ்வாறே வாழ வழிவகுப்போம்.


நாமும் நம் குடும்பப் பெருமை, பெற்றுள்ள அழைப்பு, இதற்கு ஏற்றார்போல வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை இப்பகுதி நமக்கு உணர்த்துகிறது. ஆக, நம் குல பெருமை காப்போம்.

Tuesday, 15 December 2015

நேரடி அனுபவம்!

''அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை
இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக,
'நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்' என்றார்'' (லூக்கா 7:21-22)


திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர்கள். அவர்கள் இருவருமே மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும் அவர்கள் கடவுளாட்சியின் வருகையை அறிவித்த பாணி வேறுபட்டது.


 மக்கள் மனம் மாறாவிட்டால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவர் என்று கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார் யோவான். இயேசுவோ கடவுளாட்சி என்பது கடவுளின் இரக்கமும் அன்பும் வெளிப்படுகின்ற தருணம் என போதித்தார்.


இயேசு கடவுளின் அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார்? மக்களுக்கு நலம் கொணர்ந்து கடவுள் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்பதை இயேசு காண்பித்தார். எனவேதான் அவர் ''பிணிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரைக் குணமாக்கினார்'' (லூக் 7:21). இவ்வாறு இயேசு மக்களுக்கு நலமளித்ததை யோவானின் சீடர்கள் பார்க்கிறார்கள். இயேசுவின் சொற்களைக் கேட்கிறார்கள்.


 இவ்வாறு நேரடியான அனுபவம் பெற்றதால் அவர்கள் தங்கள் குருவாகிய யோவானிடம் சென்று தங்கள் அனுபவத்தை அவரோடு பகிர்ந்துகொள்வார்கள். யோவானும் இயேசு எத்தகைய மெசியா என்பதை அறிந்துகொள்வார். இயேசுவைத் ''தயக்கமின்றி ஏற்றுக்கொள்வார்'' (லூக் 7:23).


 இயேசுவை நாம் அறிய வேண்டும் என்றால் அவர் நமக்கு அறிவிக்கின்ற செய்திக்கு நாம் கவனத்தோடு செவிமடுக்க வேண்டும். அவர் புரிகின்ற செயல்களை நம் கண்கள் திறந்து பார்க்க வேண்டும். அதாவது, இயேசுவை அணுகிச் சென்று அவரை நேரடி அனுபவத்தால் அறிகின்றவர்களே அவருடைய உண்மையான பண்பைத் தெரிந்துகொள்ள முடியும்.


இத்தகைய நேரடி அனுபவம் நமக்கு இல்லையென்றால் இயேசு பற்றிய அறிவு வெறும் ஏட்டுச் சுரக்காயாகவே இருந்துவிடும். அதனால் நமக்கும் பிறருக்கும் பயனில்லாது போய்விடும். இயேசு கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்வதற்குத் தெரிந்துகொண்ட வழி அவர்களுடைய பிணிகளைப் போக்கி அவர்களைத் தீய ஆவிகளின் பிடியிலிருந்து விடுவித்ததுதான்.


இன்றைய உலகிலும் பலவகையான பிணிகளால் அவதியுறுகின்ற மனிதர்கள் இருக்கின்றார்கள். தன்னலம், பேராசை, அதிகார வேட்கை போன்ற ''தீய ஆவிகள்'' நம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன.


இத்தகைய பிணிகளிலிருந்தும் ''தீய ஆவிகளிடமிருந்தும்'' நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும்; நம் வாழ்வில் ஆழ்ந்த மாற்றம் கொணர்கின்ற அவரது வல்லமையைப் பணிவோடு நாம் ஏற்றிட வேண்டும்.


Monday, 14 December 2015

கடவுள் தோட்டத்தில் வேலை செய்வோம் !

''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28).


ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். 


ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார்.


 அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. 


கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.



இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. 


நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. 


இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. 


தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.


Sunday, 13 December 2015

அதிகாரம்!

''எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?'' (மத்தேயு 21:23)


 இயேசு புரிந்த அதிச செயல்களைக் கண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். சிலர் அந்த வியப்பு உணர்வைத் தாண்டிச் சென்று, இயேசு யார் என்னும் கேள்வியை எழுப்பினார்கள். அவர்களுள் ஒரு சிலர் இயேசு அலகையின் உதவியோடுதான் புதுமைகள் செய்கிறார் என்றார்கள்.

வேறு சிலரோ இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர் என்னும் உண்மையைக் கண்டுகொண்டார்கள். இவர்கள்தான் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை கொண்டனர்''. இயேசுவை நம்புவோர் கடவுளின் வல்லமையை ஏற்கின்றனர்;

முற்காலத்தில் பல மனிதர் வழியாகத் தம்மையே வெளிப்படுத்திய கடவுள் நம் காலத்தில் தம் ஒரே மகன் இயேசுவை நம் மீட்பராக அனுப்பினார் எனவும், அவர் வழியாகவே நாம் வாழ்வு பெறுகிறோம் என்பதையும் இவர்கள் அறிந்துள்ளனர்.

என்றாலும், இயேசு ஓர் இறைவாக்கினர் போல மக்களுக்குக் கடவுளின் திட்டத்தை அறிவித்ததால் அவரைப் பற்றி அறிய மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இயேசுவின் செயல்பாடுகளுக்கும் பிற இறைவாக்கினருக்கும் இடையே நிலவிய ஒரு பெரிய வேறுபாடு இயேசு ''அதிகாரத்தோடு போதித்தார்'' என்பதாகும்.

 எருசலேம் கோவிலில் வாங்குவதும் விற்பதுமாக மக்கள் இருந்ததால் அங்கே பெரிய சந்தடி நிலவியது. இயேசு இதைக் கண்டித்தார். அங்கிருந்த வியாபாரிகளையும் பிறரையும் துரத்தினார். இதைக் கண்டதும் இயேசுவின் எதிரிகள் அவரிடம் கேட்ட கேள்வி இது:

''எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?'' இதற்கு இயேசுவின் வாழ்க்கையே பதிலாக அமைந்தது எனலாம். இயேசுவின் அதிகாரம் கடவுளிடமிருந்து அவருக்கு வந்த அதிகாரம்தான். எனவே, இயேசு கடவுளின் பெயரால் மட்டும் பேசவில்லை;

 மாறாக, கடவுளுக்கு எந்த அதிகாரம் உரித்தானதோ அதே அதிகாரம் தமக்கும் உண்டென இயேசு அறிவித்தார். இயேசுவின் அதிகாரம் கடவுளின் திருவுளத்திற்கு அவர் அமைந்த நடந்ததால் அவருக்கு வழங்கப்பட்டது. இன்றைய திருச்சபையும் இயேசுவின் பெயரால் அதிகாரத்தோடு போதிக்க அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சபை இருப்பதும் வாழ்வதும் தனக்காகவல்ல, மாறாக, இயேசுவின் வழியாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்னும் உண்மைக்குச் சான்று பகர திருச்சபை அழைக்கப்படுகிறது. திருச்சiபின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இப்பொறுப்பில் பங்குண்டு.

பகிர்வு!

''அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர்.
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்;
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்' என்றார்'' (மத்தேயு 3:10-11).


மக்கள் மனம் மாற வேண்டும் என்றும் திருமுழுக்குப் பெற வேண்டும் என்றும் போதித்தார் திருமுழுக்கு யோவான். அப்போதனையைக் கேட்ட மக்களில் சிலர் தங்கள் பழைய வாழ்க்கைமுறையை மாற்றிட முன்வந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்வி இன்று நமது கேள்வியாக மாற வேண்டும்: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' (மத் 3:10).

கடவுளின் அருள் நம் உள்ளத்தைத் தொடும்போது நாம் அதற்குப் பதில்மொழி வழங்குவது தேவை. அப்பதில் மொழிதான் ஒரு கேள்வியாக உருவெடுக்கிறது: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' இக்கேள்விக்கு யோவான் அளித்த பதில் மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. முதலில் நாம் பகிர்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாற வேண்டும் (மத் 3:11).

 இரண்டாவது, பேராசைக்கு நாம் இடம் கொடுத்தலாகாது (மத் 3:12). மூன்றாவது, நம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தலாகாது (மத் 3:14). யோவான் அறிவித்த புதிய வாழ்க்கை முறையைச் சுருக்கமாகக் குறிப்பிடுவதாக இருந்தால் அது ''பிறர் நலனில் அக்கறைகொண்டு வாழ்தலில் அடங்கும்'' எனலாம். நம்மை அடுத்திருப்போருக்கு நாம் அன்புகாட்டும்போது உண்மையிலேயே நம்மில் ''மன மாற்றம்'' நிகழ்ந்துவிட்டது எனலாம்.

 மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் நிகழ்கின்ற மாற்றம். பழைய சிந்தனைப் பாணிகளைக் கைவிட்டுவிட்டு, நலமான புதிய சிந்தனை முறைகளை நாம் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் அத்தகைய மாற்றம் உள்ளத்தோடு மட்டுமே நின்றுவிடாது.

மாறாக நம் வாழ்வில் செயல்முறையில் வெளிப்படும். எனவேதான் திருமுழுக்கு யோவான், ''மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்'' என்றார் (மத் 3:8). ''இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று திருமுழுக்கு யோவான் மக்களுக்கு அறிவுறுத்தினார்.


அந்த அறிவுரை நமக்கும் பொருந்தும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1925) இதை வலியுறுத்துகிறது: ''மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை என்பதை எல்லாரும் கருத்தில் கொள்ளவேண்டும். இந்நலன்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் முறையான வழியில் தாம் உடைமையாகக் கொண்டிருக்கும் பொருள்களைத் தமக்கே உரியனவாக மட்டுமன்றி, எல்லாருக்கும் பொதுவானவையாகவும் கருதவேண்டும்.

அதாவது, தமது உடைமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்'.'அதை நல்ல மனதுடன் பகிர வேண்டும்.

பகிர்தலில் உள்ள சந்தோசம் வேறு எதிலும் கிடையாது. 

Friday, 11 December 2015

நம்பிக்கையினால் வாழ்வு !

''பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து,
'அதை (பேயை) ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?' என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்...' என்றார்'' (மத்தேயு 17:19-20).

நம்மிடம் ''நம்பிக்கை'' மட்டும் இருந்தால் நம்மால் அதிசய செயல்களைச் செய்யக்கூடும் என இயேசு கற்பிக்கிறார். நோய்களை விளக்குவதற்கு அறிவுப்பூர்வமான தெளிவுகள் இல்லாதிருந்த அக்காலத்தில் எல்லா நோய்களுக்கும் ''பேய்''தான் காரணம் என மக்கள் கருதியதுண்டு.

 வலிப்புநோயால் அவதிப்பட்ட மனிதரைப் பிடித்திருந்தது வலிப்புப் பேய். அதை ஓட்டிட இயேசுவின் சீடரால் இயலவில்லை. அதற்குக் காரணமாக இயேசு காட்டியது அவர்களது ''நம்பிக்கைக் குறைவு''. நம்பிக்கை என்றால் என்ன? விவிலியப் பார்வையில் நம்பிக்கை என்பது கடவுளிடத்தில் நாம் முழுமையாக நம்மையே கையளிப்பதைக் குறிக்கும்.

கடவுளிடத்தில் யார் அடைக்கலம் புகுகின்றார்களோ அவர்களிடத்தில் நம்பிக்கை உள்ளது எனலாம். இந்த நம்பிக்கை நம்முடைய சொந்த சக்தியால் எதையும் சாதிக்கலாம் என எண்ணாது; மாறாக, எல்லையற்ற வல்லமையுள்ள கடவுள் நினைத்தால் எந்த அதிசய செயல்களையும் ஆற்ற முடியும் என உறுதியாக இருப்பதே நம்பிக்கை.


 இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த ஆழ்ந்த நம்பிக்கையைத்தான். இங்கே இரண்டு வகையான மிகைப் போக்குகளை நாம் தவிர்த்தல் வேண்டும். ஒன்று, கடவுளிடத்தில் நம் சுமைகளைப் போட்டுவிட்டு நாம் வாளா இருந்துவிடலாம் என நினைக்கின்ற அலட்சியப் போக்கு.

மற்றொன்று, கடவுளை நாம் முழுமையாக நம்பியபோதும், அவரை நோக்கி உருக்கமாக மன்றாட்டுக்களை எழுப்பிய பிறகும் நாம் எதிர்பார்த்துக் கேட்டது நடக்காமல் போய்விட்டால் கடவுளையோ நம்மையோ குறைகூறுகின்ற போக்கு. சில வேளைகளில் நமக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் அதிலிருந்து விடுதலை பெற நாமும் பிறரும் உருக்கமாக வேண்டுகிறோம்.

அதன்பிறகும் நோய் தணியாவிட்டால் நம்மிடம் நம்பிக்கை இல்லை எனச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்; அல்லது நம்மீது பழியைப் போடுகின்றனர். இது சரியான போக்கு அல்ல. நம்பிக்கை என்பது மாயா வித்தை அல்ல. கடவுளை முழுமையாக நாம் நம்பினால் நாம் எதிர்பார்த்தது நடக்காவிட்டாலும் நாம் நம்பிக்கையில் தளர மாட்டோம். மாறாக, நம் நம்பிக்கையை ஆழப்படுத்த இறைவனை வேண்டுவோம்.

Thursday, 10 December 2015

பாவிகளுக்கும் நண்பன்!

''இயேசு, 'மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்.
இவர்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும்
பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 11:19).

சிறு பிள்ளைகள் விளையாடுவது இயேசுவின் வாயில் ஓர் உவமையாக உருவெடுக்கிறது. குழல் ஊதினால் கூத்தாட வேண்டும்; ஒப்பாரி வைத்தால் மாரடித்துப் புலம்ப வேண்டும். இதுதான் விளையாட்டு ஒழுங்கு. ஆனால் ஒரு தரப்பினர் குழல் ஊதும்போது மறு தரப்பினர் கூத்து ஆடாவிட்டால் அங்கே இருதரப்பினருக்கிடையே புரிதல் இல்லை என்பதே பொருள்.

திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி, ஒட்டக மயிராடை அணிந்து, காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் உண்டவராக வந்தார் (மத் 3:1-4). அவருக்குப் பேய்பிடித்துவிட்டது என்று கூறி அவரை ஏற்க மறுத்தார்கள். இயேசுவோ விருந்துகளில் கலந்துகொண்டு மக்களோடு உணவருந்தியவராக வந்தார். அவரைப் பார்த்து, ''பெருந்தீனிக்காரன், குடிகாரன்'' என்றெல்லாம் குறை கூறி ஏற்க மறுத்தார்கள் (மத் 11:19).

இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட மக்களைக் கண்டு இயேசுவுக்கு ஆத்திரம் வருகிறது. அம்மக்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டு உணர்ந்து, கடவுள் அவர்களுக்கு அறிவித்த செய்தியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என இயேசு வருத்தம் கொள்கிறார்.

 இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். இயேசு உலகுக்கு அறிவித்த செய்தி என்னவென்பதை அறிந்துகொள்ள மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டுகின்ற காரணங்கள் பல. இயேசு அறிவித்த செய்தி வேறு சமயங்களிலும் இருக்கிறதே என்பது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது.

 இயேசுவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்போர் இருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசுவை நாம் இருபத்தோராம் நூற்றாண்டு மன நிலைக்கு ஏற்ப அறிவிப்பது எப்படி என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பிற சமயங்களில் தலைசிறந்த போதனைகள் உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது.

அதுபோலவே, உலகில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இயேசுவின் போதனைப்படி நடக்கிறார்கள் எனவும் கூற இயலாது. ஆனால் இக்காரணங்களைக் காட்டி இயேசு பற்றி அறிய மறுப்பது சரியல்ல. உலகில் வாழ்ந்த மாபெரும் மனிதருள் ஒருவர் இயேசு. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பல்லாயிரம் மக்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கின்றார்கள்.

எனவே, இயேசு அறிவிக்கின்ற செய்தி என்னவென்று அறிகின்ற பொறுப்பு எல்லாருக்குமே உண்டு. அதே நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி அப்போதனையை ஒதுக்கிவைப்பதும் முறையல்ல.

திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுகிச் சென்று, அவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்க தங்கள் இதயத்தைத் திறக்கின்ற மனிதர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இயேசுவின் ஒளி அவர்களது உள்ளத்தில் நிலவும் இருளை அகற்றி அவர்களது வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும் என்பது உறுதி.


நமதாண்டவர் இரக்கம் உள்ளவர்.அவர் எல்லோருக்கும் இரங்குவார்  என்பதை விசுவசிபோம்.




Wednesday, 9 December 2015

கடவுளாட்சி!

''இயேசு, 'திருமுழுக்கு யோவான் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு
வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள்
அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்' என்றார்'' (மத்தேயு 11:12).

கடவுள் ''வல்லமை மிக்கவர்'' என்னும் கருத்து பழைய ஏற்பாட்டில் பரவலாகக் காணக்கிடக்கிறது. தாம் தெரிந்துகொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காகக் கடவுள் எதிரிகளை முறியடிக்கிறார், நாடுகளை வீழ்த்துகிறார், அநீத அமைப்புகளை உடைத்தெறிகிறார். இவ்வாறு வல்லமையோடு செயல்படுகின்ற கடவுள் வன்முறையை ஆதரிப்பதுபோலத் தோன்றும்.


 புதிய ஏற்பாட்டில் நாம் காண்கின்ற கடவுள் அன்புமிக்க தந்தையாக இருக்கிறார். இயேசு வழியாக அவர் தம் அன்பு இதயத்தை நமக்குத் திறந்துள்ளார். நமக்கு எதிராகப் பிறர் தீங்கிழைத்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கலாகாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, இயேசு வன்முறையை ஆதரிக்கவில்லை என்பது தெளிவு.


அதே நேரத்தில் ''விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகிறது'' என்றும் ''வன்முறையாகத் தாக்குகின்றவர்கள் விண்ணரசைக் கைப்பற்றுவர்'' (காண்க: மத் 11:12) என்றும் இயேசு கூறுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இச்சொற்றொடருக்கு ஒரு மாற்று மொழி பெயர்ப்பை நாம் தமிழ் விவிலியத்தில் காணலாம். அடிக்குறிப்பாகத் தரப்படுகின்ற அந்த மொழிபெயர்ப்பு இதோ: ''திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரை விண்ணரசு வல்லமையாகச் செயலாற்றி வருகிறது. ஆர்வமுள்ளோர் அதைக் கைப்பற்றுகின்றனர்''.

-- இயேசுவின் காலத்தில் ''தீவிரவாதிகள்'' என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் உரோமை ஆட்சியாளர்களைத் தம் நாட்டிலிருந்து வெளியேற்றி, நாட்டை விடுதலை செய்வதற்கு ஒரே வழி வன்முறையே என நம்பினர். அவர்களைப் பற்றிய சில குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன.

எடுத்துக்காட்டாகக் காண்க: திப 5:35-37; லூக் 13:1. கலகத்தில் ஈடுபட்டுக் கொலைசெய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்த பரபா என்பவன் ஒரு தீவிரவாதியாக இருந்திருக்கலாம் (காண்க: லூக் 23:18-19). தீவிரவாதிகள் வன்முறையால் ஆட்சியை மாற்ற எண்ணினார்கள், வன்முறையைக் கையாளுகின்ற மெசியா கடவுளாட்சியை நிறுவுவார் எனவும் நம்பினார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றிபெறவில்லை.

ஆனால் இயேசு வேறொரு ஆட்சியை அறிவித்தார். அதைக் கடவுளாட்சி (''விண்ணரசு'') என நற்செய்தியாளர்கள் குறிக்கின்றனர். அந்த ஆட்சி வன்முறையில் பிறக்கின்ற ஆட்சியல்ல. மாறாக, கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்பும் இரக்கமும் நீதியும் உண்மையும் அந்த ஆட்சியின் அடித்தளங்களாக அமையும்.

எனவே, ஒருவிதத்தில் கடவுளாட்சி வல்லமை மிக்கதுதான். அதன் வல்லமை வன்முறையிலிருந்து பிறப்பதல்ல, மாறாக அன்பிலிருந்து ஊற்றெடுப்பது. எங்கே அன்பும் நட்பும் உளதோ அங்கே கடவுளாட்சி தொடங்கிவிட்டது. அதன் நிறைவை எதிர்பார்த்து நாம் காத்திருக்கின்றோம். அந்த நம்பிக்கை வீண்போகாது என இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.

பெருஞ்சமையை நான் உனக்காக சுமக்கிறேன்!

''இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்'' (மத்தேயு 11:28).

பல்வேறு சுமைகளால் சோர்ந்துபோன அனைவருக்கும் ஆறுதல் தரும் அருமையான வாக்குறுதியை நாளைய  நற்செய்தி வாசகமாகப் பெற்றிருக்கிறோம்.

வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இருகரம் விரித்து அழைக்கிறார் நம் ஆண்டவர். எனவே, உடல் நோயா, மன அழுத்தமா, கவலைகளா, அச்சமா, துயரமா, அவமானமா? எத்தகைய சுமை நம்மை அழுத்தினாலும், இயேசுவின் அருகில் வந்து அவரிடம் நம் பாரங்களை இறக்கி வைப்போம். உலகம் தர இயலாத மன ஆறுதலை, உடல் நலத்தை, ஆன்ம வலிமையை அவர் தருவார்.

அத்துடன், இன்னொரு அழைப்பையும் நாளைய   வாசகம் மூலமாக இயேசு விடுக்கிறார். நம் வாழ்வின் சில சுமைகளை நாம் ஒருவேளை சுமந்தே தீரவேண்டும் என்கிற நிலை நம்மில் பலருக்கு இருக்கலாம். தீராத நோய், கடினமாக வாழ்க்கைத் துணைவர், ஊனமுற்ற குழந்தை, ... போன்ற ஏதேனும் ஒரு சுமை இறக்கி வைக்க முடியாததாக, என்றும் நம்மோடு உடன் வருகிற சுமையாக இருந்துவிட்டால் என்ன செய்வது?

இத்தகைய சுமைகளை எளிதாக, இனியவையாக மாற்றுவதாக இயேசு வாக்களிக்கிறார். ஆம், இறக்கி வைக்க முடியாத சுமைகள் இயேசுவின் அருளால் இனிய சுமைகளாக, எளிய சுமைகளாக மாறுகின்றன. காரணம், நம்மோடு சேர்ந்து இச்சுமைகளை இயேசுவும் சுமக்கிறார். அதற்காக நன்றி கூறுவோம். சுமைகளை மகிழ்வுடன் சுமப்போம்.

சும்மாதெருவில் உள்ள சுமையை இழுத்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு,நொந்து நொடிந்து அறுந்த பட்டமாக அல்லாடுகிறான் மனிதன். ஆறிவியல் பொருட்கள், நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு அம்சங்கள், கலாச்சார சீரழிவு, ஆன்மீக வெற்றிடம் என்னும் பெருஞ்சுமைகளைச் சுமந்து சுமந்து சோர்ந்துபோயுள்ளான்.

இளைப்பாறுதல் தேடி எங்கெங்கோ அலைந்து அதிலும் சோர்ந்துபோயுள்ளான்.பணம் கொடுத்து வாங்கும் முயற்சியில் பலர். மதுவில். மாதுவில் தேடும் ஒரு கூட்டம், போதை. சினிமா , ஊடகம் இவற்றில் தேடும். இன்னெரு கூட்டம். அந்த இடம், இந்த ஆள் என்று அலைமோதும் பிறிதொரு கூட்டம். ஆனாலும் இளைப்பாறுதல் கண்டடைந்தார் யாருமில்லை.

"என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன்". உன்
 பெருஞ்சமையை என் தோள்மேல் இறக்கி வை. அவற்றை நான் உனக்காக சுமக்கிறேன். உன் குற்றங்களுக்காக நான் தண்டனை அனுபவிக்கிறேன். உன் தவறுகளுக்காக நான் தண்டனை பெற தயாராகயிருக்கிறேன். உனக்கு சுகம் கிடைக்க நான் காயப்பட காத்திருக்கிறேன்

நமது பெருஞ்சுமையை ஆண்டவர்மேல் போட்டுவிட்டு சும்மா அலைவதல்ல சுகம். அது சோம்பலுக்கும், சோதனைக்கும் அதனால் அழிவுக்கும் ஆதாரமாகிவிடும். எனவே, "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது அழுத்தாது, எளிதானது,இளைப்பாற்று தருவது" என்று ஒரு மாற்றுச்சுமையை நமக்குத் தருகிறார்.

இயேசுவே, நீர் தரும் சுமையைச் சுமந்து உம்மோடு நடந்து என் வாழ்வில் மகிழவேன்.

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்னும் இயேசுவின் அழைப்பு அனைவருக்குமானது. சமயம் கடந்த, கத்தோலிக்க அழைப்பு. அந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம்.

நாம் வாழும் இன்றைய நாள்கள் மன அழுத்தம், உளைச்சல், அமைதியின்மை நிறைந்த நாள்கள். செல்வமும், வசதியும் பெருகினாலும், அமைதியின்றி, மனதில் பாரத்துடன் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் அழைப்பு பொருள் நிறைந்த ஒன்று. நமது கவலைகள், கலக்கங்கள், சுமைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வைப்போமா?

அத்துடன், இயேசுவின் சீடர்களான நாம், அவரைப்போல இந்த அழைப்பை நமது அயலாருக்கு விடுத்தால் என்ன? நமக்கு அறிமுகமான, அருகில் வாழ்வோரின் சுமைகளை நாம் அறிவோம். நம்மால் இயன்ற அளவு அவர்களின் சுமைகளைக் குறைக்க, ஆறுதல் அளிக்க முயன்றால் என்ன?



Monday, 7 December 2015

அமல அன்னையை போல் மாசற்ற வாழ்வு வாழ்வோம்!

HAPPY  FEAST  TO  ALL  OF  YOU
நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்தேர்ந்தெடுத்தார்.(எபே. 1:4) .

நாளை எங்களது DMI சபையின் பாதுகாவலி தூய  அமல அன்னையின் பெருவிழா.ஆகையால், சபையில் உள்ள அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.அமல அன்னை மாசற்ற அன்னை.

அத்தகைய அன்னையின் பெயரைத்தாங்கிய சபையில் நான் துறவு  வாழ்வை மேற்கொள்ள வாய்ப்புக்கொடுத்த கடவுளுக்கும் நன்றி.சபையாருக்கும் நன்றி.என்னை இச்சபைக்கென்று  தாரை வார்த்துக்கொடுத்த என் பெற்றோருக்கும் நன்றி.

நாளை நான் படித்த சென்னை DMI காலேஜும்,நான் பணி செய்த ஆரல்வாய்மொழி DMI காலேஜும் அமல அன்னையின் பெயரை தாங்கியிருப்பதால் இந்த இரு நிறுவனங்களுக்கும் நாமத் திருவிழா.எனவே இங்கு பணி செய்யும், படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும்,ஆசிரியர் பெருந்தகையருக்கும்  மற்றும் அனைவருக்கும் எனது அமல அன்னையின் பெருநாள் வாழ்த்துகள்.

அமல அன்னைக்கு!

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாள்  நம் அன்னை !
அன்னைக்கென  ஓர் லட்சியம் உண்டெனில் அது மகனின் லட்சியமாகவே இருந்தது!
அன்னையின் ஒரே ஆசை கடவுளின் திருவுளத்துக்கு கீழ்படிந்து பிள்ளைகளாகிய நம் தேவைகளை
நிறைவேற்றுவதாகத்தானிருந்தது!
எங்களுக்காக உம்  ஆசைகள் முழுவதும்  துறந்தாய் எங்கள் அன்னையே!

புவியில்  நீ பட்ட அவல வாழ்கை மறக்கத்தான்
முடியுமோ!
உம் பிள்ளைகளாகிய நாங்கள்  மாசில்லாமல் வாழ்வதே உம் ஆசைகள் என்பதை புரிந்துகொண்டோம் அம்மா!
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர் நீர்  அம்மா!

இந்த  உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால் தயங்காமல் சொல்வேன் அம்மா  நீதானென்று!

அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு.

மரியாவைப்பொருத்தமட்டில், ஜென்மப்  பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப்பொருத்தமட்டில் ஜென்மப்பாவம்  நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப்பாதுகாக்கின்றார்.


ஒரு மருத்துவர் ஒருவரை இரண்டு வழிகளில் நோயினின்று காப்பாற்ற முடியும். ஓன்று. அவரை நோய் தாக்காமலே தடுப்பு ஊசி போட்டு நோயினின்று காப்பாற்றமுடியும். இரண்டு ,நோய் தாக்கிய பிறகு அந்நோய்க்குத்தக்க மருந்தைக் கொடுத்து அவரைக் குணப்படுத்த முடியும். 


இவ்வாறு மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்pயது குறிப்பிடத்தக்கது.


புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.


நமது வாழ்விலும், நாம் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். கன்னி  மரியாள் தூய்மையற்றவராகப் பிறந்தாலும், அவரும் நம்மைப் போன்று மனிதப்பெண் தான். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையம், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். ஆணவத்திற்குச் சிறிதும் இடம் கொடாமல் தாழ்ச்சியோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தார்

.
இன்று நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாகப் புனிதப் படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவிற்கு நமது புனிதத் தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம் ?

இன்றைய உலகம்  எதை வேண்டுமானாலும் செய்யலாம்  என்ற கண்ணோட்டத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணிங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது.


இந்தச் சூழ்நிலையில் மாசற்ற வாழ்வு வாழ்வது எளிதான ஒன்றல்ல. நாம் அனைவரும் எளிதில் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நாம் எந்த அளவுக்கு மாசற்ற வாழ்வு வாழ முயற்சி செய்கிறோம் என்பதைத்தான் கடவுள் பார்க்க ஆசைப்படுகிறார். மரியாள் மாசற்ற வாழ்வு வாழ அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், தாங்கிக் கொண்டார். இயேசுவைக் காப்பாற்ற எகிப்திற்கு அவரைத் தூக்கிக்கொண்டுச் சென்றது முதல், அவரை இரத்தக் கறையோடு சிலுவையில் அறைந்தது வரை ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்.


அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றிட தன்னை தமது  சோதனைகளைத் தாங்கிகொண்டு, பிறருக்குத் தீங்கு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்வு வாழ நாம இறைவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நமது வேதனைகளையும், துன்பங்களையும் ஒப்படைக்க வேண்டும். மாசற்றவர்களாக வாழ தூண்ட வேண்டும். அத்தகைய பயனுள்ள மாசற்ற வாழ்வு வாழ நாம்  தொடர்ந்து இறைமகன் இயேசுவிடமும், அவர் தாய்  மரியாளிடமும் கற்றுக்கொள்வோம் .

அனைவருக்கும் அமல அன்னையின் பெருவிழா வாழ்த்துக்கள் !



Sunday, 6 December 2015

படுக்கை !

படுக்கை என்றாலே சுகமான ஒன்று.படுக்கையில் இரண்டு வகை உண்டு .ஒன்று  தூங்கலாம்,ஓய்வு எடுக்கலாம், நம் இஷ்டத்துக்கு அமர்ந்து எழும்பலாம்.இது ஒருவகையான சுகமான படுக்கை.

ஆனால், இரண்டாம் வகை படுக்கை  பல பேருக்கு சுமையாக மாறுகிறது.அதாவது,தீவிர நோயில் உள்ளவர்களுக்கும்,மரணப் படுக்கையில் உள்ளவர்களுக்கும்.  இதை நாம் நாளை நற்செய்தியில் காணலாம்.


 நாளை நற்செய்தி வாசகத்தில் இயேசு முடக்குவாதமுற்றவரை தன் படுக்கையை எடுத்துக் கொண்டு போகச் சொல்கிறார். படுக்கையில் இருப்பது என்பது தேக்க நிலையைக் குறிக்கும்.

ஓடுகின்ற தண்ணீரில் எவ்வளவு அழுக்கு கலந்தாலும் அது தன்னைத்தானே சுத்தம் செய்து விடும். தேங்கிய தண்ணீரில் அழுக்கு சேர்ந்தால் அது தண்ணீரையே பாழாக்கி விடும்.

 நாம் பொய், பொறாமை, பகைமை, பகிர்வின்மை போன்ற படுக்கையை விட்டு எழுந்து வான் வீட்டை நோக்கி நடக்க இந்த திருவருகைக் காலத்தில் அழைக்கப்படுகிறோம்.

 நாம் பாவிகள் என்று முடக்கிக் கிடப்பதை விட பாவிகளாக இறைவனை நோக்கிச் செல்லும் போது பாவம் நம்மை விட்டு அகன்று போகும். நாமும் தூயவர்களாக நிறைவாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.


ஓடுகின்ற தண்ணீரானது நன்மை நிறைந்தது.எப்போதும் பிறருக்கு வாழ்வையே கொடுக்கும்.

தேங்கிய அழுக்கு தண்ணீரானது தீமை நிறைந்தது .இதனால்  யாருக்கும் பயன் இல்லை.

ஆக, நம் வாழ்வு ஓடுகின்ற தண்ணீராக இருக்க வேண்டும்.மாறாக தேங்கிய தண்ணீராக இருக்க கூடாது.

நம் வாழும் வாழ்க்கை ஓடும் தண்ணீரா? அல்லது தேங்கும் அழுக்கு தண்ணீரா? சிந்திப்போம்!

Saturday, 5 December 2015

இறைவனில் உறவு மலர!

பரந்து விரிந்த கடல்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நீர்தான்!

பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நிறம்தான்!

பரந்து விரிந்த இந்த உலகம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த கருதான்!

இதுபோல் தினமும் பார்க்கும் மாந்தர்கள் அனைவரும் நம் உறவுகளே!

சில உறவுகளால் நம் வாழ்வில்  அர்த்தம் கிடைக்கும் !பல உறவுகளால் நமக்கு ஆறுதல் கிடைக்கும்!


நாளைய வாசகங்கள் நமக்கு உரைப்பது இதுவே.உலகின் மீட்புக்காக மெசியா வருகையை இறைவாக்கினர்கள் மூலமாக முன் அறிவிக்கின்றார் இறைவன்.
அதோடு அவருக்காக ஆயத்தம் செய்ய வேண்டும் என்றும் அழைக்கிறார். இறைமகனைப் பெற்றுக் கொள்ள மக்களை மனம் மாற அழைத்ததில் மிகவும் தலை சிறந்த போதகர் திருமுழுக்கு யோவான். இவர் செய்தது உன்னத செயல்.


இதைப் பற்றி தான் இறைவாக்கினர் எசாயா முன் அறிவித்திருக்கிறார். "பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் ".


கடவுளின்  இரண்டாம் வருகையில் நாம் அனைவரும்  அவரின் தூய மக்களாக எழுந்து ஒளிவீசுவோம் என்பதையும் உணர்வோம்.


இன்றைய காலத்திலே  நம்மில் நிரப்பப்பட வேண்டியவை இவைகளே.
1. பேராசை என்னும் பள்ளத்தாக்கு நிரப்பப்பட வேண்டும்.
2. ஆணவம் நேர்மையற்ற கோணலான வாழ்வு நேரிய வாழ்வாக வேண்டும்.
3. கரடு முரடான  உறவுகள் சரி செய்யப்பட்டு சமாதானத்தின் உறவு மலர வேண்டும்.
இதையே கடவுள் நம் ஒவ்வொருவரிலும் விரும்புகிறார்.

உறவில்லாமல் உலகம் இல்லை .......

இருவேறு உடலும் இருவேறு உயிரும்
மனசும் உறவு கொள்வது காதல் .....

நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம்
இவையனைத்தும் தன் சக்தியை வெளிபடுத்த
கொண்ட உறவு உலகம் ......

உயிருக்குள் உயிராய் உருவெடுத்து
முகத்தின் முகப்பு தோன்றிட
பாசமாய் கொண்ட உறவு பெற்றோர்கள்.....

சின்ன சின்ன சண்டைகள் போட்டு
குட்டி குட்டி குறும்புகள் செய்து
திட்டி தீர்த்துக்கொள்ள கூடிய உறவு சகோதரி .......

உண்மைக்கு உன்னதமான ஒருவனும்
தாய்க்கு நிகரான ஒருத்தியும்
சேர்ந்திருக்கும் உறவு நட்பு .....

இறைவார்த்தையின் படி  உறவுகள் மலர வாழ்வோம்  ! கண்டிப்பாக எந்த மாதரியான கோணலானவைகளும் இறைவனால் நேராக்கப்படும் என்பதை நம்புவோம்.

 இறைவனுடன் சேர்ந்து உறவுகளை வளர விடுவோம் .அந்த உறவுகள் குழந்தையை போன்று கள்ளம் கபடம் இல்லாததாக இருக்க இறைவனை வேண்டுவோம்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு உறவாக இருப்போம்.உதவுவோம்!

"யாதும்  ஊரே யாவரும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு ஏற்றவாறு உறவை மலர விடுவோம் வாழ்வில்.


Friday, 4 December 2015

இழப்பு !

"வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரேயல் மக்களிடம் செல்லுங்கள்.அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப்  பறைசாற்றுங்கள்". (மத்தேயு 10:6-7).

வீழ்ந்த பிறகு பள்ளத்தை குறை சொல்லி  என்ன நடக்கப்போகிறது
முறைப்படி நாம் தானே பார்த்து செல்லவேண்டும் .
எங்கு சென்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது நாம் தான் கவனக்குறைவில் சென்றால் இழப்பு நமக்குத்தான் .

மனிதர்கள் இழப்பால்  சிந்துகின்ற கண்ணீரைக் கண்டால்
பழுத்த இலை மரத்திலிருந்து விழுவதையே காட்டும்
கண்ணையொத்த மாந்தர்களை, பிரியமானவர்களை  நாம்  பிரிந்தால்
காசினியில் எவர் வந்து பிறர்  துயரை துடைக்கக் கூடும்?

ஈடில்லா இழப்பை எண்ணி எண்ணி அழத்தான் முடியும் 
யாராலும் அந்த இழப்பை ஈடு கட்ட முடியாது.
நம் சந்தோசத்தை இரட்டிபாக்கலாம் பலர் ஆனால் -நம்
இழப்பை குறைக்க ஒருவரால்  கூட  முடியாது 
இயற்கையோடு பேசி ஈடு கட்ட வேண்டியது தான்.

உணர்ச்சிகளை மொழியாலே உரைக்கின்ற எவரும்
உயிரிருந்தும் உணர்விருந்தும் பேசாத மரமே - நாம் 
இனஞ்சேர்த்துப் பார்த்தாலும் ஒன்றாவதில்லை
எனவே நான் இப்புவியில் வாழும்  மாந்தர் நிலைமைகளே
 பரிதாபம் என்பேன்!

பள்ளியில் படிக்கும் போது நான் பார்த்த சென்னை இன்று பரிதாப நிலையில்!

கல்லூரியில் படிக்கும் போது நான் பார்த்த சென்னை இன்று அழகு இழந்த நிலையில்!

பணி புரியும் போது நான் பார்த்த சென்னை இன்று சீர்குலைந்த நிலையில்!

படைப்போம்! புதுபிப்போம்!உருவாக்குவோம்!  சென்னையை மறுபடியும்!   

வாழ்வை இழந்தவர்கள்!
பிள்ளைகளை இழந்தவர்கள்!
உறவை இழந்தவர்கள்!
மருத்துவமனையில் உயிர் இழந்தவர்கள்!
செல்வத்தை இழந்தவர்கள்!
சிரிப்பை இழந்தவர்கள் !
 இவர்கள் எல்லாம் இழந்திருந்தாலும்
 இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை!!! - இப்பேற்பட்ட
மக்கள் தான் என் சென்னை வாழ் மக்கள்.

பசித்திரு,தனித்திரு,விழித்திரு என்பதற்கிணங்க இவர்களின் வாழ்கையை புரட்டிபோட்டது வெள்ளம். வெள்ளத்தின் அருமை தெரிந்த பிறகே இவர்களுக்கு பசியின் அருமையும்,தனிமையின் அருமையும் புரிந்தது.இப்போதே புரிகிறது இவர்களுக்கு விழிப்பு என்ற  முன்மதியின் அருமை.
இவர்களை வெள்ளம் துன்பப்படுத்தியிருந்தாலும் நாளாக,நாளாக கண்டிப்பாக இயற்க்கை இவர்களை  ஆறுதல்  படுத்தும் என்பதை நம்புவோம்.

இயேசு மூன்றாண்டு பணிபுரிய 30-து வருடங்கள் தயார் செய்தார்.வருடம் வருடம் பருவ மழை தமிழ்நாட்டில் வருவது தெரிந்தும் 12-டு மாதமும் 365-ந்து நாள்களும் எந்த தயாரிப்பும் இல்லாமல் நம் தலைவர்கள் நாட்டிற்கு  பணி செய்கிறோம் என்று கூறுவது என்னைபொருத்தவரை கேள்விக்குறியே??


இன்று நாம் இழந்தது அப்பாவி மக்களை.ஆனால் புரட்டிபோட்டது வெள்ளம் எல்லோரையும்.வெள்ளம் யார் மாடி வீட்டில் இருக்கிறார்கள்,யார் குடிசையில் இருக்கிறார்கள் என்ற பாகுபாடே பார்க்கவில்லை.
ஆக,இன்னும் சிறிது நாட்களில் இயற்கையே நமக்கு ஆறுதல் தரும் அந்த நாள் வெகு விரைவில் உள்ளது என்பதையும்  மற்றும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதையும் நம்புவோம்.

 நாளைய நற்செய்தி இயேசுவின் மூன்றாண்டு பணியை சுருக்கித் தருகின்றது.இயேசு சென்ற இடமெல்லாம் நற்செய்தி அறிவித்தார்.ஜெபக்கூடத்தில் இறையாட்சி பற்றி விளக்கினார்.உடல் ,உள்ள நோய்களைப் போக்கினார்.மக்கள் கூட்டத்தைக் கண்டபோதெல்லாம் அவர்கள் மேல் பரிவு கொண்டார்.

அதே பணியைத் தம் சீடர்களும் செய்ய அழைக்கின்றார்.அந்த அழைப்பை ஏற்ற நாம் முதலில் நம்மைப் படைத்த அன்பு கடவுளை நெஞ்சார நேசிக்க வேண்டும்.

மேலும் தீய பழக்கங்கள்,பிறரன்புக்கு எதிரான நம் சொல்,செயல்கள் அனைத்தையும் களைந்து விட்டு இயேசுவின் சாட்சிகளாக வாழ வேண்டும்.

பரிவும் இரக்கமும் கொள்வோம்.பிறரன்பு பணிகளை தொடர்வோம்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக ஜெபிப்போம்.கரம் கொடுப்போம். 


நெருங்கி வரும் விண்ணரசில் நாம்  எல்லோரும் பங்காளிகளாக இருக்க தொடர்ந்து வேண்டுவோம்.வாழ்கையை மாற்றுவோம் நேர்வழியில் செல்வோம்.இறைவனின் மக்களாவோம்!!!

Thursday, 3 December 2015

கண்கள் திறக்கும்...!பார்வை பெறுவோம்...!

இயேசு பார்வையற்றோரின் கண்களைத் தொட்டு,
'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்' என்றார்.
உடனே அவர்களின் கண்கள் திறந்தன'' (மத்தேயு 9:29-30).

இயேசுவை அணுகிச் சென்று அவருடைய உதவியை நாடியவர்கள் பலர். இவ்வாறு தம்மைத் தேடிவந்த மனிதரை இயேசு அன்போடு வரவேற்றார். அவர்களுடைய துன்பங்களைப் போக்குவதற்கு இயேசு முன்வந்தார். இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்கியதை அவர்கள் கண்டுகொண்டனர். என்றாலும், இயேசு தம்மை அணுகிவந்த மனிதரிடம் ஒரு முக்கியமான பண்பை எதிர்பார்த்தார். அப்பண்புதான் ''நம்பிக்கை'' என அழைக்கப்படுகிறது.

 இந்த நம்பிக்கையில் இரு அம்சங்களை நாம் காணலாம். நாளைய நற்செய்தியில் நாம் காண்பது இதுவே...,

1. இயேசுவை அணுகி உதவி தேடியவர்கள் அவர் நினைத்தால் தங்களுடைய துன்பத்திலிருந்து விடுதலை தர முடியும் என உறுதியாக ஏற்றுக்கொண்டார்கள்.
2. அவர்கள் இயேசுவின் வழியாகக் கடவுளே அதிசய செயல்களை ஆற்றினார் என்னும் உறுதிகொண்டிருந்தனர்.

இவ்வாறு உறுதியான உள்ளத்தோடும் ஆழ்ந்த எதிர்பார்ப்போடும் இயேசுவை அணுகிச் சென்றவர்கள் ஒருபோதுமே ஏமாற்றமடையவில்லை. நம் வாழ்விலும் இது நிகழ்வதை நாம் காணலாம். நம் உள்ளத்தில் உறுதி இருக்கும்போது நடக்கவியலாது என நாம் நினைப்பதும் நடப்பதுண்டு.

 நம் உள்ளத்தில் உறுதியற்ற நிலை தோன்றிவிட்டால் நாம் வெற்றியடைய இயலாது என்னும் எதிர்மறை எண்ணம் நம்மில் வேரூன்றி, நம் உறுதிப்பாட்டைக் குலைத்துவிடும். அந்த வேளைகளில் நம் முயற்சி வெற்றிதராமல் போய்விடுவதுண்டு. இது மனித வாழ்வில் நாம் பெறும் அனுபவம்.

 ஆனால், கடவுளை அணுகிச் செல்வோர் கடவுளின் கைகளில் தங்களையே முழுமையாகக் கொடுத்துவிடுவதால் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தமக்கு வெற்றியாகத் தோன்றுவது உண்மையில் தோல்வியாகவும், தோல்வியாகத் தோன்றுவது உண்மையில் வெற்றியாகவும் மாறிடக் கூடும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

 எனவே, கடவுள்மீது நம்பிக்கை கொள்வோர் தம் சொந்த சக்தியில் நம்பிக்கை கொள்ளாமல் தம் வாழ்வினையே கடவுளிடம் தந்துவிட்டு, கடவுள் தம்மிடம் எதிர்பார்ப்பதைச் செய்வதில் முனைந்துநிற்பார்கள்.


இயேசுவை அணுகிச் சென்று பார்வை பெற விரும்பிய பார்வையற்றோருக்கு இயேசுவிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்ததுபோல நாமும் நம்பிக்கையோடு அவரை நாடிச் சென்றால் நம் ''கண்கள் திறக்கும்''. அப்போது நாம் உண்மையிலேயே ''பார்வை பெறுவோம்.'' கடவுளே நமக்கு ஒளியாயிருந்து நம்மைக் கைபிடித்து வழிநடத்திச் செல்வார்.


Wednesday, 2 December 2015

புனித சவேரியார் போல... !நாமும் தூய சவேரியார் ஆகலாம்...!

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?(மத்தேயு 16:26).

நான் தூய சவேரியாரின் திருஉடலை இரண்டு தடவை கோவா சென்று பார்த்திருக்கேன்.உண்மையாகவே இதற்க்கு நான் பாக்கியம் பெற்றவள் என்று சொன்னால் மிகையாகாது.

முதல் தடவை போகும் போது நிறைய நேரம் ஜெபம் பண்ணினேன்.ஏனென்றால் ஒரு சொல்லாடல் உண்டு எந்த  புது ஆலயத்துக்கு  போனாலும் மூன்று கருத்துக்களுக்காக வேண்டிக்கொண்டால் நிறைய ஆசிர்வாதம் கிடைக்கும் வேண்டிக்கொண்டவர்களுக்கு என்று.அதனால்  அந்த மூன்று கருத்தில் ஒரு கருத்து நான் புனிதை ஆக வேண்டும் என்பது.அது நடக்கும் என்று இன்றும் விசுவசிக்கிறேன்.

நாளை நான் இருந்து  பணி செய்த நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தின்  பாதுகாவலர் புனித சவேரியார் திருநாள்.திருவிழாவைக் கொண்டாட சாரை சாரையாக மக்கள் கூட்டம் பக்தியுடன் திரண்டு வருவதை காணலாம் இது ஒரு பகுதி.


நாளை நாகர்கோவிலில் உள்ள  பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்படும். மறுபகுதி பார்த்தால் மாணவ மாணவிகள் கூட்டமும் ஆங்காங்கு காணலாம்.ஆக கோட்டாறு மறைமாவட்டமே கலை கட்டும்.அனைவருக்கும் தூய சவேரியார் பெருவிழா வாழ்த்துக்கள்.

எனக்கு சவேரியார் என்றாலே ஞாபகத்திற்கு வரும் பாடல் வரிகள் இவைகள் தான்.இந்த வார்த்தைகளை நற்செய்திலும் காணாலாம்.வாழ்கையில்  நம் எல்லோருக்கும் ஒரு திருப்புமனை உண்டு.அன்று தூய சவேரியாருக்கு திருப்புமுனையை கொடுத்தது இந்த வரிகளே அதாவது  உலகமெல்லாம் எனக்காதாயம்.பாடல் வரிகளை கீழே  காணலாம் .

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ...

அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்!
அவரே புனித சவேரியார்!


நாளை தாயாம் திருச்சபையோடு இணைந்து  புனித பிரான்சிஸ் சவேரியாரின் விழாவை கொண்டாடப்போகிறோம். இவர் போதித்த விதமே தனி.அதாவது  கடல் கடந்து இந்தியா வந்து, மொழி, கலாசாரமும் மாறுபட்ட மக்களிடையே உழைத்து, நற்செய்தி அறிவித்து, திருமறைப் பணி புரிந்த மாபெரும் புனிதர். அவருடைய வாழ்வையும், பணியையும் எண்ணிப்பார்த்து நாம் விசுவாச ஊக்கம் பெற அழைக்கப்படுகிறோம். 

நீங்கள் அனைவரும் தீபாவளி நேரத்தில் டி.வியில் சிறப்பு நிகழ்சிகளை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.அந்த நேரத்தில் ஒரு டி.வி சேனலில் பாகுபலி படத்தின் ஒவ்வொரு இடைவேளைக்குப் பிறகும் சுமார் 38 தடவை ஆச்சி மசாலா உலகளவில் அவாட் வாங்கியதை திருப்பி திருப்பி விளம்பரப்படுத்தினார்கள்.அதற்கு மட்டும் கோடிகணக்கில் செலவிட்டிருந்தார்கள்.நானும் அதை பார்த்தேன்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் நம் ஒவ்வொருவரையும் கடவுள் எவ்வளவு அழகாக படைத்திருக்கார்.அப்படி நம்மை படைத்த கடவுளுக்கு நம்மால் என்ன செய்ய முடிகிறது? நாம் நற்செய்தியை பரப்ப எப்படிப்பட்ட விளம்பரங்களை செய்கிறோம்.

வெளிநாட்டில் இருந்து வந்த மாமனிதர்கள் போதித்ததால் இன்று நாம் கிறிஸ்தவர்கள்.அன்று நம் முன்னோர்கள் அவர்கள் போதனையை கேட்டு கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.இன்று நம் போதனையை கேட்க எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?

இன்று நாம் கடவுளுக்கு சான்று பகிர எப்படிப்பட்ட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறோம்.வெறும் திருவிழா கொண்டாடியதோடு நின்று விடக்கூடாது நம் விசுவாசம்.மேலும், அதற்கும் மேலாக நம் விசுவாசம் இருக்க வேண்டும்.  

நமது ஜெபங்கள் நிறைய நேரம் ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்லி ஜெபிக்க கூடியதாக மாத்திரமே உள்ளது.இவ்வாறு இருந்தால்  நாம்  விண்ணரசில்   நுழைய முடியவே முடியாது. மாறாக, தூய சவேரியாரைப் போன்று  தந்தையின் திருவுளத்தின்படி செயல்பட்டால் மட்டுமே  விண்ணரசில் நுழைய முடியும்.அது நம் கையில் தான் உள்ளது.  


தந்தையின் திருவுளத்தின்படி நடந்தவர் என்ற ஆண்டவரின் மொழிகள் புனித சவேரியாருக்கு நன்கு பொருந்துகின்றன. இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. 

செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். புனித சவேரியார்போல நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும்.

“மாற்றம் நிச்சயம் வலியைத் தரும். ஆனால், மாறத்தான் வேண்டும்’’ஏனென்றால் மாற்றம் மட்டுமே நிரந்தரம்.

ஆக,மாற்றம் பெற்ற மனிதர்களாவோம்.கண்டிப்பாக நாமும் தூய சவேரியார் ஆகலாம்.
தூய சவேரியாரின் அருள்  பெற்றவர்களாய் தூவுவோம் இந்திய மண்ணில் விசுவாச வித்துக்களை.


அனைவருக்கும் தூய சவேரியார் பெருநாள் வாழ்த்துக்கள்!


Tuesday, 1 December 2015

பரிவு!

''நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்'' (மத்தேயு 15:32).

இயேசுவின் ஒவ்வொரு செயல்பாடும் நமக்கு மிகப்பெரிய கருத்தியலையும், ஆழமான சிந்தனையையும் தருகிறது. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் அதுவே, மிகச்சிறந்த வாழ்க்கை நெறிகளை நமக்குத் தருகிறது.

நாளைய  நற்செய்தியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆல்ஃப்ரட் எடேர்ஷிம் என்கிற விவிலிய அறிஞர் இந்த பகுதிக்கு அருமையான விளக்கத்தைக் கொடுக்கிறார். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் மூன்றுமுறை உணவைக் கொடுத்ததாக நற்செய்தியில் சொல்லப்படுகிறது. அந்த மூன்றுமுறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

முதலில் கலிலேயாவில் தனது நற்செய்திப்பணி முடிந்தவுடன் கடைசியாக 5000 பேருக்கு, அப்பம் பலுகக்கொடுக்கிறார். அதன்பிறகு அவர் வேறு எந்த நற்செய்திப்பணியும் செய்யவில்லை. உணவைக்கொடுத்தது தான் கடைசிப்பணி.

 இரண்டாவது முறை, புறவினத்து மக்கள் மத்தியில் பணி முடிந்ததும் 4000 பேருக்கு அப்பத்தைப் பலுகச்செய்து கொடுக்கிறார். இதற்கு பிறகு அந்த பகுதியில் அவர் வேறொன்றும் செய்யவில்லை.

மூன்றாம் முறை தன்னுடைய சீடர்களோடு இறுதி உணவு அருந்துகிறார். அதற்கு பிறகு சிலுவையில் மரிக்கிறார். உணவு என்பது நிறைவைக் குறிப்பதாக இருக்கிறது. தனது பணிவாழ்வின் நிறைவில் இயேசு மக்களுக்கு உணவு கொடுக்கிறார். அதாவது, முழுமை தான் இயேசுவின் பணி என்பதை இது குறிக்கிறது.

ஏழை, எளியவர்களின் ஒட்டுமொத்த துயரைத் துடைப்பது, இயேசுவின் பணியாக இருக்கிறது. முழுமை தான் பணிவாழ்வின் நிறைவு. உடல் நோய்களைக் குணப்படுத்துகிறார்.

பசிக்கிறவர்களுக்கு உணவும் கொடுக்கிறார். இன்றைய திருச்சபையின் ஒட்டுமொத்த பார்வை, இத்தகைய நிறைவை நோக்கியதாகத்தான் இருக்கிறது. அதுதான் நமது இலக்காகவும் இருக்க வேண்டும்.