Friday 7 October 2016

பேறுபெற்றோர் யார்?

ஓர் ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஊருக்கு வெளியே பெரிய காய்கறித் தோட்டம் ஒன்று இருந்தது. அந்த தோட்டத்தில் வேலையாட்கள் இருவர் இருந்தார்கள்.

அந்த இருவரில் ஒருவன் தன்னுடைய எஜமானனைப் பார்த்தவுடன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவான். அவரிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி அவருக்கே தெரியாமல் காரியம் சாதிப்பான். ஆனால் அவர் அங்கிருந்து போய்விட்டால் அவ்வளவுதான், ஒருவேலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாய் சுற்றுவான். அது என்னவோ அவனைத் தான் எஜமானனுக்குப் பிடித்திருந்தது.

இன்னொரு வேலையாளோ தன் வேலையுண்டு, காரியமுண்டு என்று இருப்பான். கடின உழைப்பாளி. தன்னுடைய எஜமானன் வந்தாலும்கூட சிறிதாக மரியாதை செலுத்துவதோடு சரி, வேறு ஒன்றும் செய்யமாட்டான். இதனால் அந்த பணக்காரருக்கு இரண்டாவது வேலையாளைக் கொஞ்சம் பிடிக்கவில்லை. “என்ன இவன், நாம் வருவதைக்கூட கண்டுகொள்ளாமல் இப்படி இருக்கிறானே” என்று உள்ளுக்குள் புழுங்கித் தள்ளினார்.

நாட்கள் சென்றன. ஒருநாள் அந்த பணக்காரர் திடிரென்று தன்னுடைய காய்கறித் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். அங்கே முதலாவது வேலையாளோ, தண்ணீர் தோட்டத்திற்குப் பாய்ந்து, அருகே இருந்த தரிசு நிலத்திற்கு பாய்வதைக்கூட அறியாமல், ஒரு மரத்திற்குக்கீழே துண்டை விரித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் அந்த பணக்காரருக்கு சரியான கோபம் வந்தது.

உடனே அருகே கிடந்த ஒரு கம்பை எடுத்து,  அவனை அடிஅடியென அடித்தார். “உன்னை நான் மிகவும் நம்பினேனே. நீ இப்படி நடந்துகொள்வாய் என்று கொஞ்சமும் நம்பவில்லை” என்று சொல்லி, அவனை வேலையிலிருந்து தூக்கினார்.

ஆனால் அவர் இரண்டாவது வேலையாளைப் பார்த்தபோது, அவன் தன்னுடைய வேலையை மிக மும்முரமாகச் செய்துகொண்டிருந்தான். தோட்டத்திலிருந்த காய்கறிகளை எல்லாம் பறித்து, சந்தைக்கு அனுப்பிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த்தும் அவருக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. உடனே அவர் அந்த பணியாளரிடம் சென்று, “இதுவரை உன்னை நான் தவறாக நினைத்துவிட்டான். ஆனால் இப்போதுதான் புரிந்தது நீ எவ்வளவு கடின உழைப்பாளி, பொறுப்புள்ளவன் என்று. எனவே நான் உன்னை இந்த காய்கறித் தோட்டம் முழுமைக்கும் பொறுப்பாளராக நியமிக்கிறேன்” என்றார்.

இது விவேகானந்தர் சொன்ன ஓர் உருவகக் கதை. இந்தக் கதையில் வரும் எஜமானன் கடவுள், எஜமானனைக் கண்டதும் குலைவதும், அவரைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டு, அவர் சென்றபிறகு ஒருவேலையும் செய்யாது இருக்கின்ற வேலையாள் கடவுளின் வார்த்தையைக் கேட்டுவிட்டு அத்தோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று திருப்திகொள்பவர்களைப் போன்றவர்கள். எஜமானன் கொடுத்த வேலையை கண்ணும் கருத்துமாய் செய்கின்ற வேலையாளோ இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி தங்களுடைய வாழ்வை அமைத்துக்கொள்பவர்களைப் போன்றவர்கள். இவர்கள்தான் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்பவர்கள் என்பார் அவர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக் கொண்டிருத்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர் எழுந்து, “உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்கிறார். அதற்கு ஆண்டவர் இயேசுவோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பவர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்கிறார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு ஒருசில உண்மைகளை உணர்த்துக்கின்றன. அதில் முதலாவது நாம் இயேசுவின் உறவினர் என்பதாலோ அல்லது கிறிஸ்தவர்கள் என்பதால் மட்டும் பேறுபெற்றவர்கள் ஆகிவிடமுடியாது. மாறாக இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும்போதுதான் பேறுபெற்றவர்கள் ஆகமுடியும் என்பதாகும்.

ஏனென்றால் யூதர்கள் தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கடவுளின் மக்கள் என நினைத்துக்கொண்டு எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் தாங்கள் கடவுளின் மக்கள்தான் என்று நினைத்து வாழ்ந்தார்கள். இதற்கு திருமுழுக்கு யோவான் மிகத் தெளிவாக பதிலளிக்கிறார். “ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ளவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார் ( மத் 3:9). இயேசுவும் இதே கருத்தைதான் இங்கே வலியுறுத்துகிறார். ஆகவே நம் குலப் பெருமையோ அல்லது நாங்கள் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் அதனால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்க முயல்வோம்.

இயேசு கூறும் இரண்டாவது உண்மை. தன்னைப் பெற்றெடுத்த அன்னை மரியாள் தன்னை பெற்றெடுத்தனால் மட்டும் பேறுபெற்றவள் இல்லை, இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்ததாலும் பேறுபெற்றவர் ஆகிறார் என்பதாகும். ஆம், அன்னை மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் இறைவார்த்தையின்படி நடந்தவள். அதனால் அவள் இரண்டு  விதங்களில் பேறுபெற்றவள் ஆகிறாள்.

ஆகவே, நாம் யூதர்களைப் போன்று பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காமல் இறைவார்த்தையைக் கேட்டு, அன்னை மரியைப் போன்று நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Tuesday 4 October 2016

தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்!

இரண்டாம் உலகப்போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அப்போது ஹிட்லரின் நாசிப் படையானது பிரான்சு நாட்டின் கடற்கரைப் பகுதியான டன்கிர்க்கை சுற்றி வளைத்துக்கொண்டது. அதில் மூன்று லட்சத்திற்கும் மேலாக மக்கள் இருந்தார்கள். இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டுப் படைவீரர்களும் ஏராளமானவர்கள் அங்கே தங்கி இருந்தார்கள். மிகக் குறைந்த அளவு படைவீரர்களை வைத்துக்கொண்டு நாசிப்படையை எப்படி எதிர்கொள்வதென்று நேசநாடுகளான பிரான்சும், இங்கிலாந்தும் செய்வதரியாமல் விழித்தார்கள்.

நாசிப்படை டன்கிர்க்கை சுற்றிவளைத்துக் கொண்ட செய்தி பிரான்சு நாட்டு அதிபருக்கும், இங்கிலாந்து நாட்டு அதிபரான வின்சென்ட் சர்ச்சிலுக்கும் சென்றது. அப்போது வின்சென்ட் சர்ச்சில் தன்னுடைய நாட்டு மக்களிடம் வானொலி வழியாக இவ்வாறு பேசினார்.

“அன்பு மக்களே நம்முடைய படைவீரர்களும், மக்களும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்காக இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் ஜெபம் செய்வதுதான். எனவே அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தீயோரிடமிருந்து விடுபடவேண்டும் என்று ஜெபியுங்கள்” என்றார். அதிபரின் அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் டன்கிர்க் பகுதி மக்களுக்காக ஜெபித்தார்கள்.

அது கோடைகாலம். வெயில் வேறு வெளுத்து வாங்கியது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக டர்கிர்க் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக ஏற்பட்டது. எதிரே யார் இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரான்சு மற்றும் இங்கிலாந்து நாட்டுப் போர்க்கப்பல்கள் டன்கிர்க் பகுதியில் நுழைந்து, நாசிப் படையினருக்குத் தெரியாமல் அங்கிருந்து மக்கள் அனைவரையும் வேறு இடங்களுக்கு இடம்மாற்றினார்கள். அவர்கள் மக்கள் அனைவரையும் இடமாற்றுவதற்கும் பனிப்பொழிவு நின்றுபோவதற்கும் சரியாக இருந்தது. ஒருவார காலம் இருந்த பனிப்பொழிவில் நேச நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் டன்விர்க் பகுதியில் இருந்த எல்லாரையும் அப்புறப்படுத்தினார்கள்.

பனிப்பொழிவு முடிந்து மக்களைப் பார்த்த நாசிப் படையினருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆம், டன்கிர்க் பகுதியில் யாருமே இல்லை.

ஆபத்திலிருந்து தங்களுடைய நாட்டுமக்களை இறைவன் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டியதால், இறைவன் அவர்களை அற்புதமாக எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார். டன்கிர்க் பகுதியில் நடந்த இந்த நிகழ்வு “Dankirk Miracle” என்று அழைக்கப்படுகிறது. இது வரலாற்றில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வு.

துன்ப வேளையில் இறைவனை நோக்கி அழைத்தால் இறைவன் நம்முடைய வேண்டுதலுக்குப் பதில் தருவார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரை அணுகி வந்து, “யோவான் தம் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல்  எங்களுக்கும் கட்டுக்கொடும்” என்கிறார்கள்.. இதைக் கேட்ட இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுத்தருகிறார்.

முதலாவதாக ஜெபம் என்றால் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போவது கிடையாது, மாறாக குறைவான வார்த்தைகளாக இருந்தாலும் அவற்றை மனமுருகிச் சொல்லவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுக்கிறார். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் நீண்ட நேரம் ஜெபித்தால்தான் ஜெபம் அல்லது ஜோடனையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால்தான் ஜெபம் என்ற தவறான கற்பிதத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியை நமக்கு முன் வைக்கிறார். அதுதான் குறைவான வார்த்தைகளானாலும், அவற்றை மனமுருகி ஜெபிக்கவேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக இயேசு கிறிஸ்து ஜெபிக்கக் கற்றுத் தரும்போது இறைவனை தந்தையே என்று அழைக்கக் கற்றுத்தருகிறார். இது யூத மரபைப் பொறுத்தளவில் மிகப்பெரிய புரட்சி என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் இறைவனின் திருப்பெயரைச் சொல்வது மிகப்பெரிய குற்றம் என்று நினைத்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு அப்படிப்பட்ட எண்ணத்தை புரட்டிப் போடுகிறார். இறைவனை அப்பா தந்தையே என அழைக்கச் சொல்லித்தருகிறார்.

நிறைவாக இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தைப் பொறுத்தளவில் முதல் பகுதி இறைப்புகழ்ச்சியாகும், இரண்டாவது பகுதி நமது தேவைகளுக்காக மன்றாடுவதாகவும் இருக்கின்றது. எப்போது நாம் இறைவனைப் புகழ்ந்து, அவர் செய்த நன்மையாக நன்றி செலுத்துகிறோமோ அப்போதுதான் நமது ஜெபம் முழுமை பெறும். வெறுமனே வேண்டுதல்களை அடுக்கிக்கொண்டே போவதால் மட்டும் நம்முடைய ஜெபம் முழுமை பெறாது.

எனவே முதலில் நாம் இறைவனைப் புகழ்வோம், அதன்பிறகு அன்றாட தேவைகளுக்காக மன்றாடுவோம்; தீயோனிடமிருந்து விடுவிக்கும்படியாக வேண்டுவோம். அப்போது இறைவன் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து நமது வாழ்வினை ஆசிர்வதிப்பார்.

இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் இந்த அற்புதமான ஜெபத்தின் மகிமையை உணர்வோம். இறைவனைப் புகழ்வோம், அதன்வழியாக இறையருள் பெற்று, இடர்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.