Tuesday 12 April 2016

கடவுளைத்தேடும் உள்ளம்!

”என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்” என்று சொல்கிறார் இயேசு. அதற்கான காரணத்தையும் அவர் தொடர்ந்து சொல்கிறார்.

 ”ஏனெனில், என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்”.

ஆக, மக்கள் அனைவரையும் ஒன்றாகக்கூட்டிச் சேர்ப்பதுதான் கடவுளின் திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்றத்தான் இயேசு இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்.

கடவுள் ஏன் மக்களை ஒன்றாகக்கூட்டிச் சேர்க்க வேண்டும்? நாம் அனைவருமே கடவுளின் அன்புப்பிள்ளைகள். ஆனால், கடவுளிடமிருந்து விலகி வந்து விட்டோம். அவரிடமிருந்து வெகுதூரம் சென்று விட்டோம். ஆனாலும், கடவுள் நம்மை மறப்பதில்லை.

 ஒரு குழந்தை தவறு செய்தாலும், தாய் அதனை உதறித்தள்ளுவதில்லை. அந்த குழந்தைக்கு அதன் தவறைச் சுட்டிக்காட்டி, மீண்டும் தவறு செய்யாதபடிக்கு அறிவுரைகூறி, தன் மார்போடு அணைத்துக்கொள்கிறார். அத்தகைய தாயின் அன்பிற்கும் மேலானது நம் கடவுளின் அன்பு. அவருடைய அன்பின் ஆழத்தை நாம் உணர்கின்றபோதுதான், நாம் அவரைத்தேடி வருவோம்.

கடவுளின் அன்பைத்தான் அன்னையாம் திருச்சபையும் நமக்குக் காட்டுகிறது. திருச்சபையின் பிள்ளைகள் தவறு செய்கிறபோது தாய்க்கான உணர்வோடு தவறைச் சுட்டிக்காட்டி, அறிவுரை கூறுகிறது. திருந்தி வாழ அழைப்பு விடுக்கிறது. அந்த அழைப்பை ஏற்று, நாமும் கடவுள்பால் திரும்புவோம்.

No comments:

Post a Comment