Thursday 21 April 2016

புனித ஆன்ஸ்லெம்(St.Anselm)!

ஆன்ஸ்லெம் அவர்களின் தாய் இறந்தபிறகு, இவருக்கும், இவரின் தந்தைக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் ஆன்ஸ்லெம் பிரான்சிலுள்ள தன் தாயின் உறவினர் வீட்டில் சென்று தங்கியிருந்தார். பின்னர் இத்தாலி நாட்டில் தன் படிப்பை தொடர்ந்தார்.

தன் தொடக்க பள்ளியை முடித்தபிறகு, இறையியலையும், மெய்யியலையும் கற்றார். இப்படிப்பில் இவர் மிகவும் வல்லவராக திகழ்ந்தார். படிப்பை முடித்தபிறகு தம் 27 ஆம் வயதில் 1060 ஆம் ஆண்டு நார்மண்டில் பெக் என்ற நகரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். தனது துறவற சபையை வழிநடத்திய சபை அதிபர் இறந்தபிறகு 1078 ஆம் ஆண்டு சபையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆன்ஸ்லெம் ஆசீர்வாதப்பர் சபையின் தலைவரானதால், இச்சபையில் இருந்த அனைத்து குழுமங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இதனால் துறவற இல்லங்களை பார்வையிட இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அச்சமயத்தில் இவருக்கும், காண்டர்பரி ஆயருக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டது.

அதன்பிறகு 1089 ஆம் ஆண்டு காண்டர்பரி ஆர்ச் பிஷப் இறந்துவிட்டார். இதனால் காண்டர்பெரி மறைமாநிலத்திற்கு ஆன்ஸ்லெம் வலுகட்டாயமாக பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கடவுளின் சிறப்பான அருள் வரங்களை பெற்றிருந்தார். இதனால் மக்களின் மனங்களில் மிக விரைவில் இடம் பிடித்தார். தனது எளிமையான வாழ்வினாலும், தாழ்ச்சியினாலும், கல் போன்ற மனம் கொண்டவர்களையும் கவர்ந்து, இறைவன்பால் ஈர்த்தார்.

அப்போது காண்டர்பெரியில் அரசராக இருந்த இரண்டாம் வில்லியம் திருச்சபைக்கு எதிராக செயல்பட்டார். இறையியலையும், திருச்சபை சட்டத்தையும் நன்கு கற்றிருந்த பேராயர், தான் கற்ற திருச்சபை சட்டங்களை கொண்டு அரசரின் தவறை சுட்டிகாட்டினார். இதனால் அரசருக்கும், பேராயருக்குமிடையே பெரிய சண்டை மூண்டது.

இதனால் ஆத்திரமடைந்த அரசர் இரண்டாம் வில்லியம், பல சூழ்ச்சிகளை செய்து 1097 ஆம் ஆண்டு பேராயரை நாடு கடத்தினான். பேராயரை நாடு கடத்திய மூன்றாம் ஆண்டுகளில் அரசர் இரண்டாம் வில்லியம் இறந்துவிட்டார்.

இதனால் இவரைத் தொடர்ந்து முதலாம் ஹென்றி அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசர் முதலாம் ஹென்றி 1103 ஆம் ஆண்டு பேராயரை மீண்டும் காண்டர்பரிக்கு அழைத்து வந்தான்.

அதன்பிறகு அரசர் முதலாம் ஹென்றி பேராயரை, தன் அரசியல் வாழ்வோடு இணைந்து போக வற்புறுத்தினார். அரசன் தன் கண்முன்னாலேயே திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்ட பேராயர், மீண்டும் அரசனிடம் திருச்சபைக்காக பரிந்து பேசினார்.

இதனால் மீண்டும் பேராயர் 1103-1106 வரை நாடுகடத்தப்பட்டார், இருப்பினும் உத்தம நன்நெறியிலும், தளரா ஊக்கத்துடனும் பேராயர் முன்னேறிச் சென்றார். தொடர்ந்து திருச்சபையின் சுதந்திரத்திற்காகப் போராடினார். அப்போது பல இறையியல் நூல்களை திறம்பட எழுதினார்.

இவர் இறந்தபிறகு இவரின் உடல் காண்டர்பெரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அரசர்களிடம் திருச்சபைக்காக போராடி கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்பியதால் இன்றும் இங்கிலாந்தில் பல பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் வாழ்கின்றனர். இன்று வரை பேராயரின் பெயர் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்துவ ஆலயங்களில் கூறப்பட்டு வருகின்றது.


No comments:

Post a Comment