Monday 25 April 2016

புனித மாற்கு நற்செய்தியாளர்!

திருத்தூதர் பணியில் நாம் சந்திக்கும் ஜான் மாற்கும், புனித பேதுரு தமது முதல் திருமுகம் 5:13 -ல் குறிப்பிடும் மாற்கும் ஒருவரே. புனித பவுல் (கொலோ 4:10, 2 தீமோத்தேயு 4:11, பிலோமோனுக்கு எழுதிய திருமுகம் 2:4) இவற்றில் குறிப்பிடும் மாற்கும் இவரே.

இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் பயணத்தில் அவரோடு கூட சென்றவர் மூன்றாம் பயணத்தில் உரோமை வரை பின் தொடர்ந்தவர். பேதுருடைய சீடரும், அவருடைய மொழிபெயர்ப்பாளருமாக மாற்கு தமது நற்செய்தியில் காணப்படுகின்றனர். எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர் திருச்சபையை நிறுவியவராகக் கருதப்படுகிறார்.

 எருசலேம் திருச்சபையில் புனித பேதுருவுக்கு மிக உதவியாகவும், புதுக் கிறிஸ்துவர்கள் தமது வீட்டில் வந்து தங்கிப்போக உதவியாகவும், இருந்த மரியா என்பவர் மாற்கின் தாய். முதன்முறையாகப் பவுல் சைப்ரஸ் நாட்டிற்கு போகும்போது இவரை உடன் அழைத்துச்சென்றார். அவர்கள் பம்பிலியா நாட்டில் பெர்கா என்ற இடத்தில் தங்கியிருந்தபோது, மாற்கு அவர்களை விட்டுப்பிரிந்துவிடுவார் என்று அச்சம்கொண்ட பவுல், சிலிசியா, சிறிய ஆசியாவிலிருந்த திருச்சபைகளை சந்திக்க சென்றபோது, பர்ணபாஸ் பரிந்துரைத்ததால், பவுல் மாற்கை அழைத்துஸ் செல்லவில்லை.

இதனால் பர்ணபாவும் பவுலைவிட்டுப்பிரிந்தார். உரோமை நகரில் பவுல் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது, மாற்கு பவுலுக்கு உதவி செய்தார். பவுல் தான் இறக்கும்முன்பு, உரோமை சிறையில் இருந்தார். அப்போது எபேசு நகரிலிருந்த திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் மாற்கு தன்னோடு இருப்பார் என்று எழுதியுள்ளார்.

பின்னர் மாற்கு, புனித பேதுருவின் நண்பனானார். அலெக்சாண்டிரியா நகர் கிளமெண்ட், இரனேயுஸ், பாப்பியாஸ் ஆகியோர் மாற்கைப் பேதுருவின் விளக்கவுரையாளர் என்று காட்டுகிறார்கள். மாற்கு இயேசுவை சந்திக்காதவர் என்று பாப்பியஸ் கூறுகிறார். இன்று விரிவுரையாளர் பலர் மாற்கு நற்செய்தியில் நாம் சந்திக்கும் இளைஞன் ஆண்டவர் கைதியாக்கப்பட்ட நிலையில் அவரைப் தொடர்ந்தவர்.

இதே மாற்குதான் என்று ஏற்றுக்கொள்கின்றனர். பேதுரு தாம் எழுதிய முதல் திருமுகத்தில் (1 பேதுரு 5:13) "என் மைந்தன் மாற்கு" என்று குறிப்பிடுவதன் மூலம் மாற்கு பேதுருவுடைய மிக நெருக்கமான நண்பர் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

மாற்கு, அலெக்சாண்டிரியா நகரின் முதல் ஆயர். இவர் ஆயராக இருக்கும்போது அலெக்சாண்டிரியா நகரில் இறந்தார். இவரது உடல் 830 ஆம் ஆண்டில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு வெனிஸ் நகரிலுள்ள மாற்கு பேராலயத்தில் வைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மாற்கு வெனிஸ் நகரின் பாதுகாவலர் என்று போற்றுப்படுகின்றார்.

சிங்கம் மாற்குவின் சின்னமாக உள்ளது. "பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி" (மாற்கு 1:3) எனப் புனித திருமுழுக்கு யோவானை இவர் குறிப்பிடுகின்றார். எனவே ஓவியர்கள் இவ்வாறு வரைந்துள்ளனர், நற்செய்தியில் காணப்படும் "எப்பேத்தா" என்ற சொல் இவருக்கே உரியது. புதிதாக மனந்திரும்பிய உரோமைப் புற இனத்தவர்க்கு இவரது நற்செய்தி எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தி கி.பி. 60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம். என்று வரலாறு கூறுகின்றது.

ஒரு நிகழ்வை கண்ணால் காண்பதுபோல் சித்தரிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற நற்செய்தியை புறவினத்தார்க்கு அறிக்கையிடுவதே இவரது நற்செய்தியின் குறிக்கோள். கோப்த்து, பிசாந்தின் வழிபாட்டு முறையாளர் புனித மாற்குவின் திருவிழாவை ஏப்ரல் 25 ஆம் நாளன்று கொண்டாடுகின்றனர்.


Friday 22 April 2016

இயேசு சபையின் அன்னை!

இனிகோ (லயோலா இஞ்ஞாசியார்) ஸ்பெயின் நாட்டிற்கும், பிரான்சு நாட்டிற்கும் இடையே நடந்த போரில், ஸ்பெயின் நாட்டுப் படைத்தளபதியாக பணிபுரிந்தார். அப்போது போரில் அவரின் காலில் குண்டு துளைத்தது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பொழுதுபோக்கிற்காக வாசிப்பதற்காக இரண்டு புத்தகங்களை பெற்றார். அந்நூல்களில் ஒன்று புனிதர்களின் வரலாறு. அதை வாசிக்கும்போது அவரை அறியாமல் மனமாறினார். இச்சூழ்நிலையில் ஆகஸ்டு 1521-ல் ஒருநாள் மாலைப்பொழுதில், அவர் தனிமையில் அவரின் அறையில் இருக்கும்போது மரியன்னை குழந்தை இயேசுவைக் கையில் தாங்கிக்கொண்டு வந்து காட்சியளித்தார்.

இக்காட்சியைக் கண்ட இனிகோ அளவில்லா ஆனந்தம் அடைந்தார். தனிப்பட்ட ஆறுதலை உணர்ந்தார். இந்த வேளையில்தான் இனிகோ மனமாற்றத்தின் ஆரம்பநிலையை அடைந்தார். தனது பாவ வாழ்க்கையின் மீது வெறுப்பும், புனிதர்களின் பாதையில் நடைபோட வேண்டுமென்ற ஆவலும் ஏற்பட்டது.

1522 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இனிகோவின் வலது காலின் காயம், போதுமான அளவு குணமடைந்தது. இதனால் இனிகோ புனித நாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். தன் குடும்பத்தினரிடமிருந்து மறைவாக விலகி பார்சலோனா சென்றடைந்தார். அப்போது அருகிலிருந்த மரியன்னையின் சிற்றாலயத்தை நோக்கிப் புறப்படுமுன், மான்செராற் (Manserar) என்ற இடத்திற்குச் சென்று, திருப்பயணிகள் அணியும் உடை ஒன்றை வாங்கினார்.

இவ்வுடை சாக்கு போன்று முரடாக இருந்தது. நீளமான அங்கி போன்று காணப்பட்டது. இந்நிலையில் மார்ச் 21 -ல் அன்னையின் ஆலயத்தை அடைந்தார். அங்கு சென்றவுடன் குருவானவரை சந்தித்து பாவ மன்னிப்பு பெற்றார். பொது பாவமன்னிப்பு அருட்சாதனத்தைப் பெற்ற பிறகுதான் மன அமைதி அடைந்தார்.

பின்னர் மார்ச் 24-ல் மரியன்னையின் மங்கள வார்த்தை தினத்தன்று, தனது உயர்தர ஆடைகளை எடுத்து ஓர் ஏழைக்குத் தானம் அளித்துவிட்டு, தான் வாங்கியிருந்த திருப்பயணியின் ஆடையை உடுத்திக்கொண்டார். அந்த இரவில் அன்னையின் ஆலயத்திலிருந்த பலி பீடத்தை விரைந்து ஓடினார்.

அந்தக்காலத்தில் படைவீரர்கள் தங்களின் வீரத்தில், மேலும் முன்னேற்றம் அடைய, மரியன்னையின் முன் இரவு நேரத்தை செலவழித்த முறையில், முழந்தாளிட்டும் எழுந்துநின்றும், மாறி மாறி இரவு முழுவதும் செலவிட்டு, வைகறையில் தனது படைத்தளபதிக்குரிய அடையாளங்களான போர்வாளை அன்னையின் பாதங்களில் வைத்தார். அபோதிலிருந்தே இனிகோ "மரியன்னையின் மாவீரர்" என்றே தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டார்.

இனிகோ அன்னையின் திருநாளன்று காலையில் பார்சிலோனா நகரை நோக்கி விரைந்தார். போகும் வழியில் கார்டனேர் (Cardaner) ஆற்றங்கரையில் இருந்த மன்ரேசாவில் சுமார் 10 மாதங்கள் தங்கிவிட்டார். இங்குதான் இனிகோ முழுமையான, நிரந்தரமான மனமாற்றம் அடைந்தார். அதன்பிறகு "ஆன்மீகப் பயிற்சிகள்" என்ற நூலையும் எழுதினார்.

 சுமார் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கியபிறகு, புதிய மனிதனாக உருமாற்றம் பெற்று, திருத்தந்தை நான்காம் ஏட்ரியன் அவர்களின் அனுமதி பெற்று, புனித நாட்டை அடைந்தார். சிலகாலம் அங்கேயே தங்கிவிட்டு, தனது 33 ஆம் வயதில் குருவாக எண்ணினார். இதனால் இனிகோ பல எதிர்ப்புகளை சந்தித்தார். 22 நாட்கள் டொமினிக்கன் துறவியர்களை சிறைபடுத்தப்பட்டார். இவர் சேவையும், போதனைகளும் சரியானவையே என்று சான்று கிடைத்தபின் 02.02.1528 - ல் பாரீஸ் நகரை அடைந்தார்.

அங்கு இனிகோ, கல்லூரி படிக்கும்போது, பீட்டர், பேபர், பிரான்சிஸ் சவேரியார் தங்கி படித்த அறையில் தங்க வாய்ப்பு கிடைத்தது. அச்சமயத்தில் இம்மூவரையும் தனது ஆன்மீக பயிற்சிகளின் மூலம் தன் பக்கம் ஈர்த்து இணைபிரியா நண்பர்களாக்கி கொண்டார். அப்போது இவர்கள் அனைவரும், குருவாகி மக்களை இறைவனிடம் ஈர்த்து செல்ல வேண்டுமென்பதை குறிக்கோளாக கொண்டனர்.

இதனால் 1534 -ல் ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாளில் 7 பேரும் கற்பு, ஏழ்மை என்னும் இரண்டு வார்த்தைப்பாடுகளை எடுத்துக்கொண்டனர். இவர்கள் வார்த்தைப்பாடு பெற்ற அந்நாள் மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா நாள். எனவே இனிகோ மனமாற்றம் பெற்று, புதிய இயேசு சபையைத் தோற்றுவிக்க உடனிருந்து வழிநடத்திய மரியன்னை "இயேசு சபையின் அன்னை" என்று கூறி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

Thursday 21 April 2016

புனித ஆன்ஸ்லெம்(St.Anselm)!

ஆன்ஸ்லெம் அவர்களின் தாய் இறந்தபிறகு, இவருக்கும், இவரின் தந்தைக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் ஆன்ஸ்லெம் பிரான்சிலுள்ள தன் தாயின் உறவினர் வீட்டில் சென்று தங்கியிருந்தார். பின்னர் இத்தாலி நாட்டில் தன் படிப்பை தொடர்ந்தார்.

தன் தொடக்க பள்ளியை முடித்தபிறகு, இறையியலையும், மெய்யியலையும் கற்றார். இப்படிப்பில் இவர் மிகவும் வல்லவராக திகழ்ந்தார். படிப்பை முடித்தபிறகு தம் 27 ஆம் வயதில் 1060 ஆம் ஆண்டு நார்மண்டில் பெக் என்ற நகரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். தனது துறவற சபையை வழிநடத்திய சபை அதிபர் இறந்தபிறகு 1078 ஆம் ஆண்டு சபையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆன்ஸ்லெம் ஆசீர்வாதப்பர் சபையின் தலைவரானதால், இச்சபையில் இருந்த அனைத்து குழுமங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இதனால் துறவற இல்லங்களை பார்வையிட இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அச்சமயத்தில் இவருக்கும், காண்டர்பரி ஆயருக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டது.

அதன்பிறகு 1089 ஆம் ஆண்டு காண்டர்பரி ஆர்ச் பிஷப் இறந்துவிட்டார். இதனால் காண்டர்பெரி மறைமாநிலத்திற்கு ஆன்ஸ்லெம் வலுகட்டாயமாக பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கடவுளின் சிறப்பான அருள் வரங்களை பெற்றிருந்தார். இதனால் மக்களின் மனங்களில் மிக விரைவில் இடம் பிடித்தார். தனது எளிமையான வாழ்வினாலும், தாழ்ச்சியினாலும், கல் போன்ற மனம் கொண்டவர்களையும் கவர்ந்து, இறைவன்பால் ஈர்த்தார்.

அப்போது காண்டர்பெரியில் அரசராக இருந்த இரண்டாம் வில்லியம் திருச்சபைக்கு எதிராக செயல்பட்டார். இறையியலையும், திருச்சபை சட்டத்தையும் நன்கு கற்றிருந்த பேராயர், தான் கற்ற திருச்சபை சட்டங்களை கொண்டு அரசரின் தவறை சுட்டிகாட்டினார். இதனால் அரசருக்கும், பேராயருக்குமிடையே பெரிய சண்டை மூண்டது.

இதனால் ஆத்திரமடைந்த அரசர் இரண்டாம் வில்லியம், பல சூழ்ச்சிகளை செய்து 1097 ஆம் ஆண்டு பேராயரை நாடு கடத்தினான். பேராயரை நாடு கடத்திய மூன்றாம் ஆண்டுகளில் அரசர் இரண்டாம் வில்லியம் இறந்துவிட்டார்.

இதனால் இவரைத் தொடர்ந்து முதலாம் ஹென்றி அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசர் முதலாம் ஹென்றி 1103 ஆம் ஆண்டு பேராயரை மீண்டும் காண்டர்பரிக்கு அழைத்து வந்தான்.

அதன்பிறகு அரசர் முதலாம் ஹென்றி பேராயரை, தன் அரசியல் வாழ்வோடு இணைந்து போக வற்புறுத்தினார். அரசன் தன் கண்முன்னாலேயே திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்ட பேராயர், மீண்டும் அரசனிடம் திருச்சபைக்காக பரிந்து பேசினார்.

இதனால் மீண்டும் பேராயர் 1103-1106 வரை நாடுகடத்தப்பட்டார், இருப்பினும் உத்தம நன்நெறியிலும், தளரா ஊக்கத்துடனும் பேராயர் முன்னேறிச் சென்றார். தொடர்ந்து திருச்சபையின் சுதந்திரத்திற்காகப் போராடினார். அப்போது பல இறையியல் நூல்களை திறம்பட எழுதினார்.

இவர் இறந்தபிறகு இவரின் உடல் காண்டர்பெரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அரசர்களிடம் திருச்சபைக்காக போராடி கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்பியதால் இன்றும் இங்கிலாந்தில் பல பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் வாழ்கின்றனர். இன்று வரை பேராயரின் பெயர் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்துவ ஆலயங்களில் கூறப்பட்டு வருகின்றது.


Friday 15 April 2016

நம் வார்த்தை வாழ வைக்கிறதா?

நாளைய  நற்செய்தி சற்று வித்தியாசமான ஒரு செய்தியை நமக்குத்தருகிறது. இதுவரை இயேசுவைச்சாராத மற்றவர்கள் இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்வது கடினமென்றும், அது குழப்பத்தை உண்டாக்குகிறது என்றும் சொல்லி வந்தனர்.

 ஆனால், இன்றைய பகுதியில் இயேசுவோடு உடனிருந்த சீடர்களே, இயேசுவின் போதனையைக்கேட்டு, “இதை ஏற்றுக்கொள்வது கடினம்: இப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று சொல்லிக்கொள்கிறார்கள். இயேசுவின் போதனை சீடர்களுக்கு ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது.

கிறிஸ்தவ மறையைப்பொறுத்தவரையில், இரண்டு கடினமான காரியங்களை நாம் பார்க்கலாம்.
1. நம்மை முழுவதும் இயேசுவிடம் சரணடையச் செய்ய வேண்டும்.

2. இயேசு சொல்கிற வார்த்தைகளை செயல்படுத்த வேண்டும். இதில் முதல் காரியம் அனைவரும் செய்கிற எளிதான ஒன்று. இயேசுவிடம் நம்மைச் சரணடையச்செய்வது அனைவரும் விருப்பத்தோடு செய்கிற செயல்பாடுகளுள் ஒன்று.

ஆனால், இயேசுவின் மதிப்பீடுகளை, விழுமியங்களை வாழ்வாக்குவது எல்லோராலும் முடிகின்ற ஒன்று அல்ல. ஏனென்றால், அது ஒரு சவாலான வாழ்வு. நம்மையே ஒறுத்து வாழ்கிற வாழ்வு. உடலின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அடக்கி ஆள்கிற வாழ்வு.

 சுயத்தை விடுத்து பொதுநலனில் அக்கறை கொள்கிற வாழ்வு. ஆனால், அத்தகைய வாழ்வுதான் உன்னதமான வாழ்வு. இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிற வாழ்வு.

அத்தகைய உன்னதமான வாழ்வை வாழத்தான் கிறிஸ்தவர்களாக நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அது கடினமான, சவாலான ஒன்றாக இருந்தாலும், முடியாத ஒன்றல்ல. ஆண்டவரின் துணைகொண்டு நம்மால் எதையும் செய்ய முடியும். எனவே, அப்படிப்பட்ட ஒரு சாட்சிய வாழ்வு வாழ, இறைத்துணையை நாம் நாடுவோம்.

Tuesday 12 April 2016

கடவுளைத்தேடும் உள்ளம்!

”என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்” என்று சொல்கிறார் இயேசு. அதற்கான காரணத்தையும் அவர் தொடர்ந்து சொல்கிறார்.

 ”ஏனெனில், என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்”.

ஆக, மக்கள் அனைவரையும் ஒன்றாகக்கூட்டிச் சேர்ப்பதுதான் கடவுளின் திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்றத்தான் இயேசு இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்.

கடவுள் ஏன் மக்களை ஒன்றாகக்கூட்டிச் சேர்க்க வேண்டும்? நாம் அனைவருமே கடவுளின் அன்புப்பிள்ளைகள். ஆனால், கடவுளிடமிருந்து விலகி வந்து விட்டோம். அவரிடமிருந்து வெகுதூரம் சென்று விட்டோம். ஆனாலும், கடவுள் நம்மை மறப்பதில்லை.

 ஒரு குழந்தை தவறு செய்தாலும், தாய் அதனை உதறித்தள்ளுவதில்லை. அந்த குழந்தைக்கு அதன் தவறைச் சுட்டிக்காட்டி, மீண்டும் தவறு செய்யாதபடிக்கு அறிவுரைகூறி, தன் மார்போடு அணைத்துக்கொள்கிறார். அத்தகைய தாயின் அன்பிற்கும் மேலானது நம் கடவுளின் அன்பு. அவருடைய அன்பின் ஆழத்தை நாம் உணர்கின்றபோதுதான், நாம் அவரைத்தேடி வருவோம்.

கடவுளின் அன்பைத்தான் அன்னையாம் திருச்சபையும் நமக்குக் காட்டுகிறது. திருச்சபையின் பிள்ளைகள் தவறு செய்கிறபோது தாய்க்கான உணர்வோடு தவறைச் சுட்டிக்காட்டி, அறிவுரை கூறுகிறது. திருந்தி வாழ அழைப்பு விடுக்கிறது. அந்த அழைப்பை ஏற்று, நாமும் கடவுள்பால் திரும்புவோம்.

Monday 11 April 2016

உண்மையான நல்ல வாழ்க்கை...

ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம், "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுள்காலம் என்ன?" என்று கேட்டார்.

அதற்குச் சீடர்களுள் ஒருவர், "வேறு என்ன, நூறு வயதுதான்" என்று கூறினார். குருவோ, "இல்லை" என்றார்.

"அப்படியெனில், 90 வயது" என்று மற்றவர் கூறினார். அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார்.

அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமையிழந்து, "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர். அதற்கு குரு, "ஒரு வினாடிதான்" என்று கூறினார்.

 "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாகச் சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர்.

பின் குரு, "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில்தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும்.

மேலும், அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும், அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக் கூடாது.

ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அதுதான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்குச் சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்தார்.

இது என் தம்பிக்காக!