Monday 30 May 2016

புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )

இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர்.

பல வரலாற்று அறிஞர்களும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர்.

 பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப்புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண்ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க்கும்போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.

இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரேமிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

 இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன்படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது.

இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப்போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட்டார்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீரர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக்கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோறும் தன்னையே தயாரித்தார்.

1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக்கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார்.

அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவில்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார்.

 ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.

இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார்.

செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மாற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார். இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார்.

இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமுற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்னருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பித்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் விதமாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர்.

அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுப் போகப்பட்டார். எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமுடியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார்.

பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களுக்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.


Saturday 28 May 2016

புனித கெர்மானூஸ் (St.Germanus)!

தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார்.

 அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார்.

தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது.

இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார்.

அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார்.

அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.

இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.

இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.

Friday 27 May 2016

புனித அகஸ்டின் (St. Augustine)!

இவர் காண்டர்பரி நகரின் முதல் ஆயர். இவர் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர். உரோமைத் துறவற மடத்திலிருந்து, இவரது தலைமையில்தான், திருத்தந்தை பெரிய கிரகோரியார் 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.

 அப்போது அவர்கள் பிரான்சு நாட்டு வழியே சென்றார்கள். அச்சமயத்தில் இங்கிலாந்து நாட்டு மக்களின் சூழ்ச்சியைக் கண்டு அச்சமுற்றார்கள்.

அவர்கள் திருத்தந்தையின் ஆலோசனை என்ன என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள, தங்கள் தலைவரை உரோமுக்கு அனுப்பினர். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு சாக்சென் மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.

இதற்கு திருத்தந்தை வதந்திகளையும், பயமுறுத்தல்களையும் பார்த்து அஞ்சவேண்டாம். இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுங்கள். பல தியாகங்களை செய்யுங்கள். என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, இயேசுவின் பணியை செய்யத் தயாரானார்கள். இதனைத் தொடர்ந்து 597 ல் தானெட் (Thanet) என்ற தீவை அடைந்து பணியைத் தொடர்ந்தார்கள். இந்தத் துறவிகளின் அயராது உழைப்பும், அஞ்சா நெஞ்சமும் எந்த அளவுக்கு வெற்றியை கொணர்ந்தது என்பதைப்பற்றி புனித பேதா அவரின் வரலாற்றில் புகழ்ச்சியோடு எழுதியுள்ளார்.

இவர்கள் தானெட் தீவில் பணி செய்தபோது, புனித மார்ட்டின் பெயரால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று அங்கு இருந்தது. இவ்வாலயம் மிகவும் பாழடைந்து கிடந்தது. இதை இத்துறவிகளிடம் ஒப்படைத்தனர். அத்துறவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அக்கோவிலில் செபித்தனர். பண் இசைத்தனர். திருப்பலி நிறைவேற்றினர், போதித்தனர். திருமுழுக்கு கொடுத்து வந்தனர்.

இவர்களது எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த ஜெப வாழ்வும் அந்நாட்டு அரசனை பெரிதும் கவர்ந்தது. அரசன் எதெல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவன்று மனந்திரும்பி புதிய ஞானஸ்நானம் பெற்றனர்.

நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத்தகு முறையில் வளர்ச்சியடைந்தது. இதையறிந்த திருத்தந்தை அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால் இவர்களுக்கும், திருத்தந்தைக்கும் இருந்த உறவு மேலும் வலுப்பெற்றது.

இவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்த புனித அகஸ்டீன், இங்கிலாந்து நாட்டில் காலடி எடுத்துவைக்கும்போதே காட்சியாகக் கண்டு இவையனைத்தும் நடக்கும் என்று சொன்னார். அவர் இச்சகோதரிகளை ஏஞ்சல்ஸ்(தேவ தூதர்கள்) என்றே கூறி வந்தாராம்.

மிக மேலான காரியங்களையும் இறைவனின் மேல் சுமத்திவிட்டு, இறைவன் பெயரால் செய்து இக்கன்னியர்களை கொண்டு மறையுரையாற்றி வெற்றி கண்டாராம் இப்புனிதர்.

Thursday 26 May 2016

புனித பிலிப்புநேரி(St. Philip Neri)!

இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர், தனது 26 ஆம் வயதில் வணிகத் தொழிலைவிட்டுவிட்டு, தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோம் நகர் சென்றார்.

அங்கு இவர் வேதக்கலை, தத்துவக்கலையைப் பயின்றார். அவற்றோடு ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது உரோம் நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும், தினமும் மாலை பொழுதில் நடந்தே சென்று சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இரவில் புனித செபஸ்தியாரின் புதைக்குழி வளாகத்தில் தங்கினார்.

அதோடு நலிவுற்ற, ஏழை மக்களின் நலன்களை கருதி மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். அவர் தெரு வழியாக நடந்துசெல்லும்போது, ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இனங்கண்டு, தமது திறமையான பேச்சியினாலும், அணுகுமுறைகளினாலும் அவர்களை இறைவன் பால் ஈர்த்து மனம்மாற செய்தார்.

பிறகு 1548 ஆம் ஆண்டு தமது குறிக்கோளை ஏற்றுக்கொண்டவர்களை ஒருங்கிணைத்து, திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து, பல பக்திமுயற்சிகளை பரப்பி மக்களை இறைவன்பால் ஈர்த்ததோடு, இறைவனைப்பற்றி ஊர்களில் எடுத்துரைக்கவும் வழிவகுத்தார். இவ்வாறு இப்பணியில் 10 ஆண்டுகளை கழித்தார்.

அப்போது இவரின் ஆன்ம குரு, இவரிடம் குருத்துவதை நாட பணித்தார். பின்னர் இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 33 ஆண்டுகள் ஆரட்டரி(Aratery) என்று அழைக்கப்பட்ட ஜெபக்குழுவை உருவாக்கி, பல குருக்களின் துணையோடு அச்செபக்குழுவை தொடர்ந்து நடத்தினார். இதன்வழியாக ஏராளமான ஞானப்பலன் கிடைத்ததை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

அதன்பிறகு இக்குழுவை உயர்த்தி "ஆரட்டோரியன்ஸ் செபக்குழுவினர்" என்று பெயரிட்டு, அக்குழுவை தொடர்ந்து வழிநடத்தினார். இன்றுவரை இக்குழு செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் தொழிலாளர் பலர் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், ஆன்மீக ஆலோசனை பெறவும் வந்த வண்ணமாய் இருந்தனர். \

பல குருக்களும், கர்தினால்களும் இவரது ஆலோசனையை நாடி வந்தனர். இவர் எப்போது திருப்பலி நிறைவேற்றினாலும், தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்குக்கொண்டு சேர்த்தார்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், ஆழமான இறை அனுபவம் பெறவும், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளை கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தை பெறுதல் ஆகியவற்றால் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தம் அலுவலகத்திற்கு விரைந்து ஓடி போய்விடுவார். பூசையின் இறுதிவரை இருக்கமாட்டார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும்முறையில், பூசை உதவி செய்யும் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளைக் கொடுத்து, அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள் என்றார்.

இளைஞரும் தன் தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு, அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். இன்னொரு முறை, பிறரைப் பழி தூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்க சொன்னார். பறித்து முடித்தபின் அவற்றைக் காற்றில் பறக்கவிட சொன்னார். இதன்பின் அப்பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டார்.

பறித்த இறகுகளை ஒன்று சேர்த்து அவற்றைப் பறக்கவிட சொன்னார். பின்னர் பறக்கவிட்ட இறகுகளை ஒன்று சேர்த்து, தன்னிடம் கொண்டுவரச்சொன்னார். அப்போது அப்பெண் அவரிடம், அது என்னால் முடியாதே என்றார். "அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாமல் என்பதை புரிந்துக்கொள், திருத்திக்கொள்" என்று கூறினார். அப்பெண்ணும் தன் தவற்றை உணர்ந்து திருந்தினார்.

இவர் உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பெயருக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நாள்தோறும் பிலிப்பு, வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு, ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக்கொடுத்து விடுவான், என்று நாள்தோறும் மறவாமல் ஜெபிப்பார்.

Wednesday 25 May 2016

புனித வணக்கத்துக்குரிய பேதா (St.Beda, the Reverend)!

இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். 

இவர் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர் இவருக்கு 7 வயது நடக்கும்போது நார்த்தம்பிரியாவில்(Narthampriya) இருந்த துறவற மடத்தில், புனித பெனடிக்ட் பிஸ்கோப்(Benedict Piskop) என்பவரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்தார். 

அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுதேர்வதில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பதுதான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம். 

இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலாந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூலை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழியாமல் பதிந்துவிடும். 


அவரது இறுதி நாளன்று, அவர் அவரது மாணவர்களில் ஒருவராகிய வில்பெர்ட் (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர்.

 அப்போது வில்பெர்ட், பேதாவை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதி கொண்டிருந்தோம். அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ்சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பேதா, "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். 

அப்போது பேதா, அம்மாணவரிடம் நல்லது பிள்ளாய்! இப்போது எனது தலையை உனது கைகளால் தாங்கிப்பிடி. இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போகிறேன் என்று கூறினார். வில்பெர்டும் அவர் சொன்னப்படியே செய்தார். அப்போது பேதா "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே உயிர் நீத்தார். 


Tuesday 24 May 2016

சாலையோர மாதா!

இத்தாலி மொழியில் "மடோநாடெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம்.

இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.

கி.பி. 1538 ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது.

அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது 1538 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1539 மே வரை உரோமையிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது.

 புனித இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

 இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.


இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா(Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார்.

இவ்வாலயம் உரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு குருக்கள் உரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.

Monday 23 May 2016

புனித ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி (St.John Baptista de Rossi)!

இவர் ரோமில் டொமினிக்கன் சபையில் படித்தவர். படிக்கும்போது இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.

இறக்கும் வரை இவர் இந்நோயால் அவதிப்பட்டார். 1721 ஆம் ஆண்டு ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி குருவானார்.

 இவர் குருவான நாளிலிருந்து ஏழைமக்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஏழை மக்களுக்கென்று, எதிர்கால வாழ்வில் முன்னேறுவதற்காக ஒரு குழுவை அமைத்தார்.

 இதன்வழியாக மக்களுக்கு தன் நம்பிக்கையும், தைரியத்தையும், அவர் அவர்களுக்குரிய உரிமையோடு பேசுவதற்கும், நோன்பிருந்து செபிப்பதற்கும், தவத்தின் வழியாக பல நற்பலன்களை அடைவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தார்.

1737 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை, தீயவர்களை எதிர்த்து போராடி ஏழை மக்களின் உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். கானானிய மக்களின் நண்பராக வாழ்ந்து அவர்களின் ஆன்மகுருவாகவே இறந்தார்.

இவர் இறந்தபிறகு ஜாதி, மதம் என்று பாராமல் அனைத்து மக்களும் இவரின் கல்லறைக்கு வந்து, இவரை வழிபட்டு, நற்பலன்கள் பலவற்றை பெற்று சென்றனர்.

Sunday 22 May 2016

புனித ரீட்டா.(St.Rita) !

ரீட்டா கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்பிரியா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்துவந்தார்கள்.

 பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள். ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக்கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்துகொள்ள விரும்பினார்.

ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்கவேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா. உடனே பெற்றோர் பவுலோ பெர்டினாண்டோ என்பவருக்கு ரீட்டாவைத் திருமணம் செய்து கொடுத்தனர்.

ஆனால் அய்யோ பாவம் ரீட்டா! கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூரக்குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சாநெஞ்சத்துடன் அனைத்து துன்பக்கலனையும் ஏற்றுக்கொண்டார். கணவர் மனம்மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.

பின்னர் இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழித்தவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார்.

இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர்.

இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனமாறவில்லையென்றால் இறைவனை அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.

ரீட்டா இவர்களின் இறப்பிற்குப்பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ அறமுயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார். ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது.

அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள்.

அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள். அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார்.

அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்துக்கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார்.

ஆனால் இவரிடமிருந்து அருள்பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ஆம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்டபிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.

ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை.

இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது. இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர்பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத்தணிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Saturday 21 May 2016

புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)!

இவர் ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுபிள்ளையாக இருக்கும்போதே கொலோனில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார்.

அப்போது செபிக்க சென்றபோது ஒருநாள் கொலோன் ஊரில் இருந்த ஓர் ஆலயத்தில், அன்னைமரியாள், கையில் குழந்தை இயேசுவை வைத்திருக்கும் ஒரு படத்தை பார்த்து, அப்படத்தின் முன் மண்டியிட்டு செபித்தார்.

அப்போது ஹெர்மான் தன் கையில் ஆப்பிள் பழம் வைத்திருந்தார். அதை எடுத்து அன்னைமரியிடம் கொடுக்க, குழந்தை இயேசு தன் கையை நீட்டி சிறுவன் ஹெர்மான் கொடுத்த அப்பழத்தை வாங்கிக் கொண்டார். இதைப் பார்த்து திகைத்துப் போன அவர், தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவு செய்தார்.

அதன்பிறகு அவர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். எப்போதும் செபிக்க வேண்டும், விவிலியம் வாசிக்கவேண்டும். திருப்பலியில் பங்கெடுக்கவேண்டும் என்று நினைத்து, இதுதான் துறவற வாழ்வு என்றுணர்ந்து அவ்வாழ்வை தேர்வை செய்தார். ஆனால் அங்கு அனைத்தும் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அவரை அந்த துறவற மடத்தில், உணவு சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள சொன்னார்கள்.

அவரும் அப்பொறுப்பை ஏற்று தினமும் கடைக்குச் சென்று, தன்னிடம் ஒப்படைத்த வேலைகளை செய்து வந்தார். இதனால் கோவிலில் அமர்ந்து செபிப்பதற்கென தனியாக அவருக்கு நேரம் கிடைக்காததால், ஒருநாள் அன்னைமரியிடமும், தந்தை சூசையிடமும், தனது கவலைகளை செபத்தில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அன்னையானவள், அவரிடம் உன் உடனுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நீ புரியும் உன் வேலைகளே உன்னிடமிருந்து வருகின்ற உண்மையான ஜெபம் என்றுணர்த்தினார்.


அதன்பிறகு ஹெர்மான் தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு தனக்கு குறிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மகிழ்வோடு செய்து வந்தார். அவ்வேலைகள் அனைத்தையும் ஜெபமாக மாற்றினார். அதன்வழியாக உடனிருந்த அனைவரின் அன்பையும் பெற்றார். அதிலிருந்து ஹெர்மான் அன்னைமரியின் பாடல் ஒன்றை எப்போதும் பாடிக் கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக நோன்பிருந்து ஜெபித்தார்.

இதனால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சுல்பிக் (Zulpich) என்ற ஊரில் இருந்த சிஸ்டர்சீசியன்(Zisterzienserinn) துறவற இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆன்மீக குருவாக பணியாற்றினார். அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் ஆசீரை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார்.

ஹெர்மான் அத்துறவற இல்லத்திற்குள் நுழைந்தவுடனே, "இங்குள்ள கல்லறையில்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும், நான் இங்குதான் இறப்பேன்" என்று கூறினார். அவர் கூறியபடியே, ஒருநாள் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, கண்களைமூடி அமைதியாக இறைவனிடம் சேர்ந்தார்.

Friday 20 May 2016

புனித சியென்னா பெர்னார்டின் (St. Bernardine of Siena)!

இவர் ஓர் பிரான்சிஸ்கன் துறவற சபையை சார்ந்த குரு. இவர் அச்சபையில் இருக்கும்போது பலவற்றை சீர்திருத்தி அமைந்தார். இவர் தன்னுடைய 20 ஆம் வயதிலேயே தன்னுடன் ஏராளமான இளைஞர்களை நண்பர்களாக வைத்திருந்தார்.

இவர்களின் ஒத்துழைப்பினால், சியென்னா நகரில் ஒரு மருத்துவமனையில் சமூகசேவை செய்ய முழு பொறுப்பையும் ஏற்றார். அங்கு நாள்தோறும் குறைந்தது 20 பேர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு பலியானார்கள். ஆனால் பெர்னார்டின் இந்நோயைக் கண்டு பயப்படாமல் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் முழு நேரத்தையும் செலவழித்து தொண்டு புரிந்தார்.


பின்னர் 2 ஆண்டுகளுக்குப்பின் பிரான்சிஸ்கன் சபையில் குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 12 ஆண்டுகள் தனிமையாக ஜெபிப்பதில் தன் நாட்களைக் கழித்தார். பின்னர் பல இடங்களுக்கும், கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரை ஆற்றினார். பிறகு பிரான்சிஸ்கன் சபைக்கு தலைவரானார். நாளடைவில் திருத்தந்தையின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மக்களிடையே மறையுரையாற்றத் தொடங்கினார்.

உத்தம மனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது காலத்தில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லும்போது புண்ணியம் அடைகிறோம் என்றும், அன்னை மரியாளைப் பற்றியும், தூய வளனாரைப்பற்றியும் ஏராளமாக எடுத்துரைத்து மறையுரையாற்றினார். IHS என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுருக்கம் என்றுணர்ந்து, இந்த 3 எழுத்துக்களையும் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து, அதை மக்கள் மீது வைத்து அவர்களை மந்திரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவரது அர்த்தமுள்ள, உருக்கமான மறையுரையைக் கேட்க, சில வேளைகளில் 50,000 பேருக்கும் மேலாக ஆலயத்திலும், வெளியிலும் காத்திருப்பார்கள். குருக்களைப் பற்றியும், கன்னியர்களைப் பற்றியும் பொதுநிலையினர் எப்போதும் தவறாக பேசாமல், மிகவும் கண்ணியமாகப் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களைப் பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித்திரியக்கூடாது என்றும் இவர் எப்போதும் அறிவுரை கூறி வந்துள்ளார்.

 இவர் IHS என்ற இயேசுவின் பெயருக்கு காட்டிய சிறப்பு பக்தி விளக்கம், விரைவில் மக்களிடையே பரவியது. இச்சின்னம் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. இதனால் இவர்மேல் பொறாமைக் கொண்ட சிலர் இவரைப்பற்றி மூன்று முறை திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம், இக்குற்றச்சாட்டுகளின் நடுவே, முந்தைய நிலையைவிட மிகவும் அதிகமாகவே கூடியது. இவர் இத்தாலி நாட்டிலேயே மிகச்சிறந்த மறைபோதகப் பேச்சாளராக திகழ்ந்தார்.

இவர் சபைத்தலைவராக இருக்கும்போது வெறும் 300 பேர் மட்டுமே இச்சபையில் இருந்தனர். பல சீர்திருத்தம் பெற்றதன்பின், இச்சபை ஆல்போல் தழைத்து, இவரது இறுதி நாட்களில் ஏறக்குறைய 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. தன் மறைபோதக பணியால் பலரை இறைவன் பால் ஈர்த்த பெர்னார்டின் இறைமகன் இயேசு விண்ணேற்பு அடைந்த நாளன்று இறைவாழ்விற்கு விண்ணகம் சென்றார்.

Wednesday 11 May 2016

புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi) கப்புச்சின் சகோதரர்!

இவர் இளமையாக இருக்கும்போதே தனது தந்தைக்கும், மாமாவிற்கும் வயலில் வேலை செய்வதற்கு உதவி செய்து வந்தார்.

தனது 18 ஆம் வயதில் நோயால் தாக்கப்பட்டு, மிகவும் வேதனை அடைந்தார். அப்போது தன் நோய் குணமானால் தான் ஓர் துறவியாகிறேன் என்று இறைவனிடம் சத்தியம் செய்து குணம் பெற வேண்டி தொடர்ந்து செபித்தார்.

 இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இரண்டு ஆண்டுகள் கழித்து பூரண குணமடைந்தார். குணமடைந்த உடன் இவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டார். அதன்பிறகு ஒருநாள் குதிரையில் சவாரி செய்தார். அப்போது குதிரையின் மீதிருந்து வ்ழுக்கி கீழே விழுந்ததில் பலமாக அடிப்பட்டார்.

 அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார். மீண்டும் இறைவனிடம் இறைவேண்டல் செய்தார். ஆனால் தன் நோயை கண்டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். அப்போது தனது 20 ஆம் வயதில் கப்புச்சின் துறவற மடத்திற்கு சென்றார். பின்னர் 1736 ஆம் ஆண்டிலிருந்து கப்புச்சின் துறவறமடத்தில் உறுப்பினரானார்.

இக்னேஷியஸ் தன்னுடன் இருந்த மற்ற சகோதரர்களுடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். தனது 45 ஆம் வயதுவரை தனது குழுமத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பணிவிடை செய்து வந்தார்.

ஆனால் அவர் மற்றவர்களை பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவில்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதுகூட மற்றவர்களிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப்பார். தனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார்.

இவரை தாக்கிய பல நோய்கள் இயேசுவின் அற்புதத்தால் குணமாவதை பார்த்த பலரும் பரவசமடைந்தனர். இறுதியாக இக்னேஷியஸ் தனது 84 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.


Friday 6 May 2016

புனித டோமினிக் சாவியோ இளைஞர்களின் பாதுகாவலர்!

டோமினிக் சாவியோ, புனித தொன்போஸ்கோவின் முதல் மாணவர். இவர் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே ஆன்மீக வாழ்வில் சிறந்து காணப்பட்டார்.

இவரின் குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவருமே, இவரை பக்தியுள்ள குழந்தையாக வளர்த்தனர்.

இவரின் பங்கு ஆலயத்தில் இருந்த பங்குதந்தை ஜான், டோமினிக்கின் தெய்வீக ஆர்வத்தை கண்டு, இன்னும் அதிகமாக இயேசுவை நெருங்கி செல்ல வழிகாட்டினார். அன்னை மரியிடம் பக்தியை வளர்க்க எங்கும் நல்ல சூழ்நிலை இருந்தது. காற்று, மழை, குளிர், வெயில் என்று பாராமல் அதிகாலையிலேயே தினமும் தவறாமல் திருப்பலிக்கு சென்று பூசை உதவி செய்தார்.

டோமினிக் தான் பெற்ற திருமுழுக்கை பழுதின்றி பாதுகாத்து, புனிதத்துவத்தில் திளைத்தார். இதனால் சிறு வயதிலிருந்தே இவர் ஓர் புனிதராக கருதப்பட்டார். இவரின் வாழ்வு இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வாக இருந்தது.

 இவரின் தூய்மை, பக்தி, ஆன்ம வேட்கை மற்றவர்களின் வாழ்வை சிந்திக்க தூண்டியது. இவரின் கிறிஸ்துவ வாழ்வு உயிரோட்டம் நிறைந்த வாழ்வாக இருந்தது என்று திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் குறிப்பிடுகின்றார்.

இவர் இறப்பதற்குமுன், விண்ணகவாழ்வைப்பற்றி காட்சியாக கண்டு, ஆஹா, என்ன ஒரு அற்புதமான, இன்பமயமான காட்சி என்று கூறி மகிழ்வோடு உயிர்துறந்தார்.

1954 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் புனிதர் பட்டம் கொடுக்கும்போது, இன்றைய இளைஞர்கள் டோமினிக்கின் வாழ்வை பின்பற்ற வேண்டுமென்று கூறினார். தீமையைவிடுத்து, நன்மையை நாடி இறைப்பற்றோடு வாழ்ந்து சான்று பகர வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

Thursday 5 May 2016

புனித.காடேஹார்டு(St.Godehard)!

காடேஹார்டு ஓர் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார். இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே இவரின் தந்தை தன் நிலத்தை பெனடிக்ட் சபையை சேர்ந்த குருக்களுக்கு தானமாக தந்தார்.

இச்சபையை சார்ந்தவர்களும் அந்நிலத்தில் ஒரு துறவற இல்லம் கட்டினர். நாளடைவில் சிறுவன் காடேஹார்டு பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தததால் குருக்களாலேயே பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டான். அறிவிலும், ஞானத்திலும் மிக சிறந்தவனாய் இருந்தான்.

கல்வியை முடித்துவிட்டு, துறவிகளின் மடத்திலேயே சிறுசிறு உதவிகளை செய்து கொடுத்து, அவர்களுடனே தங்கினார். அப்போது துறவிகளோடு சேர்ந்து பாடல்கள் பாடுவதிலும், திருப்பலியிலும் பங்கேற்றார்.

துறவற குருக்களின் வாழ்க்கை இவருக்கு பிடித்துவிடவே, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, 990 ஆம் ஆண்டு தனது துறவற வார்த்தைப்பாடுகளைபெற்று குருவானார். இவர் குருவானபிறகு ஜெர்மனியிலுள்ள ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பப்பட்டார்.

அப்போது ஜெர்மனியை ஆட்சி செய்த அரசர் இரண்டாம் ஹென்றி அவர்களால் 1022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் ஹில்டஸ்ஹைமிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயரான பிறகு ஜெர்மனி முழுவதும் 30 புதிய ஆலயங்களையும், ஒரு சில பெரிய தேவாலயங்களை பழுது பார்த்து திருத்தியமைக்கும் பணியையும், பல பள்ளிகளையும் கட்டினார்.

பின்னர் "குளுனி" என்ற சபையை நிறுவினார். அதன்பிறகு பிரான்ஸ் நாட்டிலும் இச்சபையை தொடங்கினார். ஆயர் காடேஹார்டு மக்களிடம் காட்டிய அன்பிற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. ஹங்கேரி, ஹாலந்து, போலந்து, சுவிட்சர்லாந்து என பல்வேறு நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை செய்து இறைவன்பால் மக்களை ஈர்த்தார்.

 ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார். எப்போதும் புன்முறுவலுடன் பணிசெய்து, மக்களின் நண்பனாகவும், இறைவனின் சீடனாகவும் இறுதிவரை வாழ்ந்தார். இவர் இறக்கும் வரை இறைவனின் பணியை இடைவிடாமல் ஆர்வமாக ஆற்றினார். இவர் இறந்தபின் இவரது உடல் ஹில்டஸ்ஹைமில் உள்ள பெரிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Wednesday 4 May 2016

புனித.ஜோசப் மேரி ரூபியோ!

இவர் மட்ரிட் நகர் (Madrid) அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் இளமையாக இருக்கும்போதே, இறைபணியிலும், சமூக பணியிலும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். அறிவில் சிறந்து விளங்கிய இவர், இறையியல் படிப்புகளைத் திறம்பட முடித்தார்.

 தமது 23 ஆம் வயதில் குருவாக திருநிலைபடுத்தப்பட்டு மட்ரிட் மறைமாவட்டத்தில் பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது அங்கு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தந்தை ஜோக்கிம்டோரஸ் என்ற குருவிடம் மிக நெருக்கமான தோழமை கொண்டிருந்தார். இயேசு சபையில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்ட ரூபியோ, டோரஸின் தோழமையால் அதை தள்ளிபோட்டார். 19 ஆண்டுகள் மட்ரிட் மறைமாநிலத்தில் சிறப்பாக செய்தார்.

அப்போது தந்தை திடீரென்று இறைவனடி சேர்ந்தார். அதன்பின் ரூபியோ இயேசு சபையில் சேர்ந்து கிரனாடா நகரில் இளந்துறவு நிலையை தொடர்ந்தார். அப்போது இவரின் வயது 42. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து தனது துறவற வார்த்தைப்பாடுகளை கொடுத்தார். பின்பு மீண்டும் மட்ரிட் வந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து இறைபணியை ஆற்றினார்.

ரூபியோ ஒப்புரவு அருட்சாதனத்திலும், சிறப்பாக மறையுரை ஆற்றுவதிலும் வல்லவராக இருந்தார். அரசர்களும், மக்களும் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற எப்போதும் காத்து கொண்டிருந்தார்கள். பாவ அறிக்கையைவிட ரூபியோ மக்களுக்கு கொடுத்த அறிவுரையே மக்களை அதிகம் கவர்ந்தது.

இவர் தம் மறையுரைகளில் எளிமை காணப்பட்டது. மற்றவர்களின் மனதை மாற்றியது. கடவுளை அன்பு செய்யும் எளிய முறைகளைக் கற்றுக்கொடுத்தார். திரு இதய பக்தியையும், நற்கருணை நாதர் பக்தியையும் பரப்பி வந்தார். இதனிடையே அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களை சந்தித்து வந்தார். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்து வந்தார்.

ஆலயப்பீடத் திருப்பணிக்குத் தேவையான துணிகள் போன்ற பொருட்களுக்கு எல்லா ஆலயங்களிலும் தக்க அக்கறை செலுத்துவதற்கெனப் பெண்கள் இயக்கம் ஒன்றை தொடங்கினார். நாளடைவில் 6000 பெண்கள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து பணி செய்தனர்.

இயேசுவின் திரு இதய பக்தியை வளர்க்கவும், சமுதாய தொண்டு புரியவும் வேறு ஓர் அமைப்பையும் ஏற்படுத்தினார். இவ்வமைப்பில் 5000 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த அமைப்பு ஏழை மாணவ மாணவிகளுக்குப் பொருளுதவி அளித்து, கல்வி கற்க வைத்து, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பொருளுதவியும் செய்தனர்.

இல்லறத்தினர் தலத்திருச்சபையில் தியானம், நோயாளிகளை சந்தித்தல் போன்ற தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தந்தை ரூபியோ மிக சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். இப்படியாக மட்ரிட் நகரின் எல்லா பகுதிகளிலும் ரூபியோவின் செயல்பாடுகள் எதிரொலித்தது.

ரூபியோ ஏராளமான இளம் உள்ளங்களுக்கு குருத்துவத்திற்கும், துறவற வாழ்வுக்கும் வழிகாட்டினார். பிரான்ஸ் நாட்டில் புனித மரிய வியான்னியை அவர் வாழ்ந்த போதே எப்படி மதித்துப் போற்றினார்களோ, அதேபோல் தந்தை ரூபியோவையும், மட்ரிட் நகரினர் மதித்து வந்தனர். அப்போது ரூபியோ தனது 64 ஆம் வயதில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

Tuesday 3 May 2016

புனித.பிலிப்பு!

கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றிய பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றார்.

இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரேயாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசுவின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார்.

இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந்தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விளக்கினார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு.

இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித்தார் பிலிப்பு (யோவான் 6:7)

ஒருமுறை இயேசுவைப்பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் யெருசலேமை வந்தடைந்து, யேசுவைப் பார்க்க வேண்டுமென்று பிலிப்பிடம் கேட்டனர். உடனே பிலிப்பு இதை அந்திரேயாவிடம் தெரிவித்து இதைப்பற்றி இருவரும் கலந்து பேசி, கிரேக்கர்களைப்பற்றி இயேசுவிடம் தெரிவித்தார்.

இதிலிருந்து பிலிப்பின் உயர்ந்த எண்ணங்களை அறியலாம். தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப்பணியில் நாட்களை செலவிட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலாற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

Monday 2 May 2016

புனித அத்தனாசியார்!

அலெக்சாந்திரியா நகரில் வசித்த கிறிஸ்தவர்களில் மிகவும் பக்தியான கிறிஸ்துவ பெற்றோர்க்கு மகனாக அத்தனாசியார் பிறந்தார். கிரேக்க பள்ளியில் படித்த இவர், இளம் வயதிலிருந்தே அறிவுத்திறன் மிகுந்தவராய் காணப்பட்டார்.

தமது 21 ஆம் வயதிலேயே திருத்தொண்டர் பட்டம் பெற்ற இவர், ஆயர் அலெக்சாண்டரின் செயலராக விளங்கினார். அப்போது மனித அவதாரம் என்ற நூலை எழுதினார். இவர் இளைஞனாக இருந்தபோதிலிருந்தே, பாலைநிலத்தில் தனிமையை தேடி வாழ்ந்து வந்த தவ முனிவர்களுக்கும், சிறப்பாக வனத்து அந்தோணியாருக்கும் மிகவும் அறிமுகமானவராக இருந்தார்.


323 ஆம் ஆண்டு ஆரியுஸ் என்ற கத்தோலிக்க குரு, ஒரு தவறான கொள்கையை உருவாக்கி அதை திருச்சபை முழுவதும் பரப்பி வந்தார். இதனால் ஆயர் அலெக்சாண்டர் இந்த தவறான கொள்கையை பற்றி பேசவேண்டாம் என்று ஆரியுசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் ஆரியுஸ் ஆயருக்கு எதிராக செயல்பட்டு, மேலும் செசாரியா பகுதிக்கு சென்று அங்கும் பரப்பிவந்தார். மக்களை கவரக்கூடிய முறையில் இத்தவறான கொள்கைகளை பாடல்களாக தொகுத்து அவற்றை பாடவைத்தார். இந்நிலையில் 325 இல் மிகவும் புகழ்பெற்ற நீசேயா பொதுசங்கம் கூட்டப்பட்டது.

 இச்சங்கத்தில் தான் விசுவாசப் பிரமாணம் திருச்சபையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஆரியுசின் தவறான கொள்கையை சுட்டிகாட்டி, அவர்மீது குற்றம் சாட்டி, அவரை சபைக்கு புறம்பாக தள்ளிவைத்தனர். அப்போது சங்கம் முடிந்த சில நாட்களிலேயே ஆயர் அலெக்சாண்டர் காலமானார்.

 அப்போது 30 வயதே ஆகியிருந்த அத்தனாசியார், அலெக்சாண்டிரியா நகர் ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆயர் அத்தனாசியார், ஆரியுசின் தவறுகளையும், அவருக்கு உதவி செய்த ஆயர்களையும் வன்மையாக கண்டித்தார். இதனால் 5 முறை ஆயர் அத்தனாசியர் நாடுகடத்தப்பட்டார். 17 ஆண்டுகள் அவர் ஆயராக வாழ்ந்தார்.

இருப்பினும் அவர் கிறிஸ்துவின் மீது இடைவிடாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தார். அவரை துன்புறுத்தியவர்களின் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் புனிதராகவே வாழ்ந்தார். அவர்மீது கொடுமையாக குற்றம் சாட்டியவர்களையும், பொறுமையோடு ஏற்று, அன்பு செய்தார்.

அப்போது ஆயர் அத்தனாசியாரை பழிவாங்கும் நோக்கத்துடன், அலெக்சாண்டிரியா ஆயர்களும், ஆரியூசும் ஒன்று சேர்ந்து, கப்படோசியாவை சேர்ந்த கிரகோரி என்பவரை அலெக்சாண்டிரியாவின் ஆயராக தேர்ந்தெடுத்தனர். இதனால் ஆயர் அத்தனாசியார் ரோம் சென்று திருத்தந்தையிடம் நடந்தவைகள் அனைத்தையும் எடுத்துக்கூறினார். பின்னர் திருத்தந்தையின் அனுமதி பெற்று மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு திரும்பினார்.

அப்போது ஆயராக இருந்த கிரகோரியின் வன்முறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர் திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்டு, இவற்றிற்கு நீதி கிடைக்கவேண்டுமென்று இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன் விளைவாக ஆயர் கிரகோரியும், அலெக்சாண்டிரியா அரசரும் இறந்துவிட்டனர்.

அதன்பிறகு அரசன் ஜூலியன் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசரானதும் முதலில் ஆயர் அத்தனாசியாரை மீண்டும் ஆயர் பதவியில் அமர்த்தினார். ஆனால் ஆரிய வெறியர்கள் இதனால் சீற்றம் கொண்டு, "அமைதியைக் குலைப்பவர் அத்தனாசியர்" என்று முத்திரையிட்டு, அரசன் ஜூலியனை நாடு கடத்தினர்.

அதன்பிறகு பகைவர்களால் அரசன் அம்பெய்து, குத்தி கொல்லப்பட்டார். இதனால் மன்னன் வாலென்ஸ் அரசு பதவியை ஏற்றார். இவர் ஆயர் அத்தனாசியருக்கு மிக பெரிய உதவிகளை செய்து, திருச்சபையைக் காத்தார்.

 ஏறக்குறைய 50 ஆண்டுகள் பல்வேறு துன்பங்களை தாங்கி கொண்டு, ஆயர் அத்தனாசியார் திருச்சபையில் கிறிஸ்துவின் படிப்பினைகளை நிலைநாட்டினார். அலெக்சாண்டிரியாவில் இவர் இறந்தாலும், இவரது உடல் வெனிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளது.