Tuesday 29 March 2016

கடவுள் அனுபவம்!

கடவுள் அனுபவம் என்பது நம்ப முடியாத வகையில், அதிசயிக்கத்தக்க வகையில் நடைபெறும் ஆச்சரியமான ஒரு அனுபவம் அல்ல, அது ஓர் எளிமையான அனுபவம். உள்ளத்தைத் தொடுகின்ற அனுபவம். நம் வாழ்வோடு கலந்த அனுபவம். வெறும் கவர்ச்சி, மாயை சார்ந்தது அல்ல.

வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த அனுபவம். அத்தகைய அனுபவம் நமக்கு கிடைக்கின்றபோது, பல வேளைகளில் அதை உணரவோ, நம்பவோ, அனுபவிக்கவோ மறந்து விடுகிறோம். அப்படி ஒரு அனுபவத்தைப்பெற்ற இரண்டு சீடர்களின் கதைதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

எம்மாவுக்கு இரண்டு சீடர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து செல்கிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்களிடம் கேள்விகள் கேட்கிறார். பதில் சொல்கிறார். ஆனால், சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

 அதற்கு, இயேசு உருமாறியிருந்தார் என்பது அர்த்தமல்ல. மாறாக, சீடர்களின் கடவுள் அனுபவத்தைப்பற்றிய தவறான பார்வைதான் காரணம். பொதுவாக, மக்கள் மத்தியில் கடவுள் அனுபவம் என்பது, ஆச்சரியமூட்டுகிற வகையில் ஏற்படுகின்ற ஒன்றாக கருதப்படுகிறது.

எனவேதான், யூதர்கள் இயேசுவிடம் அடையாளங்களையும், அருங்குறிகளையும் செய்துகாட்டுமாறு சொன்னார்கள். அதேவேளையில் அவர்களில் ஒருவராக வாழ்ந்த கடவுளின் மகனை முழுமையாக அடையாளம் காண அவர்களால் முடியவில்லை. கடவுள் அவர்களோடு இருந்தும், கடவுள் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

கடவுளை எங்கோ இருக்கிறவராக நாம் பார்க்கிறோம். ஆனால், கடவுள் நம்மில் ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியவில்லை.

ஆனால், கடவுள் அனுபவம் என்பது, கடவுள் நம்மில் ஒருவராக இருப்பதை உணர்ந்து கொள்வது என்பதை உயிர்த்த இயேசு அந்த இரு சீடர்களுக்கும் உணர்த்துகிறார். உண்மையான கடவுள் அனுபவத்தை, அவர்கள் பெற்றுக்கொள்ளச்செய்கிறார்.

நாமும் கூட கடவுள் அனுபவத்தைத்தேடி பல இடங்களுக்கு அலைகிறோம். பலர் வாழ்வை விட்டு விட்டு, காடு, மலை போன்ற இடங்களில் கடவுளைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் கடவுள் நம்மோடு இருக்கிறார். அவரை அறிந்து ஏற்றுக்கொள்வதுதான் கடவுள் அனுபவம். அத்தகைய கடவுள் அனுபவத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்வோம்.

Saturday 26 March 2016

இறைவார்த்தையின் மீது நம்பிக்கை!

இயேசு தனது போதனையிலே எவ்வளவோ வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். அவரது போதனையில் நிலைத்திருக்கிறவர்கள் அரும்பெரும் செயல்களைச் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

தனது மழைப்பொழிவிலே, நீதியின்நிமித்தம் துன்பங்களைச் சந்திக்கிறவர்கள் விண்ணரசில் இடம்பெறுவார்கள் எனப்போதித்து இருக்கிறார். நம்பிக்கையோடு கடவுளிடம் கேட்கும்போது நிச்சயம் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

தாழ்ச்சியோடு வாழ்கிறவர்களை கடவுள் உயர்த்துவார் என்று, தாழ்ச்சியுள்ளவர்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார்.

இந்த போதனைகள் அனைத்துமே நடக்குமா? நிறைவேறுமா? என்று கேட்டால், நம்மில் பலபேருக்கு அது சந்தேகம் தான். கடவுளை நம்புகிற நம்மில் பலபேர், அவர் சொன்னதெல்லாம் நடக்கும், இறைவார்த்தையில் சொல்லப்பட்டதெல்லாம் நடந்தேறும் என்று நம்பிக்கை கொள்வதில்லை.

ஆனால்,நாளைய நற்செய்தி கடவுளின் வார்த்தை உண்மையானது, அது நிச்சயம் நடந்தேறும் என்பதை தெளிவாக்குகிறது.

இயேசு உயிர்த்தார் என்கிற செய்தி நிச்சயம் பலபேருக்கு நம்பக்கூடிய செய்தியாக இருந்திருக்காது. ஏனென்றால், இதுவரை எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பி வந்தது கிடையாது. இப்போது இயேசு தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

அதனை வெறுமனே வார்த்தைகளாகத்தான் எடுத்திருப்பார்களேயொழிய, அதனை உண்மையான வார்த்தைகளாக யாரும் எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு இயேசு உயிர்த்திருக்கிறார்.

ஆக, கடவுளின் வார்த்தை உண்மையாயிருக்கிறது. நடக்காது, நடக்கவே முடியாது என்று நினைத்திருந்த வாக்குறுதி நடந்தேறியிருக்கிறது. எனவே, இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை என்கிற, ஆழமான செய்தியை இது நமக்குத் தருகிறது.

இன்றைக்கு நாமும் கூட திருப்பலியிலே வாசகங்கள் வாசிக்கப்படுகிறபோது அதனை கருத்தூன்றிக் கேட்காததற்கு காரணம், நமது நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.

கடவுளை நாம் நம்பினாலும், இறைவார்தையை, கடவுளின் வார்த்தையை நாம் நம்புவதற்கு தயாராக இல்லை. அந்த நம்பிக்கையின்மையிலிருந்து, நம்பிக்கை வாழ்விற்கு, இந்த உயிர்ப்பு நம்மை அழைத்துவரட்டும்.

அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள்! 

Saturday 19 March 2016

இறைத்திருவுளம்!

இன்றைக்கு தாய்த்திருச்சபை தூய யோசேப்பின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. யோசேப்பைப்பற்றி வெகுஅரிதாகத்தான் நற்செய்தியிலே நாம் பார்க்க முடியும். அவர் தாவீதின் வழிவந்தவர். நேர்மையாளர்.

குழந்தைக்கு நல்ல பாதுகாப்பான தந்தையாய் இருந்தார். பலவற்றை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, தனது வாழ்வை அமைத்துக் கொண்டார்.

வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நம்மால் பதில் கண்டுபிடிக்க முடியாது. அவற்றிற்கு விளக்கங்களும் நம்மால் சொல்ல முடியாது. யோசேப்பின் வாழ்விலும் கூட பல கேள்விகளுக்கு அவரால் பதில் கண்டுபிடித்திருக்க முடியாது.
எதற்காக தான் மரியாளை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதனால் அவருக்கு கிடைக்கக்கூடிய அவப்பெயர் என்ன? மரியாள் எப்படி தூய ஆவியினால் கருத்தரித்திருக்க முடியும்? இதை நம்ப முடியுமா? இந்த உலகம் தன்னை எப்படிப்பார்க்கும்?

எதற்காக தான் வாழ்க்கை முழுவதும், இந்த குடும்பத்திற்கு காவலாக இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் அவருடைய உள்ளத்தைத்துளைத்திருந்தாலும், அந்த கேள்விகளுக்கான பதில் அவருக்கு தெரியவில்லை என்றாலும், அதைப்பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்.

அதற்கு, நிச்சயம், அவர் கடவுள் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை தான் காரணம். நம்பிக்கையாளராக இல்லாமல், யோசேப்பால் இத்தகைய வாழ்வு வாழ்ந்திருக்க முடியாது.

நமது வாழ்வில் நாம் யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: நம்பிக்கை. நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளர்களாய் இருக்க வேண்டும். நம்பிக்கை உணர்வோடு வாழ வேண்டும்.

வாழ்வில் விடைகாண முடியாத பல கேள்விகள் நம்மை வாட்டுகிறபோது, அவற்றைப் பொறுமையாக நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். நமது நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

இன்று புனித சூசையப்பரின் திருவிழா. அவரின் பெயரைக் கொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் செபங்களும். புனித வளனாரிடம் இருந்த ஒரு நற்குணம் பொருப்பில் உள்ள அனைவருக்கும் அவசியம்.

அந்த நற்குணம் சரியான முடிவு எடுப்பது என்பது. இக்கட்டான நேரங்களில் சரியான பொருத்தமான முடிவு எடுப்பது குடும்ப தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கண்காணிப்பவர்களுக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணம். சிறந்த ஞானமும் நிதானமும் உள்ளவர்கள்தான் சரியான, நல்ல முடிவை உடனே எடுக்க முடியும்.

சூசையப்பரின் வாழ்வில் மனைவி ஒரு பிரச்சனை (மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது மத்1:18) பொருளாதாரம் ஒரு பிரச்சனை(இவர் தச்சருடைய மகன் அல்லவா? மத் 13:55). வீடு ஒரு பிரச்சனை(எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார் மத் 2:14) பிள்ளை ஒரு பிரச்சனை ("நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?

 நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?"லூக் 1:49) ஒவ்வொரு கட்டத்திலும் சரியான முடிவெடுத்து யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்.

அதற்குக் காரணம் அவரிடமிருந்த ஆன்மீகம். கடவுள் பக்தி. இறை நம்பிக்கை. அதில் கிடைத்த ஞானம்.அதனால் அவரிடம் இருந்த நிதானம்.அந்த நிதானம் வழங்கிய நிறைவு.அந்த நிறைவில் ஒரு நிம்மதி.நம் வாழ்விலும் இந்த ஆன்மீகத்கத்தை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வாழ்த்துக்கள்.


Tuesday 15 March 2016

இன்றைய புனிதர் - பயஸ் கெல்லர் Pius Keller!

பிறப்பு :25 செப்டம்பர் 1825, பாலிங்ஹவ்சன் Nallinghausen, பவேரியா.
இறப்பு :15 மார்ச் 1904, முனர்ஸ்டாட் Münnerstadt, பவேரியா.

இவர் ஓர் விவசாயியின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் இவருக்கு யோஹானஸ் Johannes என்று பெயரிட்டனர். இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே 1849 ஆம் ஆண்டு அகஸ்டின் துறவற இல்லத்திற்குச் சென்றார்.

இவர் அவ்வில்லத்திற்குச் சென்ற ஒரு சில ஆண்டுகளில் அவ்வில்லத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது 53 ஆம் வயதில் அச்சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர் மீண்டும் முனர்ஷ்டட் திரும்பினார்.

இவர் அங்கு எண்ணிலடங்கா துறவற இல்லங்களைக் கட்டினார். அத்துடன் குருமடங்களையும் நிறுவினார். இவர் ஒப்புரவு அருட்சாதனம் கேட்கும் பணியை எப்போதும் தவறாமல் செய்தார். இவர் தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் மிகக் கடுந்தவ வாழ்வை வாழ்ந்தார்.

இவர் புனித அகஸ்டின் துறவற இல்லத்தின் வாழும் புனிதர் என்றழைக்கப்பட்டார். 1934 ல் ஆண்டு முத்திபேறுபட்டம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததும் எழுத்தில் வடிவமைத்து அறிக்கைகள் அனைத்தும் உரோமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவரின் உடல் அகஸ்டின் துறவற இல்லத்தில் அமைந்துள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! பயஸ் கெல்லரை நீர் உம் மகனாகத் தேர்ந்தெடுத்தீர். உம் பணியை பரப்ப ஆசீர் வழங்கினீர். அவரின் வழியாக துறவற மடங்களை கட்டி எழுப்பினீர். உம் அழகிய பணி இம்மண்ணில் பரவ அவரை உமது கருவியாக பயன்படுத்தினீர். அவரின் வழியாக அச்சபையை உம் சிறகுகளின் நிழலில் வைத்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

Sunday 13 March 2016

ஒளியாக மாறி உண்மை நிலையைக் காண்போம்!

''மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, 'உலகின் ஒளி நானே;
என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்;
வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்றார்'' (யோவான் 8:12)


ஒளியும் இருளும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒளி என்பது கடவுளின் உடனிருப்பு என்றால் இருள் என்பது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதையும் இயேசு வழியாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதையும் ஏற்க மறுப்பதைக் குறிக்கும்.

 இயேசுவை எதிர்த்தவர்கள் ஒருவிதத்தில் இருளில் இருந்தார்கள். கடவுள் பற்றிய உண்மையை இயேசு வெளிப்படுத்தியதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். எனவே அவர்கள் இயேசு உண்மையைக் கூறுகிறாரா இல்லையா என்பதுபற்றி என்ன சான்று உள்ளது எனக் கேட்கிறார்கள்.

யூத வழக்கப்படி, ஒருவர் உண்மை பேசுகிறார் என்பதை நிலைநாட்ட இரு சாட்சிகள் தேவைப்பட்டனர். இங்கேயோ இயேசு அத்தகைய இரு சாட்சிகள் பற்றிப் பேசுகிறார். ''என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்'' (யோவா 8:18) என இயேசு கூறுகிறார்.

 ஆனால் இயேசுவின் எதிரிகள் இயேசுவுக்கும் அவரை அனுப்பிய தந்தையாம் கடவுளுக்கும் இடையே நிலவுகின்ற நெருங்கிய உறவைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

இயேசு கடவுளைப் பற்றிய உண்மையை நமக்கு அறிவிக்கிறார் எனவும், கடவுளைக் காண வேண்டும் என்றால் நாம் இயேசுவில் அவரைக் காண வேண்டும் எனவும் நாம் நம்பாவிட்டால் நாமும் ''இருளில் நடப்போருக்கு'' ஒப்பாவோம்.

இயேசு காட்டுகின்ற ஒளியில் நடப்போர் பிறருக்கும் ஒளியாக மாறுவார்கள். ஏனென்றால் ''உலகின் ஒளி நானே'' (யோவா 8:12) என்று கூறிய இயேசு ''நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்'' எனவும் தம் சீடர்களை நோக்கிக் கூறுகிறார் (காண்க: மத் 5:14).

இன்றைய உலகில் நாம் ஒளியாய் விளங்க வேண்டும் என்றால் இருள்நிறைந்த மனித உள்ளங்களில் இயேசுவின் ஒளியை நாம் பாய்ச்ச வேண்டும்; இருள்நிறைந்த உலகப் போக்குகளையும் மன நிலைகளையும் மாற்றியமைக்க நாம் செயல்பட வேண்டும்;

கடவுள் பற்றிய உண்மையைக் கண்டுகொள்ள மறுத்து, தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் போக்கு மறைந்திட நாம் உழைக்க வேண்டும். இருளில் நடப்போருக்கு ஒளி துணையாவதுபோல நாமும் கிறிஸ்து என்னும் ஒளியை நம்மில் கொண்டிருந்தால் பிறருக்கும் ஒளியாக மாறுவோம்.

Saturday 12 March 2016

BE THE CAPTAIN OF YOUR SHIP!




Want to make huge improvements in your life?
Want to take control of your life?
Then it is time to have a relook on your present strategies. Why, the rest of your life should be best of your life. Accomplishing everything great in life requires significant change that pushes you beyond your comfort zone.
          Many times, the only way to improve our lives is to force ourselves to undergo difficult change. That might mean breaking up and leaving a stale- but comfortable- relationship, leaving a mediocre- but stable- job, moving away from a nice- but uninspiring- location, or anything else that’s holding us back from accomplishing our dreams. You have to also identify what is holding you?
          Of course, dealing with uninvited change in our lives is often difficult and painful. In many cases, instigating major, but necessary, change in our life can be just as painful. But whatever change you’re dealing with, know that how you cope with that change will have an impact on your future. Many a times has been spent on mastering others rather than mastering ourselves. It doesn’t matter where you are; you are nowhere compared to where you can go.
          We fear a lot to take a try. The biggest mistake we take in our life is to continually fearing that we will make one. If you participate in a running race, yes, there is a possibility of losing. There is a possibility of winning also. But if you don’t participate, you have already lost.
          How to have self mastery?
·        Work out a strategy to find the path where to go from the present one. If possible plan a weekly strategy to achieve that dream. A research done by Dr.Gail Matthews, a psychologist from Dominican university shows that people with specific weekly strategies achieve more. She took 267 participants and found that those who wrote down their goals with specific weekly strategies had a 76% success rate compared with 43% who merely stated their goals.
·        Re looks your personal habits. Find out which one is helping to achieve your dreams and which drags you.
·        Take an active approach in life. Self mastery has to start with self honesty. Take actions. Be active on a day to day basic to reach your destiny. No procrastinations.
·        Reassess your strength and weakness.
·        First transformation should happen i9n your inner world; then it will make a ripple in the outer world.
·        Spend time what you are great at and enjoy. By doing so, everything else will become a lot easier and more rewarding.
·        Detect and change your behaviour which affects your workplace peace.
·        We didn’t choose what we were born as, or what or whom we were born with; but at the same time we can choose whom to associate or relate with or where or what we could be. Choose the right contacts.
·        It seems like that it is easier to control others than ourselves. The formation of the true self image after self discovery leads to the correct visual reality.
·        Belief (or faith) in oneself is possibly the greatest belief that a man could harbour (after belief in god) .the human body and mind is incredible, when it comes to feats of greatness. All of these were possible with power of belief.
·        To become masters of the self, we must first believe that we can become masters of the self. That self-belief is the dynamo which unrelentingly fuels the journey of a man on the path of self mastery, in the face of failures and pitfalls.
·        Improve your will power and commitment.
·        Power of self reliance is one of the core strength of the master- which he develops and guards the persistently. He thus becomes the rock to which others lean onto, just like the mountain to which the dew gravities to.
·        Power of acceptance; some of the greatest challenges we often face in life involve accepting life for the bad things it throws at us through the unpleasant circumstances, events, things and people we may encounter. Accept that we are transforming by passing through difficult times. Accept the fact. It involves a lot of patience and endurance.
Life is wonderful. Many may not accept this, by seeing the present problems they are facing. Sometimes, ships have to face some rough seas and high tides. But in the entire journey, this part may be very small. After passing over the rough seas and high tides, there will be a calm sea for days together or even months together. Life is also like that. We may have to cross over difficult situations with a lot of courage and positive approach. Then we can make the life really wonderful. Yes, it is in our hands.
     You are the captain of your ships!
     You are the master for your soul!
         

Tuesday 8 March 2016

திறந்ததோர் இதயமே இறை இரக்கத்தைப் பெறமுடியும் !

மார்ச்,03,2016. இதயம் திறந்திருந்தால் மட்டுமே, இறைவனின் இரக்கத்தைப் பெறமுடியும் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை ஆற்றிய மறையுரையின் மையப்பொருளாகக் கூறினார். 

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பிடிவாதக் குணம் கொண்டு பின்வாங்கிச் செல்லும் இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் கூறும் வார்த்தைகளை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை. 

இறைவனுக்குச் செவிசாய்க்காமல் இதயங்களை மூடிக் கொள்பவர்களிடம் இறைவனின் இரக்கம் நுழைவதற்கு வாய்ப்பில்லை என்றும், இதயங்களைக் கடினமாக்கும்போது ஒரு நல்ல தந்தையைப் போல் அவர் நம் இதயங்களைத் திறக்கச் சொல்லி கேட்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார். உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், ஆண்டவரின் குரலுக்குச் செவி சாயுங்கள் என்று பதிலுரைப் பாடலில் கூறிய வார்த்தைகளையும் திருத்தந்தை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார். 

இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்தபிறகும், அதற்கு தவறான அர்த்தங்கள் கற்பிக்கும் மக்கள், அவரது அருளைப் பெறுவதற்குப் பதில், அவரைக் கண்டனம் செய்வதிலேயே குறியாய் இருந்தனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார். 

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, எப்பக்கமும் இராமல், நடுவில் இருப்பதும், உலகிற்கும், இறைவனுக்கும் நடுவே சமரச நிலையில் வாழ்வதும் இயலாது என்பதை, தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார். 

Monday 7 March 2016

மலரும் நம் வாழ்வு!


''இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்'' (யோவான் 4:47).

இயேசு அதிசய செயல்களைச் செய்தார் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ஆனால் ஏன் அவர் அச்செயல்களைச் செய்தார் என்று கேட்டால் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, மனமுவந்து அவர்களுக்கு உதவினார் என நாம் பதிலிறுக்கலாம்.

இயேசுவின் உதவியை நாடிச்சென்ற மனிதரிடம் அவர் எதிர்பார்த்தது ஆழ்ந்த நம்பிக்கை ஆகும். கானா என்னும் ஊரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அதே ஊருக்கு இன்னொருமுறை சென்றபோது அவரைத் தேடி வருகிறார் அரச அலுவலர் ஒருவர். அவருடைய மகன் சாகும் தறுவாயிலிருக்கிறார்.

 அம்மகனைக் குணமாக்க வேண்டும் என அவர் இயேசுவிடம் மன்றாடுகிறார். ''உம் மகன் பிழைத்துக்கொள்வான்'' என இயேசு கூறிய சொல்லை நம்பி அரச அலுவலர் புறப்படுகிறார் (யோவா 4:49-50).

அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய மகன் பிழைத்துக்கொண்டான் என்னும் நல்ல செய்தி அவருடைய காதுகளை எட்டுகிறது. இந்த அதிசய செயலைக் கண்டு அந்த அரச அலுவலரும் அவருடைய வீட்டாரும் இயேசுவை ''நம்புகின்றனர்'' (யோவா 4:53). அதிசயமான இந்நிகழ்ச்சியை இயேசு தம் சொல்லால் நிகழ்த்தினார் என யோவான் விவரித்துள்ளார் (யோவா 4:50).

இயேசு கடவுளின் வல்லமையோடு செயல்படுகிறார் என்பதை அந்த அரச அலுவலர் முதலிலேயே மனதார ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத் தக்கது. தம் மகன் பிழைத்துக்கொண்டது இயேசுவின் வல்லமையாலேயே என உணர்ந்ததும் அந்த அரச அலுவலர் மீண்டும் ''இயேசுவை நம்பினார்'' (யோவா 4:53). எனவே ''நம்பிக்கை'' என்பது கடவுளின் செயலை நாம்
அடையாளம் காண நமக்குத் துணையாகிறது என்பதை நாம் அறிகிறோம்.


இயேசுவிடத்தில் நம்பிக்கை இல்லாத மனிதருக்கு அவர் புரிந்த செயல்கள் ஆழ்ந்த பொருளுள்ளவையாகத் தெரியாது. ஆனால் இயேசுவிடத்தில் கடவுளின் வல்லமை துலங்குகிறது என்றும், அவர் இரக்கம் கொண்டால் அதிசயங்கள் நிகழும் என்றும் நாம் ''நம்பிக்கை'' கொண்டால் நம் வாழ்வில் புதுமை மலரும் என்பது உறுதி.

Saturday 5 March 2016

மனமாற்றம்!

உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நாளைய  நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான்.

மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம்.

இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம்.

தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான்.

தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்.

இன்றைக்கு மனமாற்றம் என்கிற பெயரில், மற்றவர்களின் மனதை மாற்ற, பல கேலிக்கூத்துக்கள் இந்த சமுதாயத்தில் அரங்கேறுகின்றன. தவறு செய்து விட்டேன் என்கிற உணர்வு அறவே இல்லாமல், மன்னிப்பு என்கிற மிக உயர்ந்த விழுமியத்தை, குறுக்கு வழியில் பெறத்துடிக்கும் கர்வம், ஆணவம் இன்றைக்கும் நம்மில் பலரிடம் உள்ளது.

 மன்னிப்பு என்கிற தியாக விழுமியத்தை, சூறையாடுவதற்கும், களங்கப்படுத்துவதற்கும், சிதைப்பதற்கும், தங்களுடைய சுயநலத்திற்காக நியாயப்படுத்துவதற்கும் பல மனிதர்கள், நல்லவர்கள் என்கிற போர்வையில், இந்த சமுதாயத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

மனமாற்றத்தின் அடிநாதம் உணரப்படவில்லையெனில், மனமாற்றத்திற்கான செயல்பாடுகள் அனைத்துமே அர்த்தமற்றதாகத்தான் இருக்கும். போலி மனமாற்றம் கடவுள் முன்னிலையில் நிச்சயம் அருவருக்கத்தக்கதாகவும், தண்டனைக்கு ஏற்புடையதாகவும் தான் இருக்கும்.

Friday 4 March 2016

உண்மையான செபம் எது?

பக்தியுள்ள யூதர் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் செபம் செய்வார்.

அதுவும் ஆலயத்திற்கு வந்து செபிப்பது சிறந்த அருளைப்பெற்றுத்தரும் என்பதால், ஆலயத்திற்கு வந்து பலர் செபித்தனர். யூதச்சட்டம் ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று மட்டும் நோன்பிருக்க அறிவுறுத்தியது.

 ஆனால், சிலர் கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக வாரம் இருமுறை திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் யெருசலேமில், மக்கள் பொருட்களை வாங்க சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று இணைச்சட்டம்(14:22), கூறுவதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றினர். இந்தப்பாரம்பரிய முறைகளை பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக செய்தார்கள்.

மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆலயத்திற்கு வந்து செபித்தார்கள், தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத பொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள்.


நாளைய   நற்செய்தியில், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் ஆலயத்தில் நின்று செபிக்கிறார்கள். பரிசேயர் சொன்னது அனைத்தையும் உண்மையிலே அவன் கடைப்பிடித்தான். பரிசேயர், தான் செய்யாததை அங்கே ஆலயத்தின் முன்நின்று சொல்லவில்லை.

 தினமும் செபித்தான், வாரம் இருமுறை நோன்பிருந்தான் மற்றும் பத்தில் ஒரு பங்கு கடவுளுக்குக்கொடுத்தான். ஆனால், செபம் என்பது தான் செய்வதை சொல்வது அல்ல, தன்னைப்புகழுவது அல்ல, அல்லது தன்னை மற்றவரோடு ஒப்பிடுவது அல்ல.

மாறாக, செபம் என்பது கடவுளைப்புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணைநாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்பயணம், என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். செபம் என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதில் நான் மற்றவர்களை விமர்சனம் செய்வரோ, மற்றவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதோ சரியானது அல்ல.

செபத்தில் நான் கடவுளிடம் என்னுடைய வாழ்வு பற்றிப்பேச வேண்டும். நான் சரிசெய்ய நினைப்பவற்றை கடவுளிடம் சொல்ல வேண்டும். அதற்கான அருளை நான் கடவுளிடம் கேட்டுப்பெற வேண்டுமேயொழிய, மற்றவர்களைப்பற்றி கடவுளிடம் குறைகூறுதல் சரியான செபம் அல்ல.

செபம் கடவுளிடம் நம்மைப்பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். நம்முடைய பெருமைகளையோ, திறமைகளையோ, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்புகழ்வதாகவோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அது செபம் அல்ல. அந்த செபம் கடவுள் முன்னிலையில் கேட்கப்படாது.

மாறாக, செபம் என்பது நம்மைப்பற்றி, நாம் இன்னும் விசுவாச வாழ்வில் போக வேண்டிய தூரம் பற்றி, நம்முடைய பலவீனங்களை வெல்வதற்கான கடவுளின் அருளைப்பெறுவது பற்றியதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான செபமாக இருக்க முடியும்.

Thursday 3 March 2016

முதன்மையானது அன்பு!

யூதப்பாரம்பரியத்தில் எப்போதுமே இரட்டை மனநிலை காணப்பட்டது. திருச்சட்டத்தை இன்னும் பல சட்டங்களாக விளக்கமளிக்கும் மனநிலை, இரண்டாவது திருச்சட்டம் முழுவதையும் ஒரே வாக்கியத்தில் கூறும் மனநிலை.

இந்த இரட்டை மனநிலை தான், இறைவாக்கினர்களின் போதனையிலும் வேற்றுமையைக் காட்டியது. ஒரு சில இறைவாக்கினர்கள் ஏராளமான எண்ணிக்கையில் கடவுளின் திருச்சட்டங்களைக் கொடுத்தனர். ஆனால், மற்றவர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கடவுளின் சட்டங்களைக் கொடுத்தனர்.

உதாரணமாக, மோசே 613 சட்டங்களைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த 613 சட்டங்களை, தாவீது தன்னுடைய திருப்பாடல் 15ல், 11 ஆக குறைக்கிறார். இறைவாக்கினர் எசாயா(33: 15), இதனை மிகச்சுருக்கமாக ஆறாக, குறைக்கிறார். மீக்கா இறைவாக்கினர்(6:8) அதனை மூன்றாக குறைக்கிறார்.

 மீண்டும் எசாயா இறைவாக்கினர், இதனை அடிப்படையில் இரண்டு திருச்சட்டங்களாக (56: 1) பிரிக்கிறார். இறுதியில் அபகூக்கு இறைவாக்கினர்(2: 4) ஒரே வரியில், “நேர்மையுடையவரோ தன் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்று, நிறைவு செய்கிறார்.

 இவ்வாறு பழைய ஏற்பாட்டில், இறைவாக்கினர்களின் பல்வேறு விளக்கங்களுக்கும் இரத்தினச்சுருக்கமாக, நாளைய  நற்செய்தியில், இயேசு திருச்சட்டத்தின் சாராம்சத்தை விளக்குகிறார். கடவுளையும், சக மனிதர்களையும் அன்பு செய்வதே திருச்சட்டத்தின் சுருக்கம், என்பதை இங்கே வலியுறுத்துகிறார்.


நமது வாழ்வில் இந்த அன்பு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறதா? என சிந்தித்துப் பார்ப்போம். நாம் செய்கிற செயல்பாடுகள் அனைத்திலும், அன்பே முதன்மையானதாக இருக்க வேண்டும். இயேசுவின் வாழ்வில் முதன்மையாக இருந்து அன்பு, நமது வாழ்விலும் நிலைபெறட்டும்.

Wednesday 2 March 2016

வேண்டாம் இந்த விபரீதம்!

பலருடைய நிலைப்பாடு மதில்மேல் பூனை, அல்லது கூட இருந்து குழி பறிக்கும் குள்ள நரி. இது நாயா? நரியா? என்று தெறியாத வெளிவேடம்.

 ஒண்ணுல கூட்டணி என்று சொல்லு அல்லது எதிரணி என்று சொல்லு. மூன்றாம் அணி என்று சொல்லும்போதே விவகாரம் விஷ்வ ரூபம் எடுக்கத் தொடங்கிவிடுமல்லவா.

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்" உண்மை. ஆன்மீகத்தில் மூன்றாவது அணிக்கு இடமே இல்லை.

அருள் வாழ்வில் இடைப்பட்ட நிலைக்கு வாய்ப்பே இல்லை. ஒன்றில் ஆண்டவனோடு அல்லது அலகையோடு, அருளோடு அல்லது இருளோடு. நீதி அல்லது அநீதி, உண்மை அல்லது பொய்மை இதுதான் நியதி.

பெயல்சபூலுடன் பேச்சுவார்த்தை வைத்து இறையரசு அமைக்க இயேசு ஒருபோதும் விரும்பியதில்லை. அலகையுடன்; சமரசம் செய்து இறையரசை தக்க வைக்க இயேசுவின் அரசுக்கு அவசியமில்லை. இரட்டை வேடம், இரட்டை வாழ்க்கை இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல. "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது"

இத்தகைய இரட்டை நிலை, எப்பொழுதும் எதிரிக்கு பின் வாசலை திறந்தே வைத்திருக்கும். எந்த நேரத்திலும் வெளியே அனுப்பியவர்கள் தோரணையோடு உள்ளே வருவார்கள். அப்புறம் "பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."

கடவுளின் சார்பில், அவரோடு மட்டும் இருப்போம். நமக்கு குறை இருக்காது.


Tuesday 1 March 2016

முதலில் கடைபிடி!பின்பு பிறருக்குக் கற்பி!

திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வரவில்லை, மாறாக அதை நிறைவேற்றவே வந்தேன்’ என்று இயேசு கூறுகிறார்.

‘நிறைவேற்றுதல்’ என்பதை முழுமைப்படுத்துதல், முழு அர்த்தத்தைக்கொண்டு வருதல், உண்மையான பொருளை உணரவைத்தல் என்று நாம் பொருள்படுத்தலாம்.

 திருச்சட்டம் வாயிலாக கடவுளின் திருவுளம் என்பதை அறிந்து, அதை நிறைவேற்றுவதற்காக, தன்வாழ்வையே முழுமையாக அர்ப்பணிப்பதாகும். இயேசு திருச்சட்டத்தை அழிக்கவரவில்லை, மாறாக, அதனுடைய உண்மையான அர்த்தத்தை நாம் அறியவேண்டும் என்பதற்காக வந்திருப்பதாகச்சொல்கிறார்.

 அப்படியானால், திருச்சட்டத்திற்கு பொறுப்பாளர்களாக அதுவரை இருந்த, மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் அதனுடைய உண்மையான அர்த்தத்தைக்கூறவில்லையா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் கடவுளின் திருவுளத்தை, திருச்சட்டம் வாயிலாக அறிவதில் முழுமுனைப்பு காட்டினார்கள். உண்மைதான்.

அதை அறிந்து அர்ப்பண உணர்வோடு வாழ முனைப்பும் காட்டினார்கள். ஆனால், பிரச்சனை அவர்களின் செயல்பாட்டில் இருந்தது.

உதாரணமாக, அனைத்துக்கட்டளைகளுக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய பத்துக்கட்டளைகளை எடுத்துக்கொண்டால், அவற்றின் பொருளை ஒரே வார்த்தையில் நாம் அடக்கிவிடலாம். அதுதான் அன்பு. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்புசெய்வதும், தன்னை அன்பு செய்வதுபோல மற்றவர்களை அன்புசெய்வதுதான் அதன் பொருள்.

அந்த அன்பை செயல்படுத்துவதில் பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் சரியான புரிதல் இல்லாமல், சட்டத்தை அன்பாகக்கொண்டிருந்தனர். கடவுள் அன்பு, மற்றவர் அன்பு என்றால் என்ன? என்பதை வாழ்ந்துகாட்டவே இயேசு இந்த உலகிற்கு வந்தார். அந்த அன்பு கடவுளுக்கு வெறும் பலி செலுத்துவதில் இல்லை, மற்றவர்களுக்கு காட்டும் இரக்கத்தில் இருக்கிறது என்பதை இந்த உலகிற்கு உணர்த்துகிறார்.

இதைச்செய், இதைச்செய்யக்கூடாது என்று சொல்கிற சட்டத்தில் இல்லை அந்த அன்பு. மாறாக, வாழ்வை இப்படி வாழவேண்டும் என்று விழுந்தாலும், தூக்கிவிடுகிற பண்பில் இருக்கிறது அந்த அன்பு. அப்படிப்பட்ட அன்பைத்தான், இயேசு இந்த உலகத்திற்கு கொடுக்க வந்தார்.


‘புரிந்துகொள்ளுதல்’ என்பது நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அரிய பண்பாகும். இன்றைக்கு உறவுச்சிக்கல்களுக்கு அடிப்படைக்காரணம் ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ளாமை. நம்முடைய தவறான எண்ணங்கள், நான் சொல்வது மட்டும்தான் சரி என்கிற மனப்பாங்கு, எதையும் தீர விசாரிக்காமை போன்ற செயல்பாடுகள், நல்லவரையும் பண்பற்றவராக மாற்றிவிடுகிறது.


பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் நல்லவர்கள் தான். ஆனால், சரியான புரிதல் இல்லாமை தான் இயேசுவை அவர்களுக்கு விரோதியாகக்காட்டியது. மற்றவர்களை புரிந்து கொள்ளக்கூடிய அருள் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.